தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு ஆந்திராவில் மெஹபூப்நகர் என்கிற இடத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை கொலைவழக்கு ஒன்றில் முக்கியக் குற்றவாளியாகத் தமிழகக் காவல் துறை கைது செய்தது அதிர்ச்சியை அளித்தது.
செப்டம்பர் 3, 2004 அன்று காஞ்சிபுரத்தில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சராமாரியாக வெட்டிக் கொலை செய்தது. கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் பற்றிக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இதற்காக ஐந்து தனிப்படைகளைக் காவல்துறை அமைத்தது.
இவ்வழக்கில் ஐந்து பேர் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் போலிகள் எனத் தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த நிலையில் மறுபடியும் இரண்டு பேர் சரண் அடைந்தனர். சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக இவர்கள் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் நவ. 24 ஆம் தேதி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் கதிரவன் தான் போலீசாரால் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்கள் சொன்னபடியே சங்கராச்சாரியார் மீது பழிசுமத்தியதாகவும் கூறினான். இதேபோல் அவனது கூட்டாளியான சின்னாவும் கூறியிருக்கிறான்.
நள்ளிரவில் கைது செய்த இந்த நடவடிக்கைக்குப் பல ஹிந்து அமைப்புகளும், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தன. இது ஹிந்துக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றும், ஹிந்துகளைத் திட்ட மிட்டு அவமானப்படுத்தும் செயல் என்றும் கூறின. இதைத் தொடர்ந்து நாடுதழுவிய எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோதும் தமிழகத்தில் ஏதும் பாதிப்பு இருக்கவில்லை. கோவை அருகிலுள்ள பல்லடத்தில் இந்து முன்னணித் தலைவரான ஒரு தலித் இளைஞர் தீக்குளித்தார். புதுதில்லியில் நடந்த கண்டன உண்ணாவிரதத்தில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜெயேந்திரரின் கைதை வரவேற்று அறிக்கைகள் விட்டன. முக்கியமாகத் தி.மு.க. ஜெயேந்திரரின் கைதை வரவேற்றது. முதலில் "இது ஒரு நாணயமான செயல்" என்று அறிவித்த கருணாநிதி, நவ. 23 அன்று "சட்டத்தின்முன் எல்லோரும் சமம்தான் என்பதில் மாற்றமில்லை. ஆனால் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது இது பழிவாங்கும் செயல்போலத் தோன்றுகிறது" என்று கூறியது திருப்பு முனையாக இருந்தது.
மீண்டும் நவ. 24 அன்று தமிழக அரசு காஞ்சிமடத்தின் பக்தரான ராமகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 2002-ஆம் நடந்த கொலைமுயற்சிக்கும் ஜெயேந்திர சரஸ்வதி அவர்களே காரணம் என்று வழக்குப் பதிவுசெய்து மற்றொரு கைது ஆணை வழங்கியுள்ளது. ஆனால் ராமகிருஷ்ணன் மடத்துடனே நல்ல உறவு கொண்டிருப்பதாகவும், சென்ற மாதம்கூட வந்திருந்ததாகவும் மடத்தின் பிரதிநிதி கூறியுள்ளார். ராமகிருஷ்ணனின் சகோதரர் இதுகுறித்து தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் "ராமகிருஷ்ணன் இதுகுறித்து மிகவும் மனம் வருந்துகிறார். சுவாமிகள் குற்றமற்றவர். இத்தகைய அவதூறுகள் சரியல்ல" என்று கூறியுள்ளதும் கவனிக்கத் தக்கது.
தொகுப்பு: கேடிஸ்ரீ |