ரோபாட் ரகளையின் ரகசியம் - (பகுதி 1)
Silicon Valley-இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான். ஷாலினி ஸ்டான்·போர்டு மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இப்போது ரோபாட் ரகளையின் ரகசியத்தை சூர்யா எப்படி வெளிப்படுத்தினார் என்று பார்ப்போம்.

கிரண், ஷாலினி வீட்டில் தீபாவளி விருந்து - சிறப்பு விருந்தினராக சூர்யா மட்டுமே! விருந்து படு பிரமாதம். கிரணின் அம்மா பல்வேறு வகையான வெகு சுவையான தின்பண்டங்களைத் தயார் செய்து ஜமாய்த் திருந்தார். TV-யில் எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்களின் தேனமுது பாடல்கள் திரையொளித்துக் கொண்டிருந்தன. சூர்யாவைவிட வயதில் மூத்தவரான நண்பர் முரளி, கங்கா ஸ்நானம் செய்துவிட்டு, புதுப் பட்டுவேஷ்டி, ஜிப்பா, அங்கவஸ்திரம் என்று தமிழ்ப் பண்பாடாகவே காட்சியளித்தார். அவர் மனைவி பத்மாவோ கேட்கவே வேண்டாம். பளபளவெனப் பட்டுப் புடவையும் உடலெங்கும் மினுக்கிய தங்க, வைர நகைகளுமாக தன லக்ஷ்மியாகவே காட்சியளித்தாள். (முரளி வழக்கறிஞராயிற்றே, செல்வத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன) கிரணும் ஷாலினியும் கூடக் காலையிலேயே எழுந்து எண்ணை தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்து, தீபாவளி மருந்தைக் முகச்சுளிப்புடன் விழுங்கி, பண்டிகைக் கோலம் பூண்டிருந்தனர்.

எல்லாமாய்ச் சேர்ந்து சூர்யாவை அவரது சிறு வயது தீபாவளி நாட்களுக்கு இழுத்துச் சென்றுவிட்டன. காலை நாலு மணிக்கு எழுந்து அவசர அவசரமாகத் தலை முழுகி விட்டு, புது அரைநிஜார் அணிந்து, பக்கத்து வீட்டுச் சிறுவனை முந்திக் கொண்டு எலக்ட்ரிக் பட்டாஸ் சரத்தை வெடித்து, வீதியிலேயே முதலில் நரகாசுரனைக் கொன்ற பெருமிதம் அடைந்த நினைவுகள் அலைகளாக மனத்தில் ஓடின.

பத்மாவின் குரல் சூர்யாவை மீண்டும் தற்போதைய அமெரிக்கத் தீபாவளிக்கு இழுத்தது. "சூர்யா, என்ன கூப்பிட்டாக் கேட்காம கனவுலகத்துலயே சஞ்சரிக்கப் போயிட்டீங்க. கிரண் மாதிரி சொன்னா 'எர்த் காலிங் சூர்யா, எர்த் காலிங் சூர்யா'ன்னு கூப்பிடணும் போலிருக்கு."

சூர்யா தன் கனவுலகிலிருந்து வெளி வந்தார். சிரித்துக் கொண்டு, "ஓ அதுவா, ஒண்ணுமில்லை உங்க சமையல் வாசனை யும், இந்த தீபாவளிச் சூழலும் என்னைச் சின்ன வயசு ஞாபகத்துக்கு இழுத்திட்டுப் போயிடுச்சு, அவ்வளவுதான்" என்றார்.

பத்மா ஆமோதித்தாள். "ஆமாம் சூர்யா, இந்த மாதிரிப் பண்டிகை நாளுன்னா சின்ன வயசு ஞாபகம் ரொம்ப வந்திடுது. எனக்கு அது ரொம்ப நவராத்திரி நாளில தான். அடுத்தது தீபாவளி. அப்புறம் மார்கழித் திருப்பாவை, அப்புறம் பொங்கல் ... ஊம்..." பெருமூச்செறிந்தாள்.

முரளி இடைமறித்தார். "போச்சுடா. ஆரம்பிச்சுட்டயா உன் பண்டிகை நாஸ் டால்ஜியா புராணத்தை? சூர்யா இதைக் கேட்டுக் கேட்டு என் காது புளிச்சே போயாச்சு. எனக்குந்தான் கில்லி, கோலி, பம்பரம் ஞாபகம் வருது. அதுக்காக இப்பப் போயி ஆட முடியுமா? நினைச்சு நினைச்சு ஆனந்தப்பட்டுக்க வேண்டியதுதான்" என்றார்.

பத்மா தோளை முகவாயில் இடித்துக் கொண்டு பழித்தாள். "உக்கும்! நான் சொல்லிட்டா புராணம்னுடுவீங்க. நீங்க மணிக்கணக்கா உக்காந்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்னு வீடியோவா பாத்துத் அரைச்ச மாவையே அரைச்சுத் தள்ளுவீங்க" என்றாள்.

முரளி கையை உயர்த்திக் காட்டி, போலிச் சரணாகதி அடைந்தார், "சரி, சரி, பழைய புராணம் இல்லை, வேண்டியதுதான், ஒத்துக்கறேன், என்னை விட்டுடு. என்ன பண்டிகை சாப்பாடு மெனு இன்னிக்கு? அதைச் சொல்லு, ஒரு கை பாத்துடலாம்" என்றார்.

கிரணும், "ஆமாம் அம்மா? மெனு என்ன? நான் ரெடி, மெகா பசி!" என்றான்.

பத்மா "என்னமோ பெரிசா டிடெக்டிவ்ங்கறயே, என்ன மெனுன்னு நீயே சொல்லேன் பாக்கலாம்" என்று பலப்பரிட்சை வைத்தாள்.

கிரண் குதூகலத்துடன் "ஓஹ்ஹோ அம்மா! என் கிட்டயே சவாலா? சரி பாத்துடறேன்" என்று கூறிவிட்டு சமையலறையை சுற்றி ஒரு நோட்டம் விட்டுவிட்டுப் பட்டியல் போட ஆரம்பித்தான். "சேப்பங் கிழங்கு போட்டு மோர்க் குழம்பு இருக்கு. அப்புறம், இட்லி, வடை இருக்கு. சரியா?" என்றான்.

பத்மா மூக்கின் மேல் விரல் வைத்தாள். "அட! பரவாயில்லயே. என் பிள்ளை நல்ல துப்பறிவாளன்தான். இன்னும் என்ன இருக்கு சொல்லு பார்க்கலாம்" என்றாள்.

கிரண் ஜகா வாங்கினான். "அய்யய்யோ இதுக்கு மேல துப்பறிஞ்சா என் மூளை உருகியே போயிடும். அப்புறம் லேடஸ்ட் வீடியோ கேம் எப்படி விளையாடறது. ஆனா, என்னோட உதவியாளர் மிஸ்டர் சூர்யா இருக்காரு, அவர் உங்களை கவனிச்சுப்பார். சூர்யா, இந்தம்மாவோட கேஸ் என்னன்னு விசாரிச்சு கவனியுங்க" என்று சூர்யாவிடம் தள்ளிவிட்டு நழுவினான்.
பத்மா விளையாட்டாகச் சூர்யாவை ஏறிட்டுக் கேள்விக் குறியுடன் பார்த்தாள். "நீங்க என்ன சொல்றீங்க சூர்யா?"

சூர்யாவும் விளையாட்டில் இறங்கினார். "ஹ¥ம், இது வித்தியாசமாத்தான் இருக்கு! கிரண் கிட்சன் சிங்க்ல கிடக்கற தோலையும், ஸ்டவ் மேல இருக்கற வாணலி, குக்கரை வச்சு ரொம்ப வெளிப்படையாத் தெரியறதை வச்சு உடனே சொல்லிட்டான். ஆனா ஒவனுக்குள்ள இருக்கறதெல்லாம் சொல்லலை. பால் போளி செஞ்சிருக்கீங்க போலிருக்கு. தனிப் பருப்பு. அப்புறம் தக்காளி போட்ட பருப்பு ரசம். கூட பீன்ஸ் கறி. இனிமேத்தான் அப்பளமும் அரிசி வடாமும் பொரிக்கப் போறீங்க. சரியா?"

பத்மா ஆச்சர்யத்தில் வாய் பிளந்தாள். "அய்யய்யோ! கன கச்சிதமா ஒரு அயிட்டம் விடாம பிச்சி உதறிட்டீங்க! எப்படி அது?" என்று கூறியவள் திடீரென எதோ எண்ணம் உதிக்கவே, அருகில் நின்ற ஷாலினியைச் செல்லமாக ஒரு தட்டுத் தட்டினாள். "ஏய்... நான் நம்ப மாட்டேம்பா. ஷாலினி நீதானே சூர்யாவுக்கு மெனு எல்லாம் ஏற்கனவே சொல்லிட்டே?" என்றாள்.

ஷாலினி முறுவலித்தாள். "நிச்சயமா இல்லை அம்மா. எனக்கே தெரியாது! உனக்குத் தான் தெரியுமே, நான் எழுந்தப்புறம் சமையல் ரூம் பக்கத்துலயே வரலயே. பாக்கப் போனா சூர்யா தான் எனக்கும் முதல்ல வந்து நின்னார். பந்திக்கு முந்திக்கிட்டார் போலிருக்கு. நீ அவரையே கேட்டுக்க எப்படி கண்டு பிடிச்சாருன்னு" என்றாள்.

கிரண் இடைமறித்து "என்ன அம்மா, சூர்யா அடிச்சதைப் பாத்து அசந்து போயிட்டயா? சரி நான் சிலதுக்கு விளக்கம் சொல்றேன். இங்க பாரு, அடுப்பு மேல வாணலியில எண்ணை இருக்கு. பக்கத்துல வடை மாவு மூடியிருக்கு. அதுனால வடை செய்யப் போறேன்னு நான் சொன்னேன். அதுக்கும் பக்கத்துல பெரிய பாத்திரம் காலி, அதுக்குப் பக்கத்துல அப்பளக் கட்டு இருக்கு. அதை வச்சுத்தான் சூர்யா அப்பளத்தைப் பிடிச்சிருக்காரு. அங்க பாரு கட்டிங் போர்டு மேல தக்காளி. அடுப்பு மேல குக்கர் இன்னும் புஸ்ஸ¤ன்னு ஆவி விட்டிண் டிருக்கு. அதை வச்சுப் பருப்பு, அதோட ரசம். இன்னும் சிலது எப்படி யூகிச்சார்னு எனக்கே புரியலை அதை சூர்யாவைத்தான் கேட்கணும். சூர்யா!"

முரளியும், பத்மாவும் கூட சேர்ந்து கோரஸ் பாடினர். "ஆமாம் சூர்யா, கொஞ்சம் விளக்குங்களேன். உங்களைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச எங்களுக்கே ஆச்சர்யம் தாங்கலை."

சூர்யா விளக்கினார். "பார்க்கறத்துக்கும், கவனிக்கறத்துக்கும் வித்தியாசம் இருக்கு. சில விஷயங்களை ரொம்பக் கூர்ந்து கவனிச்சாத் தெரிய வருது. உதாரணமா கிரண் சொன்ன அப்பளக் கட்டு. அவன் அதை முதல்ல யூகிக்கறச்சே கவனிக்கலை. ஆனா கவனிக்கறத்துக்கும் மேலே ஒண்ணு இருக்கு."

"எல்லாமே கண்ணுக்குத் தெரியறதை வச்சுத்தான் யூகிக்கணும்னா நிறைய விஷயங்கள் தப்பிப் போயிடும். கவனிச்சதையும், அதோட நமக்கு ஏற்கனவே தெரிஞ்ச பல மாதிரி விவரங்களையும் சேர்த்துப் பார்த்து, அதுக்கும் மேல கொஞ்சம் கற்பனையையும் நீட்டினாத்தான் சில விஷயங்கள் தெரிய வரும். உதாரணமா, பால் போளியைப் பத்தி சொன்னது. நான் கவனிச்சது அதோ இருக்கற காலிப் பால் கேனும், அதுக்குப் பக்கத்துல கெடக்கற சூஜி ரவை பேக்கட்டும். அதை வச்சு மட்டும் போளி செஞ்சிருக்கீங்கன்னு சொல்லிட முடியாது. ஆனா இன்னிக்குத் தீபாவளி. எதோ ஸ்வீட் செஞ்சிருக்கணும். வடையும் அப்பளமும் இன்னும் செய்யலை. ஆனா வாணலியில வழிஞ்சிருக்கற எண்ணெய், சமையலறை வாசனை, ஓடற ஸ்டவ் எக்ஸாஸ்ட் ·பேன் இதெல்லாம் வச்சுப் பார்த்தா பால் போளிக்கான பூரிகள்தான் பொரிச்சிருக்கணுங்கற தீர்மானத்துக்கு வந்தேன்."

முரளி புகுந்து, "பிரமாதம்! அது சரி, பீன்ஸ் கறி? அதை எப்படி கண்டு பிடிச்சீங்க?!" என்றார்.

ஷாலினியும், "ஆமாம் சூர்யா, எனக்கும் கூட ஆச்சர்யந்தான். அதுக்கான க்ளூ ஒண்ணுமே இருக்கறா மாதிரித் தெரியலையே?!" என்றாள்.

சூர்யா தலையாட்டிக் கொண்டு விளக்கினார். "நீ சொல்றது சரிதான். இப்ப வெளியில ஒண்ணும் இல்லைதான். ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னால பத்மா எதையோ குப்பை போடறத்துக்கு அந்த கார்பேஜ் காம்பேக்டர் கதவை இழுத்துத் திறக்கறச்சே பீன்ஸ் நுனிகள் எல்லாம் கிள்ளிப் போட்டிந்தது கண்ணுல பட்டுது. அதை வச்சு ஒரு யூகந்தான்! என்ன சரியா பத்மா?"

பத்மா கைகொட்டி ஆரவாரித்தாள். "ஜமாய்ச்சிட்டீங்களே! சரி, சரி, என் சமையலை ஆராய்ஞ்சு துப்பறிஞ்சது போதும். பேசிக்கிட்டிருங்க, இதோ ஒரு நிமிஷத்துல முடிச்சுட்டுக் கூப்பிடறேன்" என்றாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அனைவரும் பத்மாவின் அற்புதமான விருந்துச் சாப்பாட்டை உண்ண ஆரம்பித்தனர். பத்மா தாயன்புடன் கிரண், ஷாலினியுடன் சேர்த்து சூர்யாவுக்கும் வற்புறுத்தி, போதும் போதும் என்றாலும் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் மேலும் மேலும் பறிமாறித் திணித்தாள். அவர்கள் ரசித்து உண்பதைக் கண்டு மகிழ்ச்சியிலும் திளைத்தாள்.

ஆனால் அதே தாயன்பு உந்தியதால் சூர்யாவின் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சோகத்தையும் கிளறிவிடும் கேள்வியை எழுப்பி விட்டாள். ஷாலினிக்கு சூர்யாவின் மேலிருந்த நேசம் அந்த தாய் மனத்துக்குத் தெரியாதா என்ன? "சூர்யா, இன்னும் எவ்வளவு நாள்தான் நடந்து போனதையே நினைச்சுகிட்டு இப்படித் தனிக்கட்டையாக இருக்கப் போறீங்க? சுனிதாவும் குழந்தையும் விபத்துல போய் பல வருஷம் கடந்து போயாச்சே? இப்பவாவது இன்னொரு நல்ல பெண்ணாப் பார்த்து..." சூர்யாவின் முகத்தில் எழுந்த சோகத்தையும், ஷாலினி யின் முகத்தில் எரிந்த கோபத்தையும் கண்டதால் பட்டென்று அடுத்த வார்த்தையை விழுங்கிக் கொண்டு நிறுத்தினாள். கிரணும் அதிர்ச்சி யுடன் உண்பதை நிறுத்தி விட்டு அம்மாவைப் பார்த்தான்.

முரளி மட்டும், மனைவியை நன்கு அறிந்திருந்ததால் அவளுடைய நோக்கத்தை உடனே புரிந்து கொண்டு அவளை ஊக்குவிப்பது போல் தலையாட்டி முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அதனால் பத்மா தொடர்ந்தாள், "நல்ல நாளும் அதுவுமா இந்த விஷயத்தை ஏன் இவ எடுக்கறான்னு நீங்க எல்லாம் பார்க்கறது புரியுது. ஆனா எனக்கென்னவோ இதே நல்ல நாளிலதான் பழசை மறந்து புது வாழ்க்கையைப் பத்தி யோசிக்க ஆரம்பிக்கறது நல்லதுன்னு தோணுது. ஏன்னா இது ஒருத்தரோட வாழ்க்கைப் பிரச்சனை மட்டும் இல்லையே? மத்தவங்களோட நிலைமையையும் யோசிக்கணும் இல்லையா? நான் சொல்றது சூர்யாவுக்கு நல்லா புரியும்னு நினைக்கிறேன். இவ்வளவு திறமையான துப்பறிவாளருக்கு இது கூட யூகிக்காம இருக்க முடியாது" என்றாள்.

ஷாலினி கொதித்தே விட்டாள். "என்ன அம்மா இது? கொஞ்சம் கூட நாசூக்கில்லாம? இப்பப் பேச வேண்டிய விஷயமா இது? அதை விடவும், நீங்க இதுல தலையிடக் கூடாது. இது சூர்யாவோட சொந்த விஷயம்..." என்று மேலும் எதோ பொரிந்துத் தள்ளப் போனவளை நிறுத்த முயன்ற சூர்யாவின் கை அவள் கையின் மேல்பட்டு சட்டென்று நிறுத்தியது. அந்த ஸ்பரிசத்தின் உணர்ச்சி ஷாலினியின் அங்கம் முழுவதும் தாக்கவே அந்த உணர்விலேயே மூழ்கி மெளனமாகிப் போனாள்.

அதை உணர்ந்து கொண்ட சூர்யா கையை உடனே விலக்கிக் கொண்டு சோகப் புன்னகையுடன் பத்மாவுக்குப் பதிலளித்தார். "பத்மா, நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது. இன்னிக்கு நீங்க இந்த விஷயத்தைப் பத்திப் பேச்சு எடுத்ததுல எனக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை. உங்க இடத்துல நான் இருந்தா இன்னும் பலமாவே பேசியிருப்பேன். ஆனா நான் என் இடத்துல இருக்கேன். என் இடத்துல, என் மனத்துல இன்னும் சோகத் திரை விலகலை. பல வருஷமானாலும் அந்தப் பனிமூட்டம் முழுவதும் கலையலை. இந்தச் சமயத்துல நான் சரியான துணையாக இருக்க லாயக்கில்லை. ஆனாலும் சமீப காலமாக உங்கள் எல்லாரோட உதவியால நான் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்துக் கிட்டுதான் இருக்கேன். இதே திக்குல இன்னும் கொஞ்சகாலம் போனா என் மனம் நீங்க சொல்ற அடுத்த படிக்குத் தயாராக வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன். அதுவரைக்கும் நான் தனிமரமா இருக்கறதுதான் எல்லாருக்கும் நல்லது" என்று ஷாலினியை அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டே கூறி, மீண்டும் மெளனமானார்.

அந்த மெளனத்தில், சூர்யாவில் வாக்கும், குரலின் தோரணையும், அவரது பார்வையும் காட்டிய அந்த சிறு ஒளிக் கீற்று ஷாலினிக்குப் பளிச்சென்று பகலவன் கிரணம் வான் முழுதும் வீசியது போல் தோன்றி மகிழ்ச்சி அளித்தது. தன்னைச் சுற்றிப் பலவண்ண நறுமலர்கள் வாசம் வீசியது போலவும், குயில்கள் சுற்றி வந்து கீதம் பாடியது போலவும் உணர்ந்து குளிர்ந்து போனாள்.

நிலைமையை உணர்ந்த கிரண் மீண்டும் குதூகலமேற்றுவதற்காக மெளனத்தைக் கலைத்தான். "சரி, அதை விட்டுட்டு இன்னும் முக்கியமான விஷயத்துக்கு வாங்க. எங்கே டெஸர்ட்? அது உள்ள போயிட்டா நிச்சயமா எல்லாம் இனிப்பாயிடும். கொண்டாங்க!" என்றான்.

அவனது கலகலப்பான வார்த்தைகள் கனத்தை உடைக்கவே, எல்லாரும் சிரித்தனர். பத்மா கிரணை விளையாட்டாக ஒரு முறை தட்டிவிட்டு பால் போளியைக் கொண்டு வந்தாள்.

அதை ஒரு கை பார்த்துவிட்டு அனைவரும் உஸ்ஸென்று ஆசுவாசப் பெருமூச்சுடன், நகர முடியாமல் உணவு மேஜையின் நாற்காலிகளிலேயே அமர்ந்திருந்தனர்.

முதலில் எழுந்தவர் முரளிதான். "அப்பாடா, நான் போய் என் ·புட்பால் கேம் பார்த்து கிட்டே அப்படியே தூங்கப் போறேம்பா. இந்தச் சாப்பாட்டை இப்படி வெளுத்து வாங்கிட்டு மத்தியானம் தூங்கினா, அடடா! அந்த சுகமே அலாதிதான்" என்று தூங்கப் போகும் ஆனந்தத்தை ரசித்தபடி நடக்க முடியாமல் நடந்து சென்று விட்டார்.

அடுத்தபடி பெருமூச்சுடன் பத்மா எழுந்தாள். "போயிட்டாரு பாருங்க சூர்யா! ஒரு கரண்டியைக் கூட நகர்த்தி ஸிங்க்ல போடலை. கிரண், ஷாலினி நீங்களாவது உதவி பண்ணுங்க வாங்க" என்று அலுத்துக் கொண்டாள். போய்க் கொண்டிருந்த முரளி, "ஓ ஸாரி, உண்ட மயக்கம்; தொண்டனாகத் தோணலை. சரி, எல்லாத்தையும் எடுத்து வைக்கலாம் வாங்க" என்று திரும்ப வந்தார். சூர்யாவும் பாத்திரங்களை அகற்ற உதவ ஆரம்பித்தார்.

பத்மா அவரைத் தடுக்கப் பார்த்தாள். "என்ன சூர்யா இது நீங்க எங்க கெஸ்ட். நீங்க செய்யக் கூடாது. அதிதி தேவோ பவ!" என்றாள். சூர்யாவோ, "சே, சே! நீங்க எல்லாம் வேலை செய்யறச்சே நான் எப்படி சும்மா பார்த்துக்கிட்டிருக்கறது" என்று மறுத்துவிட்டு மும்முரமாக உதவினார்.

கிரணோ கஷ்டப்பட்டு அலுத்துக் கொண்டே எழுந்தான். "சே! இந்த வேலையெல்லாம் நாம ஏன் செய்யணும்? வீட்டு வேலை செய்ய ஒரு ரோபாட் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். நல்லாத் தின்னுட்டு கவலையே இல்லாம எடுத்து வைன்னு ஒரு கட்டளை போட் டுட்டுப் போயி நம்ம கேம் விளையாடறதைக் கவனிக்கலாம். சொல்லாமயே, தானே தெரிஞ்சுகிட்டுச் செஞ்சுட்டா இன்னும் தேவலாம்" என்றான்.

அம்மாவுக்கு உதவிக் கொண்டிருந்த ஷாலினி கிரணைச் செல்லமாகத் திட்டினாள். "ஏய் கிரண்! நீ ஒரு சுத்த சோம்பேறி. இப்படியே இருந்தேன்னா ஒரு ரோபாட்டோடயேத்தான் வாழ்க்கை நடத்தணும். எந்த புதுமைப் பொண்ணும் உன்னோட குடும்பம் நடத்த மாட்டா" என்றாள்.

கிரண் போலியாக முகம் சுளித்து பழித்துக் காட்டினான்! "அய்யே! அவங்க உன் நண்பிகள் மாதிரின்னா யாருக்கு வேணும்? ரோபாட்டே தேவலாம்பா! நமக்கு வேணும்படி இருக்கலாம். ஆனாலும் ரொம்பக் கவலைப்படாதே. அம்மாவைக் கேட்டா பாவம் கவலைப் படறா--எனக்கு ரொம்ப லவிடவிஸ் கிட்டேந்து ·போன்கால் வந்துக்கிட்டே இருக்கு, நான் அவங்களில யாரையாவது இழுத்திண்டு வந்துடுவேனோன்னு"

பத்மா, "சரி, சரி அக்கா தம்பி சண்டை திரும்பவும் ஆரம்பிச்சாச்சா? அதை நிறுத்திட்டு, எதோ வீட்டு வேலைக்கு ரோபாட்டுன்னயே அதைப்பத்திச் சொல்லு. வாங்கிப் போட்டா என் பாடாவது கொஞ்சம் தீரும். இந்த மெக்ஸிகன் வேலைக்காரியோட வாரம் ஒரு தடவை இங்கிலிஷ்ல சொல்லிப் புரிய வைக்கறத்துக்குள்ள உசிரு போறது. மேலும் தினமும் இந்த மாதிரி டிஷ் வாஷரோட போராட வேண்டியிருக்கு" என்றாள்.

கிரண், "ஆமாம்மா. நான் ஒரு வெப் ஸைட்ல படிச்சேன். ஆனா ரோபாட்னா எல்லாத்துக்கும் கண்ணு கை கால் எல்லாம் இருக்கணும்னு கிடையாது. கார்ப்பெட் சுத்தம் செய்ய ரூம்பா அப்படின்னு ஒரு ரோபாட் வந்திருக்கு. வெறும வட்டமா தட்டு மாதிரி இருக்கு அவ்வளவுதான். ஆரம்பிச்சு விட்டுட்டா வீடு பூரா சுத்தி வந்து கார்ப்பெட் வேக்குவம் பண்ணிடும். சோ·பாவுக்கு அடியில கூட போயி செய்யுது! விலையும் ரொம்ப ஒண்ணுமில்லை முன்னூறு டாலருக் குள்ளதான்" என்றான்.

பத்மா ஆச்சரியப்பட்டாள். "வாவ்! முரளி, எனக்கு கல்யாண நாள் பரிசு. இப்பவே எழுதி வச்சுக்குங்க" என்று கூவினாள்.

கிரண், "பட்டுப் புடவை, நகைக்கு பதிலாவா? அட, பரவாயில்லயே!" என்றான்.

ஷாலினி அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். "பாத்தியா, இதுக்குத் தான் சொன்னேன் உனக்குப் பொண்ணுங்க சரிப் படமாட்டாங்கன்னு. இது அதுக்கு பதிலா இல்லை, அம்மா தன் கி·ப்ட் லிஸ்ட்டுல சேர்த்திருக்கா, அவ்வளவுதான்" என்றாள்.

கிரண் சோகமாகத் தலையாட்டிக் கொண்டு, "அம்மாடியோவ். எதைச் சொன்னாலும் ஆபத்து போலிருக்கு. நல்ல வேளை நான் மத்த விலையதிகமான ரோபாட் பத்திச் சொல்லலை. அப்பா எனக்கு செமத்தியா அர்ச்சனையே செஞ்சிருப்பாரு" என்றான்.

பத்மா, "அதெல்லாம் ஒண்ணுமில்லை. இந்த மாதிரி எலக்ட்ரானிக் சாமானுன்னா நான் வேணாம்னாலும் மொதல்ல வாங்கிண்டு வந்து நிக்கறது உங்க அப்பாதான். நல்லா சொல்லிக்கோ" என்றாள்.

சூர்யா முறுவலித்தார். "நீங்க சொல்றது சரிதான். இந்த மாதிரி கேட்ஜட் சமாசாரம் எல்லாம் ஆண்களுக்குத்தான் இன்னும் சுவாரஸ்யம். கிரண் நீ ரோபாட்னு சொன்னவுடனே ஞாபகம் வந்தது. என் ஜப்பானிய நண்பர் சுமிடோமோன்னு ஒருத்தர் இருக்காரு. அவர் நேத்துத்தான் மின்னஞ்சல் போட்டிருந்தாரு. அவரோட ரோபாட் ஆராய்ச்சியகத்துல எதோ குளறுபடியாம். நாம வந்து உதவி செய்ய முடியுமான்னு கேட்டிருக்காரு. என்ன எடுத்துக்கலாமா?" என்றார்.

கிரண் எகிறிக் குதித்தான். "என்ன, எடுத்துக்க...லாமாவா? வாங்க ஓடலாம். சும்மா ஸ்டாக் வாங்கி வித்து மூளையே புளிச்சுப் போயிருக்கு. அதுவும் இது ரோபாட் பத்தி. எவ்வளவு சுவாரஸ்யமான விஷயம்! வாங்க, கிளம்புங்க உடனே. இன்னிக்கு இருப்பாரா? போயி விசாரிக் கலாம்" என்று படபடத்தான். சூர்யா "ஊம், இருப்பார். சுமிடோமோ வாரம் ஏழு நாளும் ஆ·பீஸ் தான் கதி" எனவே கிரண் "சரி வாங்க நான் கார் ஸ்டார்ட் பண்றேன்" என்று ஓடியே விட்டான்.

சூர்யாவும் எழுந்து மற்றவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு கிரணுக்குப் பின்னால் விரைந்தார். அவர்களுக்கு முன்னால் விரிந்தது மனிதர்களை மறைத்து ரோபாட்கள் உலாவிய ஒரு மாய உலகு!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com