தெரியுமா?
டெட்ராய்ட் மாநகர வானொலியில் 'தமிழ் அமுதம்'

சனவரி 16, 2005 முதல் பொங்கல் விருந்தாக 'தமிழ் அமுதம்' என்ற திரையிசை நிகழ்ச்சியை பிரதி ஞாயிறுதோறும் மாலை 5 முதல் 6 மணிவரை (கீழை அமெரிக்க நேரம்) வழங்குகிறார் வெ. சு. பாலநேத்திரம். வானொலியில் இந்த நிகழ்ச்சி 1460 AM அலைவரிசையில் கேட்கக் கிடைக்கும். www.wpon.com இணையத் தளத்திலும் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் கேட்கலாம்.

நிதிஉதவி மற்றும் விளம்பரம் செய்யத் தொடர்புகொள்க வெ. சு. பாலநேத்திரம், தொலைபேசி எண்: 248-641-7684 அல்லது www.tamilamudham.com

*****


தென்றல் வாசகர்களுக்கு நன்றி

ஆகஸ்டு மாதம் சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை யோடு இணைந்து கும்பகோணம் பள்ளித் தீவிபத்து நிவாரண நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கியது.

இதுவரை திரட்டிய நிதி, மற்றும் செயல்பாடுகள் பற்றிய தமிழ்ச்சங்கப் பேரவையின் அறிக்கையைக் கீழ்க் காணும் சுட்டியில் காணலாம்: http://www.bayareatamilmanram.org/kumbakonam.html

அறிக்கையின்படி, திரட்டப்பட்ட மொத்தத் தொகை $13,293.43. அதில் ஏறத்தாழ 7000 டாலர்கள் வரை வழங்கியவர்கள் சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்ற உறுப்பினர்கள், நண்பர் கள், மற்றும் தென்றல் வாசகர்கள். தமிழ் மன்றத்தின் வேண்டுகோளை ஏற்று நிதி வழங்கிய மன்ற உறுப்பினர்களுக்கும், தென்றல் வாசகர்களுக்கும், வேண்டு கோளை வெவ்வேறு வழிகளில் கேட்டு நிதியளித்த ஏனைய நண்பர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

கும்பகோணம் அரிமா சங்கத்தின் உதவியுடன் நிவாரணப் பணிகள் தொடங்கிவிட்டன. தீப்புண் பட்ட குழந்தைகளுக்கு நெடுநாள் மருத்துவ உதவி, பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நிதி உதவி, பொது இடங்களில் தீவிபத்துத் தடுப்பு முயற்சி, பாதுகாப்புப் பழக்கப் பயிற்சிப் பணிகள் இவற்றிற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முழு விவரங் களுக்கு மேற்காணும் சுட்டியில் காண்க.

நிதி திரட்டும் பணி இன்னும் தொடர்கிறது. நிதி உதவி தர விரும்புபவர்கள், FETNA அமைப்புக்குக் காசோலை எழுதி, கும்பகோணம் தீவிபத்து நிவாரண நிதி என்று குறிப்பிட்டுக் கீழ்க்கண்ட

முகவரிக்கு அனுப்பவும்:
Mani M. Manivannan
President,
Bay Area Tamil Manram,
38871 Jonquil Drive
Newark, CA 94560

நிவாரண நிதி அனுப்புபவர்களுக்கு வரிவிலக்குச் சலுகை உண்டு. வளமான எதிர்காலத்தை நோக்கிப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வாழ்க்கையை மேம்படுத்துவோம் வாரீர்.

இங்ஙனம்,
தென்றல்
சான் ·பிரான்சிஸ்கோ
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் (http://www.bayareatamilmanram.org

*****


வெளிநாட்டுப் பல்கலைகளில் மூடப்படும் தமிழ் இருக்கைகள்

பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின் இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்ததை நாம் கொண்டாடும் மகிழ்ச்சிகரமான இந்த நேரத்தில் கவலை தரும் செய்தி ஒன்று வந்திருக்கிறது: பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிற்றுவதே நிறுத்தப்படுகிறது என்பதுதான் அது.

அவ்வாறு நிறுத்தப்பட்ட இடங்கள் இதோ: பாரிஸ் (பிரான்ஸ்), லண்டன் (இங்கிலாந்து), லீடன் (நெதர்லாந்து), ஹாம்பர்க் (ஜெர்மனி).

தவிர ஜெர்மனியிலுள்ள கொலோன் பல்கலையில் இந்தாலஜி மற்றும் தமிழ்க் கல்விக்கான பயிலகத்தின் பேரா. டீட்டர் காப் 2006-இல் ஓய்வு பெற்றதும் தமிழ்த்துறை மூடப்படவிருக்கிறது. இங்குள்ள சுமார் 50,000 தமிழ்ப்புத்தகங்களை உடைய நூலகம் மிகப்பெரிய தமிழ் நூலகமாகக் கருதப் படுகிறது. இது மிக அரிய புத்தகங்களை உடையதும் ஆகும். தமிழ்த்துறை மூடப் பட்டால் இந்தத் தமிழ்நூலகத்தையும் உலகம் இழக்கும்.

தவிர இத்தாலியின் பீசா நகரிலுள்ள திராவிட இலக்கிய இருக்கையும் மூடப் படவுள்ளது.

இந்தப் பட்டியலைத் தருபவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப்பேராசிரியை ஈவா ஹில்டன். அண்மையில் இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரிப் பாண்டிச்சேரியில் இருக்கும் 'அறிஞர் அண்ணா அறக்கட்டளை' பாரதப் பிரதமருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. நீங்களும் உங்கள் பகுதியில் இருக்கும் தமிழர்களிடம் கையொப்பம் வாங்கியோ, மின்னஞ்சல் வழியேவோ தமிழக முதல்வர், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் இந்த நிலை குறித்துக் கவலை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடிதம் எழுதுங்கள்.

உங்கள் பகுதியில் இருக்கும் கல்லூரி அல்லது பல்கலையில் தமிழ் இருக்கைகள் அல்லது துறைகள் ஏற்படுத்த அமைப்பு ரீதியான நடவடிக்கை எடுத்து, நிதி திரட்டி வழங்கலாம். தமிழ்ச் சங்கங்களும் முனைப்புள்ள தமிழர்களும் இவற்றை முன்னின்று செய்யவேண்டும். இது அவசரத் தேவை.

© TamilOnline.com