கல்வி, உடல்நலம் மற்றும் சமூகசேவை வாய்ப்புகளின் மூலம் இளைஞர்களை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் லாபநோக்கற்ற அமைப்பான நந்தலாலா இயக்கம் (Nandala Mission) நவம்பர் 7, 2004 அன்று ஒரு இளையோர் கச்சேரி (Youth Concert) நிகழ்ச்சியை பாண்டரோசா பள்ளி அரங்கில் நடத்தியது. இந்நாள் இவ் வமைப்பின் முதலாம் ஆண்டுநிறைவு நாளாகும்.
நந்திதா ஸ்ரீராமின் இனிய பாடல்களோடு துவங்கியது நிகழ்ச்சி. அடுத்து பிரேமா ஸ்ரீராமின் தலைமையில் 'சின்மய த்வனி'யின் 45 பேர் கொண்ட வாண்டுப்பட்டாளம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கில் துதிப்பாடல்களைப் பாடினர். 'பாரத கலா குடீரம்' நடனக் குழுமத்தின் கலை இயக்குனர் ஜயந்தி ஸ்ரீதரன் அடுத்துச் சில பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடினார்.
முன்னணி இளம் கலைஞர்களான காயத்ரி மற்றும் ராஜேஸ்வரி ராமநாதன், டவ் ஹார்லைன், அக்ஷய் நரேஷ், ஜனனி முரளிதரன், ஜனனி சம்பத்குமார், மானசா சுரேஷ், அர்ஜுன் ஹரன், ஆர்னேஷ் முதலியார், மாயா லோஹித், நந்தினி தாசரதி ஆகியோர் கர்நாடக இசையில் பாடல்கள் வழங்க, ஒருவர் மட்டும் ஜார்ஜ் கெர்ஷ்வினின் இசையைப் பியானோவில் வாசித்தார். நந்தலாலா இயக்கத்தின் நிறுவனர் மதியொளி ஆர். சரஸ்வதி எழுதிய பாடலொன்றுக்கு இசையமைத்த நந்தினியின் தாயார் தன் மகளோடு சேர்ந்து அதைப் பாடினார்.
'சுருதி ஸ்வரலயா'வின் அனு சுரேஷ், தேவி அங்காரத், ரவி ஸ்ரீதரன், மைதிலி ராஜப்பன், 'ராம லலிதகலா மந்தி'ரின் டாக்டர் டேனியல் ஹாரிசன், ஜெயஸ்ரீ தாசரதி, சகுந்தலா மூர்த்தி, ஜெயஸ்ரீ வரதராஜன் தவிர ருக்மணி ராஜகோபால் மற்றும் யோகி சுர்ஜீத்தின் மாணவர்களே மேற்கண்ட இளங்கலைஞர்கள் ஆவர்.
தற்போது சென்னையில் குறைந்த கட்டண டயாலிசிஸ் மையம் ஒன்று கட்டுவதற்காக நிதி திரட்டிக் கொண்டிருக்கிறது நந்தலாலா இயக்கம். சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், தில்லி ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டிருக்கும் நந்தலாலா சேவா சமிதியின் ஓர் அங்கமான இந்த இயக்கம் அமெரிக்காவில் வட மற்றும் தென் கலி·போர்னியா, நியூ ஜெர்சி ஆகிய இடங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கும், நீங்கள் சென்னை டயாலிசிஸ் திட்டப்பணிக்கு எப்படி நிதி வழங்கலாம் என்று அறியவும்: www.nandalala.com |