அமரர் எம்.எஸ்.பற்றி விக்கு விநாயக்ராம்!
தனக்குன்னு எதுவும் வெச்சுக்காத தயாள குணம் அம்மாவுக்கு. சதாசிவம் மாமாவும் அப்படித்தான். ஒரு சமயம், உதவி கேட்டு வந்தவாளுக்கு என்ன கொடுக்கிறதுனு யோசிச்ச மாமா, சட்டுனு எம்.எஸ். அம்மா பக்கம் திரும்பி, ''குஞ்சம்மா! உன் வளையலைக் கழட்டிக் குடேன்'னு சொல்ல, கொஞ்சமும் யோசிக்காம உடனே கழட்டிக் குடுத்த பரோபகாரி.

முதன்முதல்ல பாட்டுக்குன்னு வெளிநாடு போய், 'இண்டியன் மியூஸிக்' மட்டுமே தெரிஞ்ச மேல்நாட்டு ரசிகர்களுக்கு, கர்னாடக சங்கீதத்தை அறிமுகப்படுத்தினவங்க அம்மாதான்! பாடுறது தவிர, அம்மா வீணையும் மிருதங்கமும் நல்லா வாசிப்பாங்க.

அம்மா கச்சேரிகள்ல என்னால ஆயுசுக்கும் மறக்கமுடியாத கச்சேரி, மும்பை ஷண்முகானந்தா ஹால்ல நடந்த கச்சேரிதான்! கச்சேரி ஆரம்பிக்க வேண்டிய நேரத்துல கரண்ட் போயிடுச்சு. மைக் வேலை செய்யலை. எந்த லைட்டும் எரியலை, என்ன பண்றதுனு எல்லாருக்கும் குழப்பம். அம்மா துளியும் யோசிக்கலை! பெரியவாளை மனசுல நினைச்சுண்டு மைக் இல்லாமலேயே பாட ஆரம்பிச்சார். ஹால்ல அங்கங்கே மெழுகுவத்திகள் எரிய, இருளும் ஒளியும் கலந்தாற்போன்ற அந்த ரம்மியமான வெளிச்சத்துல தொடர்ந்து நாலு மணிநேரம் மனசை உருக்குற குரல்ல கச்சேரி பண்னினார் அம்மா. அந்தப் பரவச அனுபவம் இறைவனோட சந்நிதியில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒண்ணு!

விக்கு விநாயக்ராம், கட வித்வான், அமரர் எம்.எஸ். பற்றிய பத்திரிக்கைப் பேட்டியில்...

******


இப்போது கிடைத்த வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழத் தெரியாமல் வருத்திக் கொள்பவர்கள்தான், எப்போதோ கிடைக்கப்போகும் சொர்க்கத்துக்காகக் கவலைப்படுவார்கள்.

எல்லாம் முடிந்த பிறகு எங்கே போகிறீர்கள் என்பதா முக்கியம்? அங்கே உங்கள் விதியைப் பற்றி உங்களுக்கென்ன தெரியும்? ஒருவேளை அங்கே நரகமாயிருந்தால், இங்கே கிடைத்த சொர்க்கத்தையும் அல்லவா வாழாமல் கோட்டைவிட்டிருப்பீர்கள்?

இங்கே கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் அன்போடும் பிரியத்தோடும் செலவு செய்யுங்கள். ஒவ்வொரு மூச்சையும் ஒவ்வொரு செயலையும் முழுமையான ஈடுபாட்டுடன் அனுபவித்து வாழுங்கள்.

அதைவிட்டுவிட்டு, இங்கே வாழ்க்கையை நரகமாக்கிக்கொண்டு, தெரியாத சொர்க்கத்துக்காகத் திட்டமிடுவதைப் போன்ற முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை!

சத்குரு ஜக்கி வாசுதேவ், சென்னையில் ஆன்மீகக் கூட்டம் ஒன்றில்...

******


உலகம் முழுவதும் 29 சதவீதம் பேர் இதய நோயால் மரணமடைகின்றனர். நகரமயமாதல், ·பாஸ்ட்புட், அளவுக்கு அதிகமான மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் இதயநோய் அதிகரித்து வருகிறது.

கட்டுப்பாடான உணவு, தியானம் போன்றவற்றால் இதய நோய்கள் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொழுப்புச் சத்து நிறைந்த உணவு, மது, புகை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வாழ்க்கை முறையைச் சீரமைத்துக் கொண்டால் இதய நோய், சர்க்கரை நோய்களைத் தடுக்க முடியும். கர்ப்பத்தில் சத்துக் குறைவு காரணமாகவும் இதயநோய்கள் ஏற்படுகின்றன. மருத்துவச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்களின் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எஸ்.எஸ். பர்னாலா, தமிழக ஆளுநர், சென்னையில் இதய நோய் மருத்துவமனை ஒன்றில் பேசியது...

******


என் பள்ளிக்கூட வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சி நடந்தது. பள்ளிக்கூட நாடகம், பாட்டுப் போட்டிகளி¦ல்லாம் நான் கலந்து கொள்ளக்கூடாதென்று பாட்டி ரொம்பக் கண்டிப்பாகச் சொல்லியிருந்தாள். அதை மீறி ரகசியமாக 'மனுநீதிச்சோழன்' நாடகத்தில் நடித்தேன். பாட்டிக்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்க அங்குள்ள ஆசிரியர்கள் ஒத்துழைத்தனர். கடைசியில் கலைநிகழ்ச்சி நடந்த அன்று யாரோ பாட்டிக்கு உங்கள் பேத்தி நடிக்கிறாள் என்று தகவல் சொன்னார்கள். ஆளை அனுப்பி நான் நடிக்கிறேனா என்று பாட்டி பார்க்கச் சொன்னாள். அந்தக் கலைநிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் ஜஸ்டிஸ் பார்ட்டியின் தலைவர்களில் ஒருவரான சர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர் கையால் என் நடிப்புக்காக வெள்ளி மெடலும் வாங்கினேன். காம்போதியில் 'நேநெந்து வெததுதுரா' பாடியபோது அதன் அர்த்தம் என்ன என்று ஏ.யு.பி. கேட்டார். சொன்னேன். ரொம்பவும் பாராட்டினார். இப்படிப் பாராட்டுகள் பெற்றாலும் வீட்டுக்குப் போனதும் பாட்டி என்னை அடி பின்னிவிட்டாள். பள்ளி ஆசிரியர்கள் தலையிட்டுப் பாட்டியைச் சமாதானப்படுத்தினர். இவ்வளவு கோபத்துக்குக் காரணம் சின்ன வயதில் பாட்டியும் இந்த 'மனுநீதிச்சோழன் நாடகத்தில் வீதி விடங்கனாக நடித்திருந்தாளாம்.

பி.ஆர். திலகம், பிரபல இசை, நாட்டியக் கலைஞர், பத்திரிகை ஒன்றில் எழுதியது...

******


திரைப்பட இயக்குநர்கள் நல்ல படங்களை எடுக்க முன்வந்தால் தயாரிப்பாளர்களை நானே அடையாளம் காட்டுவேன். அனைத்து வீடுகளிலும் டிவிடி வந்துவிட்டது. குறைந்த செலவில் விசிடியிலேயே திரைப்படங்களைப் பலர் பார்க்கலாம். எனவே நீங்கள் (திரையுலகினர்) ஏன் தியேட்டருக்குப் போக சொல்கிறீர்கள்?

தியேட்டர்கள், திருமண மண்டபங்களாக மாறுவதாக ஒருவர் கூறினார். என்னைப் பொறுத்தவரை சினிமா தியேட்டர்கள் அனைத்தும் திருமண மண்டபங்களாக மாற வேண்டும் என்றுதான் சொல்வேன். திரைத்துறையைச் சேர்ந்தவர்களே சிடியைத் தயாரித்து மக்களுக்கு விற்கலாம்.

நான் சினிமாவுக்கு விரோதி என்கிறார்கள். அப்படியிருந்தால் நான் ஏன் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்? மக்கள் நல்ல படங்களை ரசிக்கவில்லை என்று கூறாதீர்கள். நீங்கள் காட்டுவதை மட்டுமே மக்கள் எப்படி ரசித்துக் கொண்டிருப்பார்கள். மாற்றத்தை நீங்கள்தான் கொண்டு வர வேண்டும்.

டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், திரைப்படக் கல்லூரி மாணவர்களிடம் பேசியது...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com