"என்னவாம்? என்ன டெஸிஷன்" என்றான் வெங்கெட்.
"தெரியலை. மோஸ்ட் பிராபப்லி மத்தியானத்திற்கு மேலே லீவாக இருக்கும்" சுரேஷ்.
"லீவு விடமாட்டா. ஆபீஸ் பூராவுக்கும் கங்காதரனின் ·பாதரைத் தெரியாது. யாரு வேண்டுமோ போகலாம்... அப்படித்தான் இருக்கும்" என்றன் சுந்தர்.
"ஆர் யூ கோயிங்" என்றான் நாராயணன் சாகேத்தைப் பார்த்து.
"தட் கோஸ் வித் அவுட் ஸேயிங்" என்றான் சாகேத். "·பாதரும் கங்காதரனும் ஜப்பானில் சந்தித்துக் கொண்டனர். அதிலிருந்து அவருடைய ·பாதரையும் என் ·பாதருக்குத் தெரியும். அம்மா வந்தாளைப் பற்றியும் லெட்டரில் அவர் ஒரு தரம் குறிப்பிட்டிருந்தார்.' ' "நான் அந்த லெட்டரைப் பார்த்திருக்கிறேன்" என்றான் நாரயணன்.
"அந்த லெட்டரைப் பற்றி என்ன நினைக்கிறே" என்றான் சாகேத்.
"நாட் மச்" என்றான் நாராயணன்.
"நீ ஒரு தரம் அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கேயில்லே"
"எஸ்... டூர் போயிருந்தப்போ கங்காதரன் அவரிடம் ஒரு லெட்டரை கொடுத்து கொடுக்கச் சொன்னார். என்னவோ ஜென்மம் பூராவும் பழகியது போன்று கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் கொண்டு போனார். இலக்கியம், ரிலிஜன் எல்லாம் பற்றி பேசினோம்."
"வாட் யூ திங்க் அபெளட் ஹிம்"
"ரொம்ப பெரிய எவால்வ்டு ஸோல். ஒரு ரிஷியின் தன்மை இருந்தது. பேசுபவனின் பிரச்சினை என்ன, அவன் என்ன நினைக்கிறான் என்பதைப் பளீர்னு அவரால் கணிக்க முடிந்தது. டாஸ்டாயெவ்ஸ்கியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். பிரதர்ஸ் கராமஜோவ் படித்திருப்பதாகச் சொன்னார்."
'பிரபஞ்சம் என்கிற களேபரத்தில் நாம் அவ்வளவு முக்கியமில்லை' என்கிறதைத் திட்டவட்டமாகச் சொன்னார். ரொம்ப அழுத்தமான தன்னம்பிக்கை கொண்ட பேச்சு. That's something with the older generation. வார்த்தைகளுக்கு ஒரு அசாத்திய மதிப்பு அவர்களால் கொடுக்க முடிந்தது. நம்மால் முடியறதில்லை. நான் உன்கிட்டே பத்து ரூபா வாங்கினேன் என்று வைத்துக் கொள்வோம். நாலுநாள் கழிச்சு தரேன்னு சொல்லறேன். ஆனால் தர்ரதில்லை, நீயும் கேட்பதில்லை."
"Older generationலே நாற்பது நாள் டைம் முன்னமேயே கேட்பதற்கென்ன என்பார்கள். வார்த்தைகளின் அர்த்தங்கள் பொய்த்துக் கொண்டே வருகின்றன. Modern problem is defintely one of communication".
"வாஸ்தவம்தான்" என்றான் சாகேத். "வர்றேன். இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு. நீ மத்தியானம் வர்ரயோன்னோ.." என்றான்.
"டு பீ ஷ்யூர், எஸ்" என்றான் நாராயணன். தொடர்ந்து "·பாதரும் வருகிறாரோன்னோ" என்றான்.
"நோ ஹீ இஸ் இன் ஜெக்" என்றான் சாகேத்.
"ஆமாம் சொன்னார். மறந்து போயிடுத்து" என்றான் நாராயணன்.
சரியாக மூன்று மணிக்கு சாகேத்தும் நாராயணனும் ஆபீஸை விட்டுப் புறப்பட்டார்கள். டைரக்டர் பட்டி முன்னமே சென்று விட்டிருந்தார். வெங்கட் ரூமில் இல்லை. நடராஜன், விஜயகோபால், நயினார் ரூமில் இல்லை. சாவ்லாவும் இல்லை. ஒவ்வொரு ரூமாக சாகேத் தான் போய் பரிசோதித்து விட்டு வந்தான்.
இந்தச் செய்கையை ஆமோதிக்க முடியாமல் நாராயணன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். ஸப்ரூ ஹவுஸ் வரையிலும் அவர்கள் நடந்தே சென்றார்கள். வெய்யில் தாழ்ந்து விட்டிருந்தது. நல்ல குளிர், சாகேத்திடம் நல்ல ஸ்வெட்டர்கூட இல்லை.
"இந்த மாதம் சம்பளம் வாங்கினதும் ஒரு ஸ¥ட் தைத்துக் கொள்" என்றான் நாராயணன்.
"விலையைக் கேட்டால் பயமாய் இருக்கு. மதராஸில் பட்டுகளில்தான் இவ்வளவு பணத்தை விடுவார்கள்" என்றான் சாகேத்.
"விலைகள் இன்னமும் ஏறும், குறையாது. உலகம் முழுதும் பணம், ரிஸோர்ஸஸ், ரா மெடீரியல்ஸ் என்கிற படிக்கு சிந்தனை ஓட்டங்கள் தொடர்கின்றன. எல்லாமே விலை ஏறத்தான் செய்யும். இந்த வருடம் இரண்டு தைத்துக் கொள், ஏழு வருடங் களுக்குக் கவலை இல்லை. இந்தக் குளிர் ரொம்பப் பொல்லாதது" என்றான் நாராயணன்.
பட்படி வந்தது. இருவரும் ஏறிக் கொண்டனர். ரீகலைக் கடந்து கோல் மார்க்கெட்டைத் தாண்டி பழைய எம். பி. ஸ்கூலை வளைத்துக் கொண்டு பட்படி ஓடிற்று. ஸர்தார்ஜி வெறும் சட்டை மட்டும் போட்டுக் கொண்டிருப்பதை சாகேத் கவனித்தான். அவன் அதை கவனிக்கிறான் என்பதை நாராயணனும் கவனித்தான். ஆனால் இருவருமே ஒன்றும் பேசவில்லை.
கரோல் பாக்கில் இருவரும் இறங்கிக் கொண்டனர். நாராயணன், சாகேத் இருவரும் கங்காதரன் வீட்டை நோக்கி நடந்தார்கள். சாதாரணமாகச் செங்கல்லால் வேயப்பட்ட தடுப்புக்கள் போன்ற அறைகளைக் கொண்ட வீட்டில்தான் கங்காதரன் குடியிருந்தார். அந்த வீட்டுக்கே அவர் நூற்றைம்பது ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டிருந்தார்.
"நீ கங்காதரன் வீட்டுக்குப் போயிருக்கிறாயா?" என்றான் நாராயணன்.
"இதுவரையில் இல்லை" என்றான் சாகேத்.
சாகேத்துக்குக் குளிர்கிறது என்று மீண்டும் நாராயணன் நினைத்துக் கொண்டான். டில்லியிலேயே இருந்து பழகி அவனோடு சாசுவதமாகிவிட்ட அந்த உல்லன் ஸ¥ட் சாகேத் முன்னால் சங்கடமும் சங்கோஜமும் அடைந்தது.
ஆனால் அவர்கள் இருவரும் கங்காதரன் வீட்டை அடையுமுன்பே, அவருடைய தகப்பனார், இதற்கென்றே என்பது போன்று எழுபது வருட அனுபவங்களை மதராஸில் பின்தங்க வைத்து வந்திருந்தவர். நாராயணனுக்கு ஏற்பட்ட உல்லன் ஸ¥ட் சங்கோஜம், சங்கடம், அவருக்கும் அது, அல்லது அதுபோன்று ஏதாவது ஏற்படுமானால் அதையெல்லாம் கடந்து விட்டிருந்தார். அந்த மாதிரி மனுஷர்களுக்கு சங்கோஜம் சங்கடமெல்லாம் ஏது? எப்போதும் ஒரு கனிவு, கனிவு, கனிவு, திகட்டும் கனிவு. அதுவும் பொய்த்து விட்டது. சாட்சியே போன்று வீட்டு வாசலில் ஒரு பாடையும், அவிழ்க்கப்பட்ட ஷ¥க்களும், சிறு கும்பலும் தெரிந்தன. சாகேத்தும், நாராயணனும் பூட்ஸை அவிழ்த்து விட்டு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டார்கள். சாவில் சில சமயங்களில் நாராயணன் அருவருப்பையும், குரூரமான வீரியத்தையும் பார்த்திருக்கிறான். ஆனால் இவன் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த விதத்தினாலா? இல்லை, அவர் உண்மையாகவே தூங்குவது போல்தான் காணப்பட்டார். எந்த நிமிடமும் அவர் எழுந்து கொள்ளலாம். அசதியால் வந்த தூக்கமா? அவருக்கு எப்போதிலிருந்து அந்தக் கனிவு ஏற்பட்டதோ? அப்போதிலிருந்தே அவர் அப்படித்தான் தூங்கியிருக்க வேண்டும் என்கிற உணர்வு நாராயணனுக்கு ஏற்பட்டது.
"கங்காதரனுடைய வீடு இதுதானே... நான் டில்லியிலிருந்து வர்ரேன், அவருடைய ·பாதருக்கு ஒரு லெட்டரை கங்காதரன் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்" என்று சொல்லி முதல் தடவை பார்த்து பிறகு இப்போது தான் பார்க்கும் கங்காதரனுடைய அம்மா முதலில் பார்த்தபோதே வாழ்க்கையின் அவ்வளவு சோக வடுக்களையும் அவள் தாங்கி நிற்பதாகப் பட்டது. அதுக்கெல்லாம் சிகரம் போன்று இதையும் தாங்கி நிற்கிறாள் என்று பட்டது. உண்மை இதுதான். கங்காதரனைவிட, அவர் மனைவியை விட (ஸ்கூல் விட்டு வரவிருந்த பேரக் குழந்தைகளுக்குச் செய்தி தெரியாது. வந்ததும் கேட்டதில் அவைகள் புரியாமல் விழித்தன) அவளுக்குத் தான் அவருடைய ம்ருத்யு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக நாராயணனுக்குப் பட்டது. கை ஒடிந்து அவள் நின்று கொண்டிருப்பதாக அவனுக்குப் பட்டது.
அவர்களிடையே ஏற்பட்ட வாழ்க்கைப் பிணைப்புக்கள், அறுபாடுகள், சமரசங்கள் எதுவுமே தனக்குத் தெரியாது என்பதில், திட்டவட்டமாகத் தெரியாது என்பதில், சாவின் அகோர வீரியத்தை அவன் கண்டான். எப்போது எக்காரணத்தால் இவரில் ஒரு ரிஷியின் கனிவு பிறந்தது. இப்பேர்ப்பட்டவரா கங்காதரனின் காந்தீய நெறிவாழ்வுக்கு மறுதலித்தார். வெளியே வந்தான் நாராயணன். சாகேத்தும் அவனுக்குப் பின்னால் வந்தான். இன்னமும் எல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
மெட்ராஸிலிருந்து இன்னமும் கங்கா தரனுடைய மூத்த தமையனார் வர வேண்டும். வருத்தம் தெரிவித்து விட்டு சில கார்கள் புறப்பட ஆரம்பித்துவிட்டன.
சாகேத்தும் நாராயணனும் பஸ் ஸ்டாப்புக்கு வந்தார்கள்.
"Hey!" என்றான் சாகேத். "Hey Nothing will remain of him"
"Nothing" என்றான் நாராயணன். தொடர்ந்து "மெமரி அ·ப்கோர்ஸ். அன்ட் தட் டூ ·பார் எ ஷார்ட் டைம்"
நாராயணன் ஆர்.கே. புரம் போக ஆயத்தமானான். 45ம் நம்பர் பஸ் வந்தது.
"டோன்ட் லீவ் மீ... ஐ ·பீல் லோன்லி" என்றான் சாகேத்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை. கோ. ஹாவ் எ பாத்... ட்ரை டு ஸ்லீப். நாளைக்கு ஆபீஸ் இருக்கு" என்றான் நாராயணன்.
ஏதோ டான்ஸ் புரோக்ராமைப் பற்றிச் சொன்னான் சாகேத்.
அப்போதுதான் கனாட்பிளேஸில் அந்த டான்ஸ் + ஈடிங் ஆரம்பித்திருந்தார்கள். நபருக்குப் பத்து ரூபாய். "இவன் என்ன இப்படி சொல்கிறான்" என்று நாராயணன் நினைத்துக் கொண்டான். அவர்கள் அந்த ரெஸ்டாரண்டுக்குப் போனார்கள். மேடையில் யாரோ ஒருத்தி கோரமாக உடலை அசைத்துக் கொண்டிருந்தாள். திடீரென்று ஆடியன்ஸ் நடுவில் குதித்து ஒருவருடைய சிகரெட்டைப் பற்றி இழுத்து இருமுறை புகைத்து கரடுமுரடான குரலில் "where is your wife" என்றாள் டான்ஸ் + ஈடிங். அந்த டான்ஸ¤ம், அந்த பெரு மார்புகளை அவள் அசைத்த விதமும் நாராயணனுக்கு அருவருப்பு ஏற்படுத்தியது.
சாகேத் என்னவெல்லாமோ ஆர்டர் பண்ணினான். தின்னவும் ஆரம்பித்து விட்டான்.
"இதுவும் நம்மிடமிருந்து பிடுங்கிக்கொள்ளப் பட்டுவிடுமுன் தின்னு" என்றான் சாகேத்.
"யூ ஹாவ் ரெட் லாட் ஆ·ப் புக்ஸ்" என்றான் சாகேத் ஏதோ நினைத்துக் கொண்டது போல.
நாராயணன் மெதுவாகவே சாப்பிட முயற்சி செய்தான். அவனுக்குக் குளிக்க வேண்டும் போலிருந்தது.
"வாட் தே ஹாவ் காட் டு ஸே அபெளட் டெத்?" என்றான் சாகேத்.
இந்தக் கேள்வியில் நாராயணனுக்கு ஹெமிங்வே பாத்திரம் சொல்வது ஞாபகம் வந்தது.
"டெத் இஸ் எ ஹோர்" என்றான் அவன்.
"ஹு"
"ஹெமிங்வே"
தொடர்ந்து "டால்ஸ்டாய் அந்த பிராஸஸை நன்றாக விவரித்தார். இருந்தும் அவருக்கும் ஏதாவது புரிந்ததா என்றால் சந்தேகம்தான். கர்ட்டன்கள் வாங்கி மாட்டி, பெண்டாட்டியுடன் சண்டை போட்டு, பொதுக்கென்று ஒருத்தன் ஒரு ஆபீஸர் செத்துப் போறான். அந்தக் கதை நன்றாகவே வந்திருக்கிறது" என்றான்.
"வாட் அபெளட் மை ·பாதர்..."
"மோகமுள்ளில் ஒரு பெண் செத்துப் போயிடறா... தற்கொலை... பாபுவுக்கு உடம்பெல்லாம் மணல்பட்டது போன்ற அரிப்பு ஏற்படுகிறது. 'மலர் மஞ்சம்' பெண்கள் சாவுப் பட்டியலுடன் தொடங்குகிறது. Anyway it was not an obsession with your father" என்றான்.
"வாட் இஸ் இட் எக்ஸாக்ட்லி" என்றான் சாகேத்.
"வாட் இஸ்" என்றான் நாராயணன்.
"டெத் அ·ப்கோர்ஸ்"
"யு கேன் ஸ்பெகுலேட் அபெளட் இட்" என்றான் நாராயணன்.
தொடர்ந்து சொல்லிக் கொண்டு போனான்.
"என்னைப் பொறுத்த வரையில் எனக்கு இதில் இரு அனுபவங்கள் உண்டு. ஒன்று நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்டது. ஸ்கூல் பஸ்ஸ¤க்காக நானும் என் ஸிஸ்டரும் காத்துக் கொண்டிருந்தோம். சின்னத் தம்பி அப்போது ஸ்கூல் ஆரம்பித்திருக்கவில்லை. அன்னிக்கு Introduce பண்ணி வைத்தேனே, ஸைகாலாஜி எம்.ஏ. பண்ணிண்டிருக்கானே அவன்தான். அப்போதெல்லாம் பஸ்ஸில் இடம் கொள்ளாமல் இரண்டு டிரிப் மாலை ஐந்து மணிக்குக் கிளம்பும். இரண்டாவது டிரிப் கிளம்ப ஆறு ஆறேகால் ஆகிவிடும். எல்லோரும் ஏதாவது வி¨ளாடிக் கொண்டிருப்பார்கள். என் தங்கை பாண்டி விளையாடுவாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் அந்த வயதிலேயே எனக்கு butfferfly ஞாபகம் வரும். அவளுடைய கிளாஸ்மேட் ஒருத்தி. அவள் யாருடனும் விளையாடமாட்டாள். ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு, ஒரு பேப்பரில் சுற்றி வைத்த புளியை எடுத்துத் தின்ன ஆரம்பிப்பாள். அது என்ன புளி தின்னும் படலமோ? சில காட்சிகள் சில அனுபவங்கள் மறப்பதேயில்லை சாகேத். அவளுக்கு அம்புஜம் என்று பெயர். ஒருதரம், என் தங்கையும் மற்ற பெண்களும், பிள்ளையார் பந்து விளையாடும்போது புளி தின்று கொண்டிருந்த அம்புஜத்தின் மேல் பந்து பட்டுவிட்டது. அவள் பந்தை எடுத்து வைத்துக் கொண்டு தரமாட்டேன் என்றாள். நான் புயலாக அவளிடம் போய் 'ஏய் புளி அம்புஜம் மரியாதையாக பந்தைக் கொடுக்கறியா இல்லையா' என்றேன். எல்லோரும் சிரித்து விட்டார்கள்."
"I Loved my sister!.... மஹாராணியினுடைய பை, டி·பன் பாக்ஸ், அவளுடைய சப்பல், என்னோடு சேர்ந்து எடுத்துக் கொண்டு ஓடி அவளுக்கு பஸ்ஸில் இடம் பிடிக்கணும். அதுவும் கார்னர் ஸீட். இல்லாவிட்டால் அவளுக்குக் கோபம் வந்துவிடும். ஒருதரம் இப்படித்தான் நான் ஓடும் போது அவளுடைய டிபன்பாக்ஸ் மூடி கழன்று விழ அதை எடுக்க குனியும் போது புஸ்தகம் நிரம்பிய பை தடுக்கி கீழே விழுந்துவிட்டேன். நிறையப் பேர்கள் வீல்னு கத்தினார்கள். பஸ் வேகமாக என்னை நோக்கி வருவதைப் பார்த்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் நான் வந்து கொண்டிருந்த பஸ்ஸ¤க்குக் குறுக்காக இல்லாமல் நீள வாட்டத்தில் விழுந்திருந்தேன். இரண்டு முன் டயர்களும் அரை பஸ்ஸ¤ம் என்னைத் தாண்டிவிட்டிருந்தது. நான் அதனடியில் பத்திரமாகத்தான் இருந்தேன். ஸ்கூல் டீச்சர்களில் சில பேர்கள் இன்னமும் வீட்டுக்குப் போயிராத பிரின்ஸிபால் எல்லோரும் ஓடிவந்தார்கள். பிரின்ஸிபால் என்னைச் சுழட்டி சுழட்டி அடித்தார். ஒரு வாத்தியார் 'செத்துப் பிழைத்திருக்கிறான். விட்டுடுங்க' என்றார். 'You thank your star' என்று சொல்லி அடிப்பதை நிறுத்தினார்."
"இந்த நிகழ்ச்சி அநேகமாக எனக்கு மறந்துவிட்டது. ஆனால் மற்றொன்று என்றுமே மறக்க முடியாது. அப்போதுதான் நாங்கள் 'மோதிபாக்' போயிருந்தோம். இப்போது மோதிபாக் கம்ப்ளீட்டாக டெவலப் ஆயிடுத்து. அப்போது எல்லாமே தினம் உருவாகிக் கொண்டேதான் இருக்கும். நான் அங்கு போன போது, கோல் மார்க்கெட்டில் எங்களைப் போல் ஒண்டுக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த குடும்பங்கள் அரசாங்கத்திடமிருந்து இன்னமும் வீடுகள் பெற்றிருக்கவில்லை. ஆனால் அனேகமாக ஒரு வருடத்திற்குள் நான் நினைத்த நபர்களெல்லாம் மோதிபாக் வந்துவிட்டார்கள். எல்லோருமே என்று சொல்வது தவறு, தினம் சந்தித்துக் கொள்ள முடியாமல் எல்லோரும் மோதிபாக், டிப்ளமேடிக் என்க்ளேவ், ஈஸ்ட் விநய்நகர், வெஸ்ட், மெயின் விநய்நகர் என்று சிதறினோம். நாளாவட்டத்தில்தான் நாங்கள், தினம் வீடுகளுக்குப் போய் சந்தித்துக் கொள்ள முடியாது என்று அந்த முயற்சியைக் கைவிட்டோம். சுந்தர் என்னைத் தேடிக் கொண்டு வெஸ்ட் விநய்நகரிலிருந்து வந்திருப்பான். நான் ராகவனைத் தேடிக் கொண்டு மெயின் விநய்நகர் போயிருப்பேன். அவன் பிரகாஷைத் தேடிக் கொண்டு என்க்ளேவ் போயிருப்பான்."
"டிப்ளமேடிக் என்க்ளேவிலிருந்த பிரகாஷ் மேல் எனக்கு ரொம்ப பிரியம். Blighter he was a great runner. Above all he had tremendous will power - அவன் சாரங்கனோடு அட்லீஸ்ட் செகன்ட் ப்ளேஸ் வாங்கணும்னு நூறு கஜத்துக்கும் மேலேகூட ஓடி கடைசி லேப்பில் சாரங்கனை அவுட்விட் செய்து நூலிழையில் ஜெயித்ததை என்னால் என்றென்றும் மறக்க முடியாது. அதைப் பார்த்த யாராலும்தான். அவன்தான் எனக்கு ஷடில்காக், செஸ், டேபிள் டென்னிஸ் எல்லாம் கற்றுக் கொடுத்தான். நான் அடிக்கடி அவன் வீட்டுக்குப் போவேன். அவனும் வருவான். ஆனால் அவனிடம் என்னைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட பழக்கம். அவனுக்கு கணக்குன்னா ரொம்பப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காது. எப்பப் பார்த்தாலும் ஏதாவது மனக் கணக்கும், மேதமடிகல் பஸில்ஸ¤ம் போட்டுக் கொண்டேயிருப்பான். அப்போது ஆகஸ்ட் என்று நினைக்கிறேன். மழைக் காலம். நான் சில சமயங்களில் மொட்டை மாடியில் பட்டம் விடுவேன். ஒவ்வொரு பிளாக்குக்கும் 8-12 வீடுகள் தேறும். அத்தனை வீடுகளின் மொட்டை மாடிகளும் இணைக்கப்பட்டிருக்கும். you know.. common walls. காற்றின் திசைக்கேற்ப, சில சமயங்களில் மொட்டை மாடியில் பட்டத்தைப் பிடித்துக்கொண்டு இந்தக் கோடியி லிருந்து அந்த கோடிக்கு ஓடுவேன். அன்று மழை வரும் போலிருந்தது. வீட்டில் சொல்லிக் கொண்டு நான் பிரகாஷ் வீட்டிற்கு போனேன். நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். பிரகாஷ் பத்தாவது, இன்னமும் சுற்றுவட்டாரத்தில் லான்கள் டெவலப் ஆகவில்லை. பிரகாஷ் அந்த வட்டாரத்தில் மற்ற பெற்றோர்களிடம் சொல்லி டேபிள் டென்னிஸ் ஹால் வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் - நாங்கள் ஏதாவது கேம்ஸ் விளையாடப் போயிருக்கலாம். வீடு மாற்றியதில் அவன் செக்ஸையும் எங்கோ வைத்துவிட்டிருந்தான். அதைத் தேடி எடுக்கணும்.
போர் அடிக்க, பிரகாஷ் மீண்டும் மாதமடிகல் குவிஸ் ஆரம்பித்துவிட்டான்.
"மொட்டை மாடி போகலாம்' என்றேன் நான். நாங்கள் சில சமயங்களில் டால்க டோரா கார்டன்ஸில் சின்ன வயதில் கண்மூடி விளையாடுவோம். மொட்டை மாடியிலும் அவன் மனக் கணக்குப் போர் தொடங்கிவிடவே பிரகாஷ் ப்ளீஸ் என்றேன் நான். அவனுக்கு கோபம் வந்துவிட்டது. ஓடிப்பிடித்து வேண்டுமானால் விளையாடலாம் என்றான் அவன். நான் அவனைத் தூரத்தினேன். அவன் லாகவமாகக் தப்பித்துக் கொண்டான்.
நான் என்னுடைய அடிகளை அட்ஜெஸ்ட் செய்து அவன்மேல் பாய்ந்தேன். அவன் பக்கத்து மாடிக்குத் தாவினான். சில கணங்களுக்கு அவன் என் கண்களிலிருந்து மறைந்துவிட்டிருந்தான். ஆக்சுவலி அவன் மாடிப்படிகளில் ஒளிந்து கொண்டிருந்தான். பெரிய வீடுகளாயிற்றே. மூன்று வீடுகளுக்குத் தான் மொட்டை மாடி. நான் அவனை நான்கு புறமும் தேடிக் கொண்டே பக்கத்து மாடிகளில் சுவரேறி குதித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தேன். என் மனதில் அடித் தளத்தில் எங்கள் பிளாக்கின் எட்டு மாடிகள் இருந்திருக்க வேண்டும். நான் இன்னொரு தரம் எம்பிய போது கீழே ஒரு கார் பல்லி போன்று சிறுத்திருப்பதைப் பார்த்தேன். நான் என்னை பாலன்ஸ் பண்ணிக்க முடியாமல் தவித்து தவித்து நல்ல காலம் இந்தப் பக்கமே விழுந்தேன். it was close shave, சாவுக்கும் கணக்குக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது" என்றான் நராயணன்.
இப்போது, மேடையில் இருபத்திரெண்டு வயது மதிக்கத் தக்க இளைஞன் தோன்றினான். கஜல் பாட ஆரம்பித்தான். அவன் மேல் சிவப்பும் பச்சையுமாக ஒளிகள் பாய்ச்சப்பட்டன. அவனுடைய குரல் நாராயணனை ஈர்த்தது. கங்காதரனுடைய ·பாதர் செத்துப் போனது இவனுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இவனால் இப்படிப் பாட முடியுமா! அவ்வளவு பக்கத்திலிருந்து யாராயிருந்தாலும் அதை தரிசித்தால், நமக்கும் ஒருநாள் இதே கதி தான் என்று தோன்றாமலிருக்காது. ஒரு கணத்துக்குத்தான் சொல்வேன். அந்த உணர்வு ஏற்படத்தான் செய்யும். அப்படித் தோன்றிய பிறகு இவனால் இப்படிப் பாட முடியுமா? நாராயணனை அவனுடைய குரல் பயங்கரமாக ஈர்த்தது. அவர், கங்காதரனுடைய ·பாதர், இப்படி வசீகரக் குரலில் ஈர்க்கப்பட்டு எப்போதாவது நின்றிருப்பாரா? உலகத்தில் சோகத்தை எல்லாம் தானே தாங்கிக் கொண்டிருப்பது போலல்லவா அவர் காணப்பட்டார்? அது அவசியம்தானா?
நாராயணனுக்குக் கைகளையும் கால்களையும் அசைத்து அசைத்து டான்ஸ் ஆடவேண்டும் போலிருந்தது. எங்கேயாவது தான் டான்ஸ் ஆட ஆரம்பித்து விடுவோமோ என்று பயந்தான். 'சாவு என்பது ஒரு இடைவெளி' என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டான். அன்றிலிருந்து தான் சொல்ல முடியாத அளவுக்கு உடல் சுகத்தில் அவனுக்கு நாட்டம் விழுந்தது.
எஸ். சம்பத் |