பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர் திரு.வி. கலியாண சுந்தரனார். அக்காலத்துச் சீர்த்திருத்தச் செயற்பாடு, விடுதலைப் போராட்ட எழுச்சி, விடுதலை அரசியல், சமூகச் சிந்தனை ஆகியன ஒருவரை எவ்வாறு ஆற்றுப்படுத்தும், அத்தகையவர் சமூகத்தை எவ்வாறு ஆற்றுப்படுத்த முடியும் என்பதற்கு இவர் வாழ்க்கையும் பணிகளும் சிறந்த எடுத்துக்காட்டாகும். அப்போது இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்தின்கீழ் இருந்த காலம். அந்நியருக்கு எதிரான சிந்தனையும் போராட்டமும் முனைப்படைந் திருந்த காலம். 1940களில் நாடு விடுதலை பெறவிருந்த காலத்தில் கல்விச்சூழல் எப்படி இருந்தது என்பதைத் திரு.வி.க.வே விளக்கியிருக்கிறார்.
''ஆங்கிலப் பயிற்சி காட்டுத்தீப் போல் நாட்டில் பல பாகங்களிலும் பரவலாயிற்று. ஆங்கிலம் பயின்ற இந்தியர் இப்பொழுது கோடிக்கணக்கினராய்ப் பெருகி நிற்கின்றனர். இவ்வளவு பேரும் அடிமை வேலைக்கென்று பயில்வது எங்ஙனம் இயற்கையினதாகும்? செயற்கை முறையில் ஆங்கிலம் பயில்வதால், அ·து அடிமை உணர்வை உண்டாக்குகிறது போலும்."
"இக்காலக் கல்வியின் அடிப்படையில் விதேசியம் உணர்ந்து கொண்டிருத்தல் கருதற்பாலது. கல்வி பயிலும் பள்ளி முழுவதும் விதேசியமாயின், பிள்ளைகளிடம் சுதேசியம் எங்ஙனம் வளரும்? பிள்ளைகள் கற்பதும் கேட்பதும் காண்பதும் பிறவும் விதேசியம். விதேசியச் சூழலிடை நின்று வளரும் பிள்ளைகள் நெஞ்சில் என்ன வளரும்? சுதேசியமா? விதேசியமா? இளமையிலேயே மக்களுக்கு விதேசிய விதை விதைக்கப்படுகிறது! தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது பழமொழி."
இது விதேசியம், சுதேசியம் என்ற எண்ணக் கருக்கள் தொடர்ந்து வெளிப்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதைக் காட்டுகிறது. காலனித்துவ அடிமை மனோபாவத்திலிருந்தும் அதன் அடையாளங்களிலிருந்தும் விடுபட்டுச் சுதந்திர மனிதர் களாக வாழ்வதுதான் மனிதப் பிறப்பின் நோக்கம் என்று திரு.வி.க. தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்துகொண்டார்.
"பிறப்பின் நோக்கம் என்ன? விடுதலை. இறவாமையே விடுதலை. விடுதலைக்கும் இறப்புக்கும் என்ன வேற்றுமை? மீண்டும் பிறக்கச் செய்யாதது விடுதலை. மீண்டும் பிறக்கச் செய்வது இறப்பு. மக்கள் எதற்கு முயலுதல் வேண்டும்? விடுதலைக்கா? இறப்புக்கா? யான் பிறப்பை வெறுக்கின்றேனில்லை, அதை விரும்புகிறேன். தொண்டுக்குப் பிறப்பு பயன்படல் வேண்டுமென்பது எனது வேட்கை" என்று திரு.வி.க. குறிப்பிடுவதை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். அவருக்குள் இயங்கிய வேட்கை தான் விடுதலையின் விரிதளம் நோக்கி கவனத்தைக் குவிக்கச் செய்தது.
அனைத்துத் தளைகளிலிருந்தும் மனித சமுதாயத்தை விடுவித்துச் சுதந்திர மனிதர்களாக வாழ்வதற்குரிய சூழலை உருவாக்குவதே தனது உயரிய பணி என்பதில் தெளிவாக இருந்துள்ளார். எங்கும் அன்னிய மோகம், அடிமைத்தனம் நிலவி வருவதைப் பொறுக்க முடியாமல் உள்ளூர மனங்கலங்கி நின்றார். இதனால் தான் செய்ய வேண்டிய பணி என்ன என்பது பற்றித் தீவிரமாகச் சிந்தித்தார். தாம் ஆற்றிய தமிழாசிரியர் பணியை உதறிவிட்டு விடுதலை அரசியலுக்கே தனது வாழ்வை அர்ப்பணித்தார்.
1917 டிசம்பர் மாதச் தொடக்கத்தில் 'தேசபக்தன்' ஆசிரியராகப் பணி தொடங்கினார். அன்று முதல் அவரது அரசியல் பணியும் தீவிரமாயிற்று. காங்கிரஸ் தேசியவாதியாக வாழ்ந்தார். ஆனால் அவர் அரசியல்வாதிக்குரிய பண்புகளுடன் இயங்கியவர் அல்லர். கட்சியில் எந்த உயர் பதவியிலும் அமர்ந்து செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டவரல்லர். எல்லாக் கட்சிக்காரர்களிடமும் அன்புடன் பழகி வந்தார். குறுகிய கட்சி அரசியல் நோக்கத் துக்குக் கட்டுப்பட்டு இயங்கியவர் அல்லர். பொதுமக்களிடையே, குறிப்பாகத் தொழிலாளர்கள் மத்தியில், அரசியல் பணி ஆற்றுவதில் பெரும் விருப்புக் கொண்டு இயங்கினார்.
காங்கிரஸ் சார்பாகப் பிரச்சாரத்துக்குச் சென்ற போதெல்லாம் தொழிற்சாலை உள்ள இடங்களில் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிப் பேசி, ஆங்காங்கே தொழிற்சங்கங்கள் தோன்றுமாறு செய்வதை ஒரு விரதமாகக் கொண்டதாகத் தாமே எழுதியுள்ளார். தொழிலாளர் இயக்கமே சீர்திருத்தப் பணிகளில் சீரியது என்ற கருத்து அவருக்கு உண்டு.
"விளம்பரமற்ற முறையில் கலப்பு மணம் முதலியவற்றை யான் ஆற்றி வருகிறேன், வேறு சில துறைகளிலும் முயன்று வருகிறேன். சிறுசிறு சீர்திருத்தங்களைப் பேசியும் எழுதியுங் காலம் கழிக்க விரும்புகிறேனில்லை. என் கருத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படையான சீர்திருத்தம் படிந்து கிடக்கிறது. அதில் என் பெரும்பொழுது கழிகிறது. அது தொழிலாளர் இயக்கம். இப்பொழுது ஆக்கம் பெற்று வருகிறது. அது சமதர்ம ராஜ்யத்தை ஏற்பதால் ஒரு நாள் நிலைபெறும். அந்த ராஜ்யமே நமது நாட்டைச் சூழ்ந்துள்ள இருளைப் போக்க வல்ல ஒளியாகும். என் கருத்து பெரிதும் தொழிலாளர் இயக்கத்தையே குறிகொண்டு நிற்கிறது. அதுவே பெருஞ்சீர்திருத்த இயக்கமென்று யான் உண்மையாக நம்புகிறேன்" என்று திரு.வி.க. தனது வாக்கு மூலமாகக் கூறியுள்ளார்.
காந்தியச் சிந்தனையில் தீவிரப்பற்று கொண்டவராகத் திரு.வி.க. இருந்தாலும் மார்க்சியத்திலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. சமதர்மம் பற்றிய விஞ்ஞான ரீதியான விளக்கத்தை முன்வைப்பதில் மார்க்சியத்துக்கு பெரும் பங்குண்டு. இதனால்தான் அவர் "மார்க்சியமும் காந்தியமும் சேர்ந்த ஒன்றையே யான் சன்மார்க்கம் என்று பேசியும் எழுதியும் வருகிறேன்" என்று குறிப்பிட்டார். தொழிலாளர்கள் மத்தியில் தொடர்ந்து வேலை செய்வதன் உந்துசக்தியும் இதுதான்.
சுரண்டலும், ஒடுக்குமுறையும், வர்க்க பேதமும், சாதீயக் கொடுமையும், தீண்டாமையும், சமயச் சண்டைகளும், பெண்ணடிமைத் தனமும், பிற்போக்கு மூடநம்பிக்கைகளும் கோலோச்சும் ஒரு நாட்டில் எப்படிச் சிந்திக்க வேண்டும், செயற்படவேண்டும் என்பதற்கு திரு.வி.க. ஒரு நல்ல எடுத்துக்காட்டு. மண்ணுக்கேற்ப 'சமத்துவச் சிந்தனை' மற்றும் 'விடுதலை அரசியல்' இருக்கும் என்பதைத்தான் திரு.வி.க. வின் சொல், செயல்யாவும் மெய்ப்பிக்கின்றன.
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு அரசியல் பணிபுரிந்த திரு.வி.க. வெறும் அரசியல் விடுதலையே முழு விடுதலையாகாது என்று உறுதியாகக் கூறி வந்தார். 1947இல் அடைந்த அரசியல் விடுதலையை "ஒருவித விடுதலை" என்றே குறிக்கின்றார். அவர் கனவு காண்பது முழுவிடுதலை. பொருளாதார, சமூக ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல்களிலிருந்தும் விடுபட்டு வருவதையே 'முழுவிடுதலை' என்று குறிப்பிடுகின்றார். "இந்தியாவும் விடுதலையும்" என்ற அவரது நூல் மிகத் தெளிவான அரசியல் கருத்தாடலை முன்வைக்கிறது.
பத்திரிகைத் துறையில் நுழைந்த காலமுதல் அவர் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் அக்காலக் கட்டத்தில் உரத்துச் சொல்ல வேண்டிய சிந்தனைகளை முன்வைத்தன. 'தேசபக்தன்', 'நவசக்தி' இரண்டு பத்திரிகைகளும் திரு.வி.க. வின் பத்திரிகை நடைக்கு முன்மாதிரியாக அமைந்தன. தம் எழுத்துப் பணியின் பங்குபற்றித் திரு.வி.க. பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். "அந்நாளில் நாட்டு மொழியில் பத்திரிகைகளில் அயல்மொழி நாற்றம் வீசும். அரசியல் குறியீடுகள் அன்னியத்தில் அப்படியே பொறிக்கப்படும். 'தேசபக்தன்' தமிழாக்கிய அரசியல் சொற்களும் சொற்றொடர்களும் குறியீடுகளும் இப்பொழுது பத்திரிகைகளிலும் மேடைகளிலும் பிறவிடயங்களிலும் ஏற்றமுற்று அரசு புரிதல் வெள்ளிட மலை. மேடைகளில் பேசுதற் பொருட்டுத் தலைவர்கள் தேசபக்தனைப் படித்தும், தமிழாய்ந்த ஐரோப்பியப் பாதிரிமார் பலர் தேசபக்தன் சந்தாதாரரானதும் ஈண்டுக் குறிக்கத் தக்கன. தேசபக்தன் தமிழரை அன்னிய மோகத் தினின்றும் விடுவித்தான் என்று சொல்வது மிகையாகாது."
அரசியல், சமயம், சமூகம், இலக்கியம் தொடர்பாக 57 நூல்களை திரு.வி.க. எழுதினார். 'தேசபக்தன்', 'நவசக்தி, ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகத் தான் ஆற்றிய பணிகளை 'திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்' எனும் நூலில் விரித்துரைத்துள்ளார். அதைவிட இந்நூல் அக்காலச் சூழலைப் புரிந்து கொள்வதற்கும், அப்போது தொழிற்பட்ட சிந்தனைப் போக்குகளைப் புரிந்து கொள்வதற்கும் கூடத் துணை செய்யும்.
திராவிட, பொதுவுடைமை இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவராகவும், பலரின் மதிப்பைப் பெற்றாவராக வும்தான் திரு.வி.க. வின் வாழ்க்கை இருந்துள்ளது. மனிதநேயம், இலட்சிய வேட்கை, விடுதலை அரசியல், சமூக நோக்கு, மொழிப்பற்று ஆகியவை யாவரையும் ஈர்ப்பதாக இருந்தது. இது போன்ற பண்பு அவர் காலத்தில் வேறு எவருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. 'யான் மனிதன், குறையுடையவன்' என்ற உயரிய தரிசனத்தை நமக்கு எப்போதும் சுட்டிக் காட்டவும் அவர் தயங்கியதில்லை.
திரு.வி.க. (1883-1953) தமிழ் நாட்டில் வாழ்ந்த, இன்றும் அதன் அரசியலிலும் சிந்தனையிலும் வாழக் கூடிய பெருந்தகை. அவரது தடங்கள் தமிழ் நாட்டின் புலமைசார் மட்டத்திலும் அதன் அரசியல், தத்துவார்த்த, இலக்கிய, சமுதாயச் செயற்பாடுகளிலும் தொடர்ந்து ஊடாடும் என்பதிலும் சந்தேகமில்லை.
தெ.மதுசூதனன் |