வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் - மார்கழி நாடக விழா
ஒரே நாளில் மூன்று நாடகங்களா? மூன்றும் சிந்தனையைத் தூண்டும் "சீரியஸ்" நாடகங்களா? முடியுமா? மக்கள் வருவார்களா? என்ற கேள்விகளுக்கு 'முடியும்' என்று காட்டியது சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம். டிசம்பர் 11, 2004 அன்று, சான் ஹோசே எவர்கிரீன் பள்ளிக் கலையரங்கத்தில் நடந்த 'மார்கழி நாடக விழா' வில் பிற்பகல் 1 மணி முதல் இரவு 7.30 வரை தொடர்ந்து மூன்று நாடகங்கள் இடம் பெற்றன.

முதலில் பாகீரதி சேஷப்பன் எழுதி இயக்கிய 'சக்தி'. ஒரு புறம் அபிராமியே கதி என்றிருக்கும் பட்டர் வாழ்க்கை, மறுபுறம் தனது கம்பெனியே கதியாக அதற்கு உயிரூட்ட முயலும் ஒரு அமெரிக்கத் தமிழ்த் தொழிலதிபரின் தேடல்கள். இருப்பது அமெரிக்கா என்றாலும் இந்தியா முழுதும் நெருப்புப் பிடிக்காத பள்ளி அமைப்பதே கனவெனத் திரியும் இன்னொரு இளைஞன். இப்படிக் காட்சிகள் மாறிமாறி வரும் சக்தி அபிராமி பட்டர் வாழ்க்கையை அமெரிக்கத் தமிழ் இளைஞர்களின் கனவோடு ஒப்பிடும் ஓர் அரிய படைப்பு.

பிளாஸ்டிக் கழிவிலிருந்து மின்சக்தி தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்த கம்பெனிக்குக் கூடிய விரைவில் நிதி பெறாவிட்டால், குரு நடத்தும் கம்பெனியின் கதவுகள் அடைபடும், கனவுகள் உடைபடும். அபிராமியே கதி என்று அமர்ந்திருக்கும் பட்டரைச் சோதித்த மன்னர் சரபோஜியிடம் பட்டர் அமாவாசை தினத்தைப் பௌர்ணமி என்று தவறாகக் கூறி விடுகிறார். கோவில் குருக்களும் பூக்காரியும் தவறை அவருக்கு உணர்த்த, தவறுக்குக் காரணம் அபிராமியே, அதை அபிராமியே சரி செய்யவேண்டும் என்று அக்கினிமேல் அமர்ந்து அபிராமி மேல் அந்தாதி பாடுகிறார். அபிராமியும் அவர் முன் பிரம்மாண்டமாக அருளி முழுமதி தோன்றச் செய்கிறார்.

எப்படிப் அபிராமி பட்டருக்கு அமாவாசை நீக்கி முழுமதி தந்த தெய்வமாக அபிராமி தோன்றுகிறாரோ, அப்படித் தொழில் முனைவோர் கனவுக்கு முழுநிதி தந்த தேவதையாகிறார் மாறன். நாடகத்தில், தனது கம்பெனிக்கான எதிர்காலக் கனவுகளோடு மட்டுமே திரியும் அவர் மட்டுமல்ல, அமெரிக்காவில் இருந்தாலும் தொண்டு மனப்பான்மையோடு இந்தியா முழுதும் நெருப்பே பிடிக்காத பள்ளிகள் அமைப்பதே கனவென உழைக்கும் ராமுவும், காலத்திற்கேற்ப tramway என்ற MLM அமைப்பு, bodyshopping கம்பெனி, outsourcing கம்பெனி என்று கோடீஸ்வரக் கனவோடு மாறி மாறி அலையும் சோம்ஸ் இவர்கள் கூட அபிராமி பட்டர்கள் தான்.

பட்டராக நடித்த கணேஷ்பாபு உண்மையிலேயே அபிராமி பட்டராகவே மாறி விட்டார். உடலைக்குறுக்கி அம்மனை உருக்கமாகத் துதிப்பதிலும், தன் தவறறிந்து துடிக்கும் காட்சிகளிலும் அருமையாக நடித்தார். அம்மன் தன் தோட்டை எறிந்தவுடன் மேடையில் முழு நிலவு தோன்றும் காட்சி பார்வையாளர்களிடம் பிரமிப்பையும், பெருத்த வரவேற்பையும் ஏற்படுத்தியது. மக்கள் பலரின் வாழ்வில் முக்கியமாக விளங்கும் ஆன்மிகச் சக்தியை தொழில்முனைவோரின் தன்னம்பிக்கை யோடு பிணைத்திருந்தது சுவையான கோணம். முயற்சியும், நம்பிக்கையும் இருந்தால் அமாவாசை அன்று கூட முழு நிலவு சாத்தியமே என்கிறது 'சக்தி'.

இரண்டாவதாக, தஞ்சை நாடகக் குழு வழங்கிய இந்திரா பார்த்தசாரதியின் 'நந்தன் கதை'. தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) 2003 மாநாட்டில் அமெரிக்காவில் அரங்கேறிய நாடகத்தின் ஒளிப்பதிவு. ஒரு சிறந்த நாடகாசிரியரின் நாடகத்தைத் தொழில் முறைக் கலைஞர்கள் இசை, கூத்தோடு ஆடிப்பாடி நடிப்பதை அரங்கத்திரையில் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். சேக்கிழாரின் திருநாளைப்போவார் புராணம் அல்ல இது. கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரத்தின் அடிப்படையில் எழுந்தாலும் "இது நந்தன் கதைதான்; நந்தனார் கதை அல்ல" என்ற எச்சரிக்கையுடன் தொடங்கி "புரட்சிக் காரனை அழிக்கச் சிறந்த வழி அவனைக் கடவுளாக்கிக் கொன்று விடுவதுதான்" என்ற கருத்தை வலியுறுத்துகிறது இந்த நாடகம்.

இ.பா. வின் நாடகத்தைப் படித்தவர்கள், இது நந்தனுக்கும் ஆதிக்கச் சாதிகளுக்கும் நடக்கும் போரில் ஆதிக்கச் சாதிகளின் சூழ்ச்சிக்கு இரையான அசட்டு நந்தனின் கதை என்ற மட்டில் ஒதுக்கக்கூடும். இ.பா.வே குறிப்பிட்டது போல இது படிப்பதற்காக எழுதப்பட்ட நாடகமல்ல, மேடைக்கென்றே எழுதியது. எழுதியதை விடக் கூடுதலான தாக்கம் நிகழ்த்திய நாடகத்துக்கு உண்டு. நாடகம் தொடங்கும் போதே அதைக் காண்கிறோம். ஒரு நொண்டி வழிகாட்ட, ஒரு குருட்டுப்பெண் "கண்ணுள்ள மனுசவுங்க கதையும் நானும் சொல்லப் போறேன்" என்று தாலாட்டுப் பாடிக்கொண்டே நமக்குக் கதை சொல்ல வருகிறார். சமுதாயப் படிநிலைகளால் ஊனமுற்றவர்களைப் பற்றிய கதையைச் சொல்லும் இந்தக் கண்ணோட்டம் இயக்குநர் ராமசாமியுடையது.

சமூக விளிம்புகளில் வாழும் சிலர் தங்கள் பண்பாட்டைத் துறந்து ஆதிக்கச் சமுதாயத்தின் அழகியலின்பால் ஈர்க்கப்பட்டு, சமுதாயப் பெருநீரோட்டத்தில் தம்மைப் பிணைத்துக் கொள்ள முயற்சிப்பது இயல்பு. அந்த முயற்சிகளை ஆதிக்கக் குழுக்கள் புறக்கணிப்பது வழக்கமே. இந்தப் போராட்டத்தை வெறும் வசனங்களால் சித்தரிப்பதை விட, கலாச்சார மோதல்களால் சித்தரிப்பது இந்த நாடகத்தின் சிறப்பு. நாட்டுப்புறக்கலைக்கும் மரபுக்கலைக்கும் உள்ள போட்டிகள் நிகழ்கலையின் உச்சத்தைத் தொட்டு விடுகின்றன. நாடகத்தின் முடிவில் பரதத்துக்கும் பறைக்கும் உள்ள போரில் நாம் எந்தக் கட்சி என்று கேட்பவர்களை விட, ஏன் இந்த இரண்டு கலைகளும் எனக்குச் சொந்தமாய் இருக்கக்கூடாது என்று முடிவுக்கு வருபவர்கள்தாம் கூடுதலாய் இருப்பார்கள். அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது தான் ஏன் சிலர் மட்டும் ஒதுக்கப்பட்டவர்கள் என்ற கேள்வியின் ஆழம் உள்ளத்தில் தைக்கிறது. "எல்லாம் வசமாகும், எதிர்காலம் நமதாகும், ஒண்ணா நிக்கும் காலம் வரும், உறவு கொள்ளும் நேரம் வரும்" என்ற குருட்டுப் பெண்ணின் நம்பிக்கைப் பாடலோடு நாடகம் நிறைவு பெறுகிறது.

இறுதியாக, பாலாஜி ஸ்ரீநிவாசன் இயக்கி, பாரதி நாடக மன்றம் வழங்கிய 'எண்ணங்கள்' (www.dhool.com/ennangal). நியூயார்க் க்வீன்ஸ் கல்லூரிநாடகப் பேராசிரியர் ஐரா ஹாப்ட்மான் எழுதிய 'பார்ட்டிஷன்' என்னும் ஆங்கில மேடை நாடகத்தின் உரிமையை வாங்கித் தமிழில் பெயர்த்து, அரங்கேற்றி யிருக்கிறார் பாலாஜி. இது உண்மையைப் பற்றித் துளியும் கவலைப்படாத கற்பனை நாடகம். இது ஸ்ரீநிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாறோ அல்லது கணிதத்தில் அவர் செய்த சாதனைகள் பற்றியதோ அல்ல. ஓவல்டின்னில் மாமிசம் இருந்ததால் தான் தற்கொலை செய்ய முயன்றதாய் ராமானுஜன் கூறுவதாகட்டும்; நாமகிரி அம்மனே தன் கனவில் தேற்றங்கள் கொடுத்ததாக நம்பியவர் ராமானுஜன் என்ற நூலைப் பிடித்துக் கொண்டு நாமகிரித் தாயாரையே ஒரு பாத்திரமாகக் கயிறு திரிப்பதிலாகட்டும்; ·பெர்மாவின் இறுதித் தேற்றத்தை நிரூபிக்க ராமானுஜன் முயன்றதாகக் கதை கட்டுவதிலாகட்டும்; மரபிலக்கியப் பேராசிரியர் எல்லிங்டன் என்ற கற்பனைப் பாத்திரம் ஆகட்டும்; எல்லாமே ராமானுஜன், ஹார்டி பாத்திரங்களின் சிக்கலான உணர்வு களையும், உறவுகளையும் பற்றி மேற்கத்தியக் கோணத்தில் அணுகும் உத்திகள்.

நாடகாசிரியர் தம் மேலைநாட்டுப் பின்னணியில், நாமகிரி அம்மனைச் சில சமயம் ஒரு கிரேக்க மூசாத் தேவதைபோல், சில சமயம் ராமானுஜனின் அம்மா போல் சித்தரிக்கிறார். அமெரிக்கர்களுக்கே உரிய பாணியில் ·பிரெஞ்சுக் கணித மேதை ·பெர்மாவையும் கோமாளியாகச் சித்தரித்துச் சீண்டியிருக்கிறார். ராமானுஜன் ஓர் அசட்டுப் பிராம்மணனுக்கும் அறிவு ஜீவிக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பவன். எல்லிங்டன் அரிஸ்டாட்டில் போன்ற அமைச்சர். ஹார்டி உத்தமன், அறிவாளி, ஆனால், மேலைக் கலாச்சாரத்தின் சுமையைச் சுமக்கத் தெரியாத சோக நாயகன். இந்த வட்டத்துக்குள், மந்திரங் களை நம்பும் படிக்காத இந்திய மேதை, பகுத்தறிவுத் திறனுள்ள மேலை நாட்டுப் பேராசியர் சந்திப்பில் நிகழும் எண்ணப் போராட்டங்களையும், அதன் விளைவுகளையும், நுண்மையாக மேடையில் கொணர முயலும் ஓர் அரிய முயற்சி. நிச்சயம் தமிழ் மேடையில் இது ஒரு புதிய, துணி வான சோதனை முயற்சிதான்.

நோஞ்சானாக இருந்தாலும், எண்களைப் பற்றிய எண்ணங்களில் சூரப்புலியாய் மாறும் ராமானுஜனாக நடித்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசாவும், அம்மனாயும், அம்மாவாயும், மூசாத் தேவதையாயும் கருணை, கனிவு, மிடுக்குடன் நாமகிரியாக நடித்த கனகாவும் தங்கள் தேர்ந்த நடிப்பால் நாடக ஆசிரியர் கற்பனை செய்திராத புதிய பரிமாணத்தைக் காட்டுகிறார்கள். தன்னம்பிக்கையும் பெருமையும் நிறைந்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டியாக நடித்த ராஜீவ் நாடகத்தின் உயிர்நாடி. ·பிரெஞ்சுப் பிசாசு ·பெர்மாவாக நடித்த கிருஷ்ணன் தோன்றும் போதெல்லாம் அரங்கு கலகலத்தது. பில்லிங்டனாய் நடித்த ராஜன், போலீஸ் அதிகாரி ராம்கி நாடகத்துக் தேவையான உந்து சக்தியைத் தங்களது திறமையான நடிப்பினால் வழங்கினார்கள். இரண்டு நாடகங்களுக்குமே மேடை அமைப்புப் பொறுப்பேற்றுக் குறுகிய காலத்தில் தம் முத்திரையைப் பதித்திருந்த ஆஷா மணிவண்ணன், வேணு சுப்ரமணியம் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

சிந்தனை மறுப்பும் தரமற்ற நகைச் சுவையுமே பொழுதுபோக்கு என்ற போக்கை விட்டு விலகி, ஓர் உண்மையான கலையம்சம் மனதை மகிழ்வித்து ஆரோக்கியமான சலனங்களை ஏற்படுத்த முடியும் என்ற நேர்மையான அணுகுமுறை நாடகங்களுக்கு வேண்டும் என்று வலியுறுத்துவார் நாடக விமரிசகர் 'வெளி' ரங்கராஜன். ஆனால், அத்தகைய நாடகச் சூழல், வங்காளம், மராத்தி, கன்னட மொழிகளில் நிலவும் அளவுக்குத் தமிழில் இன்னும் வளரவில்லை என்றாலும், இது போன்ற முயற்சிகளுக்கு வளைகுடா வாழ் தமிழர்களிடையே ஆதரவு இருக்கிறது என்பதை இந்த நாடகவிழா மீண்டும் உறுதிசெய்துள்ளது.

கந்தசாமி பழனிசாமி, ராஜன், மணிவண்ணன்

© TamilOnline.com