டிசம்பர் 2004: வாசகர் கடிதம்
நவம்பர் இதழில் வந்த மோகன்ராஜின் 'சங்கரக்காளின் நகை' என்ற கிராமியக் கதை மிக அருமை. நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்த என் போன்றோர் இம்மாதிரிக் கதைகளைக் கேட்டதில்லை. மரு. வரலட்சுமி நிரஞ்சன் அவர்களது 'நலம் வாழ' பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு இதழிலும் நான் முதலில் படிப்பது 'நலம் வாழ' பகுதிதான். இளந்தென்றல் பகுதியில் அதிகச் சிறார்கள் பங்கு கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஐஸ்வர்யா, நியூ யார்க், நியூ.

*****


பள்ளிப்பிராயத்தில் சென்னையில் வெள்ளிக்கிழமை மாலைகளில் ஆனந்த விகடனுக்காகப் போட்டி போடும் வாசகியான நான், தற்சமயம் மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ·ப்ரீமாண்டின் சுருதி ஸ்வரலயாவிலிருந்து எடுத்து வரும் தென்றலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

குறுக்கெழுத்துப் புதிரின் விசிறியாகிய நான், ஒவ்வொரு மாதமும் முதலில் அதன் விடை காணும் முயற்சியில் ஈடுபட்டு, விடையுடன் ஒப்பிட்டு அளவிலா மகிழ்ச்சியடைவேன். தற்சமயம் விடைகளை அதே இதழில் கொடுக்காமல், அடுத்த மாதம் கொடுப்பது ஒரு மர்மக்கதையைப் படிக்கும் திரில் ஆக உள்ளது.

அக்டோபர் மாதம் கவிதைப் பந்தலில் தலைமுறை இடைவெளியை நெருக்கமாக்கியிருக்கும் வரிகள் என் நெஞ்சைத் தொட்டன.

அம்பா ராகவன்

*****


த.நா. குமாரஸ்வாமி, திருக்கண்ணபுரம் மகிமை மற்றும் தீபாவளி பகுதியை ரசித்தேன். அரசியல் பக்கத்தில் சில வார்த்தைகள் புரியச் சற்றுச் சிரமமாய் இருந்தது. என் தந்தை கும்பகோணம் நகரில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகப் பணி புரிந்தார். எல்லாம் கீத்துக் கொட்டகை தான். சுமார் 1500 பிள்ளைகள் படித்தனர். கீத்துக் கொட்டகை என்றைக்கும் ஆபத்து என உணர்ந்து பள்ளிக்கு ஒரு நிரந்தரக் கட்டிடம் தேவை எனக் கருதி, அங்குள்ள நல்ல உள்ளங்களின் உதவியால் ஒரு பெரிய கட்டிடத்தை நிறுவினார். அதே போல் வசதி உள்ளவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து கட்டிடங்களைக் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். அரசின் உதவி ஓரளவுதான் கிட்டும்.

அட்லாண்டா ராஜன்,
ஜார்ஜியா

*****


எங்களுடைய இரண்டாவது பேத்தியின் இனிய வருகையின் நிமித்தமாக அமெரிக்கா வந்த நான்கைந்து வாரங்கள் நலமாக இருந்தன. அதன்பின் நாட்கள் நகர மறுத்ததுபோல் இறுக்கமான உணர்வு. இதனைப் புரிந்துகொண்ட என் மருமகள் 'தென்றல் வாங்கி வருகிறேன், சரியாகிவிடும் என்றபோது 'என்ன இந்தக் குளிரில் தென்றல் வாங்கி வருவதாவது' என்ற குழப்பத்திற்கு விடையாக வந்த தென்றலைப் பார்த்ததும் தருமிக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடைத்த மகிழ்ச்சியைப் போல் இருந்தது.

எத்தனையோ அதிசயங்கள் அமெரிக்காவில் கண்டாலும் எங்களை அதிகமாக ஈர்த்தது நம் பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் கனிரசமாய்த் தொகுத்து இலக்கியப் பகுதியில் வரும் 'பூம்பூகார் பத்தினிப் பெண்டிர் எழுவர்' பகுதி. எங்கள் இதயத்தை நிறைக்கிறது.

வே. காந்திமதி,
சான் ஹோசே, கலி.

*****


ஒவ்வொரு மாதமும் தென்றல் மிக அருமையாக மணம் வீசிக் கொண்டிருக்கிறது. எல்லாப் பகுதிகளுமே ரொம்பப் பயனுள்ளதாக இருக்கிறது. சமையல் பகுதி சூப்பர். மாயா பஜார் சமையல் புத்தகம் எனக்கு தயவு செய்து அனுப்பி வைக்க முடியுமா? சந்தா அனுப்புகிறேன்.

மைதிலி பார்த்தசாரதி,
பாஸ்டன், மேசச்சூசட்ஸ்

*****


நான் ஓர் ஈழத்தமிழன். நாட்டின் யுத்த பீதியால் கனடா வர விரும்பி, வழியில் அமெரிக்காவில் சிறையில் உள்ளேன். என் போன்று மேலும் பல இளைஞர்கள் இருக்கிறார்கள். அருமையான தமிழைக் கேட்கவும், வாசிக்கவும் தற்போது கிடைப்பதில்லை. இருப்பினும் பாலைவனத்தில் பசும்சோலை போல 'தென்றல்' இதழைத் தந்தார்.

அத்தனையும் வாசித்து முடித்தேன். மாயாபஜார் சமையல்பகுதி, நிகழ்வுகள் பகுதிகள் அதிகம் நீண்டு இருக்கின்றன. கவனம் செலுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

அன்புள்ள சிநேகிதியே பகுதியில் வழங்கப்படும் ஆலோசனைகள் பல குடும்பத்தினர்க்கு வேண்டியதுதான். அதில் 16 வயதுப் பெண்பிள்ளையின் நடத்தை, மனப்பாங்கு பற்றிக் கூறப்பட்டதைக் கண்டு மிகவும் மனம்நொந்தேன். எத்தனையோ தியாகங்களைச் செய்த மகான்களைத் தந்த தமிழ்ச் சமூகத்திற்கா இந்த நிலை! வேத, உபநிடத, புராண, இதிகாசங்கள் போன்ற தர்ம நூல்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தந்த பண்பாட்டுச் செழுமை மிக்க சமூகத்திற்கா இந்த நிலைமை! கவலையாக உள்ளது. வாழ்கின்ற சூழல் பழக்கவழக்கங்களில் செல்வாக்குச் செலுத்தும் என்பதும் உண்மை.

தமிழ்ப் பெரியார்கள், மகான்கள் இச்சமூக அவலத்தை தீர்க்க முன்வரவேண்டும். அதற்கு இத்தென்றல் இதழிற்கும் பெரிய பொறுப்பு உண்டு என நம்புகிறேன்.

பசுபதி முரளிதரன்,
லங்காஸ்டர், கலி.

*****


தமிழ்மொழியில் ஒரு மாதப்பத்திரிகையை வடஅமெரிக்காவில் தென்றலாகப் பரவச் செய்து ஆன்மீகம், அரசியல், கல்வி, இலக்கியம், கட்டுரையுடன் ஆபாசமில்லாது சினிமா செய்திகளையும், ஆற்றல் மிகுந்த பழம்பெரும் 'எழுத்தாளர்' களைப்பற்றி மதுசூதனன் எழுதும் கட்டுரையுடன் அறிமுகப்படுத்தி, புது எழுத்தாளரின் எழுத்தையும் வெளியிட்டு, யாவருக்கும் தென்றல் வந்து மகிழ்ச்சி அளிக்கிறது.

ஐம்பதாவது இதழாக வரும் தென்றலுக்கு வாழ்த்துக்கள்!

சுசிலா, சுப்பிரமணியன், கௌரி, நாராயணஸ்வாமி, ராகுல், சகானா

*****


இதழ் நடத்துவது சுலபமான காரியம் அல்ல. பல காலகட்டங்களில் பல ஜாம்பவான்கள் கூட அடிபட்டு ஒதுங்கியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் லாபம் கருதாது அமெரிக்கா வாழ் தமிழர்களுக்காக தென்றல் இதழைத் தொடர்ந்து நடத்தி வருவது தமிழன்னைக்குச் செய்யும் அரிய தொண்டு. அதற்கு என் வாழ்த்துகள்.

வெ. ஜகநாதன்,
இர்வைன், கலி.

© TamilOnline.com