அருணகிரி பாடிய சிறுவாபுரி
மாமன் பெயரால் ஊர்ப்பெயர் அமைய மருமகன் பெயரால் புண்ணியக்ஷேத்திரம் ஆயிற்று சிறுவாபுரி என்னும் சிற்றூர். விடுகதையைப் போல் இருக்கிறதல்லவா? லவன் குசன் இருவரும் இராமபிரான் தங்கள் தந்தை என்பதறியாமலேயே அவர்மீது அம்பு தொடுத்துப் போரிட்ட இடம் 'சிறுவர் + அம்பு + எடு' என்று பொருள்படும் 'சிறுவரம்பேடு', பின்னர் இன்னமும் குறுகி 'சின்னம்பேடு' என்றாயிற்று. சிறுவர் அமர் புரிந்ததால் சிறுவாபுரி என்றும் அழைக்கப்படுகின்றது.

திருமாலின் அவதாரமான இராமபிரானுடன் தொடர்புடைய காரணத்தால் சிறுவாபுரி ஆன இவ்வூர் அவனது மருகோன் முருகனுடைய தலமாக ஆன வரலாறு மிகவும் சுவையானது. 16000க்கும் மேற்பட்ட திருப்புகழ்ப் பாடல்கள் பாடியுள்ள அருணகிரியார் திருவண்ணாமலையிலிருந்து அடியார்கள் குழுவுடன் தலயாத்திரையாக வந்து கொண்டிருந்த போது, சிறுவாபுரியில் இரவு தங்க நேர்ந்தது. அன்று இரவு முருகப் பெருமான் அவரது கனவில் தோன்றி தன்னைத் தரிசிக்காமல் போகலாமா? என்று கேட்டவுடன் அவருடன் வந்திருந்த அடியார்கள் அனைவரின் கனவிலும் தோன்றி இதே வினாவைக் கேட்க, விடிந்தவுடன் அருணகிரியார் தம் கனவைப் பற்றிக் கூற, உடன் வந்தோரும் இதே கனவு பற்றிக் கூறினர். பின்னர், அவ்வூர் மக்களிடம் வழிகேட்டு அங்குள்ள முருகனைக் கண்டு நான்கு திருப்புகழ்ப் பாடல்கள் பாடிப் போற்றினார் அருணகிரியார்.

இவ்வாறு மாமன் கால் பதித்த ஊர் வள்ளி மணாளனாகக் காட்சி தரும் முருகனின் தலமாய்ச் சிறப்புற்றது. சென்னையிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் பொன்னேரி அருகில் உள்ளது இவ்வூர். அருணகிரிக்குத் திருவண்ணாமலையில் அவர் வேண்டியபடியே, அதாவது 'நீ மயிலேறி யுற்று வரவேணும்' என்று வேண்ட, முருகனும் அவருக்குக் காட்சி தந்து மகிழ்விக்கின்றான். இவ்வாறு காட்சி தந்த முருகனைப் போற்றி 'விதிய தாக..' என்று தொடங்கும் திருப்புகழில் 'அருணை மீதிலே மயிலிலேறியே அழகிதாய்வரும் பெருமாளே' என்று பாடியுள்ளார். இதைப் போலவே சிறுவாபுரியிலும் 'அண்டர்பதி குடியேற' என்று தொடங்கும் திருப்புகழில் 'மைந்துமயி லுடனாடி வரவேணும்' என்று அழைக் கின்றார். பாத தரிசனமும் கிடைக்கின்றது. மேலே குறிப்பிட்ட 'அண்டர் பதி குடியேற' என்ற பாடலில்

சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே

என்று கூறி அடியார்கள் சிந்தையில் என்றும் குடியிருப்பவன் முருகன் என்பதை வலியுறுத்து கின்றார். அடியார்கள் உள்ளத்தில் ஆண்டவன் குடியிருந்தால் பின் மகிழ்ச்சிக்குக் குறைவேது! இப்பாடலில் எத்தனை இடங்களில் மகிழ்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருக்கின்றது! 'அண்டர்மன மகிழ் மீற', 'சங்கரனும் மகிழ்கூர', 'ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக', 'மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற' என்றிவ்வாறு மகிழ்ச்சி வெள்ளம் பாட்டில் கரைபுரண்டோடுகின்றது.

அடியார்கள்தம் சிந்தையில் குடியிருக்கும் ஆண்டவனை அடுத்த பாடலில் அர்ச்சனை செய்து வழிபடுகின்றார். ஆயிரக் கணக்கான பாடல்கள் பாடியிருக்கும் அருணகிரியார் அருச்சனைப் பாடல்களாகப் பாடியவை ஆறே ஆறு பாடல்கள் மட்டுமே. அவற்றில் சிறுவாபுரி குறித்துப் பாடியுள்ள அருச்சனைப் பாடலும் ஒன்று. 'சீதள வாரிஜ பாதா நமோ நம' என்று ஆரம்பித்து 'சுராதிபர் பெருமாளே' என்று முடிக்கின்ற இவர் முருகன் வீற்றிருக்கும் சிறுவாபுரி குபேரனின் அளகாபுரிக்கும் மேலான செல்வச் செழுமையுடையது என்று சிறப்பிக்கின்றார்.

முருகனுக்குத் தாய் என்ற பெருமைக் குரியவள் என்பதால் சிறுவாபுரி குறித்த மூன்றாவது பாடலில் சிவகாம சுந்தரிக்குத் தனிச் சிறப்பு அளித்துப் பாடியுள்ளார். நீல சுந்தரி, கோமளி, யாமளி, நாட கம்பயில் நாரணி, பூரணி, நீடு பஞ்சமி, சூலினி, மாலினி, நேயர் பங்கெழு மாதவியாள் சிவகாம சுந்தரி யேதரு பாலக! முதலானவை பிரணவப் பொருள் உணர்த்திய பெருமைக்குரியவனின் தாய் அல்லவா! தாய்க்கு அடுத்து ஊருக்கும் பெருமை சேர்க்கின்றார். ஆடகப் பொன்னால் இழைத்து அமைத்த கூட கோபுரங்களும் மாட மாளிகைகளும் நிரம்பிய ஊர் சிறுவாபுரி என்னும் ஊர் என்று உயர்வாகப் பேசுகின்றார்.

வெற்றி தரும் வீரலக்ஷ்மி குடியிருக்கும் சிறுவாபுரி என்பதற்கு அவரே தன் நான்காவது பாடலில் விளக்கம் தருகின்றார்.

சிறுவ ராகி இருவர் அந்த கரிப தாதி கொடு பொருஞ் சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த பெருமாளே.

ஒவ்வோர் ஆண்டிலும் ஜனவரி 24ஆம் நாள் சென்னையிலிருந்து கால் நடையாகப் பயணப்பட்டுச் சிறுவாபுரி செல்லும் அன்பர்கள் 26அம் தேதி முருகப் பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் முதலானவற்றோடு மாணவ மாணவியருக்கும் திருப்புகழ் பாடல் போட்டிகளை வைத்துப் பரிசளித்தும் கொண்டாடுகின்றனர். ஆகஸ்டு 15ஆம் நாள் 'அடியார்கள் விழா' கொண்டாடு கிறார்கள். ஓவ்வொரு மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்றும் 'சிறுவாபுரி அபிஷேகக் குழு' அன்பர்கள் வள்ளி மணவாளப் பெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். எல்லா வற்றிற்கும் மேலாக கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆறு நாள் விழாவில் ஐந்தாம் நாள் முருகன் உமையவளிடம் வேல் வாங்கி அடுத்த நாள் சூரனை சம்ஹாரம் செய்யும் விழா கண்டு களிக்க வேண்டிய விழா.

இங்குள்ள உற்சவ மூர்த்தியாயின் சிற்ப அழகு உள்ளத்தை அப்படியே கொள்ளை கொள்ளும். முருகப்பெருமானின் கரம் பிடித்து திருமணக் கோலத்தில் நாணி நிற்கும் வள்ளியின் பஞ்சலோக விக்கிரகத்தின் அழகுக்கு இணையான ஒரு படிமத்தை உலகில் எங்கும் காண முடியாது. அத்தனை அழகு.

முனைவர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com