கலிஃபோர்னியா வரி வாரியத் தலைவர் (Franchise Tax Board) செல்வி ஸ்டானிஸ்லா ஸின் வாழ்க்கையும், சாதனைகளும் இளைய தலைமுறைக்குச் சிறந்த பாடம். அவர் தமிழர் என்பதும், தென்றல் வாசகர் என்பதும் நமக்கெல்லாம் பெருமை சேர்க்கக் கூடியவை.
அவரது குடும்பம், இளமைக் காலம், அமெரிக்கப் பயணம், எஃப்.டி.பியின் குறிக்கோள், அதில் அவரது நிர்வாகம், குடிபெயர்ந்தவரும், பெண்மணியுமான அவரின் வெற்றிப்பாதை அனுபவம், அவரின் பொழுதுபோக்கு, பிற ஆர்வங்கள் போன்ற வற்றைப் பற்றிய சுவையான உரையாடலின் ஒரு பகுதியைச் சென்ற இதழில் கண்டோ ம். இந்த இதழிலும் அவருடனான சந்திப்பு தொடர்கிறது.
தெ: எஃப்.டி.பியின் (Franchise Tax Board - FTB) முதன்மை அதிகாரியாக நீங்கள் அடைய விழையும் குறிக்கோள்கள் என்ன?
செ: எஃப்.டி.பி நிர்வாகம் வரித்துறையில் மாநிலங்கள் அளவில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிர்வாகத்தை, அரசாங்கத் துறையினருக்கும், சட்டசபைக்கும், வரி வல்லுநர்களுக்கும், வரி செலுத்தும் கலிஃபோர்னிய மக்களுக்கும் மிக்க பொறுப்புடன் தொடர்ந்து பணியாற்ற வைத்து, இதன் நடைமுறைகள் எல்லோருக்கும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிய வைக்க வேண்டும்; இங்குள்ள ஒவ்வொரு குடிமகனும், அரசாங்கத்தையும், அதன் அதிகாரிகளையும் அவர்களது கடமை களுக்குப் பொறுப்பேற்கச் செய்யும் உரிமை யைப் பெறவேண்டும். எங்கள் நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது, முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன, அதன் அதிகாரிகளின் கடமைகள், பொறுப்புகள், அதிகாரங்கள் என்ன, இன்ன பிற தகவல்களும் நடை முறைகளும் ஒரு திறந்த புத்தகம்போல் இருக்க வேண்டும். மக்கள் இத்துறையின் செயல் பாடுகளில் ஒரு அங்கத்தினர்போல் பங்கேற்கும் நிலை உருவாக வேண்டும்.
மேலும், என் பொறுப்பு வரி நிர்வாகத் துறையைக் குறைந்த செலவில்/முதலீட்டில் செவ்வனே நடத்துவதுடன், எங்களின் சேவைத் தரத்தை மேம்படுத்துவது, ஊழியர்கள் அவர்களின் பணிகளைச் சிறப்புறச் செய்ய வழிவகுத்து, மக்களுக்கு எங்கள் தொழில் நேர்மை, திறமை, நயமையின் மேலுள்ள நன்னம்பிக்கையை உறுதிப்படுத்துவது போன்றவையுமாகும். வரி செலுத்துவோர் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பதும், குறைகளைக் களைவதும் எங்களின் முக்கியக் கடமையாகும். அவர்களின் வரி விவகாரங் களில் முழுமையான, அவர்களுக்குத் திருப்தி தரும் வகையான உதவியைத் தரவேண்டும். வரி செலுத்தும்போது மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளைக் குறைக்கத் தீவிர முயற்சி எடுத்துள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும், முதன்முறையாக வரி செலுத்தும் பல்லாயிரக்கணக்கானோர், அவர்களது கடமை, உரிமை முதலியன வற்றைத் தெளிவாக உணரும்படிச் செய்ய வேண்டும். இது ஒரு பெரிய சவாலாகவும், சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது - எந்தளவிற்கு அவர்கள் சட்டதிட்டங்களைப் புரிந்து கொள்கிறார்களோ அந்தளவிற்கு அவற்றைக் கடைப்பிடிப்பார்கள்.
தெ: அரசுத் துறைகள் செயலூக்கத் திறனுக்கு (dynamism) பேர்போனவை அல்லவே. இந்த அவசரகதி தொழில் நுட்ப காலத்தில் எஃப்டிபி சந்திக்கும் சவால்கள் என்ன?
செ: எஃப்.டி.பி, ஊழியர்களின் பணியின் சுமையைக் குறைக்கவும், வரி செலுத்து வோரின் பளுவைக் குறைக்கவும், தொழில் நுட்பத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தும் பேர் பெற்றுள்ளது. அதே சமயம், நாங்கள் அவசரமாகப் புது நுட்பங்களைப் புகுத்துவ தில்லை, அதற்குமுன் வரி செலுத்துவோரின் தரவுப் பாதுகாப்பைத் (data security) தீர ஆய்ந்துவிட்டே செயல்படுகிறோம்.
இன்றைய தேதியில் தரவுத் திருட்டு, பாதுகாப்பு போன்ற செய்திகளில்லாமல் நாளேடுகளோ, தொலைக்காட்சித் தொகுப்பு களோ அமைவதில்லை. எங்கள் நிர்வாகம், பல் அடுக்கு முப்பரிமாணத் தற்காப்பு (multi-layered ஓdefense-in-depth) முறையை மக்களின் தரவுப் பாதுகாப்பிற்காகப் பின்பற்றுகிறது என்பதில் பெருமை கொள்கிறேன். அரசு மற்றும் தனியார் துறைகளிடமிருந்து சிறந்த வழிமுறைகளைத் தெரிவு செய்து மக்களின் பதிவேடுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் காத்து வருகிறோம். நிர்ப்பந்தத்தின் பேரில் அல்லாது தன்னிச்சையாக மக்களை வரி செலுத்த ஊக்குவிக்கும் எங்களின் திட்டத் திற்கு அவர்களின் நம்பிக்கையே பிரதான மானது, அதை என்றும் நிலைநாட்டி வலுவடையச் செய்ய இடைவிடாது முயற்சிக் கின்றோம்.
தெ: உங்கள் பதவிக் காலத்தில் நீங்கள் நிறைவேற்ற விரும்பும் முக்கியமான திட்டங்கள் என்ன?
செ: எனக்கு முன் வந்தோரின் சாதனைகள், செயல்பாடுகளை அடித்தளமாகக் கொண்டு வரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை சேவை நோக்குடன் அளித்து எங்கள் துறையை மேலும் சிறக்கச் செய்ய வேண்டும் என்பதே எனது முக்கிய குறிக்கோளாகும். குறைந்த செலவில் வரி வசூலிப்பது, வரி ஏய்ப்பு/கணக்கில் வராத வருமானம் இவற்றால் மக்கள் செலுத்தும் வரித்தொகை அதிகரிக் காமல் பார்த்துக் கொள்வதும் எங்களின் முக்கியப் பணியாகும்.
கலிஃபோர்னியாவில் வருமானத் திற்குத் தக்கவாறு படிப்படியாக முன்னேறும் வரித் திரட்டுத் திட்டம் அமலில் உள்ளது. இம்மாநிலத்தின் முதுகெலும்பான சம்பள தாரர்களின் வரிப் பிடித்தங்கள், அவர்களின் வரி ஆவணங்களுடன் ஒப்பிடப்பட்டுப் பரிசீலிக்கப்படுகின்றன. இதுபோல், ஒப்பந்தப் பணியாளர்கள் (independent contractors) வருமான ஆவணங்கள் சமர்ப்பிப்பதை நடைமுறைப்படுத்தும் செயலமைப்போ, தணிக்கைச் சுவடோ அமலில் இல்லை. இவர் களின் கணக்கில் வராத சம்பளம்/வருமானம், வரி ஏய்ப்பு இவற்றால் இன்று 6.5 பில்லியன் டாலர் அளவிற்கு அரசிற்கு வரவேண்டிய வரித் தொகையில் இடைவெளி உள்ளது. இவ்வாறான வரி ஏய்ப்பின் தாக்கம், ஒழுங்காக வரி செலுத்து வோரையும் பாதிக்கின்றது. இந்த இடைவெளியை ஈடுகட்ட அவர்கள் 20 சதவிகிதம் அதிக வரி செலுத்தும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். இந்தச் சுமையைக் குறைப்பதும் எங்கள் தலையாய கடமையில் ஒன்றாகும்.
தெ: பிற மாநிலங்களை விடப் பெரியதும், செயலூக்கமுள்ளதுமானது கலிஃபோர்னி யாவின் பொருளாதாரம். ஆதலால், உங்களின் பொருளாதார நிலைப்பாடும், கொள்கைகளும் பிற மாநிலங்கள், மற்றும் நாட்டின் பொருளாதார நிர்வாகத்திற்கே வழிகாட்டுதலாய் அமையக்கூடும். இத்துணை முக்கியம் வாய்ந்த துறையை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள்?
செ: அரசு விதிக்கும் வரி என்பது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படும் ஒரு கருவியே. இந்தக் குறிக்கோளின் அடிப்படை யில், எங்கள் பணியைச் செயலாற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். மற்ற அரசுத் துறை ஊழியர்களைப் போல் எங்கள் நிர்வாக உறுப்பினர்களும் வரி செலுத்துவோரின் நேரடி பரிசோதனைக்கு உள்ளாகிறார்கள். மூன்றில் இரண்டு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். மற்றவர், மாநில ஆளுனரின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நிதி மந்திரியாவார். எங்கள் துறை அதன் உறுப்பினர்களின் பரந்த வர்த்தகம் மற்றும் நிதி சார்ந்த அனுபவத்தால், அரசின் வரி வருமானம் சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றிற்கு ஆலோசனைகள் அளித்துச் சிறந்த வகையில் பங்கேற்க முடிகிறது.
தெ: பன்னாட்டு மக்களும் பலவித கலாசாரங்களும் நிறைந்த கலிஃபோர்னியாவில், வரி திரட்டுவதிலும், மக்களுக்குப் பயிற்சியளிப்பதிலும் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
செ: பல நாடுகளிலிருந்தும் குடிபெயர்ந் தோரைச் சென்றடையும் விதமாக எங்களின் பயிற்சிகளை வடிவமைத்திருக்கின்றோம். வலைத்தளங்களின் வாயிலகாவும், சீன, கொரிய, வியட்நாமிய, இஸ்பானிய பிரசுரங்களின் மூலமாகவும் தகவல்களைப் பரப்புகிறோம். பன்மொழிகளில் வரி சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமளிக்க எங்கள் ஊழியர்கள் தேர்ச்சி பெற்றிருக் கிறார்கள். வரி சம்பந்தமான கருத்தரங்கு களையும் பல மொழிகளில் அன்றாடம் நடத்துகிறோம்.
தெ: பெரும்பான்மையான தொழில்கள், ஐந்து ஊழியர்களுக்கும் குறைவான சிறு தொழில்களாய் அமைந்திருக்கின்றன. அவர்களுக்கு வரி சம்பந்தமான விதிகளைப் பற்றி விளக்குவதிலும், அவர்களின் வரி விவகாரங்களை நெறிமுறைப் படுத்துவதிலும் உள்ள கஷ்டங்கள் என்ன, அவற்றை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?
செ: எங்கள் பேச்சாளர் குழு (Speakersஒ Bureau) தொகுப்புகளிலும், காட்சியளிப்பு களிலும், சிறு தொழில்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட வரி விலக்கு அமைப்புகள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகள், அவற்றிற் கான ஆலோசனைகள் இவற்றை விவரிக் கின்றோம். மற்ற அரசு இலாக்காக்களுடனும் இணைந்து, குடிமக்கள் வரி சம்பந்தமான தகவல்களைத் தடையின்றிப் பெற ஏற்பாடு செய்திருக்கிறோம். எங்கள் சேவை மையத்தை (California Tax Service Center - www.taxes.ca.gov) - குடிமக்கள், சிறுதொழில் செய்வோரின் வரி சார்ந்த கடமைகள், வரி செலுத்தும் முறை போன்றவற்றை விவரிக்கும் ஒருமுக இணைத்தளமாக உருவாக்கியுள்ளோம்.
தெ: குடிபெயர்ந்தோருக்கு இங்குள்ள வரி சம்பந்தமான சட்டங்களையும், விதிகளையும் புரிந்து கொள்வதிலும், பின்பற்றுவதிலும் சிரமம் இருக்கக்கூடும். தமிழ் மன்றம் போன்ற சமூக அமைப்புகள் அவர்களின் உறுப்பினர்களுக்கும், வரி நிர்வாகத்திற்கும் இதில் எவ்வாறு உதவ முடியும்?
செ: வரி சம்பந்தமான கல்வி மற்றும் பயிற்சி திட்டங்களை இதுவரை சென்றடையாத இடங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளோம். வரி வல்லுனர்கள், வரி செலுத்துவோர் குழுமங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை உருவாக்குகிறோம். அரசு வருமானத் துறையுடன் இணைந்து தாய் மொழி ஆங்கிலம் அல்லாத மக்களுக்கும், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும் வரி சம்பந்தமான விளக்கங்களை அளிக்கின்றோம். தமிழ் மன்றம் போன்ற அமைப்புகள் இவ்வாறான நிகழ்ச்சிகளிலும், எஃப்டிபியின் தன்னார்வ வருமான வரி உதவித் திட்டங்களிலும் (Volunteer Income Tax Assistance - VITA) பங்கேற்று அவர்கள் உறுப்பினர்களுக்கு வரி பற்றிய விவரங்களை எடுத்துரைக்க உதவலாம்.
தெ: உங்கள் துறை எந்த வகையான வரிகளை நிர்வகிக்கின்றது?
செ: தனிநபர் வருமான வரி மற்றும் தொழில் நிறுவனங்களின் வருமானம் மற்றும் வர்த்தக வரி போன்றவை எங்களால் நிர்வகிக்கப் படுகின்றன.
தெ: முன்கூட்டியே அறியப்படும் வரி சம்பந்தமான அடையாளக் குறிகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும், இவை எவ்வாறு அரசு இலாக்களின் திட்டங் களுக்கு உதவுகின்றன என்பதைப் பற்றியும் சிறிது விளக்குங்களேன்.
செ: வர்த்தக நெருக்கடி காலத்தில் குறையும் சொத்து வரி, வளர்ச்சி காலங்களில் அதிகரிக்கும் வருமான வரி போன்ற ஆதாரங்கள், வரி நிர்ணயப் போக்கு இவற்றின் அடிப்படையில் நிதியமைச் சகத்திற்கு முழு விவரங்கள் அடங்கிய தின அறிக்கையைச் சமர்ப்பிக்கின்றோம். இவ்வாராய்ச்சிகளை அவர்கள் மாநில வரவு-செலவு திட்டத்தை உருவாக்கப் பயன் படுத்துகின்றனர்.
தெ: எஃப்டிபி, சுயேச்சையாகச் செயல்படுகின்றதா அல்லது மற்றத் துறைகளுடன் இணைந்து, அரசு இயற்றும் சட்டதிட்டங்களை செயல்படுத்துகிறதா?
செ: சட்டமன்றம் மற்றும் அரசு நிர்வாகம் இயற்றும் சட்டதிட்டங்களை, எங்கள் நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலை ஒட்டி நடைமுறைப் படுத்துகிறோம். இக் குழு, வரி சம்பந்தமான பரிபாலனைகளைத் நெறிப்படுத்துவதற் கென்றே மூன்று உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் நிர்வாகம், அரசு வருமானத் துறை, சம உரிமைக் கழகம், வேலை விரிவாக்க நிர்வாகம் போன்ற அரசுத் துறைகளுடன் இணைந்து செயலாற்றுகின்றது; பிற அரசு மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து 220 மில்லியன் வருமான தஸ்தாவேஜுகளைத் தகவல் பரிமாற்ற உடன்படிக்கையின் பேரில் திரட்டுகிறது.
தெ: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வரி செலுத்தாமல் போவதால், பல மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது, அவர்கள் வரி செலுத்து வதற்கான வழிமுறைகள் இன்று இயற்றப்பட்டுள்ளனவா? அல்லது, எதிர்காலத்தில் அவற்றை நெறிமுறைப் படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்படுகின்றதா?
செ: இதற்கான வழிமுறைகள் இன்று நடைமுறையில் இல்லை. ஆயினும், இவர் களில் பலர் வரி செலுத்துவதாகத்தான் நாங்கள் அறிகிறோம். நம் மாநிலத்தில், 2006ம் ஆண்டு 13,713 டாலருக்கு அதிகமாக வருமானம் பெற்றவர்கள் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவோரில் 40 மில்லியன் பேருக்கு இங்கு அடையாளக் குறிப்பான் (taxpayer id) வழங்கப்பட்டுள்ளது. அது இல்லாதவர்கள், வரி செலுத்தும்போதோ அல்லது எங்களைத் தொடர்பு கொண்டாலோ அவர்களுக்கு அடையாள எண் வழங்குவோம். ஒன்பது-எண்ணிக்கை மத்திய வரி அடையாள எண் (Federal Individual Tax Number) உள்ளவர்கள், அதை உபயோகித்தும் வரி செலுத்தலாம். இவ்வாறான பல வசதி களைக் குடிமக்களுக்காக ஏற்படுத்தியுள்ளோம்.
தெ: கலிஃபோர்னியாவின் வருமான வரி மற்றும் வர்த்தக வரி விகிதாசாரம் நாட்டிலேயே மிக அதிகம் என்னும் கருத்து நிலவுகிறது. இங்கு, ஆண்டுதோறும் 42 பில்லியன் டாலர் வருமான வரியும், வர்த்தக நிறுவனங்களிலிருந்து 12 பில்லியன் டாலர் வரியும் வசூலிக்கப்படுகின்றனவே!
செ: குடிமக்கள் முயற்சியால் இங்கு சொத்து வரி அதிகரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் உண்டாகும் இழப்பை நிரப்ப, வருமானம், மற்றும் வர்த்தக வரியை ஏற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம். அமெரிக்கக் குடிமதிப்பு நிர்வாகம் (U.S. Census Bureau) மாநிலங்களை மொத்த வரித் தொகை, மற்றும் தனிநபர் வரித் தொகையின் அடிப்படையில் வரிசைப்படுத்தியிருக்கின்றது. கலிஃபோர்னியா மாகாணம், மற்ற மாநிலங் களுடன் ஒப்பிடும்போது மொத்த வரித் தொகையில் மிக அதிக இடைவெளியுடன் முதன்மையானதாகத் திகழ்கிறது - இதற்கான முக்கிய காரணம், இங்கு அதிகரித்து வரும் மக்கள் தொகையே. அதே சமயம், தனிநபர் வரித் தொகையில், ஒன்பதாவதாகத் திகழ்கிறோம்.
தெ: நம் குடிமக்களுக்கு எஃடிபி எந்த வகைகளில் சேவை செய்கின்றது, அவற்றை இன்னும் சிறக்க வைக்க எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள் என்னென்ன?
செ: மக்கள் சேவைக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பவள் நான். சட்ட விதிகள், கோட்பாடுகள், மேல்நிலை அதிகாரிகளின் பெயர்கள், தொலைபேசி எண்கள், ஏனைய முக்கிய தகவல்கள், பயன்பாடுகள் இவற்றைக் கணிணியில் தன்னியக்கம் (automate) செய்து இணையத்தில் வழங்கியுள்ளோம். சாதாரண வருமான வரி செலுத்தும் சம்பளதாரர்களின் சிரமங்களைக் குறைக்கத் தொடர்ந்து முயன்று வருகிறோம். இதற்கான எங்களின் இரண்டு-வருட வெள்ளோட்டத்தில் 20 சதவிகிதத் திற்கும் அதிகமானோர் பங்கேற்று ஆதர வளித்தனர். மேலும், பேச்சாளர் குழாம் (Speakers Bureau), பொதுமக்கள் விவகாரங் களைக் கவனிக்கும் அலுவலர்கள், தன்னார்வ வருமான வரி உதவித் திட்டங்கள், போன்ற வற்றின் மூலம் மக்களைச் சென்றடையும் பல திட்டங்களைச் சிறப்பாகச் செயலாற்றுகிறோம்.
தெ: வசூல் செலவுகள் கழிக்கப்பட்டபின் எஃடிபியின் நிகர இலாபம் என்ன? வரி விதிப்பதற்கான வருமான வரம்பை ஏற்றும் எண்ணம் உண்டா? வரி வசூலுக்கான அடிப்படை வருமான அளவை அதிகரித்தால், பலர் வருமான வரி வட்டத்திலுருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களிடம் புழங்கும் உபயோகச் செலவினங்களுக்கான வருவாய் அதிகரிக்கும், வரி நிர்வாகச் செலவுகளும் குறையும், பொருளாதாரம் சிறக்குமே?
செ: 2005-2006 வருமான ஆண்டிற்கான நிகர வசூல் 60.4 பில்லியன் டாலருக்கும் அதிகமாயிருந்தது. மொத்த வரவு-செலவு திட்டமான 708 மில்லியன் டாலரில், இதை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட செலவுக் கணக்கு 422 மில்லியன் டாலர் மட்டுமே. அரசும், சட்டசபையும் வரி விகித அதிகரிப்பைப் பற்றிப் பல்வேறான கருத்துக்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், சமீப காலமாக வரி செலுத்துவதற்கான வருமான வரம்பை, ஆரம்ப செயல்முறையின் மூலம் (initiative process) அதிகரிக்கும் திட்டம் உபயோகத் திலுள்ளது. உதாரணத்திற்கு, மனநல சேவைக்கான வரி ஒன்று, வரி செலுத்து வோரின் அங்கீகாரத்தின் பேரில் இயற்றப்பட்டுள்ளது. இது, 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானம் உள்ளோரின் வருமான வரிக்கான உச்ச வரம்பை 10.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
தெ: வீட்டு நிர்மாணம் அதிகரித்துக் கொண்டு வரும் இந்நாளில், வீடு கட்டுமானம், அபிவிருத்தி போன்றவற்றைப் பேணுதற்கான வரிச் சலுகைகள் அளிக்கப் படுகின்றனவா? குடிமக்களை வீடு கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் திட்டங்கள் இருக்கின்றனவா?
செ: பரவலான திட்டம் ஏதுமில்லை. ஆயினும், அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் வரிச் சலுகைகளின் அடிப்படையில் எங்கள் இலாகா மாநில அளவில் நிர்வகிக்கும் திட்டத்தில், வீட்டு சொந்தக்காரர்கள் மற்றும் வாடகைக்குக் குடியிருப்போர் - வயதானவர், ஊனமுற்றோர், பார்வையற்றவர்களாயிருப் பின், அவர்கள் கட்டும் வீட்டு வரியின் அடிப்படையில் அரசிடமிருந்து வருடாந்திர சலுகை அளிக்கப்படுகிறது.
தெ: கலிஃபோர்னியா போன்ற மாகாணங்களில் வரி செலுத்துவோரில் பெரும்பாலானோர் பிற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள். ஓய்வுகால ஊதியம் பெறுவதற்கான தகுதியை அவர்கள் அடையுமுன்பே இந்நாட்டை விட்டே திரும்பும் நிலைக்கு அவர்களில் பலர் தள்ளப்படுகிறார்கள். சமவாய்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு வரிக் கட்டணக் குறைப்பு போன்ற சலுகைகளை அளிக்கும் எண்ணம் உண்டா?
செ: குடிபெயர்ந்தோர் சார்ந்த இவ்வாறான பிரச்சினைகள் பலவற்றிற்குத் தீர்வு காண அமெரிக்க நாடாளுமன்றம் முயன்று கொண்டுதானிருக்கிறது.
உரையாடல்: வெங்கட் ராமகிருஷ்ணன், உமா வெங்கடராமன் |