கடலுக்கு ஒரு மடல்
பாலைவனமாய் இந்தப் பாரகம் மாறிடாது
சேலையாய் புவிதன்னைச் சுற்றி நிற்கும் வேலி நீ, ஓர்
காலையில் கரைமீறி கடுஞ்சினத்தால் தீதிழைத்த
வேலையே! இன்றுனக்கு ஓலையொன்று விடுத்திடுவேன்.

அலைபாயும் நெஞ்செனவே ஆர்ப்பரித்து ஆடிடினும்
நிலையுணர்ந்துன் எல்லைதனை நீயே அமைத்திடுவாய்
நிலமகளின் அடி வருடி சிறு மகவாய்க் கொஞ்சிடுவாய்
நிலை மறந்து பொங்கியதேன் நீள்கடலே நீயுரைப்பாய்.

நித்தில வகைகள் பல கோடியுண்டு உன்னகத்தே
முத்துடனே போட்டியிடும் நற்பவளம் பற்பலவாம்
இத்தனையும் போதாவோ? பெருங்கடலே எங்களுடை
ரத்தினமாம் மக்களை நீ கவர்ந்திடப் பேராசை கொண்டாய்.

தாய்தந்தை தமையிழந்து தவித்திடுவோர் ஓர்புறமும்
சேயர்க்கும் சிறியோர்க்கும் கடன் கழிப்பார் ஓர் புறமும்
பேயலையே உன் வீச்சால் பொருளிழந்தார் ஓர் புறமும்
மாய விளையாட்டுனக்கு; மரண அடி எந்தமக்கு!

என்றோ ஓர் நாளில் யுகமுடியும் என்றிடுவார்;
இன்றந்த நாளின் சுவை கொஞ்சம் காட்டினையோ?
பொன்றுந்துணையும் பெருவடவைக் கனலெனவே
குன்றா எரி நெஞ்சில் மூட்டினையே குரை கடலே?

ஆழ் நெஞ்சின் சீற்றத்தை அலையாய் அனுப்பிவிட்டு
ஊழிக் கூத்தாடி விட்டாய் உவரியே நீ ஓர் நொடியில்
பாழ்பட்ட புவி நிமிர்த்த பலகரங்கள் உதவிடுமே
ஆழியே எம் சாதனை நீ அமைதியுடன் கண்டிட வா!

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com