காதில் விழுந்தது ......
டிசம்பர் மாதம்தான் சென்னையில் கர்நாடக சங்கீதப் பருவம். (சுனாமி தாக்கிய) டிசம்பர் 26ம் தேதி, ஒரு கச்சேரி கூட ஒத்தி வைக்கப் படவில்லை. மறு நாளும் எல்லாக் கச்சேரிகளும் தொடர்ந்தன. பல தளங்களிலும் மீனவர்கள் விளிம்பு நிலை மாந்தர்கள்தாம்.

அனுதாப அலையும், கொஞ்சம் நிவாரண நிதியும் வந்து குவிந்திருந்தாலும், மீனவர் களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி யாருக்கும் அக்கறையில்லை.

கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தென்னிந்தியச் செய்தித் துறைத் தலைவர் டி. என். கோபாலன்.

*******


உங்கள் குழந்தைகள் விழிம விளையாட்டுகளிலேயே (video games) ஆழ்ந்திருக்கிறார்கள் என்று கவலைப்படுகிறீர்களா? பயப்பட வேண்டாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த விளையாட்டுகள் அவர்களை வருங்காலத் தொழிலுலகுக்குப் பயிற்சியளிக்கின்றன என்கிறார்கள். 30 வயதுக்குட்பட்ட இந்த விழிமத் தலைமுறைக்கு, இந்த விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையின் ஓர் அம்சம். அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

"ஆடுபவர்தான் நாயகன், உலகம் அவர்கள் கையில் உள்ளது." "எல்லாக் கேள்விகளுக்குமே ஏதோ ஓர் விடையிருக்கிறது. உங்களால் கண்டுபிடிக்கவே முடியாமல் போகலாம், ஆனாலும், இருக்கிறது." "போட்டிதான் முக்கியம்". "இளைஞர்கள் உலகை ஆள்பவர்கள்"; "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்". "தோல்விகளும் விளையாட்டின் ஒரு பகுதிதான்." "சில வேளைகளில் நீங்கள் எல்லாமே சரியாக விளையாடினாலும் தோற்றுப் போவீர்கள். அதனால் என்ன? அடுத்த முறை ஆடி ஜெயித்தால் போயிற்று!"

"Got Game: How the Gamer Generation Is Reshaping Business Forever" by Beck & Wade, Harvard Business School Press.

"இதோ பார், இந்தியர்களுக்குத் தெரிந்த வரலாறு எல்லாமே 1880ல் ரோபர் லெத்பிரிட்ஜ் என்ற ஆங்கிலேயன் எழுதிய பாடப்புத்தகத்திலிருந்துதான் வருகிறது, தெரியுமா? அவன் என்ன சொன்னான்? இந்தியர்களை வீரக்குடிகள், கூலிக்குடிகள் என்று இரண்டாகப் பிரிக்கலாமாம். சிப்பாய்க் கலகத்துக்கு முன்னே ஆங்கிலப் பேரரசை வென்று தந்த குடிகளை அதற்குப் பின் கூலிகள் என மட்டம் தட்டினார்கள். அடிமைப்பட்ட மக்களின் தலைவிதி அவ்வளவுதான். அப்புறம் ஆங்கிலேயர்களுக்கு தமிழ்க்குடிகள் கால் தூசானார்கள். இந்தக் கருப்பர்கள், சண்டைக்குப் பயந்த சாதுகள், கூலி வேலைக்குத்தான் லாயக்கு என்று தமிழர்களை மலேயா, சிலோன், மற்ற நாடுகளுக்குத் தோட்டக்கூலிகளாகக் கப்பலேற்றினார்கள். இதோ, பெர்லின் தெருவில் பூ விற்றுச் சேர்க்கும் காசைப் புரட்சிப் படைக்கு அனுப்பி வைக்கிறார்களே இவர்கள் தமிழர்களை மீண்டும் வீரக்குடி களாக்கியிருக்கிறார்கள். வருவது வரட்டும் என்று காலத்தின் கோலத்தை எதிர் கொண்டு நிற்கும் இந்தத் தமிழர்களை மதிக்கக் கற்றுக்கொள்."

வி. எஸ். நாய்பால், மந்திர விதைகள் (Magic Seeds) என்ற புதினத்தில்.

*******


அண்டை நாடுகளான மலேசியாவும் இந்தோனேசியாவும் இயற்கை வளம், மொழி, மதநம்பிக்கை இவற்றில் ஏறத்தாழச் சமமாக இருந்தாலும், மலேசியா கொழித்துக் கொண்டிருக்கையில் இந்தோனேசியா வழுக்கிக் கொண்டிருக்கிறது. மலேசியப் பங்குச் சந்தை கலக்கிக் கொண்டிருக்கிறது, மலேசியர்கள் இந்தோனேசியர்களை விட மூன்று பங்கு செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள். ஏன் இந்த வித்தியாசம்? பொருளாதார நிபுணர்கள், சமூகவியலாளர்கள், வரலாற்றாளர்கள் வெவ்வேறு காரணங்கள் காட்டலாம். ஆனால், அந்த நாடுகளின் சட்ட முறைகளைக் காரணம் காட்டுகிறார்கள் சில அறிஞர்கள். மலேசியாவின் சட்டங்கள் ஆங்கிலேயப் பேரரசின் பொதுச் சட்ட வழி வந்தவை. டச்சுக் காலனியாக இருந்த இந்தோனேசியாவின் முறை நெப்போலியனின் ·பிரெஞ்சுக் குடிச் சட்டத்தின் அடியொற்றி வந்தவை. பொது வாக ·பிரெஞ்சு முறையைப் பின்பற்றும் நாடுகளைவிட ஆங்கில முறையைப் பின் பற்றும் நாடுகள் செழிப்பான பங்குச் சந்தையை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளன என்கிறார்கள் அறிஞர்கள்.

லீகல் அ·பேர்ஸ் இதழ்.

*******


வந்தேறிகள் ஹாலந்து மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்கு. இதனால் வரும் சிக்கல்கள், குறிப்பாக ஹாலந்தின் "முஸ்லிம் பிரச்சனை" பற்றி வீக்லி ஸ்டாண்டர்ட் தன் அட்டைப் படக் கட்டுரையில் அலசுகிறது. பெரும்பாலான வந்தேறிகள் முஸ்லிம்கள். அண்மையில் கலைஞர் தியோ வான் கோவின் படுகொலைக்குப் பின்னர் ஹாலந்து முஸ்லிம்களுக்கும் டச்சு மக்களுக் கும் இடையே வளர்ந்து வரும் விரிசல்களை விவரிக்கும் ஸ்டாண்டர்ட் "வருந்தத்தக்கது என்னவென்றால், இந்த முஸ்லிம் பிரச்சனைக்குக் காரணம் அடிப்படை தீவிரவாதமோ, மத அடிப்படை வாதமோ, விளிம்பு நிலைப்படுத்தலோ அல்ல; இஸ்லாமும் மக்களாட்சியும் ஒத்து வாழ முடியாது என்பதுதான் அடிப்படைச் சிக்கல்" என் கிறது. சென்ற ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 13,000 பேர் ஹாலந்தை விட்டு வெளிநாட்டுக்குப் போயிருக்கிறார்கள். இது விதிவிலக்காய் இருக்கலாம் அல்லது அமெரிக்காவின் வெள்ளை மக்கள் மற்ற நடுநகரில் வாழும் மற்ற இன மக்களை விட்டு விலகிப் புறநகர்ப் பகுதிகளுக்கு ஓடோடிப் போவது போலும் இருக்கலாம் என்கிறது.

வீக்லி ஸ்டாண்டர்ட், டிசம்பர் 27, 2004.

*******


தன்னைக் கடந்து தனக்குள்ளே ஞானத்தைத் தேடும் ஆன்மீகப் பண்பு உலகின் எல்லா மனிதர்களின் மரபு அணுக்களில் இருக்கிறது என்கிறார் மரபணு ஆராய்ச்சியாளர் டீன் ஹாமர். இந்தப் பண்பு சிலருக்குக் கூடுதல், சிலருக்குக் குறைவாக இருக்கலாம், ஆனால் எல்லோரிடமும் இருக்கிறது. இது கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு விடையில்லை.

ஆனால், ஏன் கடவுளை நம்புகிறோம் என்பதற்கு விடை. நம் மரபணுக்கள் நம்மை நம்பவைக்கின்றன ஆனால் எதை நம்புகிறோம் என்பது நாம் வளரும் சூழலைப் பொருத்தது.

இது எல்லா மனிதர்களுக்கும் மொழி பேசும் ஆற்றல் இருப்பதைப் போன்றது. நாம் எந்த மொழி பேசுகிறோம், எந்த மதத்தை நம்புகிறோம் என்பது பழக்க வழக்கத்தால் வருவது, பரம்பரையால் வருவதல்ல. நாம் மதங்களை விட்டு விலகலாம், ஆனால், ஆன்மீகத்தை விட்டு விலக முடியாது. நமக்குள் இருக்கும் இந்தப் பண்பை தியானம், இறைவணக்கம், இசை மற்றும் ஓவியம் போன்ற கலைகளால் பண்படுத்திக் கொள்ளலாம். இதனால், கடவுளை அறிய முடியாது, ஆனால் உணர முடியும்.

டீன் ஹாமர், கடவுள் மரபணு (God Gene) என்ற நூலில்.

*******


அடிமட்ட நிலையில் ஏழ்மை, பசி, நோய் இவற்றால் வாடும் ஒரு பில்லியன் மக்களிடம் 2015க்குள் இந்தப் பிணிகளை ஒழிப்போம் என்று ஐக்கிய நாடுகள் ஆயிரத்தாண்டு அறிக்கையைத் தடபுடலாக அமெரிக்காவும் 188 மற்ற நாடுகளும் வெளியிட்டன. இந்த அறிக்கையின் முதல் குறிக்கோள்களில் வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு வருமானத்திலிருந்து 0.7 சதவீதத்தை ஏழைநாடுகளுக்கு உதவ ஒதுக்க வேண்டும் என்பதும் இருந்தது. கெடுவை எட்ட மூன்றிலொரு பங்குக் காலத்துக்குப் பின்னர் அமெரிக்காவின் பங்கு வெறும் 0.14%தான். பிரிட்டன் (0.34%), ·பிரான்ஸ் (0.41%) பரவாயில்லை.

நோர்வேயும் சுவீடனும் தங்கள் கடமைக்கு மேலேயே 0.92%, 0.79% கொடையளித்திருக்கிறார்கள். உலகின் பணக்கார நாடான அமெரிக்கா இவ்வளவு கஞ்சத் தனமாய் இருப்பது சரியல்ல.

நியூ யார்க் டைம்ஸ் தலையங்கம்.

*******


மக்களை மகிழ்வூட்டுவது எது? "தொலைக்காட்சி" என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கடைக்குப் போவது, தொலைபேசியில் அரட்டை அடிப்பதை விடத் தொலைக்காட்சி பார்ப்பதை விரும்புகிறார்கள் பெண்கள். குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது பட்டியலில் கடைசி இடத்தருகே, சமையலுக்குக் கீழ், வீட்டு வேலைக்குச் சற்று மேல் இருக்கிறதாம். ஏழ்மையால் வாடுபவர்களைத் தவிர மற்றவர்கள் பணத்தைப் பற்றி அவ்வளவு கவலைப் படுவதில்லையாம்.

நியூ யார்க் டைம்ஸ்

நெடுஞ்செவியன்

© TamilOnline.com