இன்றைக்கும் அவசரம். மணி எட்டு. வேலைக்கு நேரமாகி விட்டது. வெளியே வாஷிங்டன் நகரத்துக்கே உரித்தான ஐஸும் மழையும் சேர்ந்த கலவை வானிலிருந்து சரம் சரமாகக் கீழிறங்கி சாலைகளை மூடிக் கொண்டிருந்தது.
மலைபோல் குவிந்திருந்த வேலைகளை எண்ணிப் பார்த்தேன். அலுவலகத்தில் இன்று எங்கள் பிரதான கஸ்டமருடன் சிக்கலான சில விஷயங்களை அலசித் தீர்வு காண்பதற்காக ஒரு முக்கியமான மீட்டிங்கை ஏற்பாடு செய்திருந்தேன். சுமுகமாக முடியவில்லை என்றால் 'தலை வெடித்தாலே தேவலை' என்றாகிவிடும். மாலையில் வரும் வழியில் சனிக்கிழமை விருந்துக்கான காய்கறிகளும் பொருட்களும் வாங்கவேண்டும். போன வாரம் ஆர்டர் கொடுத்து, நேற்று தயாராகக் கடைக்கு வந்துவிட்ட புத்தக அலமாரியை வாங்கி வரவேண்டும். இத்தனைக்கு நடுவில் ஐஸ்மழையில் வண்டியை ஜாக்கிரதையாக வழுக்காமல் மோதாமல் ஓட்டும் கவலை வேறு.
தோள்பையையும் வண்டிச் சாவியையும் எடுத்துக்கொண்டு அபார்ட்மென்ட்டைப் பூட்டிக்கொண்டு கீழே வந்தேன். இன்றென்று சொல்லி வைத்தாற்போல் வயதான வண்டி நடுக்கும் குளிரில் ஒத்துழைக்க மறுத்தது. தொண்டையைச் செறுமியது. இருமியது. நின்றேவிட்டது. விசேஷம். முன்பே தெரிந்திருந்தால் அவருடனாவது கிளம்பிப் போயிருக்கலாம், இப்போது டாக்சியை விட்டால் வேறு கதியில்லை. செல்ஃபோனில் டாக்சி கம்பெனியுடன் தொடர்பு கொண்டு விட்டு, லாபியில் உள்ள நாற்காலியில் அமர்ந்து, டாக்சியின் வருகையை எதிர்பார்க்கலானேன்.
பத்துப் பதினைந்து குழந்தைகள் பள்ளிப் பேருந்துக்காக லாபியில் காத்திருந்தார்கள். சில குழந்தைகள் வெளியே நனைந்துகொண்டே தரையில் குவிந்திருந்த பனிக்கட்டிகளைக் கைகளால் அளைந்து கொண்டிருந்தனர். எத்தனை சந்தோஷம்! வாழ்க்கை இப்படியே இருந்துவிட்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும், எட்டரையாகி விட்டது. டாக்சியைக் காணவில்லை.
முதலில் விசும்பல் கேட்டது. பிறகு அந்த அமெரிக்கப் பையன் இன்னொரு அபார்ட்மென்டிலிருந்து தயங்கியபடியே வந்தான். ஆறு ஏழு வயதிருக்கும். மழையிலிருந்து காப்பதற்காக ஒரு மஞ்சள் ரெயின்கோட் அணிந்திருந்தான். அதே நிறத்தில் தலை நனையாமல் இருக்க ஒரு தொப்பி. முதுகில் புத்தகங்கள் அடங்கிய பை. வலது கையிலொரு குடை. இடது கையில் மதிய உணவுப் பை. கையிலும் பாரம், மனதிலும் பாரம். சுமக்க முடியாமல் நடந்து வந்தான். என்னிடமிருந்து ஐந்தடி தூரத்தில் இன்னொரு நாற்காலியில் அமர்ந்தான். அழுது அழுது கண்கள் சிவந்திருந்தன. துக்கம் இன்னும் நெஞ்சை அடைக்கிறது போலும். அடக்கிய அழுகையில் உதடுகள் நடுங்கின. கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. பிற குழந்தைகள் இவனைத் துளியேனும் கண்டுகொள்ளவில்லை.
பாவமாக இருந்தது. எதற்கு இத்தனை அழுகை? பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல் அடம் பிடித்த அழுகையா? ஏதாவது சேட்டை செய்து பெற்றோரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பானோ? ஆமாம், என்னதான் தப்பு செய்திருந்தாலும் இவ்வளவு அழும் குழந்தையை சமாதானப்படுத்திப் பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட ஒரு தாயோ தந்தையோ வரமாட்டார்களோ? இது என்ன கல்நெஞ்சம்? பூம்பிஞ்சே... ஒருவேளை அவர்கள்தான் உன் சோகத்திற்குக் காரணமோ? "எதற்காக அழுகிறாய்?" என்று கேட்டு அவனை அரவணைத்துக் கண்ணீரைத் துடைக்க வேண்டும் போலிருந்தது, ஒரு ஸ்பானிஷ் சிறுமியும் அவளுடைய அம்மாவும் வந்தார்கள். அந்தச் சிறுமி அவனை அடையாளம் கண்டு கொண்டாள். அவளுடைய அம்மா அவளிடம் ஸ்பானிஷில் ஏதோ சொல்ல, அச்சிறுமி ஆங்கிலத்தில் அவனிடம் "என்னாச்சு?" என்றாள். அவனுக்கோ குரலே எழவில்லை. மீண்டும் கேட்டபின் விம்மல்களுக்கிடையே தன் குடையை எங்கள் கண்பார்வை முன் தூக்கிப் பிடித்தான். "எங்கப்பா கோவத்துல என் குடையைத் தூக்கி எறிஞ்சார். அது உடைஞ்சு போச்சு. பாரு... இங்க ... உ... டை... ஞ்... சு... போச்சு." என்று சுட்டிக் காண்பித்தான். கூர்ந்து பார்த்தேன். குடையின் கைப்பிடி மிக்கி மவுஸின் வடிவமாகச் செய்யப்பட்டிருந்தது. அழகான குடை. விட்டெறிந்திருந்த வேகத்தில் மிக்கியின் இடது காதும் கன்னமும் பிளந்து, காணாமல் போயிருந்தன. அது உடைந்ததால் ஏற்பட்ட வலியை நினைத்து அவனுக்கு அழுகை மீண்டும் பீறிட்டது. அவன் கை தன்னையறியாமல் அந்த மிக்கி மவுஸைத் தடவிக்கொண்டே இருந்தது.
தேம்பித் தேம்பி அழும் அவனைப் பார்த்த என் மனம் அல்லாடியது. அவன் வேதனை என்னை ஒரே வினாடியில் என் பிள்ளைப் பிராயத்துக்கு இட்டுச் சென்றது. எனக்கு மிகவும் பிடித்த பென்சில் ஒன்று உடைந்ததற்கே இரண்டு நாள் சோகமாக இருந்த மென்மனம் படைத்த குழந்தை நான். அவனது மனச்சங்கடத்தை என்னால் முற்றும் உணர முடிந்தது.
குழந்தையின் குடையை விட்டெறிந்து உடைக்குமளவுக்கு ஓர் ஆண்மகனுக்கு அப்படி என்ன கோபம்? இந்த இளந்தளிர் செய்யக் கூடாத காரியத்தைச் செய்ததனால் ஏற்பட்ட கோபமா, இல்லை நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசப்பட்ட விதம் தப்பே செய்யாத குழந்தையைக் காரணமில்லாமல் கண்மூடித்தனமாக அடிக்கும் சிலருக்கு வரும் ஆவேசமா?
அவன் அழுகை என்னைக் கரைத்தது. அவனுக்கு ஆறுதலளிக்க என்ன செய்யலாம், என்ன சொல்லலாம் என்று மனம் அலை பாய்ந்தது. அவனிடம் பேசப்போய், அவன் தந்தை தற்செயலாக அங்கு வந்து, வெளிநாட்டவளான என்னைப் பார்த்துத் தப்புக் கணக்கு போட்டு விட்டால்?
"முன்பின் தெரியாதவர்களிடம் பேசாதே என்று எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்? இங்கே ஏன் வீட்டுக் கதை பேசிக் கொண்டிருக்கிறாய்?" என்று அவனை மேலும் திட்டினால்? அழும் குழந்தையிடம் "ஏம்ப்பா அழறே?" என்று ஒருவர் இயல்பாகக் கேட்பதற்கு முன் இவ்வளவு யோசனை செய்யவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ள இன்றைய சமுதாயத்தின் மாறுகண் பார்வை. செப்டெம்பர் 11 எவ்வளவு விதங்களில் ஒரு கரிய நாளாகிப் போனது!
இதே காட்சியை வேறு கோணத்திலிருந்து பார்த்தால், இந்தக் குழந்தையை இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். யார் கண்டது? இவன் பிடிவாதம் பிடித்து, விதண்டாவாதம் செய்து, பெற்றோரைப் பாடாய்ப் படுத்துபவனாக இருக்கலாம். "ரெண்டு அடி போட்டா, தானா புத்தி வரும்" என்று இவன் அப்பா இவனைக் கண்டித்திருக்கலாம், தண்டித்திருக்கலாம். இந்த நிமிடமே கூட அந்தத் தந்தையின் மனம் பாடுபடலாம். "The Toys" என்ற கவிதையில், "And I, with moan, Kissing away his tears, left others of my own" என்ற வரிகளில், கவிஞர் Coventry Patmore சித்திரித்த கழிவிரக்கம் இந்தக் குழந்தையின் தந்தையையும் ஆட்கொண்டிருக்கலாம். குழந்தை மனதை இப்படி நோகச் செய்தோமே... மாலை அவன் வந்த பிறகு சமாதானப் படுத்தி, சோறு ஊட்டிவிட்டு, கதை சொல்லி, பாட்டுப் பாடித் தூங்க வைப்பேன்." என்று தீர்மானித்திருக்கலாம். ஆம்... அப்படித்தான் இருக்கும்.
டாக்சி ஹாரன் ஒலி உலுக்கியது. நகர மனமின்றி எழுந்து நடந்தேன்.
அலுவலகத்தை அடைந்த பின்னரும் அவனுடைய கண்ணீர்க் கோடுகள் என் நெஞ்சில் நெருடின. காகிதங்களின் சரசரப்பில் விசும்பல்கள் கேட்டன. தப்பு செய்து விட்டேனோ? அவனிடம் பேசியிருக்க வேண்டுமோ?
மீட்டிங் நன்றாக நடந்ததால் சில பெரிய பிரச்சினைகளைக் குறித்து உரையாடி அவற்றிற்கான தீர்வுகளையும் கண்டோம். சிறிது நேரத்தில் வேலை மும்முரம் என்னை முழுமையாக விழுங்கிவிட்டது.
மாலை ஏழரைக்கு அவர் என் அலுவலகத்துக்கு வந்தபோது மழை இன்னும் பெய்து கொண்டுதான் இருந்தது. கடைகள் ஒன்பது மணிக்கு மூடிவிடுமே என்று அவசரமாக விருந்துக்கு வேண்டியவற்றை வாங்கி, அலமாரிக் கடைக்கு விரைந்தோம். அலமாரியை உருவாக்கத் தேவையான மரப் பலகைகளும், கண்ணாடிக் கதவுகளும், ஆணிகளும் ஒரு பெரிய கனமான அட்டைப் பெட்டியில் தயாராக இருந்தன.
வீட்டுக்குப் போய் அதைப் பிரித்து, முறைப்படி அந்த பாகங்களைச் சேர்த்து அலமாரியை அமைக்க வேண்டும். பெட்டியை வாங்கிக் கொண்டு வெளியே வரவும் மழை மேலும் வலுக்கவும் சரியாக இருந்தது. குளிர் கைகளை ஊடுருவியது. இருவரும் அந்த கனமான பெட்டியை சிரமப்பட்டுத் தூக்கிக்கொண்டு இருட்டிலும் முகத்திலடித்த சாரலிலும் ஓடி வண்டியின் ட்ரங்க்கைத் திறந்தோம். அவர் ஒரு கையால் பெட்டியைத் தாங்கி கொண்டும், இன்னொரு கையால் ட்ரங்க்கிலிருந்த இதர பொருட்களை ஓரமாக ஒழுங்குபடுத்திக் கொண்டுமிருந்த வேளையில் மழை நீரால் அவர் கை வழுக்க, பெட்டி சரிய ஆரம்பித்தது. அதன் முழு கனத்தையும் என்னால் உடனே ஈடு கொடுத்துச் சுமக்க முடியாமல் போனதால், அது "ணங்" என்று தரையில் விழுந்தது. உள்ளே இருக்கும் கண்ணாடி உடைந்திருக்குமோ? ஏதோ சத்தம் கேட்க, என் தோள்பை என் தோளிலிருந்து விடுபட்டு நழுவிக் கீழே விழுவதை உணர்ந்தேன். பெட்டி விழும் வேகத்தில் அது என் தோள்பையின் வாரில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். எடை தாளாமல் வார் அறுந்து விட்டது.
"ஐயோ ... என் பர்ஸ் வார் அறுந்து போச்சே!" என்று தவித்தேன். அவர் "பெட்டிக்குள்ள கண்ணாடி ஒடஞ்சிருக்குமோ என்னமோன்னு நான் கவலைப் பட்டுக்கிட்டிருக்கேன். மழை வேற அதிகமா இருக்கு. சீக்கிரம் பெட்டியைத் தூக்கி கார்ல வைப்பியா ... அத விட்டுட்டு, ஏதோ பர்ஸு பர்ஸுன்னு அடிச்சுக்கிறியே?" என்று எரிச்சலுடன் அதட்டினார்.
ஹைவேயில் மௌனத்தின் இறுக்கத்தில் பயணித்தோம். வழி நெடுகிலும் எனக்குத் தோள்பை ஞாபகமே. போனமுறை இந்தியா போனபோது, அக்கா ஆசையாக வாங்கி கொடுத்தது. பார்க்க மிக நேர்த்தியாகவும், எனக்கு வேண்டியவற்றை வைத்துக்கொள்ள வசதியாகவும் இருந்தது. இப்படி அநியாயமாகப் போய்விட்டதே! என் வருத்தம் புரியவில்லை அவருக்கு. "அடடா... போனால் போகிறது. இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம்." என்று அவர் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.
வீட்டுக்கு வந்த பிறகு சமையலறை வெளிச்சத்தில் தோள்பையைப் பரிசீலித்தேன். ஒட்டியோ தைத்தோ அதைச் சரிசெய்ய முடியும் என்று தோன்றவில்லை. பின்புறமிருந்து அவர் என்னை மெல்ல அணைத்து, "நம்ம கல்யாண நாள் அடுத்த வாரம் வருதே, அதுக்குப் பரிசா உனக்கு பிடிச்ச மாதிரி இன்னொரு பர்ஸ் வாங்கித் தரட்டுமா?" என்றார். சட்டென இளகினேன். என் எண்ணங்களைப் புரிந்துகொண்ட கண்ணான கணவர்தான்.
மிக்கி மவுஸ் குடை ஞாபகம் வந்தது. புன்னகைத்தேன்.
நிருபமா மாடபூஷி |