எஸ். சம்பத்
புதிய சிந்தனைகள், புதிய வளங்கள், புத்தம் புதிய ஆக்கத் தன்மை இவற்றுடன் வெளிப்படுவதே நவீனத் தமிழிலக்கியம். இதன் களம், பேசுபொருள், அறிதல் முறை, உணர்தல், படைப்பாக்கம் மற்றும் மொழிதல் யாவும் தனித்துவமானவை. தமிழில் இருபதாம் நூற்றாண்டில் படைப்புத்தமிழ் நவீனப் பிரக்ஞையுடன் கூடிய புதிய சவால்களை வேண்டி நின்றது. இதனைப் புரிந்து தத்தமது மேதைமையுடன் இயங்கிய படைப்பாளர்கள் சிலர்தாம் - பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் இவர்கள் மட்டுமே.

இவர்கள்தாம் தமிழ்ப் படைப்பின் முகத்தை, அதன் உயிர்ப்பை, மாற்றியமைத்தவர்கள். புதிய படைப்புச் சாத்தியங்களுக்கான மடைமாற்றங்களைத் திறந்துவிட்டவர்கள். இந்தத் தொடர்ச்சியில் இன்றுவரை பலர் வந்து செல்கிறார்கள். ஆனாலும் சிலர்தான் தமது சுயத்துவத்துடன் நடமாடி, மிகுந்த கவனிப்புக்குரியவர்களாக ஆகிறார்கள். அவர்களுள் ஒருவர்தான் எஸ்.சம்பத். பெரும்பாலான எழுத்தாளர்களைப் போல் சம்பத் எழுதி எழுதிக் குவித்த பேர்வழிஅல்ல. அவ்வாறு எழுதிக் குவிக்குமளவிற்கு அவருக்கும் காலம் கைகூடவில்லை. அவர் தம்முடைய 42வது வயதில் அகால மரணமடைந்துவிட்டார்.

எஸ். சம்பத் நாராயணன் என்ற இயற் பெயரைக் கொண்ட எஸ். சம்பத் (1941-1984), அவர் வாழ்ந்த காலத்தில் பெரும் எழுத்தாளராக அறியப்பட்டவர் அல்லர். அந்த அளவிற்கு அங்கீகாரமும் இருக்க வில்லை. அவரது தேடல், நுண்ணுணர்வு பல எழுத்தாளர்களில் இருந்து மாறுபட்டது.

சம்பத் எழுதிய 'இடைவெளி' என்ற நாவல் வித்தியாசமானது மட்டுமல்ல, முக்கியமான படைப்பும் கூட. மரணம் பற்றிய சிந்தனைகளின் வாழ்வியல் சார்ந்த முரண்பாடுகளின் 'சுயவிசாரம்' தான் இடைவெளி. ஆண்-பெண் உறவு, சாவு, வாழ்வு, பிரபஞ்சம், காதல், அன்பு முதலான சிந்தனை ஓட்டத்தை இடைவெளி படைப்பாக்கியுள்ளது. சாவு பற்றிய கேள்வி, பயம், உள்ளுணர்வு, யாவும் உள்முகத் தேடலாக, வாழ் அனுபவமாக வாழ்வியல் முரணாகப் புனைவுலகில் தமிழில் வெளிவந்த படைப்பு இடைவெளி. தமிழின் முழு முற்றான முதல் கருத்துலக நாவல் இடைவெளிதான் என்றும், கருத்துலகில் தீவிரமான புனைவுப் பயணம் மேற்கொண்ட படைப்பாளி சம்பத் என்றும் எழுத்தாளர் சி. மோகன் கணித்திருப்பது மிகப் பொருத்தமானது.

நாவல், குறுநாவல், சிறுகதை உள்ளிட்ட இலக்கிய வகைகளின் உள்ளோரும் பொதுப்பண்பு வாழ்வு - சாவு இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளி தான். "மனித இனத்தின் மகத்துவம் என்னவென்றால், எல்லா நிலைகளையும் தாண்டி, இது மனித இனத்தையே எங்கேயோ இட்டுச் செல்ல உறுதி பூண்டுள்ளது என்பது தான். மனித குலத்தின் விசேஷ அம்சம், காலத்தில் (தானே கற்பித்ததாக இருக்கட்டும்), காலத்தின்முன் தன் இனத்தைத் தள்ளி தான் சாவில் தஞ்சம் புகுவது என்ற ஒரு அசாத்தியமான எண்ணம் தான். இதுவே இந்தக் குலத்தை இன்னமும் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. சரித்திரம் என்கிற மனோபாவத்தில் மனிதவம்சத்தின் இதுநாள் வாழ்வு கடுகினும் சிறிது எனினும் அதனுடைய மகத்துவமே இதில்தான் அடங்கியுள்ளது. என நான் கருதுகிறேன்" என்று 'மூளை சம்பந்தமான விஷயங்கள்' என்னும் கட்டுரையில் சம்பத் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சம்பத்தின் எண்ண வோட்டம் எத்தகையது என்பதை புரிந்து கொள்ளலாம்.

சிறுகதைப் பரப்பில் சம்பத் எழுதியவை அதிகம் இல்லை. ஆனால் எழுதிய கதைகள் எதிர்மரபு சார்ந்தவை. அங்கீகரிக்கப்பட்ட கதைகூறல் மரபுக்கு, கருத்துக்கு எதிராகப் புனைவு செய்யப் பட்டவை. எவ்வாறாயினும் சம்பத் தமிழ்ப்படைப்புலகில் விட்டுச் சென்றுள்ள குறைந்த படைப்புகளே அவருக்கான தனியிடத்தை வழங்கப் போதுமானவை. 'இடைவெளி' என்ற நாவல் ஒன்றே போதும், சம்பத் பெயர் சொல்ல.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com