கலைத்துறையினரின் பாராட்டுமழையில் முதல்வர்!
'குடைக்குள் மழை' பட வெளியீட்டிற்குப் பிறகு நடிகர் பார்த்திபன் திருட்டு விசிடி ஒழிப்புக்காக ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். பிறகு திரைப்படத் துறையினர் கூட்டாக ஒருநாள் நடைப் பயணம் மேற்கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து பல கோரிக்கைகளை வைத்தனர்.

முதல்வரும் உடனடியாக அவற்றைப் பரிசீலனை செய்து சில சிறப்பு சலுகைகளையும், சில அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்தார். குறிப்பாகப் புதிய படத்திற்கான திருட்டு விசிடியை ஒழிக்கக் குண்டர் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார்.

திரைப்படத்துறையினருக்கு முதல்வர் அறிவித்த பல சலுகைகளுக்கும் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சிறப்பானதொரு விழா நடைபெற்றது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணிக் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் கடந்த மூன்றாண்டுகளில் வெளியான பட்ஜெட் படங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று திடீரென அறிவித்து திரைப்படத்துறையினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

வீரப்பனைக் கொன்றது சரித்திரம் என்று ரஜினிகாந்தும், நல்ல தலைவருக்கு அடையாளம் ஜெ என்று கமல்ஹாசனும் விழாவில் பேசியது கலக்கல்!

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com