சிகாகோ தமிழ்ச் சங்கம் குழந்தைகள் தினவிழா
டிசம்பர் 11, 2004 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் அரோரா பாலாஜி கோயிலில் குழந்தைகள் தினவிழாவைக் கொண்டாடியது. விழா யுகன் சக்தி, ஆகாஷ் பழனி ஆகியோர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. தொடர்ந்து வனிதா ரகுவீர் அமெரிக்க தேசிய கீதத்தையும், யுகன் சக்தியும், ஆகாஷ் பழனியும் இந்திய தேசிய கீதத்தையும் பாடினர்.

விழாவில் பாரதியாரின் பாடல்களான 'வெள்ளத் தாமரைப் பூவில் இருப்பாள்', 'மனதில் உறுதி வேண்டும்', 'செந்தமிழ் நாடெனும் போதினிலே', 'காக்கைச் சிறகினிலே' ஆகியவை தவிர 'பூப்பூக்கும் மாசம்', 'வசீகரா வசீகரா' 'மாணிக்க வீணையேந்தும்', 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'ஒருத்தி மகனாய்ப் பிறந்து' ஆகிய பாடல்களையும் குழந்தைகள் பாடி வந்திருந்தோரை மகிழ்வித்தனர்.

ஆடல் நிகழ்ச்சிகளாக 7 குழந்தைகள் கணபதி தவத்துவத்தை ஆடினர். புஷ்பாஞ்சலி, 'தீராத விளையாட்டுப் பிள்ளை', ஆண்டாளின் காஸ்யிக் சிவா நடனம், 'இடது பதம் தூக்கி' ஆகிய நடனங்கள் பரத நாட்டியமாக அமைந்திருந்தது. திரைப்படப் பாடல்கள் வரிசையில் பாய்ஸ் படத்திலிருந்து 2 பாடல்களுக்கும், 'வந்தே மாதரம்' பாடலுக்கும், 'மைனாவே மைனாவே' என்ற பாடலுக்கும் குழந்தைகள் ஆடிய நடனமும் எல்லாரையும் மகிழ்வித்தது. பாமா விஜயத்திலிருந்து 'வரவு எட்டணா செலவு பத்தணா' என்ற பாடலுக்கு எட்டுக் குழந்தைகள் ஒரு நாடகம் போலவே ஆடி அரங்கத்தைக் கலகலப்பாக்கினார்கள். ஜீன்ஸ் படத்தின் பாடலுக்கு ஆடிய வினித்ரா ராஜகோபாலனின் நடனம் கைதட்டலைப் பெற்றது. குழந்தைகள் சின்னத் திரையையும் விட்டு வைக்கவில்லை. சின்னத்திரையில் வரும் ஆடுகிறாள் கண்ணன் தொடரின் தலைப்புப் பாடலான ஆடுகிறான் கண்ணன் என்ற பாடலுக்கு குழந்தைகளின் நடனம் அருமையாக இருந்தது.

17 குழந்தைகள் வெவ்வேறு விதமான மாறுவேடங்கள் அணிந்து மேடைக்கு வந்து சிறு பாடலோ, வசனமோ பேசினர். இந்தச் சிறுவர்களை மிக எளிமையான கேள்விகள் மூலம் தமிழில் பேசவைத்த இந்த நிகழ்ச்சி யைத் தொகுத்து வழங்கியவர் மீனா சுபி. வீரபாண்டிய கட்டபொம்மனாக வேடமணிந்து சிவாஜி கணேசன் பேசிய வசனங்களைத் தமிழில் ஏற்ற இறக்கத்துடன் உணர்ச்சிபூர்வமாக வழங்கினார் ஸ்ரீவத்ஸ் பிரகாஷ் வீரபாண்டிய கட்ட பொம்மனை எதிரில் கொண்டு வந்து நிறுத்தினார். மயூரி தாஸ் வடிவமைத்து, விசாகா ரகுவீர் தொகுத்து வழங்கிய உடை அணிவகுப்பில் 14 குழந்தைகள் இன்றைய முன்னணி நடிக நடிகையர்களைக் கண்முன் கொணர்ந்து நிறுத்தினர்.

இந்தக் குழந்தைகள் தினவிழாவில் இசைக் கருவிகளையும் குழந்தைகள் விட்டுவைக்கவில்லை. அபினவின் கீ போர்ட் இசையும், அஜய், விவேக், ஆர்த்தி, ஷ்யாம் பங்கேற்ற தபேலா தாள வாத்தியமும் அருமை. ஆட்டோகிராப் படத்திலிருந்து வரும் சில பாடல்களைக் கொண்டு அஜய் ரகுராமன், அஸ்வின் சிவராமன், ப்ரேமா பாபு ஒரு சிறிய நாடகத்தை வழங்கினர். சிறு குழந்தைகள் தம் மழலைச் சொல்லில் திருக்குறளைக் கூறியதும் இசைத்ததும் செவியில் தேனாகப் பாய்ந்தது.

ரகுராமன் வரவேற்புரை கூறினார். லக்ஷ்மி சிவராமன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக, இசைக்குயில் எம்.எஸ். அவர்களின் மறைவிற்கு ஷோபா ராமின் அஞ்சலியும், ஒரு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டன.

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இணைய தளம்: www.chicagotamilsangam.org

© TamilOnline.com