வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
தமிழில் சோதனை முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் டிசம்பர் 11 அன்று 'மார்கழி நாடக விழா' கொண்டாடவிருக்கிறது.

இந்த விழாவில் இடம் பெறும் நாடகங்கள் மூன்று. பாகீரதி சேஷப்பன் எழுதி இயக்கும் 'சக்தி' மனித உள்ளத்தின் எல்லையற்ற ஆற்றலைக் கொண்டாடுகிறது. சிலிக்கன் வேல்லியில் கனவு காணும் இளைஞ னுக்கும், அமாவாசையன்று அம்பிகை அருளால் முழுநிலவு எழுப்பிய அபிராமி பட்டருக்கும் என்னதான் தொடர்பு? ஆடலுடன் பாடலும் சேர்ந்து வருகிறது "சக்தி". (பிற்பகல் 12:30)

இரண்டாவது நாடகம், தஞ்சை நாடகக் குழு வழங்கும் இந்திரா பார்த்தசாரதியின் 'நந்தன் கதை'. தஞ்சைப் பல்கலை நாடகத் துறைப் பேராசிரியர் ராமசாமியின் இயக்கத்தில் நந்தனார் கதை, கோபாலகிருஷ்ண பாரதியாரின் கீர்த்தனைகளோடு இந்திரா பார்த்தசாரதியின் கிளர்ச்சியூட்டும் வசனங்களைப் பிணைத்து மரபுக்கும் மக்கள்கலைக்குமுள்ள மோதல்களைச் சித்தரிக்கிறது. "புரட்சிக்காரனை அழிக்கச் சிறந்த வழி அவனைக் கடவுளாக்கிக் கொன்று விடுவதுதான்" என்ற கருத்தை மையமாகக் கொண்ட இந்த நாடகம், பரதத்துக்கும் பறைக்கும் நடக்கும் போரில், நாட்டுப்புறக்கலைக்கும் மரபுக்கலைக்கும் நடக்கும் போட்டியில் நிகழ்கலையின் உச்சத்தைத் தொட்டு விடுகிறது. தமிழ்ச்சங்கப் பேரவை 2003 மாநாட்டில் அமெரிக்காவில் அரங்கேறிய நாடகத்தின் ஒளிப்பதிவு பிற்பகல் 2:15க்குத் திரையிடப்படும். தமிழ் நாடகக் கலையில் ஈடுபாடு உள்ளவர்கள் எல்லோரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய நாடகம்.

விழாவின் உச்சக் கட்டமாக வருவது கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கையைத் தழுவிய 'எண்ணங்கள்'. கொலம்பியா பல்கலைக் கழகப் பேராசியர் ஐரா ஹாப்ட்மன் எழுதிய 'பார்ட்டிஷன்' நாடகத்தின் தமிழாக்கம் இது. தன் கணித முடிவுகளைக் கனவில் வந்து நாமகிரித் தாயார் என்ற தெய்வம் சொன்னது என்னும் மேதையை, முறையே கணிதத்தைக் கற்று முறைப்படி முடிவுகளை எட்டும் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டியால் எப்படி எதிர் கொள்ள முடியும்? பாலாஜி ஸ்ரீனிவாசன் இயக்கும் இந்த நாடகத்தில் நாமகிரித் தாயார் மட்டுமல்ல, ·பிரெஞ்சுக் கணிதமேதை ·பெர்மாவின் ஆவியும் ஒரு பாத்திரம்தான். (பிற்பகல் 4:30)

எவர்கிரீன் வேல்லி உயர்நிலைப் பள்ளி அரங்கம். சனிக்கிழமை டிசம்பர் 11, 2004. பிற்பகல் 12:30 முதல். முழுநாள் அனுமதிச்சீட்டு விலை $15 (மன்ற உறுப்பினர் தள்ளுபடி உண்டு). அனுமதிச் சீட்டு கிடைக்கும் இடங்கள்: மெயில்பேக் தர்மராஜ், லோகா 408-806-8330, கருண் 510-449-2309, மணி 510-796-2433

மேற்கொண்டு விவரங்களுக்கு: http://www.bayareatamilmanram.org

© TamilOnline.com