இந்தியாவின் பணவலிமையும், தன்னம்பிக்கையும்...
சுனாமி நிவாரணச் செலவை இந்தியாவே சமாளித்துக் கொள்ளும், பிற நாட்டு அரசுகளின் நிதியுதவி தேவையில்லை என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது. தான் இன்னும் ஏழைநாடல்ல, வல்லரசுகளின் பந்தியில் அமரும் வல்லமை பெற்ற நாடு என்று காட்டுவது போல், சுனாமியால் பாதிக்கப்பட்ட பிற நாடுகளில் மீட்புப் பணி புரியக் கப்பல் படையினரை அனுப்பியிருக்கிறது.

அந்தமான், நிக்கோபார் தீவுகள், மற்றும் தமிழகக் கடலோரப் பகுதிகளிலும் மீட்புப் பணிகளில் சுணக்கம் காட்டிய அரசு பிறநாடுகளுக்குப் படையினரை அனுப்புவது வரட்டுக் கௌரவத்துக்குத்தான் என்கிறார்கள் சிலர். ஆனால், முன்னெப்போதையும் விட இப்போது இந்தியாவில் பணவலிமையும், தன்னம்பிக்கையும் மிகுந்திருப்பதால் இந்த அறிவிப்பில் வியப்புக்கேதுமில்லை.

அண்மைக்காலத்தில் வெளிநாட்டு உதவியைப் பெறுவதற்கு இந்தியா வெகுவாகத் தயங்கியிருக்கிறது. அதற்கேற்றவாறு நிவாரணப்பணிகளிலும் திறமையைக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டியிருக்கலாம். காலம் தாழ்த்தித் தொடங்கினாலும், தற்போது மத்திய, மாநில அரசுகளின் நிவாரணப் பணிகள் வெகுவாக முன்னேறியிருக்கிறது என்கின்றனர் நண்பர்கள்.

சுனாமி என்ற சொல் தமிழுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால், கடல்கோள் என்ற சொல் பழமையானது. சோழர்களின் பூம்புகார், குமரிக்குத் தெற்கே இருந்த பாண்டியர்களின் தலைநகர்களான தென் மதுரை மற்றும் கபாடபுரம் ஆகிய நகரங்களைக் கடல் கொண்டது என்ற செய்திகள் கட்டுக்கதை என்றே பலரும் இதுவரை கருதி வந்திருக்கின்றனர்.

சிலப்பதிகாரத்தின் காடு காண் காதையில்
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

என்று வரும் அடிகளில், ப·றுளி ஆற்றையும், குமரி மலையையும் கொடுமையான கடல் கொண்டது என்ற செய்தியையும் புனைகதை என்று பலர் விலக்கி வந்திருக்கின்றனர். ஏன், இன்றிருக்கும் மகாபலிபுரமும் கடற்கோளுக்கு இரையாகி எஞ்சியிருக்கும் பகுதி என்றே அங்கு வாழும் மீனவக் குடிகள் நம்புகின்றனர்.

ராமேஸ்வரம் தீவில் தனுஷ்கோடியைக் கடல் கொண்டது 1964ல் தான் என்றாலும், பெருநகரங்களை எப்படிக் கடல் கொள்ளும் என்பது அப்போது விளங்கவில்லை. இப்போது அந்த நகரங்கள் பண்டைக்காலச் சுனாமியால் கடலில் விழுந்திருக்கக் கூடுமோ என்ற ஐயம் எழுகிறது.

பேரிடர்கள் நம் பண்பாட்டின் ஆழத்தைச் சோதிக்கின்றன. நம் நம்பிக்கைகளைப் புடம் போட்டுப் பார்க்கின்றன. சுனாமியால் 200,000 பேர் சாவு. அதில் பலர் குழந்தைகள்.

இதைப் பார்ப்பவர்கள், கடவுள் கருணையுள்ளவர் என்றால் ஏன் குழந்தைகளைக் கடல் கொள்வதைத் தடுக்கவில்லை என்று தடுமாறுவார்கள்.

மகாபாரதப் போரின் பேரழிவைப் பார்த்த சார்வாக முனிவர் நாத்திகரானார். கிரேக்கத் தத்துவ ஞானி எபிக்கூரஸின் கேள்விகள் கடவுள் நம்பிக்கையையே உலுக்கும் கேள்விகளும் இது போன்ற பேரழிவில் உதித்தவையோ! "தீமையைத் தடுக்க விரும்பியும் முடியாவிட்டால் கடவுள் சக்தியற்றவர்; சக்தியிருந்தும், தடுக்க விரும்பாவிட்டால் அவர் ஓர் அரக்கன்; சக்தியும் விருப்பமும் இருந்தால் இன்னும் ஏன் தீமை இருக்கிறது? சக்தியும், விருப்பமும் இல்லையென்றால் அவருக்கு ஏன் கடவுள் என்ற பெயர்?" என்றார் அவர்.

இது போல் பழங்காலத்தில் நடந்திருந்தால், நாம் வருண பகவானுக்குப் பொங்கல் படைத்துப் பணிந்திருப்போம். பெருங்கடலே, பெருங்கடலே அமைதி கொள் என்று வேண்டி நிற்போம். கொன்றது போதும் நிறுத்து என்று அதன் கொலை வெறியைத் தணிக்கப் பலி கொடுத்திருப்போம். ஆனால், இன்று?

கடல் பொங்கியதற்குக் காரணம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடந்த நில நடுக்கம்; நில நடுக்கம் மையம் கொண்ட உரசிக் கொண்டிருக்கும் நிலத்தட்டு விளிம்புகளில் கடல் மட்டம் திடீரென்று உயர்ந்ததால்தான் ஆழிப் பேரலைகள் உருவாகின்றன; பேரலைகள் உருவாவதை உடனுக்குடன் கண்டறியக் கருவிகள் இருக்கின்றன; அவை மூலம் கடலோரப் பகுதி வாழ் மக்களை எச்சரிக்க முடியும் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம்.

கடலுக்குக் காவு கொடுத்து ஆழிப்பேரலைகளை நிறுத்த முடியாது. இந்தப் பேரலைகள் எந்த மதத்துக்காரர்கள் என்று சல்லடையில் சலித்துப் பார்த்துக் கொல்வதில்லை. சிலர் பிதற்றுவதுபோல் பாவிகளைக் கொல்வதற்காகக் கடவுள் ஏவி விட்டதால் இவை வரவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டு களாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலத் தட்டுகள், உரசி, சிக்கி, உடைந்து இது போன்ற எண்ணற்ற ஆழிப்பேரலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

சிறு பிள்ளைகள் குளத்திலே குதித்து விளையாடிக் கொண்டிருக்கும். அதனால் உண்டாகும் அலைகள் குளக்கரையில் சாரை சாரையாக ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகளைத் தாக்கும். எறும்புப் புற்றுகள் சிதையும், சில எறும்புகள் எப்படியோ மிதந்து உயிர் பிழைக்கும். பல எறும்புகளைத் தண்ணீர் அடித்துக் கொண்டு போகும்.

எறும்புகளைக் கொல்கிறோம் என்று பிள்ளைகளுக்கும் தெரியாது; பிள்ளை விளையாட்டு தம்மைக் கொல்கிறது என்று எறும்புகளுக்கும் தெரியாது.

இதுதான் வாழ்க்கை. இதற்கு அர்த்தம் என்ன என்று தேடுவது வீண். லோகாய தமோ, நாத்திகமோ, கடவுள் நம்பிக்கையோ எந்தக் கண்ணாடி வழியாகப் பார்த்தாலும் பரவாயில்லை; இந்தப் பேரழிவு நம் மனிதத் தன்மையை, பண்பாட்டைச் சோதிக்கிறது என்று புரிந்து கொண்டால் போதும்.

பண்டைக்காலத்தில் தலைநகரை இழந்து கரையேறிய பாண்டியனுக்கு நிலம் கொடுத்தான் சோழன். நாமும், நம்மால் இயன்ற உதவியைச் செய்தால் போதும். இந்த நேரத்திலும் நிவாரண நிதியிலிருந்து சுரண்டுபவர்கள் இருக்கக் கூடும். அரசியல் ஆதாயம் தேடுபவர்களும் உண்டு. நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு சாராத் தொண்டூழிய நிறுவனங்களுக்குள்ளும் போட்டி, பொறாமை இருக்கக்கூடும். நாம் மனிதர்கள்தாமே!

கடும்புயல், காட்டுத் தீ, கலவரம், நில நடுக்கம் என்ற பேரிடர்களைக் கடந்து வந்த அனுபவம் எனக்கு உண்டு. பேரிடரில் பெரும்பீதி. பின் நல்ல வேளை நாம் பிழைத்தோம் என்ற ஆறுதல். மற்றவர்கள் படும்பாட்டைக் கண்டு பரிதாபம், பிழைத்தோரின் குற்ற உணர்வு; எதையும் சமாளிப்போம் என்ற நம்பிக்கை; அடுத்த வேளைக்குத் தண்ணீர் இல்லாமல் அன்றாட வாழ்க் கைக்கு அல்லாடும்போது எரிச்சல்; இப்படி உணர்வுகள் மாற்றி மாற்றி நம்மைப் பிழிந்தெடுப்பது இயல்பு.

நிவாரணப் பணியில் ஈடுபடும் அமைப்புகளும், அரசு நிறுவனங்களும் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் பிச்சைக்காரர்கள் அல்லர். நம்மில் எவர் வேண்டுமானாலும் அந்த நிலைக்கு ஆளாயிருக்கக் கூடும். நாம் அந்த நிலையில் இருந்தால் என்ன மரியாதையை எதிர்பார்ப்போமோ அதே மரியாதையை நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இதை நன்றாக உணர்ந்த அமைப்புகளில் ஒன்று அமெரிக்கச் செஞ்சிலுவைச் சங்கம்.

நாட்டில் எந்தக் குட்டி ஊரில் பேரிடர் நிகழ்ந்தாலும் எப்படியாவது அங்கே செஞ்சிலுவைச் சங்கம் இருக்கும். அமெரிக்க நிறுவனங்கள் பலவற்றில் காணப்படும் வாடிக்கைக்காரருக்குரிய மதிப்புடன் பாதிக்கப்பட்டவர்களை நடத்தும் தன்மை. வேறு எந்த உள்நோக்கமும் இல்லாமல், தொழில் முறைப்பாங்குடன் தொண்டு செய்யும் மனப்பாங்கு, இவை என்னைக் கவர்ந்தவை. இது போல தன்னலமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொண்டாற்றும் அமைப்புகளையும், தொண்டர்களையும், தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

© TamilOnline.com