வாங்க ஒரு வட்டம் அடிக்கலாம் !
இந்த இதழில் தென்றல் வாசகர்களை என் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளேன். நிஜ வாழ்க்கையில் மருத்துவர் கூடத்தை மிதிக்க விரும்பாதவர்கள் இந்தக் கற்பனைப் பயணத்தில் சில ஆலோசனைகளையும் இலவசமாகப் பெறலாம். கீழே கொடுத் திருப்பதில் BP என்பது இரத்த அழுத்தத்தையும், HR என்பது இருதயத் துடிப்பையும், T என்பது உடலின் வெப்பநிலையையும் குறிக்கும்.

காலை 8.00 மணி

நோயாளி 1: (வயது 45, BP-138/64, HR-72)

டாக்டர், கடந்த 2 மாத காலமாகத் தலைவலி வருகிறது. வாரத்தில் 2-3 முறை வரும் இந்தத் தலைவலி பாடாய்ப்படுத்துகிறது. எந்த சத்தமும் இல்லாமல் தனி அறையில் கண்களைக் கட்டிப்படுத்தால் ஒழியக் குறைவதில்லை. எந்த மாத்திரையும் கேட்பதில்லை.

இந்த மாதிரித் தலை வலிக்கு 'Tension Headache'என்று பெயர். எப்போது வரும் என்று சொல்ல முடியாது. வந்தால் தலை பாரமாய் அழுத்தும். பின் மண்டை கனத்துப் போகலாம். ஓய்வு எடுத்தால் ஒழிய இந்தத் தலைவலி குணமாகாது. அடிக்கடி இது போல் ஏற்படுமானால் கண் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. பல் டாக்டர் மற்றும் காது, மூக்கு, தொண்டை பரிசோதனையும் தேவைப்படலாம். முக்கியமாகப் படபடப்பைக் குறைக்க வேண்டும். காலில் சக்கரம் கட்டிப் பறக்கும் இந்த காலகட்டத்தில் மனம் ஓய்வை நாடுவதில் ஆச்சரியம் இல்லை. குறைந்தது ஆறு முதல் எட்டு மணி நேரம் வரையிலான தூக்கம் தேவை. உறங்கப் போகும்போது வீண் மன உளைச்சல் கொள்ளாமல் மனதை நிதானப்படுத்திக் கொள்ளுதல் நல்லது.

சிலருக்கு 'migraine'என்று சொல்லப்படும் தலைவலி வரலாம். இது பொதுவாக இளம் வயதினரையே தாக்கும். வெளிச்சத்தைத் தவிர்த்தல், வாந்தி, குமட்டல் போன்ற உபாதைகளுடன் இணைந்து தலைவலி வரலாம். மாதவிடாய்க் காலத்தில் இந்த உபாதை படுத்தலாம். மற்றப்படி எல்லாத் தலைவலிகளும் மூளைக்கட்டியாலேயே (Brain Tumor) ஏற்படுகிறது என்று அஞ்சத் தேவையில்லை. தாங்கமுடியாத தலைவலி தொடர்ந்தாலோ, கண் பார்வை மங்கினாலோ உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.

காலை 9.00 மணி

நோயாளி 2: (வயது 68, BP 156/88, HR-84)

'இடது மூட்டு வலி'. குளிர் காலத்தில் மட்டுமே இந்த உபாதை. அதுவும் அமெரிக்கா வந்தால் அதிகம் ஆகிவிடுகிறது. காலை வேளையில் பாடாய்ப் படுத்துகிறது. சில நேரங்களில் உடும்புப்பிடியாய்ப் பிடித்துக் கொள்கிறது. முட்டியை நகர்த்துவதே பிரம்மப் பிரயத்தனமாய் உள்ளது.

இது 'Osteoarthritis'என்று சொல்லப்படும் ஒரு வித மூட்டு நோய். பெரும் பாலும் 40-50 வயதிற்கு மேற் பட்டோரைத் தாக்கு வது. 'Rheumatoid Arthritis'என்ற நோய் ஒரு சிலரையே தாக்கும். இதனை வேறுபடுத்தும் குணாதிசயங்களை மருத்துவர் அறிவர். 'wear and tear'என்று சொல்லப்படும் தேய்மானமே இந்த 'Osteoarthritis'மூட்டு வலிக்குக் காரணம். மூட்டுப் பகுதிகளை அதிகமாக உபயோகிப்பதாலும், பெரும் பாலும் தவறான முறையில் பயன் படுத்துவதாலும் இந்த நோய் ஏற்படுகிறது. இதற்கான தீர்வு பின் வருமாறு.

1. நல்ல உடற்பயிற்சி - Physical therapy தேவை.
2. 'Tylenol' மருந்து ஆரம்பக் காலத்தில் உபயோகமாய் இருக்கும்.
3. நோய் அதிகமாகும் போது 'Motrin'அல்லது 'Advil'போன்ற மருந்துகளும் 'Celebrex'என்ற வலி நிவாரண மருந்தும் தேவைப்படலாம். (இம்மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளுதல் கூடாது.)
4. நோய் முற்றிய தறுவாயில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

இதில் முக்கியமானது Physical therapy. எல்லா காலகட்டத்திலும் இது மிக அவசியம். வலிக்கிறதே என்று ஓய்வு எடுத்தால் இந்த நோய் அதிகமாவதற்கான வாய்ப்பு உள்ளது. குளிர் காலத்திலும், இரவு உறங்கி எழுந்த பின்னர் காலை வேளைகளிலும் மூட்டு இறுகிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வீட்டிலேயே நடப்பதே இதற்கான சரியான நிவாரணி.

காலை 10.00 மணி

நோயாளி 3: (வயது-35, T-100, BP-110/70, HR-90)

'மூன்று நாட்களாகக் கடுமையான இருமல், காய்ச்சல். உடம்பு வலியில் உயிர் போகிறது. ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை. ஒரு நாள் படுத்ததில்லை. ஆனால் இப்போது வீட்டு வேலை செய்யக்கூட முடியவில்லை...

நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் இது ·ப்ளூ (Influenza) என்று சொல்லப்படும் ஒரு வித virus நோயாக இருக்க வாய்ப்பு அதிகம் உண்டு. சாதாரண ஜலதோஷம்போல் தோன்றினாலும் தீவிர உடல்வலி இருக்கும். இந்த நோய்க்கு ஆரோக்கியமான உணவும், சுகாதாரமான பழக்கங்களும், ஓய்வும், கூடச் சில மருந்துகளும் (Tylenol, Cough syrup) போதுமானது. ஒரு நாளைக்கு எட்டுக் கோப்பை தண்ணீர் அருந்த வேண்டும். 5 முதல் 7 நாட்கள் வரை ஓய்வு தேவைப்படலாம். அடிக்கடி கை கழுவுவதின் மூலம் இந்த நோய் பரவுவதைத் தவிர்க்கலாம். மற்ற நோய் நொடி இல்லாதவர்களை இந்த நோய் மிதமான அளவிலேயே தாக்குகிறது. வயது முதிர்ந்தவர்களும், வேறு நோய் உள்ளவர்களும் மருத்துவரை நாடுவது நல்லது. தேவைப்பட்டால் மருத்துவமனையில் சேர்க்க நேரிடலாம்.

மற்ற நோயாளிகளைப் பிறகு சந்திக்கலாம்...

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com