சிவகாமி வெங்காவின் கலாபாரதி நாட்டியப்பள்ளி (ஒஹையோ, போர்ட்லாந்து) யின் சார்பில் நவம்பர் 14, 2004 ஞாயிறன்று செயின்ட் மேரி அகாதமி அரங்கில் கலைமாமணி கிருஷ்ணகுமாரி நரேந்திரனின் இயக்கத்தில், குன்னக்குடி வைத்தியநாதனின் இசை அமைப்பில் வியக்கும் வண்ணம் நாட்டிய நிகழ்ச்சியாக தேவியின் பல்வேறு வடிவங்களை மேடையேற்றினர்.
வேழமுகத்தோனைத் துதிக்கும் நடனத்தில் தொடங்கி, அபிராமி அந்தாதியின் 'கலையாத கல்வியும்' என்ற பாடல் அடுத்து வந்தது. தொடர்ந்து சமந்தரா மணி பழனியாண்டி அமைத்த 'தேவி ஜகதீஸ்வரி' பதத்திற்கேற்ப மெய்சிலிர்க்க வைத்த நடனங்களைச் சிவகாமி ஆடினார். மினிஜெயராஜ் கருணைபொழியும் அன்னையாக வந்து, அடைக்கலம் புகுவோரைக் காக்க அனல் கக்கும் விழிகளோடு கொடிய மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சி என்றும் நினைவில் நிற்கும். துர்க்கையின் வாகனமாக சிறுவன் விஷால் கர்ஜனையுடன் ஆடிய நடனமும் பாராட்டுக்குரியது.
அரக்கனாகவே மாறிவிட்ட அமெரிக்கப் பெண், பின்னர் கன்னியாகுமரியில் கம்பீரத் தோற்றங்கொண்ட சிவனாகவும் நடித்தார். சமயபுரம் மகாமாயி, கருமாரி, கோலவிழி அம்மன், கோடையூர் குங்குமாரி, கனகதுர்கா இறுதியாக சோட்டானிக்கரை பகவதி என மினி ஜெயராஜ் மாறி மாறி வர, குழந்தைகள் கும்மியடித்து, வேப்பிலை வீசி, ஆடிய குழு நடனம் மிகச் சிறப்பாக அமைந்தது.
குருவின் குருவாகிய கலைமாமணி எஸ்.கே. காமேஸ்வரன் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் அமைந்த தில்லானாவுடன் நிகழ்ச்சி இனிது முடிந்தது. டாக்டர் படேல் மற்றும் டாக்டர் கிருஷ்ணவேணி கலாபாரதி நடனப்பள்ளி, குரு சிவகாமி வெங்கா மற்றும் மாணவியரைப் பாராட்டிப் பேசினர்.
மீனா கந்தசாமி |