கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் ராக வித்யா
சுருதிக்கும் ஸ்வரத்திற்கும் என்ன வித்தியாசம்? மேற்கத்திய மற்றும் இந்திய இசையின் அடிப்படை வேறுபாடு என்ன? இப்படி இசை குறித்த எத்தனையோ கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதவரா நீங்கள்? நீங்களும் அக்டோபர் 16, 2004 அன்று ஹிந்துக் கோவிலில் சின்சின்னாட்டியின் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் நடத்திய 'ராக வித்யா' இசைப்பட்டறையில் கலந்து கொண்டிருக்கவேண்டும். இந்த மூன்று மணிநேர இலவசப் பட்டறையில் சுமார் முப்பது பேர் பல அரிய செய்திகளைத் தெரிந்துகொண்டனர்.

இந்திய இசையின் அடிப்படைக் கருத்துக்கள், தென்னிந்தியச் செவ்விசையின் வரலாறு ஆகியவற்றை அறிமுகப்படுத்திய கன்னிகேஸ்வரன் இவற்றை ஹிந்துஸ்தானி இசையுடன் ஒப்பிட்டும் காட்டினார். இரண்டிலும் இருக்கும் இணையான ராகங்களைத் தொட்டுக் காட்டினார். எவ்வாறு இந்திய இசையில் லயமும் மேற்கத்திய இசையில் ஒத்திசைவும் முக்கிய அங்கம் வகிக்கிறது என்றும் விளக்கினார். ராகங்களை இனம் காண்பது எவ்வாறு என்பதைத் தமிழ் மற்றும் ஹிந்தியில் அமைந்த செவ்விசை மற்றும் திரையிசைப் பாடல்கள் மூலம் அவர் அடையாளம் காட்டியபோது அரங்கத்தினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

பங்கேற்றவர்கள் தமது இசைபற்றிய அறிதலை இன்னும் விரிவாக்கிக்கொள்ளும் ஆசை அதிகமானதாகவே உணர்ந்தனர். நீங்களும் இத்தகைய அடுத்த பட்டறையில் (Lehigh Valley, December 19) கலந்து கொள்ள ஆவல்கொண்டிருந்தால் தொடர்புகொள்ள:

ராஜு வெங்கட்ராமன்: 610-882-1016
மின்னஞ்சல்: kanniks@yahoo.com

© TamilOnline.com