தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன்
சில நாட்கள், எட்டு மணி நேர வேலை பின்னிரவு வரை தளும்பி வழியும். அலுவலகத்தில் யாருமற்ற அந்த இரவுப் பொழுதுகளில் நான் அவனைப் பார்த்திருக்கிறேன். சற்றே இறுகிய முகம். குனிந்த தலை. எப்பொழுதும் கருப்பு நிற மேற்சட்டையும் கருப்புத் தொப்பியும், வெளிறி அழுக்குத் தெரியும் ஜீன்ஸ¤ம் அணிந்திருப்பான். அலுவலகத்தின் அசாதாரண அமைதியைக் கிழித்துக் கொண்டு, புழுதி உறிஞ்சும் இயந்திரத்தை அவன் இயக்கிச் செல்வான். லத்தீனிய இனத்தவன் என்று அடையாளப்படுத்தலாம். என் அறைக்குள் வந்து குப்பைக் கூடையை கவிழ்த்துப் புதிய உறை போடும் போது நான் பேச்சுக் கொடுக்க முயல்வேன். அவன் பதில் சொன்னதேயில்லை. அவனுக்கு ஆங்கிலம் புரியாது என்று வெகு நாட்கள் கழித்துத் தான் அறிந்துக்கொண்டேன். அவனுக்குத் தெரிந்த ஸ்பானிஷ் எனக்குத் தெரியாது என்பதால் சைகையோடு எங்கள் சந்திப்பு முடிந்துவிடும். அவன் பெயர் தெரியாததால் கார்லோஸ் என்று என் மனதிலேயே ஒரு பெயரைச் சூட்டி வைத்திருக்கிறேன். கழிவறைகளைச் சுத்தப்படுத்தி, தரை துடைத்து, மதிய உணவறை மேடைகளைத் துப்புரவாக்கி, குப்பைகளை அகற்றி - கார்லோஸின் வேலைகள் இரவின் நடுஜாமம் வரை நீடிக்கும்.

அமெரிக்க நகரங்களின் சுத்தத்திற்குப் பொறுப்பான கார்லோஸைப் போன்ற துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, நகரத்தின் அசுத்தமான பகுதிகளில் தரம் தாழ்ந்த அடுக்குக் குடியிருப்புகளில்தான் வசிக்க முடிகிறது. எந்த மாநிலத்தில் இவர்களுக்கு வேலையோ அந்தந்த மாநிலம் ஒரு மணி நேரத்திற்கென நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம்தான் இவர்களது வருமானம். மற்ற வேலைகளில் உள்ளதுபோல் மருத்துவக் காப்பீட்டுச் சலுகைகள் கிடையாது. சம்பள உயர்வு, ஓய்வூதியச் சேமிப்புச்சலுகை எல்லாவற்றிற்கும் போராட்டம். ஏப்ரல், 2000-த்தில் லாஸ் ஏஞ்சலஸில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஓவ்வோராண்டிற்கும் ஒரு மணிநேரச் சம்பளத்தில் ஒரு டாலர் சம்பள உயர்வு மற்றும் மருத்துவ நலச் சலுகைகள் கோரி இவர்கள் மிகப்பெரும் போராட்டம் நடத்தியதை அமெரிக்கச் செய்தி ஊடகங்களில் பார்த்தது மங்கலாய் எனக்கு நினைவிருக்கிறது. இந்தப் போராட்டங்களுக்கு நடுவில் நவீன அமெரிக்கா அடுத்த நாள் காலையில் சுத்தமாக விடிய, கார்லோஸ் போன்ற எண்ணற்ற தொழிலாளிகள் உழைக்கிறார்கள்.

காலம் சென்ற மலையாள எழுத்தாளர் 'தகழி' சிவசங்கரப் பிள்ளை (இனி தகழி) அமெரிக்கா வந்திருந்தால் இவர்களை நவீனத் தோட்டிகள் என்று விளித்திருப்பார்.

1940-களில் கேரளத் தோட்டிகளைப் பற்றி மலையாளத்தில் எழுதிய முதல் படைப்பாளி தகழிதான். நவீனக் குழாய் அமைப்புகள் கொண்ட கழிவறைகள் இல்லாத அன்றைய நிலையில், 'தோட்டி' என்ற தொழிற்பெயரில் அடையாளப்படுத்தப்பட்டவர்களே மனிதர்களின் மலக்கழிவுகளை அள்ளி அகற்றியிருக்கிறார்கள். மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் எத்தனையோ முன்னேற்றங்கள் உலகெல்லாம் நிகழ்ந்து விட்டன. இருப்பினும் தோட்டித் தொழில் புரிபவர்களின் வாழ்க்கைத் தரத்தில் அதிக முன்னேற்றம் இல்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். அந்தச் சிந்தனையின் தொடக்கப் பொறியை இப்புதினம் கருவாக வைத்திருப்பதே, அறிமுகப்படுத்தப் போதுமான காரணம் என்று நினைக்கிறேன். மலையாள நாவல் என்று குறிப்பிட்டிருந்தேன். தமிழில் காலச்சுவடு பதிப்பகத்தார் வெளியீட்டிருக்கும் சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பைத்தான் உண்மையில் இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.

ஊருக்கு வெளியே மலக்கிடங்கும், பீப்பாய்களும் நிரம்பிய இடத்தில் தோட்டிகளின் குடிசைகள். ஓவர்சீயர் பார்த்து மனது வைத்துக் கொடுத்தால்தான் தோட்டிகளுக்குச் சம்பளம். படிப்பறிவு இல்லாத அவர்களால் உரிமைகளைக் கோர 'சங்கம்' என்று கூடமுடிவதில்லை. கூடவும் முனிசிபாலிட்டி விடுவதில்லை. முனிசிபாலிட்டியைப் பொறுத்தவரை தோட்டிகளெல்லாம் தற்காலிகக் கூலிகள். அதிக வருடங்கள் வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாதவர்கள். முனிசிபாலிட்டி வைத்துக்கொள்ள நினைத்தாலும், வைசூரி, காலரா போன்ற வியாதிகள் கழிவகற்றும் அவர்களைக் கழிவாக அகற்ற வந்துவிடுகின்றன. அவர்கள் போனால் என்ன? புதிய தோட்டிகளைத் திருநெல்வேலியிலிருந்து மீண்டும் அழைத்து வந்து விடலாம். முதன்முறையாகத் தாழ்த்தப்பட்ட தோட்டிச் சமூகத்தின் இருண்ட அறைகளையெல்லாம் இந்தப் புதினம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. தோட்டிகளைப் பற்றிய செய்திப்படமாய், ஞாபகத்தில் தங்காத அடையாளமற்ற மனிதர்களை மட்டும் அது காட்டவில்லை. அது சுடலைமுத்துவைப் பற்றி பேசுகிறது.

சுடலைமுத்து மற்ற தோட்டிகளைப் போல் இல்லை. சுத்தமான துவைத்த துணியையே உடுத்துவான். சம்பளம் என்று ஓவர்சீயர் பார்த்துக் கொடுக்கும் தொகையைக் கள்ளுக்கடையில் விட்டுவிட மாட்டான். அவனுக்குக் காசு சேர்த்து வீடும், வயலும் வாங்க வேண்டும். சீக்கிரத்தில் "நாற்றம் பிடித்த" தோட்டி வேலையை விட்டுவிட்டு கெளரவமான வேலை தேடிக்கொள்ள வேண்டும். 'தோட்டியின் மகன் தோட்டி' என்பதைப் பொய்யாக்க வேண்டும். திருமணமான கையுடன் வள்ளியைக் கூட்டிக்கொண்டு பெரிய மனிதர்களைப் போலக் கடற்கரை, சினிமா எனத் தேனிலவு கொண்டாட அவனுக்கு மட்டுமே முடியும். தன் மகனைத் தன்னுடைய 'மலம் அள்ளிய' கைகளால் தூக்கவோ, ஆசையுடன் தடவிக் கொடுக்கவோ அவனுக்கு விருப்பமில்லை. மற்ற தோட்டிகள் பிச்சாண்டி, பழனியாண்டியென தங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்க, இவன் மட்டும் 'மோகன்' 'பேபி' போன்ற உயர்ந்த வகுப்பினரின் பெயர்களைத்தான் தேர்ந்தெடுப்பான். 'பேபித் தோட்டி' என்று மற்றவர்கள் பரிகசித்தாலும் மோகனைப் பள்ளிக் கூடத்தில் எப்படியாவது சேர்த்துவிடத் துடிப்பான். அவன் வீட்டில் மட்டும் சண்டைகள் இல்லை. மற்ற தோட்டிகள் ஒன்றுபட்டு, முதலாளி வர்க்கத்தைத் திட்டி, புரட்சியெனக் கிளர்ந்தெழும்போது அவன் மட்டும் தன் குடும்ப முன்னேற்றத்தையே சிந்திப்பான். அதற்காக அந்தப் புரட்சியைக் கூட அவனால் கலைக்க முடியும். இந்தத் தகவல்களைத் தாண்டிய ஆழ்ந்த வாசிப்பில், கொடுமைகளையும், அநியாயங்களையும், ஒடுக்கத்தையும் எதிர்த்துத் தோட்டிகளின் மனங்களில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பைத்தான் உண்மையில் இந்த நாவல் குறிப்பில் உணர்த்துகிறது என்பது புரியும்.

தகழி சாகித்திய அகாதெமி மற்றும் பத்மபூஷன் விருதுபெற்ற இலக்கியவாதி. தகழியின் படைப்புகளில், கதை மாந்தர்களுடன் படைப்பாளி ஓயாததோர் உரையாடலைத் தொடர்ந்து செய்து வருகிறான். பாத்திரங்களின் சந்தேகங்களை, பயங்களை, அவஸ்தைகளை அவன் உரத்துச் சொல் கிறான். மெளனப் பார்வையாளனாகவும், ஆவேச வெறிகொள்ளும் பாத்திரமாகவும் அவதாரமெடுக்கும் நேரங்களும் உண்டு.

சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் மிகுந்த சிரத்தை தெரிகிறது. மூல ஆசிரியரின் நடையைச் சிதைக்காமல் முடிந்தவரை அப்படியே அளிக்க முயன்றிருக்கிறார். உறுத்தலற்ற துல்லியமான நடையில் நாவல் பயணிக்கிறது. தகழியின் புகழ்பெற்ற 'செம்மீன்' நாவலையும் சாகித்ய அகாதெமிக்காக இவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடவேண்டும்.

இந்த நாவல் வந்து அறுபது வருடங்களுக்குப் பிறகு இன்றும் தோட்டிகளுக்கான தேவை முற்றிலும் அழிந்துவிடவில்லை என்பதற்கும், அவர்களது வாழ்க்கைப் போராட்டம் முற்றுப் பெறவில்லை என்பதற்கும் கட்டுரையின் முகப்பில் விவரிக்கப்பட்ட அமெரிக்காவின் நவீனத் தோட்டிகளே சான்று.

தோட்டியின் மகன்
மலையாள: தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில்: சுந்தர ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம்.

மனுபாரதி

© TamilOnline.com