தற்காலத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலை யைப் பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது. வீட்டு வேலையில் இன்றியமையாத செயல் சமைப்பது. இதை இலகுவாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
சமையல் வேலையைத் துரிதப்படுத்த அதைச் செய்யும் முறையும், அதில் பயன்படுத்தும் பொருட்களும் மிக முக்கியம். நம்மிடம் மிளகாய்ப் பொடி, சாம்பார்ப் பொடி, மிளகுப் பொடி, சீரகப்பொடி, மசாலாப் பொடி (All Spice Powder), கரம் மசாலாப் பொடி போன்றவை இருந்தால் சமைப்பது கடினமாக இருக்காது. இந்தப் பொடிகள் எல்லாம் இந்தியக் கடைகளில் கிடைக்கின்றன. உறைகாய்கறிகளும் (frozen vegetables) கைவசம் இருக்க வேண்டும். தயார் நிலையில் உள்ள (canned) பதப்படுத்தி அடைத்த சமையல் பொருட்கள் இருந்தாலும் மிக்க வசதிதான்.
சரி, இப்போது சமையலை எளிதாக்குவது எப்படி எனப் பார்க்கலாம்...
ஆம்லெட்
முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் ஒரு நல்ல காலைச் சிற்றுண்டி ஆகும். கொழுப்புச் சத்து தவிர்க்கும் எண்ணம் உடையவர்கள் அமெரிக்கன் கடைகளில் கிடைக்கும் எக்பீட்டர்ஸ் (egg beaters) கொண்டு ஆம்லெட் தயாரிக்கலாம். இதில் முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் தான் இருக்கிறது.
தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கடைந்த (beaten) முட்டை - 1 அல்லது எக்பீட்டர்ஸ் - 1/4 கிண்ணம் சமையல் எண்ணெய்(ஆலிவ் எண்ணெய்) - 1 தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம் - 2 தேக்கரண்டி உறைந்த காரட் துண்டங்கள் - 1 தேக்கரண்டி உறைந்த பட்டாணி- 1 தேக்கரண்டி குடமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி காளான்(நறுக்கியது) - 1 தேக்கரண்டி கொழுப்பு குறைவாக அல்லது கொழுப்பு முழுமையாக உள்ள துருவிய ஏதாவது ஒரு சீஸ் (Part-skim or full-fat cheese) (இது அமெரிக்கன் கடைகளில் கிடைக்கும்)- 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை
ஓர் அடிபிடிக்காத வாணலியில் (non-stick pan) ஆலிவ் எண்ணெய் விட்டு எல்லாக் காய்கறிகளையும் போட்டு வதங்கியபின்பு கடைந்த முட்டையை அதன் மீது ஊற்றவும். வேண்டுமானால் மேலும் சிறிது உப்பும் மிளகுத்தூளும் தூவவும். அடுப்பை நிதானமாக எரிய விடவும். இறக்குவதற்கு முன் சீஸைத் தூவவும். இதைத் தனியாகவோ, பிரெட்டுடனோ சாப்பிடலாம்.
பின் குறிப்பு:
முட்டையை ஊற்றும்போது வாணலி நல்ல சூடாக இருக்கவேண்டும். இல்லையெனில் ஆம்லெட்டை எடுக்கும்போது விண்டுவிடும். முட்டையை ஊற்றியபின்னர் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
எக்பீட்டர்ஸ் இல்லை என்றால் இரண்டு முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் எடுத்து மேற்சொன்ன முறைப்படி ஆம்லெட் செய்யலாம்.
காய்கறிகளை வதக்கி வெளியே எடுத்து வைத்துக்கொண்டு, கடைந்த முட்டையை ஊற்றிய பின் காய்கறிகளை அதன் மேல் தூவியும் ஆம்லெட் செய்யலாம். ரவை, சேமியா இவற்றைத் தனித்தனி யாகவோ அல்லது சேர்த்தோ உப்புமா செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |