மேடைநாடகம்- 'நாட்டக்' வழங்கிய ரகசிய சிநேகிதியே
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் சிந்தனையைக் கிளறும் நவீன நாடகங்களைப் பல மொழிகளில் அரங்கேற்றிப் புகழ் பெற்ற அமைப்பு நாட்டக். விஜய் டெண்டுல்கர், கிரீஷ் கர்நாட், பாதல் சர்க்கார், பீஷ்ம சாஹ்னி போன்றோரின் புகழ்பெற்ற நாடகங்களை இந்தியர்களுக்கு அவர்களின் தாய்மொழியிலேயே வழங்கும் 'நாட்டக்' கலைஞர்கள் நாடகக் கலையை ஆழமாக நேசிப்பவர்கள். அவர்கள் சோதனை நாடகங்களைத் தொழில் நேர்த்தியுடனும், கலைத் திறமை யுடனும் மேடையேற்றி வருகிறார்கள். தமிழில் அவர்கள் வழங்கிய பீஷ்ம சாஹ்னியின் 'கலவரம்' இது போன்ற முயற்சிகளுக்குத் தமிழர்களின் ஆதரவு உண்டு என்பதை நிலைநாட்டியது. அடுத்துவந்த 'காசு மேலே காசு' மேடைக்கலைக்கு இலக்கணம் வகுத்த நாடகம். மேடையில் கண்கட்டு வித்தையைப் போல் ஒரு நில நடுக்கத்தைக் காட்ட முடியும் என்று நிரூபித்தனர் அதிலே. ஆனால், 'காசு மேல காசு' நாட்டக்கின் குறிக்கோளிலிருந்து சற்று விலகி, தமிழ்த் திரைப்படத்தைப் போல திடுக்கிடும் திருப்பங்களும், நகைச்சுவை, சோகம் கலந்த அவியலாக, கடைசியில் எல்லோரும் ஒன்று சேரும் குடும்பப் படம் போல் திகட்டியது. நாட்டக்கின் அண்மைத் தமிழ் முயற்சியான 'ரகசிய சிநேகிதியே' முழுச் சோதனைமுயற்சிக்கும் மசாலாவுக்கும் இடைப்பட்ட இடத்தைக் குறிவைக்கிறது.

'ரகசிய சிநேகிதியே'வை எழுதி, இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மணிராம், தொழில் முறைக் கலைஞர்களைத் தூக்கிச் சாப்பிடும் திறனுள்ளவர். பார்வையாளர்களை எது கவரும் என்பதை நன்றாக அறிந்தவர். இவரது நாடகங்களில் தொய்வே இருக்காது. பார்வையாளர்களுக்கு அலுப்புத் தட்டாமல் அவர்களை இரண்டு மணி நேரம் கட்டிப் போட வல்லவர் மணிராம். இந்த நாடகம் அவரது ரசிகர்களை ஏமாற்றவில்லை.

தான் எழுத்துலக ஜாம்பவான் என்று தம்பட்டம் அடிக்கும் எழுத்தாளன் பிரம்மாவை முதல் காட்சியில் சந்திக்கிறோம். "நான் படைப்பதினால் என் பேர் இறைவன்" என்று பாடும் பிரம்மாவின் அகங்காரம், தான் படைக்கும் பாத்திரங்கள் தன்னையே ஆட்டிப் படைக்கும் போது அழிகிறது என்பதுதான் கதை. எழுத்தாளனின் படைப்புலகத்தையும், படைப்பாளிக்கும் பாத்திரங்களுக்கும் உள்ள உறவுகளையும் சித்தரிக்கும் நாடகத்தை மேடையேற்றி மக்களைக் கவர முடியும் என நிரூபித்திருக்கிறார் மணிராம்.

எழுத்துலகப் பரிசுகள் அனைத்தையும் வென்ற எழுத்தாளன் பிரம்மா, காதல்கதை எழுதவில்லையே என்ற கேள்விக்குப் பதிலாகக் காதல்கதை எழுதத் துவங்குகிறான். இவன் எழுத்தில் மூழ்கியதாலோ என்னவோ இவன் வாழ்க்கையில் காதலோ, காதலியோ இருந்ததாகத் தெரியவில்லை. மக்கள் விரும்பும் வார இதழில் தொடர் கதையாகக் காதல் கதை எழுதவரும் இவன் கற்பனையுலகம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாபோல் செயல்படுகிறது. உத்தமனான டாக்டர் கதாநாயகன் ஏழைப்பங்காளன். கனவுகளோடு வாழும் மருத்துவம் படிக்கும் நடுத்தரக் குடும்பத்து நாயகி நாயகனைச் சந்திப்பதும் சினிமாத்தனமான ஒரு விபத்தின் மூலம்தான். தன் வருங்காலக் கணவன் நல்ல குணங்கள் நிறைந்தவனாய் இருக்க வேண்டும் என்று பழைய படக் கதாநாயகி போல் இவளும் கனவு காணுகிறாள். கல்யாண நிச்சயத்துக்குப் பின் குடிபோதையில் தள்ளாடித் தன் வீட்டைத் தேடிவரும் கதாநாயகன் கண்டிப்பாகத் தவறு செய்திருக்க மாட்டான் என இவள் நம்புகிறாள்.

"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" என்று போதையிலே மிதக்கும் எழுத்தாளனுக்கோ தான் படைத்த கதாநாயகி மேல் மையல். குடிகார எழுத்தாளன், குடியை வெறுக்கும் கதாநாயகியைப் படைத்து அவள் மேல் காதல் கொள்ளும் முரண்பாட்டை எப்படி விடுவிப்பது என்பதில்தான் நாடகாசிரியரின் முழுத்திறமையும். படைப்பாளியையும், அவனது படைப்புலகத்தையும் மேடையின் வெவ்வேறு பகுதிகளில் நிலை நிறுத்தி ஒளியமைப்பு மூலம் இவ்விரண்டு களன்களையும் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது ஒரு சித்துவேலை தான்.

ஒப்பற்ற காதல் கதை எழுதுவேன் என்று கிளம்பிய இந்த எழுத்தாளன் கடைசியில் படைப்பது என்னவோ 60களின் எம்.ஜி.ஆர். சினிமாக் கதைதான். லைலா-மஜ்னு, ஆன்டனி-கிளியோபாட்ரா, அம்பிகாபதி-அமராவதி, சிக்கல் சண்முகம் பிள்ளை-தில்லானா மோகனாம்பாள் என்ற அமரத்துவம் பெற்ற காதல் கதைகளின் நிழல்கூட எழுத்தாளன் பிரம்மாவின் மேல்படுவதில்லை. ஹிந்துஸ்தானி இசைக்கு அற்புதமாக நாட்டியமாடும் நடன மங்கையாய் இவன் கனவில் வரும் நாயகியை, வெறும் சினிமாத்தனமான சாதாரணப் பெண்ணாகப் படைக்கும் இவன் ஏன் அவள் மேல் மையல் கொள்ளவேண்டும்? இந்த நாடகத்தின் மூலம் குறுந்தாடி, ஜோல்னாப் பை, அகங்காரத் தொடர்கதை எழுத்தாளர்களுக்கு எழுத்தை விட விளம்பரம் செய்யத் தான் நன்றாகத் தெரியும் என்று நகைக்கிறாரோ நாடகாசிரியர்!

கதாசிரியர்களைக் கிண்டல் செய்யும் கோணத்தில் பார்த்தால், நாடகத்தோடு பட்டும் படாமலிருக்கும் நகைச்சுவைக் காட்சிகள், திடுக்கிடும் திருப்பங்கள், சோகக்காட்சிகள், பின் எல்லோரும் மகிழ்ச்சியோடு கல்யாண மேடையருகே திரளும் 1960களின் தமிழ்ச் சினிமா முடிவு எல்லாமே பொருத்தம் மட்டுமல்ல, பொதுமக்களின் மன மகிழ்வுக்கு ஏற்ற பொழுது போக்கு என்றும் கொள்ளலாம். நாடகத்தின் நடுவில் வந்த தமிழ் தெரியாத ஒரு வங்காள நண்பர், பிரம்மாவின் அருகில் அவனது படுக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது அவன் காதலன் அல்ல, அவனது மனசாட்சி என்று புரியாமல் இது ஒரு முற்போக்குப் புரட்சி நாடகம் என்று நினைத்துக் கொண்டார்.

'காசு மேல காசு' நாடகத்தில் மேடைக் கலைஞர்களின் அசாத்திய வெற்றி கதையைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டதாலேயே என்னவோ இந்த முறை சற்று அமுக்கியே வாசித்திருந்தார்கள். இருந்தாலும் பிரிட்ஜ் டேபிளின் மேல் துணியை விரித்து டாக்டர் மேஜை என்று காட்டி யிருப்பது கொஞ்சம் 'ஓவர்' தான். பிரம்மாவின் படைப்புலகத்தை நிஜ உலகமாகக் காட்டிய நடிகர்கள் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள். தமிழ்நாட்டிலிருந்து வரும் தொழில்முறைக் கலைஞர்களின் நாடகங்களை விட இந்த உள்ளூர் நாடகம் சிறப்பாக இருந்தது என்பதுதான் மக்கள் தீர்ப்பு.

அன்னம்

© TamilOnline.com