என்னவளே.....
என்னைப் பிடித்திருக்கிறதா என்று
எத்தனை முறை கேட்டிருப்பேன் உன்னிடம்
அத்தனை முறையும் உம் கொட்டிவிட்டு
ஒரு முறை கூட நீ திரும்பி கேட்டதில்லை
சே! எத்தனை சந்தேகப் பேர்வழி நான்

உனக்காகக் காத்திருந்த நிமிடங்களைக்
கணக்கெழுதி வைத்திருக்கிறேன்
ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு முத்தம் என்று
ஒருநாள் மொத்தமாய் நீ தர வேண்டும்
காத்திருத்தலுக்கு இதுதான் தண்டனை

நீ பதித்துச் சென்ற காலடித் தடங்களில்
என் பாதம் வைத்துப் பார்க்க ஆசை
ஆனால் உன் சுவடுகள் சிறியன
நம் சுவடுகள்கூடப் பொருந்தாமல் போவதை
பொறுத்துக் கொள்ள முடியாது என்னால்

உனக்காக நான் காத்திருந்த போது
காத்திருத்தலின் வேதனை தெரிந்தது
எனக்காக நீ காத்திருந்த போதுதான்
காதலின் வீரியம் விளங்கியது

நடுங்கும் கைகளோடு முதல் முதலில்
என் காதலை உன்னிடம் சொன்னேன்
ஒரு வாரத்திற்குப் பின் சரியென்று சொன்னாய்.
அந்த ஏழு நாட்களும்
என் நினைவாய் இருந்தாயே
அது போதும் எனக்கு

நான் வாங்கிக் கொடுத்த சேலையைக்
கசங்காமல் நேர்த்தியாய் கட்டியிருந்தாய்
எப்படி இருந்தது வந்தவுடன் நான் கேட்டேன்
போகும் போது சொல்லிவிட்டுப் போனாய்
உன்னைக் கட்டிக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கு
கசங்கிப் போனது நானும் தான்

ஒருவாரக் காய்ச்சலுக்குப் பின்
உன்னைப் பார்த்த அந்த விநாடியில்
பிரமிப்பில் பயந்து போனேன்
உயிர் முழுவதும் சேர்த்து
ஒரு பார்வை பார்த்தாயே
அது உன்னால் மட்டும்தான் முடியும்

சீக்கிரம் போகணும் நேரமாயிடுச்சு
அடிக்கடிப் புலம்பி கையைத் திருப்பி என் கடிகாரம்
பார்த்துக் கொள்கிறாய்
என்னைத் தொட்டுக் கொள்ள
என் கைக்கடிகாரமும் அவசரமும்
உனக்கொரு சாக்காயிற்று.

எனக்கொரு ஆசை
என்னை முத்தமிடும் போது ஒரு முறையாவது
நீ கண்களை திறந்திருக்க வேண்டும்
ஆனால்... அது என்னாலும் முடிவதில்லை.

வாசன் குப்புசாமி,
நியூயார்க்

© TamilOnline.com