பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் - 5 (பாகம் 6)
குழந்தையைக் கிணற்றில் வீசி மீட்ட பத்தினி

[சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். சென்ற தவணையில் கடற்கரையில் கல்லாகக் கணவனின் கப்பலுக்குக் காத்திருந்த பத்தினியைப் பார்த்தோம். இப்பொழுது ஐந்தாவது பத்தினியைப் பார்ப்போம்.]

கண்ணகி அடுத்துப் பூம்புகார் நகரில் பிறந்த ஐந்தாவது அதிசயப் பத்தினியைப் பற்றிக் கூறுகிறாள். இந்தப் பத்தினியின் பெயரும் கிடைக்கவில்லை. கண்ணகி சொல்கிறாள்:

”...இணையாய
மாற்றாள் குழவிவிழத் தன்குழவியும் கிணற்று
வீழ்த்துஏற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள்”
(சிலப்பதிகாரம்: வஞ்சினமாலை: 17-19)

[இணையாய = இணையாகிய; மாற்றாள் = கணவனின் மற்றொரு மனைவி; குழவி = குழந்தை; வீழ்த்து = விழவைத்து; ஏற்று = சுமந்து; வேற்கண்ணாள் = வேல்போலும் வடிவழகிய கண்ணாள்]

பூம்புகாரிலே இருந்தாள் இந்த வேலின் இலை போலும் வடிந்து நீண்ட கண்களுடைய பத்தினி; அவளுக்கு இணையாக அவள் கணவனுக்கு மற்றொரு மனைவியும் இருந்தாள். இருவருக்குமே குழந்தைகள் இருந்தன. ஒரு நாள் அந்த மாற்றாள் வெளியே சென்றிருந்த பொழுது இந்தப் பத்தினி மாற்றாள் குழந்தையையும் கவனிக்கவேண்டியிருந்தது. அப்பொழுது மாற்றாளின் குழந்தை தவறி வீட்டுப் புழைக்கடைக் கிணற்றில் விழுந்துவிட்டது!

அதன் பிறகு நடந்ததாகக் கண்ணகியின் சொற்கள் சொல்லுவது இதுவே: அந்தப் பத்தினி தன் குழந்தையையும் கிணற்றில் வீசி இரண்டு குழந்தைகளையும் மேலே தூக்கி உயிரோடு மீட்டாள்.

ஆனால் நமக்குப் பல வினாக்கள் எழுகின்றன: தன் குழந்தையையும் கிணற்றில் வீசாமல் தான்மட்டும் ஏன் குதித்திருக்கக் கூடாது?

குழந்தையைக் காப்பாற்றக் கிணற்றில் தான் விழ அவளுக்குச் சிறிதும் தயக்கம் இருந்திருக்காது. இருகுழந்தைகளையும் ஒருகணக்காக நேசிப்பவள் என்பதில் ஐயமில்லை. முயற்சியில் தானும் சாக நேர்வதில் அவளுக்கு அச்சமில்லைதான். மேலும் தன் பொறுப்பில் இருந்த குழந்தையைக் காக்காத பழிக்கும் அஞ்சினாள். பழிக்கு நாணுவார் குணம் பற்றிச் சொல்லும் வள்ளுவர்

நாணால் உயிரைத் துறப்பர்; உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார், நாணாள் பவர்
(திருக்குறள்: நாணுடைமை: 1017)

என்கிறார்.

அதாவது "பழிக்கு நாணும் நாணத்தால் வாழ்க்கையை ஆள்பவர் நாணத்தால் உயிரைத் துறப்பர்; உயிரின்பொருட்டாக நாணத்தைத் துறவார்" என்று செம்மையாகச் சொல்கிறார்.

சிலப்பதிகாரத்திலேயே கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த செய்தியைக் கேட்கிறாள் மாதரி என்னும் இடையர் குல ஆய்ச்சி; தன் பொறுப்பில் கவுந்தியடிகள் அடைக்கலமாக விட்டிருந்த அவ்விருவருக்கும் நேர்ந்ததைப் பொறாமல் "அடைக்கலம் இழந்தேன், இடைக்குல மாக்காள்!" என்று அரற்றி மாட்டுத் தொழுவத்தில் நள்ளிரவில் தீமூட்டித் தீயில் செத்தாள் மாதரி! (சிலம்பு: நீர்ப்படைக்காதை: 75) எனவே இந்தப் பத்தினிக்கும் பழிக்கு அஞ்சி நீப்பதில் உயிர் ஒரு பொருட்டன்று.

பிறகு ஏன் அவ்வாறு செய்யவில்லை? அந்த முயற்சியில் தான் செத்தாலும் அது இன்னொரு பழியினைப் போக்காது. என்பதாலோ? என்ன பழி? “தன் குழந்தையை எப்படியோ காப்பாற்றிவிட்டாள்; மாற்றாளுக்கும் தன் உயிரைவிடத் தன் குழந்தைமேல் அன்புண்டு; அவள் இருந்திருந்தால் தன் உயிரைக் கொடுத்துத் தன் குழந்தையைக் காத்திருப்பாளே! இவளோ எப்படியோ தான் செத்தாலும் தன் குழந்தையை உயிரோடிருக்க வைத்துவிட்டாள்; மாற்றாள் குழந்தையின் உயிருக்கு இப்பொழுது எங்கே போவது?” என்று பழிசொல்வர்.

அந்தப் பழியைப் போக்குவதென்றால் தன் குழந்தையின் உயிரையும் பணையம் வைக்கவேண்டும். அதற்குத் தம் குழந்தையையும் சேர்த்துக் கிணற்றில் குதிக்கவேண்டும். ஆனால் அந்தப் பத்தினி தான் தன் குழந்தையுடன் சேர்ந்து கிணற்றில் குதித்ததாகக் கண்ணகியின் சொற்கள் சொல்லவில்லை. “தன் குழவியும் கிணற்றில் வீழ்த்து” என்றுதான் உள்ளது; “தன் குழவியொடு தான்கிணற்றில் வீழ்ந்து” என்பதுபோல் சொற்கள் இருந்திருக்கும்.

ஏன் அவ்வாறு செய்யவில்லை?

ஒருவேளை திருவாரூர் மனுநீதிச் சோழன் போல் தான் உடனே உயிரை இழப்பதைவிடத் தன் குழந்தையைத் தான் சாகுமுன் இழப்பதுவே பழிநீக்கும் என்று எண்ணினாளோ?

அவ்வாறு தனக்குமுன் தன்குழந்தையைத் துறந்தவர்கள் பலருண்டு. தன்குடியின் மானங்காக்க மறத்தாய் ஒருத்தி தன் குடும்பத்தில் மீந்திருந்த ஒரே உறுப்பினனாகிய தன் சிறுவனை வேல் கைக்கொடுத்துப் போர்முகத்துக்கு அனுப்பியதைப் புறநானூற்றில் காண்கிறோம் (“ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே” புறநானூறு:279). அவர்கள் அப்படி அனுப்பி விட்டு மானவிளையாட்டு விளையாடுவதில்லை. குழந்தைக்குக் கெடுதல் நேரின் தாங்களும் உடனே உயிரிழப்பார்கள். கோவலன்-கண்ணகிக்கு நேர்ந்ததைக் கேட்ட இருவர் தாய்மாரும் உயிர்துறந்தனர்.

எப்படியென்று நாம் அறியோம். ஆயினும் அவளின் கற்பின் பெருமையால் இரண்டு குழந்தைகளும் உயிரோடு மீண்டன என்பது வஞ்சினமாலை.

அடுத்துக் குரங்குமுகம் வேண்டும் என்ற பத்தினியைப் பார்ப்போம்.

பெரியண்ணன் சந்திரசேகரன்,
அட்லாண்டா.

© TamilOnline.com