மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தசரா மற்றும் தீபாவளி விழாவை அக்டோபர் 23, 2004 அன்று லேக் ஓரையன் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடியது. Daimler Chrysler Services இந்த மொத்த விழாவுக்கும் நிதிப் பொறுப்பேற்றனர். அதி நவீன கிரைஸ்லர் கார்கள் வெளியே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
நிர்வாகக்குழு மற்றும் இளைஞர் குழு உறுப்பினர்கள் விளக்கேந்தி மங்கல இசையுடன் அணிவகுத்து இறைவணக்கம் பாட நிகழ்ச்சி துவங்கியது. விஜயதசமி நாளான அன்று மிகவும் பொருத்தமாக சரஸ்வதி துதியாக சிறுமிகள் பரதம் ஆடினர். அதனைத் தொடர்ந்து 72 வயதான பார்வதி சுப்பிரமணியம் அவர்களின் நடனம் வந்தோரை வியக்க வைக்கும், வைத்தது. பிறகு இருபதிற்கும் மேற்பட்ட சின்னஞ்சிறு சிட்டுக்களை வைத்து லலிதா ரவி மற்றும் சந்தியா சங்கர் வழங்கிய நடனம், நிர்வாகக் குழு உறுப்பினர்களின் குறுநாடகம் என்று நிகழ்ச்சியின் முதல் பாதி அமைந்தது.
தொடர்ந்து மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தில் சில காலம் பணியாற்றிப் பல வகையிலும் சமுதாயத் தொண்டாற்றிய டாக்டர். சோமலே. சோமசுந்தரம் அவர்களைப் பாராட்டி விருது வழங்கி கௌரவித்தனர். பல்வேறு கண்கவர் நடன நிகழ்ச்சிகள், பெண்கள் பங்கேற்ற கதாகாலட்சேபம், அமெரிக்க அதிபர் தேர்தலைப் பற்றிய நகைச்சுவை நாடகம், இளைஞர் குழு பார்வையாளர்களுடன் இணைந்து நிகழ்த்திய விளையாட்டு நிகழ்ச்சி, கார் ரிப்பேர் பற்றிய புதுமையான நகைச்சுவை நடிப்பு என்று தொடர்ந்த நிகழ்ச்சிகள் பெருவிருந்து.
2005ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழுவினர் அறிமுகப்படுத்தப்பட்டனர். இறுதியில் மிச்சிகன் பல்கலைக் கழக மாணவர்கள் பாடிய கர்நாடக இசைப் பாடல்களுடன் மேடை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன.
ஆனால் அத்துடன் முடியவில்லை. இறுதிக் கொண்டாட்டமாக Dreamz International எனும் தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நடத்திய தாண்டியா (Dandiya) நடன நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பாட்டி தாத்தாக்கள் வரை பங்கேற்று உற்சாக நடனமாடியது கண்கொள்ளாக் காட்சி.
கல்பனா ஹரிஹரன் |