சென்னை மாநராட்சியின் முதல் பெண் ஹோமியோபதி மருத்துவ அதிகாரி, பன்முக வித்தகர், எழுத்தாளர், சமூக சிந்தனையாளர், பண்பாளர் - இவர்தான் டாக்டர். ஜோ.ஜாய்ஸ் திலகம். தென்றலுக்காக இவரை முனைவர் அலர்மேலு ரிஷி சந்தித்தபோது கிடைத்த சில சுவையான தகவல்கள்...
என் பெற்றோர்கள் இருவருமே ஹோமியோபதி மருத்துவர்கள். என் சகோதரிக்கு ஒருமுறை primary complex வந்து நிலைமை மோசமாக இருந்தபோது எங்களைச் சுற்றியிருந்தவர் களின் ஆலோசனையின் பேரில் வேலூரில் உள்ள பிரபல மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். "அறுவை சிகிச்சை ஒன்றினால்தான் குணப்படுத்த முடியும்; ஆனால் உடல் நிலைமை மோசமாக இருப்பதால் தாங்காது" என்று சொல்லி அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். மூச்சு விடமுடியாமல் படுத்திருந்த அவளைப் பார்க்க வேதனையாக இருந்ததால் கடைசி முயற்சியாக என் தாயார் ஒரு ஹோமியோபதி மருந்தைக் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவள் தொண்டையிலிருந்து ஏதோ ஒரு ஒலி எழுந்தது. நெஞ்சில் சேர்ந்திருந்த கபம் எல்லாம் கிளம்பித் தொண்டைக்கு வந்தது தான் அந்த “கர்புர்” ஒலிக்குக் காரணம். உடனே என் தாயார் என் தங்கையைத் தூக்கித் தலை கீழாகப் பிடித்துக் குலுக்கி வாய்க்குள் விரலைவிட்டு அத்தனை சளியையும் வெளியேற்றினார். வாந்தி எடுத்ததுபோல் அத்தனை சளியும் வந்து விட்டது. நம்ப முடியாத இந்த அதிசயந்தான் (miracle) என்னை ஹோமியோபதி மருத்துவத்தில் நாட்டம் கொள்ளச் செய்தது.
அண்மையில் புது தில்லியில் நம் குடியரசுத்தலைவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவர் ஹோமியோபதி மற்றும் இதர மருத்துவ முறைகளையும் பற்றிக் கேட்டார். அப்போது நான் சொன்னது இதுதான்: குப்பைமேனி என்றொரு செடி. ஆங்கிலத்தில் அதை Acalypha Indica என்பார்கள். இதன் சாறு எடுத்துத் தோலில் வரும் பூச்சி கடிக்குத் தடவி குணப்படுத்துவது பாட்டி வைத்தியமாகும். இதே இலையின் சாறு எடுத்துச் சுண்ணாம்பு சேர்த்துப் பயன்படுத்துவது ஆயுர்வேதம்; அதே சாறுடன், உலோகத்தைச் சேர்த்து புடமிட்டு, பஸ்பமாக்கி, பத்தியத்தின் பேரில் கொடுத்தால் அது ‘சித்த’ வைத்தியமாகிறது; சாறுடன் தேன் சேர்த்து மருந்தாக்குவது யுனானி முறை; சாற்றில் உள்ள alkaloid கூறு பிரிக்கப்பட்டு மருந்தாகும்போது அது ஆங்கில மருந்தாகிறது; சாறு ஒரு பங்குடன் 99 பங்கு சுத்திகரிக்கப்பட்ட சாராயம் சேர்த்துச் சுழற்றி அதினின்றும் பெறும் மருந்து வீரியப்படுத்தப்பட்ட ஹோமியோபதி. அடிப்படை குப்பைமேனிச் செடி. எடுக்கும் அவதாரங்களால் செய்முறைகளால் பெயர்மாற்றம் பெறுகிறது. ஹோமியோபதியில் மருந்துகளுக்கு இறுதி நாள் (expiry date) கிடையாது, பக்க விளைவுகள் கிடையாது என்பது இதன் தனிச் சிறப்பு.
என் மகனுக்கு ஹோமியோபதியில் ஆர்வம் ஏற்பட ஒரு சம்பவம் எங்கள் குடும்பத்தி லேயே நிகழ்ந்தது. என் தாயாருக்கு கருப்பப்பையில் கட்டி (fibroid) இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உதிரப்போக்கு மிக அதிகமாக இருந்தது. முன்னரே அவர்களுக்கு ஆஸ்துமா, ரத்த சோகை (anaemia) இவை போதாதென்று மார்பில் ஒரு கட்டி இத்தனையும் சேர்ந்து அவதிப்பட்டபோது அவர் எடுத்துக் கொண்ட ஹோமியோ மருந்து கருப்பப்பைக் கட்டியைக் கரைத்து விட்டது. அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது. இது போன்ற சிகிச்சைகளும் வெற்றிகளும் கண்டுதான் யாருடைய ஆலோசனையோ அறிவுரையோ இல்லாமல் என் மகன் தானாகவே இத்துறைக்கு வந்திருக்கிறான்.
நான் ஹோமியோபதி மருத்துவப் படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து உளவியலிலும், சமூகவியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். ஒரு சம்பவம் கேளுங்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளை அழைத்துக்கொண்டு ஒரு தாய் என்னைத் தேடி வந்தார்கள். பெண்ணுக்குத் தந்தை இல்லை. தன் மகள் ஒழுங்காகக் கல்லூரிக்குப் போவதில்லை என்றும் போனாலும் ஒழுங்காக வகுப்புக்குப் போவதில்லை; கொண்டு போகும் சாப்பாட்டைச் சாப்பிடுவதில்லை; யாரிடமும் பேசுவதில்லை; பார்வை எங்கோ குத்திட்டு நிற்கிறது என்று அடுக்கிக் கொண்டே போனார். அவர் குரலில் ஆத்திரமும் ஆவேசமும் தெரிந்தது. தாயாரைக் கொஞ்ச நேரம் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணிடம் ஒரு வார்த்தையில் பதில் சொல்லும்படியான சில கேள்விகளை வேகவேகமாகக் கேட்டேன். அதில் முதல் கேள்வி "உனக்கு யாரை அதிகமாகப் பிடிக்கும்?". பதில் "அம்மா" என்றாள். அடுத்துப் பல கேள்விகள் கேட்டுவிட்டுக் கடைசியாக "யாரை உனக்குப் பிடிக்காது?" என்று கேட்டபோது மீண்டும் "அம்மா" என்றாள்.
உடனே "ஏன்?" என்று கேட்டபோதுதான் அவள் மன நோய்க்கான காரணம் புரிந்தது. கணவனை இழந்த தாய் கணவருடைய சகோதரருடன் உறவு கொண்டிருக்கின்றாள்; இதன் காரணமாக தான் அதிகமாக நேசித்த தன் தாயை இப்போது அதிகமாக வெறுக்கிறாள்; யாரிடமும் இது பற்றிப் பேசவும் வெட்கம். இந்த மன இறுக்கம்தான் அவளை மன நோயாளி ஆக்கி இருக்கிறது. தாயின் மனநிலை குறித்து வேதனைப் படத் தேவையில்லை என்றும் தன் வழியில் தான் உறுதியாக இருக்க முடியும் என்றும் உளவியல் அடிப்படையில் அவளைத் தேற்றி, தாயிடமும் சூழலை விளக்கி நிலமையைச் சரி செய்தேன்.
இந்தியப் பெண் விஞ்ஞானிகள் சங்கத்தில் நான் அங்கம் வகிக்கிறேன். விஞ்ஞானிகளாக வருபவர்களில் ஆண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது என்பது என்னுடைய வருத்தம். பெண்களின் பங்களிப்புப் பெருக வேண்டும். அவர்கள் பளிச்சிடுவதற்கு ஆவன செய்வ தில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனை, உடல் பயிற்சி, மனப் பயிற்சி, உயர்ந்த சிந்தனை, தூய ஆடை, மகிழ்ச்சி நிறைந்த குடும்பச் சூழல் ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம் என்பன போன்றவற்றை எடுத்துக் கூறும் 10 நாள் 15 நாள் தொடர் வகுப்புக்கள் நடத்துகிறேன். இதில் உணவு சம்பந்தமான ஆலோசனைகளும் அடங்கும். எனக்கு நன்றாக சமைக்கத் தெரியும். கல்லூரி நாட்களில் சமையல் போட்டிகளில் பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.
'பணி சார்ந்த பிணிகள்' என்ற எனது புத்தகம் மிகப் பிரபலமான நூல். ஒரு பெரிய நிறுவனத் தலைவர் முதல் குப்பை அள்ளுபவர் வரை, அணுமின் சக்தி ஊழியரிலிருந்து அடுப்படி ஊழியர் வரை ஒவ்வொரு பணியிலும் அதில் பணிபுரிபவருக்கு வரும் நோய்களைக் குறித்து ஆய்வு செய்து பட்டியலிட்டு அவற்றிற்குரிய சிகிச்சை பற்றியும் கூறியிருக்கிறேன். இதில் 250க்கும் மேற்பட்ட நோய்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். ‘மகளிர் மருத்துவம்’ எனது இரண்டாவது நூல். அடுத்து "மருத்துவ அறிவியல்" என்ற நூல். நம்முடைய உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பேசினால் எப்படி இருக்கும் என்பதைத்தான் இந்நூலில் கூறியிருக்கிறேன். இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்த போது இந்நூலைக் கொடுத்து "ஜனாதிபதி அவர்களின் அறிவுக்குச் சமர்ப்பணம்" என்று சொல்லி அவரிடம் கொடுத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட அவர் என்னிடம் மூன்று கேள்விகள் கேட்டார். 1. குறைவான செலவில் வைத்தியம் செய்வது எப்படி? 2. மருத்துவப் பிரிவுகள் எவ்வாறு வேறுபடுகின்றன? 3. நோயாளிகளை எப்படி அணுகி மருத்துவ ஆலோசனை சொல்கிறீர்கள்? இவற்றிற்கு நான் அளித்த பதில்கள் அவரை மிகவும் கவர்ந்தன.
நான் இப்போது என் 50-வது வயதில் சென்னை பல்கலைக் கழகத்தில் "கிராமப் புறங்களில் மருத்துவ விழிப்புணர்வு" என்ற தலைப்பில் Ph.D ஆய்வு செய்யப் பதிவு செய்துள்ளேன்.
உலகத்தை நடுங்க வைத்துக் கொண்டிருக் கும் எய்¢ட்ஸ் நோய் பற்றித் தீவிர சிந்தனை உண்டு. இது தொடர்பாகப் பல கட்டுரைகளைத் தமிழில் எழுதியிருக்கிறேன். சர்வதேச அளவில் நடைபெற்ற நான்கு எய்ட்ஸ் மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். சில எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சையும் அளித்து வருகிறேன். நோய்க்கான பூரண குணமளிக்கக் கூடிய மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை என்றாலும் தற்போது அளிக்கப்படும் மருந்துகள் மூலம் ஆயுளை (longevity) நீட்டிக்க முடியும். மருந்து, சரியான ஊட்டச் சத்து இவற்றைக்கொண்டு எய்ட்ஸ் நோயாளிகளைத் திடமாக வாழ வைக்க முடியும்.
'சிருஷ்டி' என்ற ஓர் அமைப்பை உருவாக்கி அதன் கௌரவ ஆலோசகராக இருந்து வருகிறேன். இந்த அமைப்பின் மூலம் உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவ வேண்டும்; நகர்ப்புறங்களைப் போல் கிராமப்புறங்களிலும் அங்குள்ள பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களிடையே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவர்கள் மூலமாகத்தான் எதிர்கால இந்தியாவின் நலன் காக்கப் படவேண்டும்.
சிருஷ்டி அமைப்பின் முகவரி: எண். 4, ஜே.டி. துரைராஜ் நகர், எம்.எம்.டி.ஏ, வாட்டர் டேங் ரோடு, அமைந்தகரை, சென்னை 600029. மின்னஞ்சல் முகவரி: thilagam@hotmail.com
முனைவர் அலர்மேலு ரிஷி |