தென்றல் பேசுகிறது...
பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃபின் பிடி வலுவிழந்து வருகிறது. வன்முறை அதிகரித்து வருகிறது. தீவிரவாதக் கும்பல்களின் செல்வாக்கும் பெருகி வருகிறது. இதற்கிடையில், தன்னோடு ஒத்துப் போகாத உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியைப் பதவி விலக்கிப் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளார். இவரை ஆதரிப்பதால் பயனுண்டா என்ற சிந்தனை அமெரிக்கா, பிரிட்டன் இரண்டுக்குமே தோன்றிவிட்டதை அவர்கள் பாகிஸ்தானுக்குக் கொடுத்து வரும் நிதி மற்றும் பிற உதவிகளை நிறுத்தவோ குறைத்துக் கொள்ளவோ தீர்மானித்ததில் தெரிகிறது. பாகிஸ்தான் ஒரு நம்பத்தகாத நாடு என்று பாரதம் வலியுறுத்தி வருவதை உலக நாடுகள் புரிந்து கொண்டால், அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது எளிதாகிவிடும். அதனால் தெற்காசியாவில் அமைதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

*****

சில மாதங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் துரைமுருகன் நீதிபதிகள் தங்கள் வரம்பை மீறக்கூடாது என்று மிரட்டினார். அதே மேடையில் இருந்த முதல்வர் கருணாநிதி, துரைமுருகன் கூறுவது சரிதான் என்று பேசினார். அதற்குச் சிறிது நாட்கள் கழித்து இதே தோரணையில் பிரதமர் மன்மோகன் சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கண்டித்துப் பேசினார். இத்தகைய போக்கு ஜனநாயகத்துக்குப் பெரும் ஆபத்தை விளைவித்துவிடும். சட்டதை இயற்றும் சட்டமன்றங்கள், சட்டங்களை விளக்கி நீதியைப் பரிபாலிக்கும் நீதிமன்றங்கள், அரசு நிர்வாகம் ஆகியவை ஜனநாயகத்தின் தூண்கள். சட்ட மன்றங்களும் மந்திரி சபைகளும் அரசியல்வாதிகளால் நிரம்பிக் கிடக்கின்றன. மெல்ல மெல்ல எல்லாச் சக்திகளும் அரசியல் வாதியின் கைகளில் குவிந்து வருகிறதோ என்கிற அச்சம் தோன்றத்தான் செய்கிறது. சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் காவல் துறையும் அரசுகளின் கைப்பாவைகள்தாம். இவர்களது மிகையான செயல்களைக் கண்டிக்கும் நீதிமன்றங்களும் மிரட்டிப் பணிய வைக்கப்பட்டால், ஜனநாயகம் 'அரசியல்வாதி நாயகம்' ஆகிவிடும்.

*****

சென்ற ஆண்டின் போர்வீரர் நினைவு நாளுக்கும் (மேமோரியல் டே) இந்த ஆண்டின் நினைவு நாளுக்கும் இடையே ஆயிரம் அமெரிக்கப் போர்வீரர்கள் இராக்கின் கல்லறைகளில் புதைக்கப் பட்டிருக்கிறார்கள். அந்தப் பிஞ்சுகளின் தியாகம் அமெரிக்காவுக்கு எந்த விதத்தில் உயர்வைத் தந்திருக்கிறது என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் அதிபர் புஷ்ஷின் இராக் போருக்கான அதிக நிதிக் கோரிக்கை எந்தப் பெரிய நிபந்தனையுமின்றி அனுமதிக்கப் பட்டுவிட்டது என்ற செய்தியும் வந்திருக்கிறது.

*****


அடுத்த பத்தாண்டுகளில் எரிபொருள் செலவு 20 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று ஒரு திட்டத்தை புஷ் நிர்வாகம் முன்வைத்திருப்பது வரவேற்கத் தக்கது. அதிலும் குறிப்பாக கேஸொலீன் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்கவும் பயனுக்குக் கொண்டு வரவுமான முயற்சிகளை துரிதப்படுத்த அவர் திட்டமிட்டிருப்பதை வரவேற்கத் தக்கது. அமெரிக்கா எடுக்கும் இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பின்பற்றும் என்பது நமது நம்பிக்கை.

*****

இருதய அறுவை சிகிச்சை முன்னோடியான டாக்டர் கே.எம். செரியன் அவர்களின் நேர்காணல் மிகப் பயனுள்ள தகவல்களைத் தருகிறது. இளம்தென்றல் மாயச் சதுரம் போன்ற பல புதிய சுவையான பகுதிகளுடன் செழுமை பெற்றுள்ளது. 'தமிழக அரசியல் களம்' விரிவாக்கப்பட்டு 'இதோ பார், இந்தியா!' என்ற பெயரில் பல மாநிலத் தகவல்களுடன் இடம் பெறுகிறது. புதிய அம்சங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்.

*****

ஜூன் மாத இறுதியில் தொடங்கும் தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆண்டு விழாவும், ஜூலை மாதத்தில் வரும் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழாவும் வெற்றிபெறத் தென்றல் வாழ்த்துகிறது. தென்றல் வாசகர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்!



ஜுன் 2007

© TamilOnline.com