மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி உருவானது முதலே ஆளுநர் மாற்றல் விஷயத்தில் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வுக்கும், மத்தியில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க.வுக்கும் ஏற்பட்ட உரசல் பகிரங்கமாக வெடித்தது.
ஆரம்பம் முதலே தமிழக ஆளுநர் ராம் மோகன்ராவை மாற்றுவதற்காகத் திரைமறை வில் தி.மு.க. காய்களை நகர்த்திக் கொண்டே இருந்தது. அவருக்கு பதிலாக சுர்ஜித்சிங் பர்னாலாவை தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று தி.மு.க. நினைத்தது. இதைத் தி.மு.க திட்டவட்டமாக மறுத்தபோதிலும் பத்திரிகைகளிலும், நாளேடுகளிலும் ஆளுநர் மாற்றத்தில் தி.மு.க. மத்தியரசை வற்புறுத்தியதாகவே செய்திகள் வெளிவந்தன.
ராம்மோகன்ராவ் ஆளும் கட்சிக்கு சாதகமாகச் செயல்படுகிறார் என்றும், எதிர் கட்சிகளின் மனுக்களின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கத் தயக்கம் காட்டுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் ஆளுநர் மாற்றத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிவிட்டதையடுத்து ராம்மோகன்ராவ் தன்னுடைய விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
ஆந்திர மாநில ஆளுநரான சுர்ஜித்சிங் பர்னாலா தமிழக ஆளுநராக நவ. 3ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். முன்னாள் ஆளுநர் ராம் மோகன்ராவை விமானநிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார். பர்னாலா பதவியேற்றபின் இருமுறை அவரைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, இதன்மூலம் ''எனக்கும் தற்போதைய ஆளுநருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் காரணமில்லாமல் ஆளுநரை மாற்றுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்'' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்றே கருதப்படுகிறது.
ஆளுநர் நியமிக்கப்பட்டால் அவர் தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கான புதிய சட்டங்களை மத்திய அரசு இயற்ற வேண்டும். அப்போதுதான் நமது ஜனநாயக அமைப்பும் நீதியும் வலுப் பெற்றதாக அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சுர்ஜித்சிங் பர்னாலாவின் வருகையடுத்து தமிழக அரசியலில் விறுவிறுப்பான நிகழ்வுகள் அரங்கேறும். ஆளும் தரப்பும், எதிர்த்தரப்புகளும் அதற்கான தங்கள் காய்களை நகர்த்த இப்போதே தயாராகி விட்டனர்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |