'நஞ்சாகும் உணவுகள்; நல்மருந்தாகும் தாவரங்கள்' என்பதை விளக்கும் வகையில் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்கள் எழுதி, தேநீர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூல் 'சித்தாவரம்'.
'சித்தாவரம்' என்ற யோசிக்க வைக்கும் தலைப்பில் இந்நூலை எழுதியிருக்கும் டாக்டர் பாஸ்கரன், சித்த மருத்துவத்துறையில் பாரம்பரிய அறிவுடன் கூடிய பட்டறிவுப் பின்புலத்தில், நோயாளிகளுடனான தனது அனுபவத்தைக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார்.
நோய் வந்தபின் தீர்க்கும் மருத்துவ முறைகளை மட்டுமல்லாமல், நோய் வராமல் எப்படிக் காப்பது என்பது குறித்த வழிமுறைகளையும் விரிவாக விளக்கியுள்ளார். நூலில் அவர் கூறியிருக்கும் பல செய்திகள் வியப்பைத் தருவதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் அமைந்துள்ளன.
சான்றாக, 'மூட்டுவலி' குறித்துக் கூறும்போது, "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மூட்டுவலி ஏற்படலாம் என்கிறது சித்த மருத்துவம்; சர்க்கரை நோயாளிகளுக்குச் சத்து குறைவினால் அதிகம் மூட்டுவலி ஏற்படும்" என்று குறிப்பிடுகிறார். மேலும், "காய்ச்சல் காரணமாகவும் மூட்டுவலி வரலாம். அல்லது வேறு சில நோய்களுடன் சேர்ந்தும் மூட்டு வலி வரலாம். மூட்டுத் தேய்மானம் அல்லது வாதம் காரணமாகவோ, வீக்கத்துடன் சேர்ந்த கபம் காரணமாகவோ மூட்டுவலி வரலாம். முன்னெல்லாம் 60-70 வயதில் ஏற்பட்ட மூட்டு வலி தற்போதைய சத்தற்ற உணவு மற்றும் நீர் காரணமாகச் சிறு வயதினரையும் பாதிக்கிறது" என்று எச்சரிக்கிறார். அதற்கான சிகிச்சைகள் யாவை, எந்த மாதிரியான மூட்டு வலிக்கு எவ்விதமான சிகிச்சை உகந்தது என்பதையும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் பெரும்பாலானவர்களை பாதித்துக் கொண்டிருக்கும் 'சர்க்கரை நோய்' பற்றி டாக்டர் பாஸ்கரன் கூறும் விஷயங்கள் மலைப்பைத் தருகின்றன. சர்க்கரை நோய் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளைத் தராதாம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான அறிகுறியைக் காட்டுமாம். எல்லா மருந்துகளும் எல்லோரையும் குணமாக்குவதில்லை என்றும், நோயின் மூல காரணத்தை அறிந்து அதற்கேற்ற மருந்துகளை உட்கொண்டால்தான் பலன் ஏற்படும் என்றும் பாஸ்கரன் கூறும் விஷயம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
சர்க்கரை நோய்க்கு மருந்துகள் அளிக்கும்போது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளைப் பொறுத்தே மருந்துகள் அளிக்கப்படுகின்றன என்று கூறும் டாக்டர் பாஸ்கரன், சர்க்கரை நோய் எனப்படும் மதுமேக நோய்க்கு நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளைச் சித்தர்கள் கூறியுள்ளனர் என்றும், ஒவ்வொருவரையும் 'நாடிசோதனை' உள்ளிட்ட பல பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகே பல படி நிலைகளில் மருந்துகள் அளிக்கப்படுகின்றன என்கிறார்.
"உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்"
என்ற குறளுக்கு விளக்கமாக, புற்று மகரிஷி பரம்பரையில் வந்த சித்த மருத்துவர் டாக்டர் பாஸ்கரின் பாரம்பரிய அனுபவம் சார்ந்த பல கட்டுரைகள் இந்நூலில் அமைந்துள்ளன. 'அபானன்' போன்ற கீழ்நோக்கிச் செல்லும் வாயு மேல்நோக்கிச் செல்லும்போது அது பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன என்பதையும் விரிவாக விளக்கியிருக்கிறார்.
எப்படிப்பட்ட நீரை, எந்த வகையில் அருந்த வேண்டும் என்பது முதல், உணவை எப்படி உண்ண வேண்டும் என்பது வரை நூற்றுக்கணக்கான வாழ்வியல் முறைகள் இந்த அருமையான நூலில் விளக்கப்பட்டுள்ளன. 'எல்லாம் மரம்தான் மனிதன் மறந்தான்…' என்பது தொடங்கி 'உடல் ஒரு பொழுதுபோக்குக் கூடம் அல்ல' என்பதுவரை 20 கட்டுரைகள் 'சித்தாவரம்' நூலில் இடம்பெற்றுள்ளன. 'உண்பது நாழி' என்ற புறநானூற்றுக் கருத்தை விளக்கும் வகையில், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ 32 கவளங்கள் (நன்கு பிசையப்பட்ட வாய் கொள்ளவுள்ள உணவு உருண்டை) உண்ண வேண்டும்; உமிழ்நீரைச் உரக்க வைத்து உண்ண வேண்டும்; விழுங்காமல் மென்று தின்ன வேண்டும்; வாயால் உணவை அரைத்துக் கூழாக்கி உண்ண வேண்டும் என்பது தொடங்கி அரை வயிறு உணவு, கால் பங்கு காற்று, கால் பங்கு நீர் என உண்ணும் முறையை விரிவாக விளக்கியிருப்பது சிறப்பு.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்
என்ற குறளுக்கு விளக்கமாக உணவு பற்றிய கட்டுரை அமைந்துள்ளது.
பெண்களைப் பாதிக்கும் நீர்க்கட்டிகள், மாதவிடாய்ப் பிரச்சனைகள், அவற்றைத் தீர்க்கும் மருந்துகள் எனப் பெண்களுக்கான பல்வேறு பிரச்சனைகளை விரிவாக விளக்கியிருப்பதும் அருமை.
சீரகத்தின் சிறப்பு, அதன் பெயர்க் காரண விளக்கம், அருகம்புல்லின் ஆற்றல், நீரைச் சுருக்கி மோரைப் பெருக்குவதால் ஏற்படும் நன்மைகள், நோய் தீர்க்கும் மூலிகைகள், அவற்றைப் பயன்படுத்தும் விதம். வெள்ளைப்பூண்டு, ஜாதிக்காயின் பயன்கள், பனை தரும் பாரம்பரிய நல்லுணவுகள் பற்றிய விளக்கங்கள், தூக்கம் வரவழைக்கும் மூலிகைத் தலையணை எனப் பல்வேறு செய்திகளைக் கொண்ட சித்த மருத்துவக் களஞ்சியமாய், பொக்கிஷமாய் 'சித்தாவரம்' நூல் உள்ளது.
சுருக்கமாகச் சொல்லப் போனால், 'சித்தாவரம்' நூல் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய மருத்துவக் கையேடு. இந்நூல் இல்லத்தில் இருப்பது சித்த மருத்துவர் ஒருவர் உடன் இருப்பது போன்ற பயனைத் தரவல்லது என்று சொல்வதில் மிகையில்லை.
குடும்ப விழாக்களில் பரிசாகக் கொடுக்க உகந்த நூல் ஆரோக்கிய வழிகாட்டி 'சித்தாவரம்'.
வெளியிட்டோர்: தேநீர் பதிப்பகம் 24/1, மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை – 635851
செல்பேசி: 9080909600 மின்னஞ்சல்: theneerpathippagam@gmail.com விலை: ரூபாய் 150 ஆன்லைனில் வாங்க: Sithavaram
முனைவர் ச. ஸ்ரீவித்யா, எம்.ஏ., பிஎச்.டி. |