நடமாடும் பல்கலைக்கழகம் கமல்!
அண்மையில் சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்புவிழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கிரெசன்ட் பொறியியல் கல்லூரி நிறுவனர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

பட்டங்களை வழங்கிப் பேசிய ஜேப்பியார் கல்விச் சேவைக்காக அப்துர் ரஹ்மானுக்கும், திரையுலகில் புதிய தொழில் நுட்பத்திறனை அறிமுகப்படுத்துவதற்காகக் கமல்ஹாசனுக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக கூறினார்.

இப்பட்டமளிப்பு விழாவிற்குத் திரைப்பட அதிபர் எம். சரவணன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் நாகேஷ், சிவகுமார், பிரபு, நெப்போலியன், விவேக், பிரசாந்த், இயக்குநர் கே. பாலசந்தர், நடிகை சரோஜாதேவி என்று திரைத்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டாக்டர் கமல்ஹாசனை வாழ்த்தி அனுப்பிய மடலை நடிகர் பிரபு வாசித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா கமல்ஹாசனை தன்னுடைய சகோதரர் என்று குறிப்பிட்டதும், 'கமல் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்' என்று முத்தாய்ப்பாகப் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி பேசியதும் குறிப்பிடத்தக்கவை.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com