சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டு மையம்
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொடங்கும் முயற்சியில் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மும்முரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. கடந்த பொங்கலன்று தமிழ் இணையம் 2002 குழுவினர் தமிழ்க் கணினி மையத்துக்கு விதை முதலீடாக $12,000 ஐத் தமிழ் மன்றத்துக்கு வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குநராக சிவகுமார் சேஷப்பன் நியமிக்கப்பட்டார். நவ. 20ம் தேதி, தமிழ் மன்றத்தின் மேலவை உறுப்பினர் கூட்டம் கூடித் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் குறிக்கோள்கள், அமைப்புச் சட்டம், செயல்திட்டம் ஆகியவற்றை விவாதித்தது.

கூட்டத்தில் மையத்தின் தொடக்கநிலை இயக்குநர் குழும நியமனங்கள் அறிவிக்கப்பட்டன. முன்னாள் தமிழ் மன்றச் செயற்குழு உறுப்பினர்கள், ஆயுள் சந்தாதாரர்கள் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுள் தமிழ் மன்ற நிறுவனர்கள் எம். என். தமிழன், குமார் குமரப்பன், தென்றல் பதிப்பாளர் சி. கே. வெங்கட்ராமன், எழுத்தாளரும் தொழிலதிபருமான கதிரவன் எழில் மன்னன், கலி·போர்னியா தமிழ்க் கழக நிர்வாகிகள் வெற்றிச் செல்வி ராஜ மாணிக்கம், ஆண்டி நல்லப்பன் மற்றும் மன்றத் தலைவர்கள் மணி மணிவண்ணன், தில்லை குமரன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

வளைகுடாப் பகுதியில் தமிழர்கள் வேரூன்றத் தொடங்கியதை உணர்ந்து, தமிழ் மன்றம் மக்களின் மாறிவரும் தேவைகளை நிறை வேற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டு மையத்தை உருவாக்க முனைந்துள்ளது. இங்கு வாழும் தமிழர்கள் தங்கள் சமூக, தனிமனித, குடிபுகல் மற்றும் அரசுத் தொடர்புச் சிக்கல்களுக்கு அணுகப் புகலிடமாய் இந்த மையம் அமையும். தமிழ் நூலகம், தமிழ்க் கணினி மையம் இவற்றோடு, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுக் கல்வி வளங்களுக்கு ஆதார மாயும் இருக்கும்.

மழலையர் காப்பகம், உடற்பயிற்சி மையம், மாதர் சங்கம், முதியோர் மையம் இவை மட்டுமல்லாமல், கலைக்கூடங்கள், கல்விக் கூடங்கள் இவற்றை அமைத்து வளைகுடாப் பகுதியில் வளர்ந்து வரும் பல தமிழ்ப் பள்ளிகள், கலைப்பள்ளிகளுக்குத் துணை புரியும். மையம் தனது நிரந்த அலுவலகம் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டுச் சேவை, நிறுவனக் கணக்கியல் சேவை, நிறுவனச் செயலகச் சேவை போன்ற சேவைகளையும் தமிழ் அமைப்புகளுக்கு வழங்கும். இது போன்ற சேவைகள் மூலம், தமிழ் மையம் ஏனைய தமிழ் அமைப்புகளுக்கு நிழல் தரும் குடைநிறுவனமாக இயங்கும்.

தமிழ்ப் பண்பாட்டு மையத்தைப் பற்றிய விவரங்களை http://www.bayareatamilmanram.org/eng/batcc.php என்ற சுட்டியில் காணலாம்.

© TamilOnline.com