வாழ்க்கை-தொடத் தொட......
ஒரு வினோதமான ரேடியோ விளம்பரம் கேட்டேன்:

"பிறந்த நாள், திருமண நாள், விசேஷ நாட்கள் ஆகியவற்றுக்கு கடில் பார்ட்டிகள் (cuddle party) ஏற்பாடு செய்யப்படும். உங்கள் வாழ்க்கையின் அவசியம் கடில் பார்ட்டிகள். நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு முப்பது டாலர், ஜோடிகளுக்கு ஐம்பது டாலர். அணுகவும் - www.cuddleparty.com

அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம் இது போன்ற கூத்துக்கள்!

அதாவது, ஒருவர் தமக்குத்தாமே புதிதாக ஒரு உத்தியோகத்தை உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணத்துக்கு இந்த கடில் பார்ட்டி முனைவர் 'அரவணைப்பு நிபுணர்' (Cuddling Expert) என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளலாம். அரவணைத்தல், தழுவிக் கொள்ளுதல், முத்தமிடுதல், முதுகைத் தடவிக் கொடுத்தல் இது போன்ற பல்வேறு தொடுதல்களைப் பற்றி இவர் நன்கு அறிந்து (ஆராய்ந்தும்?) வைத்திருப்பார். இந்த இந்தச் செயலால், இந்த இந்த விளைவுகள், நன்மைகள் கிடைக்கும் என்று புத்தகங்கள் எழுதுவார். பணக்காரர் ஆகிவிடுவார்.

ஆனால், மறுக்க முடியாது - இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கடில் பார்ட்டிகளுக்குக் காசு கொடுத்துப் போகவும் பெரிய கூட்டம் இருக்கிறது இங்கே!

ஆனால், யோசித்துப் பாருங்கள். யார் வருவார்கள் இந்த பார்ட்டிகளுக்கு? ஊறுகாய் உரசல்கள் கிடைக்குமே, சில ஓநாய்கள் வருமா வராதா?

நமக்கு எது தேவை, எது இருந்தால் நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று விளக்கிச் சொல்ல, ஒரு மூன்றாவது மனிதர் தேவைப்படுகிறார் என்றால், நம் வாழ்க்கைத் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்று யோசிக்க வேண்டும்!

அமெரிக்க (மேற்கத்திய) வாழ்க்கை முறையைப் பற்றி கூறும் போது, ஆஷ்லி மாண்டெகு என்ற புகழ்பெற்ற சமூகவியல், மனிதவியல் எழுத்தாளர் - "தீண்டாமை என்ற ஒரு புதிய இனத்தையே உருவாக்கியிருக்கிறோம்" என்றார். மேற்கத்திய கலாசாரத்தில் நிலவும் பிறர்மீதான அசிரத்தையை இது சுட்டுகிறது.

உண்மைதானே, நம் குடும்பத்தோடு, நம் சிநேகிதங்களோடு, நம் பிள்ளைகளோடு, வாழ்க்கைத் துணையோடு நாம் சந்தோஷ மாக இருக்க, ஒருவரை ஒருவர் தழுவி, அரவணைத்துக் கொள்வது எத்தனை முக்கியம் என்று விளக்க இப்படி ஒரு நிபுணர்; அதற்கு முப்பது டாலர்கள் மொய் வேறு!

சம்பாதிக்கிறார், அது அவரது சாமர்த் தியம். ஆயினும்... இது யோசிக்க வேண்டிய ஒரு விஷயம்தான்.

நாம், மனித இனம், சகவாசப் பிரியர்கள், கூடிவாழும் குணமுடையவர்கள், பரஸ்பரம் உறவு கொண்டாடுபவர்கள், சமூகம் என்கிற அமைப்பில் இணைந்து வாழ்பவர்கள். இப்படிப்பட்ட நமக்கு, தொடுதல் ஒரு உயிர்ச் செயல். உயிர் தழைக்க வைக்கும் செயல்.

பாலூட்டும் பிராணி வகைகள் அனைத்துமே, தமது சக்தி, திறமை, ஆதிக்கம், அதிகாரம், பதவி, நிலை, உரிமை ஆகியவற்றை உணர்த்தத் தொடுதல் செய்கின்றன. இதனை எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம். நமது இயல்பின்படி வாழ்கிறோமா, அல்லது திரவியம் தேடும் திரைகடலில் இந்த உண்மையான பந்தச் செயலை மறந்திருக்கிறோமா?

'கடில் பார்ட்டி'களுக்குப் போக வேண்டாம் தான். ஆனால், நம் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான இந்த தொடுதலைப் பற்றி கொஞ்சம் தீவிரமாகப் பேசுவோமா?

"ஸ்பரிசம் நமது உள்ளார்ந்த மரபுசார் வளர்ச்சியின் ஒரு கூறு" என்கிறார் எலியட் க்ரீன், அமெரிக்க மசாஜ் தெரபி அசோசி யேஷனின் தலைவர். ஆபத்து வரும்போது நமது மூளை, எதிர்த்துச் சண்டையிடு, அல்லது ஓடு (Fight or Flight) என்று உடனே கட்டளை பிறப்பிக்கிறது. ஆனால், அன்பான தொடல் நிகழும்போது 'பயம் இல்லை, இது எனக்குச் சுகமாக இருக்கிறது' என்று இரத்தத்தில் இனிமை சேர்கிறது.

அன்பையும், பாதுகாப்பு உணர்வையும் வெளிப்படுத்துகின்ற தொடுதல், நம் தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து, மனதையும், உடலையும் உற்சாக நிலைக்கு கொண்டு செல்கிறது. அனாதை இல்லங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்படும் பச்சைக் குழந்தைகள், தொடப்பட்டு, தடவப்பட்டு, ஆதரவாக அணைக்கப்பட்டு வளர்ந்தால், எண்பது சதவிகிதம் உயிர் பிழைத்து விடுகின்றனவாம்.

குழந்தைக்கு மட்டுமில்லாமல், தாய்மார்களுக்கும் இந்தத் தொடுதல் விஞ்ஞான ரீதியாகப் பெரிதும் உதவுகிறது. பசு போன்ற பிராணிகள், பிறந்தவுடன் குட்டிகளை நாவால் நக்கும். இதனால் ஆக்ஸிடோசின் என்கிற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கிறதாம். இது கார்டிசோல் என்கிற மன அழுத்தம் உருவாக்கும் சுரப்பியை கட்டுக்குள் வைக்கிறதாம்.

இந்த நக்குதலைச் செய்யாத தாய் மிருகங்கள் தமது குட்டிகளைக் கடிக்கவும், விழுங்கிவிடவும் கூடும்.

© TamilOnline.com