இசை என் மூச்சு - இளம் இசை கலைஞர் சசிகிரண்
தனது இளையசகோதரர் கணேஷுடன் இணைந்து 'கர்நாட்டிகா சகோதரர்கள்' என்ற பெயரில் பல மேடை கச்சேரிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இளம் இசை கலைஞர் சசிகிரண், தற்போது www.karnatik.com எனும் இணையதளம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இசை ரசிகர்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். இசை பாரம்பரியத்தை பின் புலமாக கொண்ட இவர் இசையில் முனைவர் பட்டம் பெற்றவரும்கூட. இதுவரை சுமார் 3000 மேடைகள் கண்ட சசிகிரணை சமீபத்தில் சென்னையிலுள்ள நாரதகானா சபாவில் சந்தித்த போது இணையதளம் பற்றியும் அதன் மூலம் இசை ரசிகர்களுக்கு செய்து வரும் பல்வேறு அரிய சேவைகள் பற்றியும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

இணையத்தின் நோக்கம்

இன்று உலகெங்கும் வாழும் இசைப் பிரியர்களுக்கு - குறிப்பாக கர்நாடக இசைப் பிரியர்களுக்கு கர்நாடக இசையை எளிதில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ரொம்ப நாட்களாகவே எங்களுக்குள் இருந்தது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தோம். இது இன்டெர்நெட் உலகம். சுலபமாக இணையத்தின் மூலம் உலகில் எந்த மூலையிலிருந்தும் யாருடன் வேண்டு மானாலும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். இதனை கருத்தில் கொண்டு கர்நாடக இசையை இணையம் மூலமாக கொண்டு செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டோ ம். எங்கள் முயற்சியின் விளைவே 'கர்நாடிக்' என்ற இந்த இணையதளம். Voice Over IP என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன், உலகம் ழுழுவதும் உள்ள இசைப் பிரியர்கள் இன்றைக்கு உட்கார்ந்த இடத்திலேயே இசையை கற்றுக் கொள்வதற்கான முயற்சியை இந்த வலைதளம் மூலம் வழங்கியிருக்கிறோம்.

இசையை கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்தில் நல்ல குரு கிடைத்து, எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பது அரிது. அதுவும் வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு நல்ல குரு கிடைப்பது என்பது மிகவும் அரிது. இப்படிப் பட்டவர்களுக்கு எங்கள் இணையதளத்தின் மூலமாக நல்ல குருவை அவர்கள் இருக்கும் இடத்திலேயே கிடைக்க வழி வகை செய்கிறோம். மேலும் நன்கு பாடக் கூடியவர்களுக்கு கச்சேரிகள் செய்வதற்கான வாய்ப்புகளை அமைத்துக் கொடுப்பது மட்டுமல்லாமல், இசையையே அவர்கள் தங்கள் முழுநேர தொழிலாக அமைத்துக் கொள்வதற்கான வழிவகைகளையும் செய்து தருகிறோம்.

இணையத்தில் வகுப்புகள்

வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு வார இறுதிவிடுமுறை நாட்களில் இசை கற்றுக் கொள்வதற்கு வகுப்புகளுக்கு செல்ல வேண்டுமானால் குறைந்தது அவர்களுக்கு 4 அல்லது 5 மணி நேரமாவது தேவைப் படுகிறது. இதை கவனத்தில் கொண்டு அவர்கள் செளகரியத்திற்கேற்ப 24 மணி நேரத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்கள் இசையை கற்றுக் கொள்ளும் வகையில் வகுப்புகள் அமைத்திருக்கிறோம். ஒரு இசை வகுப்பு 45 நிமிடம் நடைபெறும். அதே நேரத்தில் இசையைத் தொழிலாக எடுத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிக நேரம் ஒதுக்கி பயிற்சிகளை அளிக்கிறோம்.

டிஜிட்டல் நூலகம்

டிஜிட்டல் நூலகம் ஒன்றை தற்போது உருவாக்கிக் கொண்டு வருகிறோம். இந்த டிஜிட்டல் நூலகத்தில் நூறு வருட பழமையான இசைகள் அனைத்தையும் கொண்டு வந்து, இதன் மூலம் இசை ஆர்வலர்கள் அனைவரும் பயனுற வேண்டும் என்பதற்கான முயற்சி இது.

ரசிகர் ஒருவர் தங்களுக்குப் பிடித்த பாடகர் அல்லது பாடகி பற்றிய விவரங்களை இந்த நூலகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இசை தட்டுகள் வாங்க நாம் கடைக்கு சென்றால் அங்கு அலமாரிகளில் பிரபல பாடகர்களின் இசைதட்டுகள் சுமார் ஐந்தாறுதான் அடுக்கி வைத்திருப்பார்கள். மற்றவையெல்லாம் நம் கண்களுக்கு தெரியாமல் உள்ளே வைத்திருப்பார்கள். உதாரணமாக எம்.எஸ் அம்மா அவர்கள் பாடிய பாடல்களில் ஐந்தாறு ரிக்கார்ட்ஸ்தான் அலமாரியில் இருக்கும். அவர் கச்சேரிகளில் பாடியது, பிற இடங்களில் பாடியது போன்றவைகள் வெளியில் தெரியாது. ஆனால் எங்கள் நூலகத்தில் எம்.எஸ் அவர்களின் எல்லாவிதமான பாடல்களையும் கேட்க முடியும்.

அதுபோல் சில பாடகர்கள் அதிக பிரபலம் அடைந்தவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். அந்த மாதிரி கலைஞர்களைப் பற்றிய விவரங்களையும் நாங்கள் document செய்து எங்கள் டிஜிட்டல் நூலகத்தில் மியூசிக் ஸ்டோ ர் போல் செய்திருக்கிறோம். இதன் மூலம் இசை ஆர்வலர்கள் அவர்களுக்கு வேண்டிய இசை கலைஞர்களின் பாடல்கள் - விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். டிஜிட்டல் நூலகம் மட்டுமல்லாமல் ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நிறைய theoretical விஷயங்களையும் செய்திருக்கிறோம்.

இதுதவிர 'Memberships of Library' என்ற ஒன்றை வைத்திருக்கிறோம். உறுப்பினர் களின் வீடுகளுக்கு புத்தகங்களை எடுத்துச் சென்று கொடுப்பதுபோல், நாங்களே உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு வேண்டிய குறுந்தகடுகளை வழங்குகிறோம். உறுப்பினர்கள் தங்களுக்கு வேண்டிய குறுந்தகடுகளை வாங்கி கேட்டு விட்டு திருப்பி தருவதற்கு இது ஒரு வாய்ப்பாகும். இதன் மூலம் செலவுகளையும் கட்டுப்படுத்த முடியும். இசை ரசிகர் ஒருவருக்கு பாலமுரளிகிருஷ்ணாவின் பாடல்கள் அனைத்தும் தேவை என்கிற பட்சத்தில் அவரால் பாலமுரளிகிருஷ்ணா வின் அத்தனை பாடல்களையும் பணம் கொடுத்து வாங்க முடியாத சூழல் இருக்கும். அவரது பட்ஜெட்டிற்கு அது சாத்தியமாகாது. அப்படிப்பட்டவர் எங்களின் நடமாடும் நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் அவரது வீட்டிற்கு நாங்கள் குறுந்தகடுகளுடன் செல்வோம். அவருக்கு வேண்டிய பாடகரின் குறுந்தகடுகளை வாங்கி கேட்டுவிட்டு அவர் திருப்பி தரலாம். இதன் மூலம் அவருக்கு அதிக செலவுகளும் ஏற்படாது. அவர் விரும்பிய பாடல்களையும் கேட்க முடிகிறது.

குருகுலம் முறையில் இசை வகுப்புகள்

குருகுலம் என்கிற திட்ட அடிப்படையில் நிரந்தரமான வகுப்புகளை நடத்துகிறோம். இந்த நடமாடும் குருகுல வகுப்புகள் சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்னும் பல இடங்களில் இத்தகைய வகுப்புகள் தொடங்கவிருக்கிறோம். மேலும் பள்ளிக் கூடங்களில் 'பரிட்சையான்' என்கிற திட்ட அடிப்படையில் 'இசை அறிதல்' (Music Acquaintance) நிகழ்ச்சிகளையும் செய்கிறோம்.

சென்னையில் பல இடங்களில் எங்கள் குருகுலம் இருக்கிறது. இசை கற்க விரும்பும் மாணவர்களை வகுப்புகளுக்கு அழைத்து வருவது மட்டுமல்லாமல் அவர்களை மறுபடியும் அவர்கள் வீட்டில் கொண்டு விட்டுவருவதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். திறமையான ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னையில் தி.நகர், அடையாறு, அண்ணாநகர், வேளச்சேரி ஆகிய நான்கு இடங்களில் இத்தகைய நடமாடும் குருகுல வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுபோல் பெங்களூரிலும் இருக்கிறது. மேலும் இத்தகைய வகுப்புகளை விரிவுபடுத்துவ தற்கான முயற்சிகளில் மெதுவாக ஈடுபட்டு கொண்டு வருகிறோம். இதனை உலகம் முழுவதற்கும் மெல்ல மெல்ல எடுத்துக் கொண்டு செல்லும் எண்ணமும் இருக்கிறது.

சிறப்புப் பாடங்கள்

Voice Management and Concept Mangement என்ற இரண்டு சிறப்புப் பாடங்களை தற்போது தொடங்கியிருக்கிறோம். Voice Management-ஐ நாங்கள்தான் முதன்முதலாக முறையாக துவக்கி நடத்திக் கொண்டு வருகிறோம். இதன் மூலம் ஒரு பாடகர் தன்னுடைய குரல் வளத்தை எப்படி மேலும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும், அதனை எப்படி அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டூடியோவில் எப்படி பாட வேண்டும். கச்சேரியில் எப்படி மைக்கை உபயோகப்படுத்த வேண்டும். ஜலதோஷம் போன்றவை ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது போன்ற சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல், சில சின்ன பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்து, குரலில் இத்தகைய பிரச்சனை களை வராமல் தடுப்பதற்கான வழிமுறை களையும் சொல்லி கொடுக்கிறோம். இத்தகைய பயிற்சி வகுப்புகள் சினிமாவில் பின்னணி பாடுகின்ற பாடகர்களுக்கும், கச்சேரிகள் செய்கிற கர்நாடக இசை கலைஞர்களுக்கு மிகவும் உபயோகரமாக இருக்கும். அதுபோல் மாணவர்களுக்கும் இத்தகைய பயிற்சிகள் உபயோகமானதாக இருக்கும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் 'மிஸ்டர் வாய்ஸ்' மற்றும் 'மிஸ் வாய்ஸ்' என்ற ஓர் இசைப்போட்டியை நடத்துகிறோம். இப்போட்டி ஒருவரின் குரல்வளத்தை மேலும் மெருகேற்ற செய்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு தேர்வு ஒன்றினை வைக்கிறோம். சுமார் மூன்று மாதங்களுக்கு இப்போட்டி நடக்கும். கடுமையான இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நல்ல ஓர் எதிர்காலத்தையும் அமைத்துக் கொடுக்கிறோம்.

அதுபோல் 'கான்சப்ட் மேனேஜ்மெண்ட்' என்ற பாடத்தில் நிகழ்ச்சியை எப்படி வழங்க வேண்டும். எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு எந்த மாதிரி பாடவேண்டும். நிகழ்ச்சிகளில் பாடகர்கள் பாடல்களை வழங்கும் விதம், அதனை எப்படி பார்வையாளர்கள் - ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மற்றும் அதற்கான நுணுக்கங்கள் பற்றியும் அவர்களுக்கு சொல்லி கொடுக்கிறோம். இதற்காக சிறந்த பாடகர்களை அழைத்து, அவர்கள் மூலம் பயிற்சியளிக்க வைக்கிறோம். மேலும் நான்கு அல்லது ஐந்து கச்சேரிகளை மாணவர்களுக்கு நாங்களே கொடுத்து பாடவைத்து, அதில் உள்ள குறை, நிறைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களின் பாடும் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள உதவுகிறோம். இத்தகைய பயிற்சி பாடங்கள் இரண்டு வருடம் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 'Global Talent Hub' என்று வைத்து அதில் அவர்களுக்கு ஆல்பம் செய்வதற்கோ மற்றும் அவர்களுக்கு கச்சேரி வாய்ப்புகள் அமைத்து கொடுப்பதோ அல்லது நன்றாக பாடுபவர் களுக்கு வெளிநாடு பயணமோ நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். அந்த நாடுகளிலும் அவர்கள் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் கச்சேரிகளை ஏற்பாடு செய்து தருகிறோம். சுமார் இரண்டு வருடங்களுக்கு அவரை எங்கள் மேற்பார்வையில் எடுத்துக் கொண்டு வளர்த்துவிடுகிறோம்.

இசை நிகழ்ச்சிகள்

நிறைய இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். 'பாரத் சங்கீத உற்சவம்' வருடா வருடம் நடத்துகிறோம். இதில் வட இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்கள், தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் பிரபல மான கலைஞர்கள் என்று எல்லோரையும் பங்கேற்க வைக்கிறோம். இந்த விழாவில் வளரும் கலைஞர்களுக்கும் நேரம் (முக்கிய நிகழ்ச்சிக்கு முன்) ஒதுக்கி வைத்துக் கொடுக்கிறோம். விழா காலத்தில் காலை நேரங்களில் கருத்து விவாதங்கள் நடை பெறுகின்றன. அதுபோல் ரசிகர்களுக்கான போட்டி ஒன்றை நடத்துகிறோம். மேலும் கச்சேரிகள் ஒவ்வொன்றையும் விமர்சனம் எழுதுபவர்களுக்கும், கச்சேரி பற்றிய கட்டுரை எழுதுபவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கு கிறோம். அதுபோல் எல்லா கச்சேரிகளையும் முழுவதுமாக கேட்பவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்குகிறோம். 'ரசிகா அவார்ட்ஸ்' என்றே அதற்கு பெயர் வைத்திருக்கிறோம். எல்லா சபாக்களும் இசை கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்குவது போல் நாங்கள் ரசிகர் களுக்கு பரிசுகள் வழங்குகிறோம். இதன் மூலம் ரசிகர்களை நாங்கள் ஊக்கப் படுத்துகிறோம். சுமார் ஐந்து வருடங்களாக இந்த பரிசு வழங்கி வருகிறோம்.

இது தவிர ராக அனுபவம், சாகித்ய அனுபவம், என்று நிறைய நிகழ்ச்சிகள் செய்கிறோம். மேலும் ரசிகப்ரியா என்ற ஓர் இசைக்குழுவின் மூலம் கர்நாடக இசை மற்றும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு வரும் சினிமா பாடல்களை கொண்டு பாமர மக்களுக்கும் எப்படி கர்நாடக இசையை கேட்கும் ஆர்வம் வேண்டும் என்று சொல்லி கொடுக்கிறோம். இவற்றை கல்யாண கச்சேரிகளில் செய்கிறோம். அது தவிர பள்ளி, கல்லூரிகளில் இதற்கான செயல் விளக்கங்கள் செய்கிறோம். முக்கியமாக இன்றைய இளம் தலைமுறைகளுக்கும் நம் இசை சென்று சேர வேண்டும் என்பதற்கு நாங்கள் எடுத்த முயற்சி இவை எனலாம்.

செல்போன்களில் கர்நாடக இசை ஒலி

ரிங் டியூன்ஸ், காலிங் டியூன்ஸ் போன்ற வைகள் கர்நாடக இசையில் வரவேண்டும் என்றெண்ணி 'ஏர்டெல்' நிறுவனத்துடன் சேர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கிறோம். ஏற்கெனவே 'sound buzz' என்னும் ஒரு குரூப்பிற்கு நாங்கள் கொடுத்து அதன் மூலம் நோக்கியா, ஹட்ச் போன்ற 14 சர்வீஸ் providersக்கும் போய் சேருகிற அளவிற்கு கொடுத்து வந்திருக்கிறோம். கர்நாட்டிக் ரிங் டியூன்ஸ் இன் ஏர்டெல் 7477 என்கிற நம்பரை பயன்படுத்தினால் டியூன்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதில் வெறும் ரிங்டியூன்ஸ் மட்டுமல்லாமல் முழுமையான பாட்டுகளையே - MP3 பாட்டுகளையே டவுன்லோட் செய்து கொள்வதற்கு ஓர் வாய்ப்பு கிடைக்கிறது.

நடமாடும் இசை கடைகள்

இதுதவிர நடமாடும் இசை கடைகள் (mobile music store) எனும் புதுமையான திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் கடைகளுக்கு சென்று தங்களுக்கான குறுந்தகட்டை தேர்வு செய்வதற்கான நேரம் கிடைப்பதில்லை. இத்தகைய நுகர்வோர்களை நாங்களே தேடிச் செல்கிறோம். அவர்களுக்கு வேண்டிய குறுந்தகடுகளை வழங்குகிறோம். இதற்காக மக்கள் அதிகம் நடமாடும் கடற்கரைப் பகுதி, உணவகங்களை அருகில், கோயில்கள் அருகாமையில் இப்படி மக்கள் கூடுகின்ற இடத்தில் நாங்களே இந்த வண்டியை எடுத்துச் சென்று அவர்களுக்கு வேண்டிய, தேவையான குறுந்தகடுகளை வழங்குகிறோம்.

அதுபோல் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் இதுபோன்ற கடைகளே இல்லாமல் இருக்கும். அங்குள்ள இசை ரசிகர்கள் குறுந்தகடுகளை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் அந்தப் பகுதியில் கடைகள் இருக்காது. அப்படிப்பட்ட இடங் களுக்கும் எங்கள் நடமாடும் வண்டிகளுடன் சென்று அவர்களுக்கு தேவையான குறுந் தகடுகளை தருகிறோம்.

மன அழுத்தங்களை போக்கும் இசை!

இன்று கால்சென்டர் போன்ற நிறுவனங் களில் பணிப்புரிபவர்களின் அதிகப்படியான டென்ஷன்களை குறைப்பதற்கான பல்வேறு திட்டங்களை இசையின் மூலம் வழங்கு கிறோம். சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரிடையாக நாங்களே சென்று இத்தகைய பயிற்சிகளை வழங்குகிறோம்.

உதாரணமாக ஒருவருக்கு திக்குவாய் இருக்கிறது என்றால் அவருக்கு உச்சரிப்பிற் கான பயிற்சிகளை இசையின் மூலமாக அளிக்கிறோம். இதே speach therophyயிடம் திக்குவாய்க்காக போனோம் என்றால் அவர்கள் மெதுவாக பேசுங்கள் என்பார்கள். மெதுவாக பேசு என்று சொன்னால் அது சரியில்லை. அது முடிவு ஆகாது. ஆக திக்கு வாய் உள்ள ஒருவர் திக்காமல் இருப்பதற் கான வழிமுறையான தன்னம்பிக்கையை அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். அதற்கு என்னசெய்யவேண்டும் என்றால் அவர்களுக்கு உச்சரிப்பில் கொஞ்சம் கஷ்டமானதை அவர்களுக்கு கொடுத்தால் தான் - அந்த வார்த்தையை சொல்ல சொல்ல அவர்களுக்கு அந்த திக்கு போய்விடும். இந்தப் பயிற்சியை நாங்கள் இசையின் மூலமாகவே அளிக்கிறோம். சைக்காலிஜிக்கலாக அவர் களுக்கு ஏற்பட்ட அந்த திக்குவாயை இசை மூலமாக நாங்கள் மாற்றிக் கொடுக்கிறோம்.

அதுபோல் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மூளை மிகவும் மெதுவாக வேலை செய்யும். அவர்களுக்கு அதிகம் குழந்தைத்தனமே இருக்கும். ஆனால் கல்விக்குத்தான் அது சரியாகவராதே தவிர இசை போன்றவைகள் அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் சட்டென்று பிடித்துக் கொள்வார்கள். இத்தகைய குழந்தை களுக்காக சில சிறப்பு பயிற்சிகளையெல்லாம் நாங்கள் கொடுக்கிறோம்.

தொடர்ந்து கணிணியில் அதிக நேரம் வேலை செய்யும் இன்றைய மென்பொருள் நிறுவன ஊழியர்கள் உதாரணமாக - இன்போசியஸ், சத்யம் போன்ற நிறுவனங் களில் பணிப்புரியும் ஊழியர்களின் மனம் எப்போதும் டென்ஷனிலே இருக்கும்.. அதனை முதலில் குறைக்க வேண்டும். இரண்டாவதாக உலகம் முழுவதுமே அமைதி என்பது ஒரு கஷ்டமான விஷயமாகி போய்விட்டது. அந்த அமைதியை தேடி நாம் போய்க் கொண்டிருக்கிறோம். ஆனால் ரொம்பவும் டென்ஷன் ஆகிவிட்டால் இன்றைக்கு இருக்கும் ஒரே வடிகால் டிஸ்கோ போன்ற அரங்குகளுக்கு செல்வதுதான் என்று நிறைய பேர் இத்தகை இடங்களை தேடிச் செல்கிறார்கள். ஆனால் இங்கேல்லாம் போனால் அமைதி கிடைக்காது. அங்கெல் லாம் இரைச்சலான இசைதான் இருக்கிறது. ரொம்பவும் அமைதியான இசை கிடையாது. அமைதியான இசை இருந்தால்தான் டென்ஷன் குறையும். இத்தகைய இடங் களுக்கு சென்றால் டென்ஷன் குறைவதற்கு பதில் அதிகம்தான் ஆகும். இதனை அவர்களுக்கு புரியவைப்பதற்கு கொஞ்சம் அவகாசம் வேண்டியிருக்கிறது. இதுபோல் தியானம் சில பேர் செய்கின்றனர். தியானம் - யோகா இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. யோகா என்று எடுத்துக் கொண்டால் அது ரொம்பவும் சீரியஸான சப்ஜெக்ட். அதற்கு நிறைய Concentration வேண்டும். ஆனால் இசைக்கு அந்தளவிற்கு கான்சன்ட்ரஷன் வேண்டாம்.. நாம் ஒய்வு எடுத்துக் கொண்டே கேட்கலாம். நீங்கள் அமைதியாக உட்கார்ந்து இசையை கேட்டீர்கள் என்றாலே அந்த இசை உங்களை வந்தடையும்.

இசை என் மூச்சு

இசைக்கென்று தனித்தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இசை என்பது எங்களுடைய மூச்சு. என்னுடைய மூச்சு இருக்கும் வரை இசை இருக்கப் போகிறது. இசை என்பதை பல வடிவத்தில் கொண்டு வந்து பலபேருக்கு சேருவதற்கான சின்ன முயற்சிதான் இது. பல பேருக்கு இசை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பாடுகிறோம். நாம் அனுபவித்ததை பலபேர் அனுபவிக்க வேண்டும். இசை ரசனையை பலபேருக்குள் உருவாக்க வேண்டும். அதனை எல்லோரும் ரசிக்க வேண்டும். அந்த ஒரு குறிக்கோள்தான் முக்கியம்.

இது நன்றாக வரவேண்டும். இந்த இசை கேட்க நன்றாக இருக்கிறதே என்கிற பிரம்பில்தான் கற்றுக் கொள்கிறோம். அந்த பிரம்மிப்பு குறிப்பிட்ட நிலைக்கு பிறகு நமக்கு கிடைத்த இந்த சந்தோஷம் பலபேருக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரு உணர்வு நமக்கு வரத் தொடங்கிவிட்டால் நாம் அதை செயல்படுத்த முயற்சிகள் செய்வோம். என்னைப் பொறுத்தவரை என் லட்சியம் என்னவென்றால் இசை மூலமாக உலகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். உலகத்தில் சந்தோஷத்தை பார்க்க வேண்டும். இன்றைக்கு இயற்கையான சந்தோஷத்தை எல்லோரும் நிறையவே இழந்திருக்கிறோம். எல்லோர் முகத்திலுமே ஒரு இறுக்கம்தான் அதிகம் காணப்படுகிறது.

இசை என்பது கல்லையும் உருக்கக்கூடியது என்பது என்னைப் பொறுத்தவரை உண்மை. அது பொய்யல்ல என்பதை என்னால் நிரூபிக்க முடியும். இன்றைக்கு இருக்கின்ற காலகட்டத்தில் இயற்கையைகூட இசையின் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆக நல்ல இசை இயற்கையோடு சேர்ந்து போகும்பட்சத்தில் இன்று இருக்கின்ற சுனாமியோ மற்றவை களையோ தடுக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. இதை நான் முழுமையாக நம்புகிறேன். சாதாரணமாக இங்கு இதை நான் சொல்லவில்லை. என் மூச்சு இருக்கும் வரை இதனை எந்தளவிற்கு செய்யமுடியுமோ அந்தளவிற்கு செய்யப் போகிறேன்.

பிரபலங்களின் ஆதரவும், உறுதுணையும்...

இத்தகைய பணிகளுக்கு என்னுடன் கடினமாக உழைப்பதற்கு சில பேர் இருக்கிறார்கள். இந்த கர்நாடிக்கா தளத்தைப் பொறுத்தவரை கர்நாடக இசை கலைஞர் செளமியா, இராமநாதன் நாராயணன், நான், ஜெயஸ்ரீ, அசோன் போன்றோர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் நிறையப் பேரின் ஆதரவும் உழைப்பும் முக்கியமானதாகும். இவர்களைத் தவிர பிரபல கர்நாடக இசை பாடகர் பெரியவர் செம்மங்குடி மாமா, டி.எம்.கிருஷ்ணன், உமையாள்புரம் சிவராமன், சேஷகோபாலன் போன்றவர் களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. இவர்களின் ஆதரவும், உறுதுணையும் பலமாக இருப்பதனால் எங்களின் இந்த முயற்சி நல்லவிதமாக எல்லோரையும் போய் சேரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நாங்கள் பிரிட்டானியா விருது வாங்கியிருக் கோம். இதில் சந்தோஷப்படும் விஷயம் என்னவென்றால் கர்நாட்டிக் டாட் காம் அதிகம் பிரபலமடைவதைவிட கர்நாடக சங்கீதம் அதிகளவில் மக்களை சென்றடைந் திருக்கிறது என்பதுதான். இதற்கு அணில் மாதிரி நாங்கள் சிறிய முயற்சி எடுத்திருக் கிறோம் என்பதில் எங்களுக்கு திருப்தியே.

நான் சசிகிரண்

நான் பிறந்தது ஓர் இசை குடும்பம் என்பதால் எனக்குள் இசை ஆர்வம் இருந்தது. கோட்டுவாத்திய கலைஞர் நாராயணன் ஐய்யங்கார் என்னுடைய தாத்தா ஆவார். அப்பா நரசிம்மன் ஒரு சித்திர வீணா கலைஞர். இவர்கள் எல்லாருமே சித்திர வீணாவில் இருந்தார்கள். ரவிகிரண் என்னுடைய மூத்த சகோதரர். அவரும் ஒரு பிரபலமான சித்திர வீணா இசைக் கலைஞர். இவர்கள் எல்லோருமே இசையில் இருந்து நல்ல நிலையில் இருக்கிறவர்கள். என்னுடைய மூன்று வயது முதலே நான் ராகங்கள் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந் தேன். பின்பு ஒன்பதாவது வயதில் இருந்து பாட ஆரம்பித்தேன். பாட்டில் சாகித்யமும் இருக்கிறது. சுருதியும் இருக்கிறது. அதனால் எனக்கு பாட்டில் அதிக ஈடுபாடு மற்றும் ரசனை ஏற்பட்டது. நம் உடல் முழுவதும் அதில் அடங்கி இருக்கிறதால் எனக்கு பாட்டு அதிக கவர்ச்சியாக இருந்தது. இதன் காரணமாக நான் ஒரு பாடகனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பாட்டு, ஆன்மீகம் மற்றும் தத்துவங்கள் போன்றவை களை வாழ்வில் தெரிந்து கொள்வதற்கு உறுதுணையாக இருப்பதாக நினைக்கிறேன். இன்று உலகம் முழுவதும் பாடுவதற்கான அதிர்ஷ்டமும் எனக்கு கிடைத்திருக்கிறது. சுமார் 3000 கச்சேரிகள் இதுவரை செய்திருக்கிறேன்.

சமீபத்தில் உலக அமைதிக்காக தொடர்ந்து 24 மணி நேரம் கச்சேரி செய்தோம். 24 மணிநேரமும் இசையோடுதான் வாழ்கிறேன், இசையோடுதான் வாழ்வேன்.

சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: சிவக்குமார் நடராஜன்

© TamilOnline.com