பாம்புகளாக வளைந்து மலைகளின் ஊடே நிதானமாகச் செல்லும் பல ஜீவநதிகள்தான் மேற்குப் பென்சில் வேனியாவின் ஜீவாதாரம். இங்குள்ள பிட்ஸ்பர்க் நகரின் பிறப்பே இங்குள்ள மூன்று ஜீவநதிகளின் சங்கமத்தில்தான்.
1960களிலிருந்து இந்தியர்கள் இங்கு குடியேறத் துவங்கினர். 1970களில் இருந்தே பிட்ஸ்பர்க்கின் சுற்றுப்புறங் களில் பிறந்து வளர்ந்த இந்தியப் பெண்களுக்கு பரதக்கலையைக் கற்றுத் தந்து, தக்க பக்குவம் வந்ததும் அரங்கேற்றியும் வருகிறார் ஜெயமணி. இதுவரை சுமார் எழுபதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஜெயாவின் நட்டு வாங்கத்தில் அரங்கேற்றம் நடந்துள்ளது.
இந்தியாவின் எல்லா மாநிலங்களி லிருந்தும் வந்து குடியேறியுள்ள இப் பெண்களின் பெரும்பாலான பெற்றோர் களுக்கே இலக்கியத் தரத்திலுள்ள இந்திய மொழிகளில் பரிச்சயம் இல்லை. இருந்தபோதிலும் வளரும், வளர்ந்த மாணவிகளுக்கு மிகப் பொறுமையாக பரதக்கலையின் பின்னணியையும், பதம், வர்ணம் இவைகளின் பாடல்களுக்கு வரிவரியாகப் பொருள் சொல்லி, அந்தப் பொருள் பின்னால் உள்ள இதிகாச, புராணங்களின் கதைகளையும், அவற்றின் சாரத்தையும் கூறிப் பயில்விக்கிறார்.
ஜெயாவின் நடனவகுப்புகள் வெங்கடேஸ்வரா ஆலயத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதுதவிர, இங்குள்ள ஸ்லிப்பர் ராக் பல்கலைக்கழகத்தில் மேற்கத்திய சாஸ்த்ரீய நடனம் பயிலும் அமெரிக்க மாணவிகளுக்கும் பரதக் கலையைச் சில ஆண்டுகளாகப் பரிச்சயப் படுத்தி வருகிறார்.
ஜெயாவின் மாணவியரான ராசி, அனிதா மற்றும் ராதாவின் அரங்கேற்றம் ஜூலை மற்றும் செப்டம்பரில் சிறப்பாக நடந்தேறின.
கொல்லங்கோடு சு. வெங்கடராமன் |