நண்பகல் சூரியன் நெருப்புப் பார்வையை நிலத்தின் மீது செலுத்துவது, மண்ணே வெப்பத்தின் தாக்கத்தில் உருகுவதைப் போலத் தெரிந்தது. செங்கல் சூளையின் உலை ஒருபக்கம் வேறு! கேட்கவேண்டுமா என்ன? விழுப்புரம் அருகே சிறு கிராமம்.
முத்து நெற்றியில் துளிர்த்த வியர்வையைப் பழைய துணியால் துடைத்தபடி, பெஞ்சாதியைப் பார்த்து "500 ரூபா தினக்கூலிக்கு இப்படி மாரடிக்க வேண்டி இருக்கு. எல்லாம் தலைவிதி, உழைச்ச பணம் தங்குதான்னா அதுவும் இல்லை. கடன்காரன் வந்து முக்காவாசிப் பணத்தை வாங்கிகிட்டுப் போயிடறான்" எனப் புலம்பினான்.
"மீதிப் பணத்தை நீ குடிச்சே தீர்க்கிறே" என்று அவள் முனகினாள். நிழலின்றி நிலத்தில் உழைத்ததன் பயன், கருமையாக அவர்களது சருமத்திலும், வாழ்க்கையிலும் தெரிந்தது.
"அத்தை!" என்று பின்னிருந்து ஒரு குரல். யார் என்று, சற்று திரும்பிப் பார்த்தாள். அவளது மருமகன், மாரிமுத்து.
"குழலி எங்க அத்தை?"
"வாடா மாரிமுத்து! அவ அந்த மரத்துப் பக்கம் செங்கல் அடுக்கிட்டு இருக்கா" என்றாள். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு, குழலியை தேடிச் சென்றான்.
காய்ந்த செங்கல்களை, ஒருவர் எறிய எறிய, குழலி அதை லாகவமாகப் பிடித்து, அடுக்கிக் கொண்டிருந்தாள்.
"ஏய், குழலி!" என்று கூப்பிட்டபடி அவள் அருகில் சென்றான்.
"என்ன மாமா, இந்தப் பக்கம். இன்னிக்கி உனக்கு கிரிக்கெட் ஃபைனல் கேம் இல்ல?"
"அதைப் பத்திதான், உன்கிட்ட பேசலாம்னு வந்தேன்."
"எங்கிட்டயா?" சற்றுக் குழப்பத்துடன் கேட்டாள்.
"எங்க டீம்ல 13 பேர்தான். நேத்திக்கு என்ன சாப்பிட்டாங்கன்னு தெரியல, அஞ்சு பேருக்கு வயித்துக் கடுப்பு. இப்ப எங்களுக்கு மூணு பேர் தேவை. ரெண்டு பேரைப் புடிச்சிட்டோம். இன்னும் ஒருத்தர்தான் தேவை. அதான்.." என்று இழுத்தான்.
"அப்பா, அம்மா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு வா."
"அதெல்லாம் முன்னாடியே பேசிட்டேன். நீ வா போகலாம், டைம் ஆகுது."
"கில்லாடிதான் மாமா நீங்க! பசங்க விளையாடுற டோர்னமெண்ட்டுல. என்னை எப்படி விளையாட விடுவாங்க அதுக்குமேல, வீரர்கள் பட்டியலில் நான் இல்லை."
"இந்தப் போட்டியின் ஸ்பான்சரிடம் பேசினேன். இந்த கேம் நடக்காட்டி, கிட்டத்தட்ட 5000 ரூபாய் நஷ்டமாம். அவுங்கதான் என்னை அனுப்பி வச்சாங்க."
"சரி வாங்க போகலாம்". சிறிது நேரத்தில் மைதானத்தைச் சென்றடைந்தனர்.
மாரிமுத்து குழலியை அவனது டிராகன் அணியினருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். "டேய்! இவப் பேரு. குட்டை கத்திரிக்காய் குழலி. செல்லமா கிரிக்கெட் கிரௌண்டுல கே3 ன்னு (K.K.K.) கூப்பிடுவோம்." அவள் குட்டை, சற்றுப் பருமன் வேறு!
பக்கத்தில் இருந்த பையன்"டாஸ் போட டைம் ஆயிடுச்சு, வா போகலாம்" என்றான்.
அவர்கள் சென்றதும், அந்த அணியில் இருந்த மற்றொரு பையன் "என்னடா பொம்பள புள்ளைய கூட்டிட்டு வந்திருக்கான்?" என்றான்.
"டேய் கம்முனு இரு. கே3 யார் தெரியுமா, கில்லிடா! சத்தமாப் பேசாதே" என்று சமிக்ஞை செய்தான்.
சிறிது நேரத்தில் டாஸில் வென்ற எதிரணி (டால்ஃபின்) பேட்டிங் தேர்ந்து எடுத்து, 119 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் பிடித்த டிராகன் அணி, 83 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்தது.
பரிதாபமாக அங்கு நின்று இருந்த மாரிமுத்துவைப் பார்த்து கே3 "மாமா, நான் என்ன ஒப்புக்குச் சப்பாணியா? கடைசி ஓவர் வேற, நான் போறேன்" என்று சொல்லிவிட்டு, பதிலை எதிர் பார்க்காமல் களத்தில் இறங்கினாள்.
6 பந்து 37 ரன் தேவை!
"இந்த விவேக், டோர்னமெண்ட்டுல 49 விக்கெட்டுகளை எடுத்து இருக்கான். இன்னும் ஒண்ணு தேவை. பாவம்டா கே3!" என்று ஒரு பையன் புலம்பினான்.
முதல் பந்தை எதிர்கொள்ளத் தயாரானாள். விவேக் அவள் அருகில் வந்து "வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா? எனக்கு ஒரு விக்கெட்தான் தேவை. மெதுவா உன் காலுக்கு கீழே போடுறேன். அவுட் ஆயிடு. உன் காலும் தப்பும்." என்று திமிராகச் சொன்னான்.
"ரொம்ப பில்டப் கொடுக்காத, போய்ப் போடு" என்று கெத்தாகச் சொன்னாள் கே3.
விவேக் கோபமாக "உன் காலை உடைக்கிறேன் பாரு!" என்று சொல்லிவிட்டு முதல் பந்தை வீசத் தயாரானான்.
முதல் பந்து அவன் சொன்னபடி யார்க்கர். கே3 எளிதாக டீப் மிட் விக்கெட்நோக்கி ஃபிளிக் செய்தாள். டிராகன் அணிக் கூடாரத்தில் அருகே வந்து விழுந்தது. ஆறு ரன்!
இரண்டாவது பந்து. நேரான திசையில் ஒரு சிக்ஸ் அடித்தாள்.
மூன்றாவது பந்து. பவுன்சர்! அழகாக ஹூக் செய்து சிக்ஸ் தூக்கினாள். அங்கிருந்த சில நூறு பார்வையாளர்கள் செய்த ஆரவாரத்தால் அந்த இடம் களேபரமானது.
மாரிமுத்து வாயடைத்துப் போய் நின்றான். பக்கத்தில் இருந்த பையன் "நாம ஜெயிக்க 19 ரன் தேவை, ஆனா இன்னும் மூணு பால்தான் இருக்கு" என்றான்.
"டேய், இன்னிக்கு அவள் நாளுடா! வைடு போடுவான் பாரு!"
அவன் சொன்னபடி விவேக் பதட்டத்தில் வைடு போட்டான்.
3 பந்து 18 ரன்கள் தேவை!
முதல் முறையாக டால்பின் டீம் பதட்டமானது. எல்லோரும் ஒன்று கூடி என்ன செய்வது என்று பேசினர். ஸ்லோ பால் போடு என்று ஒரு பையன் விவேக்கிடம் சொன்னான்.
அந்த ஸ்லோ பாலும் பறந்தது ஆறு ரன்களுக்கு!
ஐந்தாவது பால், ஆஃப்ஸ்டம்புக்குச் சற்று வெளியே போட்டான். கே3 சற்று முன்னே வந்து, பாய்ண்ட் திசையில் அந்த பாலைப் பறக்க விட்டாள். இன்னும் ஆறு ரன்!
கடைசிப் பந்து. விவேக் பதட்டமானான். அவன் கை சற்று நடுங்கியது. யார்க்கர் போட நினைத்தான். அது ஃபுல் டாஸ் ஆக மாறியது. மிட்டாய் கேட்க அல்வா கிடைத்தது போல! வைட் லாங்-ஆஃப் திசையில் தூக்கி அடித்தாள். சிக்ஸர்!
கே3 முஷ்டிகளை இறுக்கி மகிழ்ச்சியின் கர்ஜனையுடன் கொண்டாடினாள்.
ஊர்க்காரர்கள் கிட்டத்தட்ட 50 பேர்,பித்துப் பிடித்தது போல, மைதானத்திற்குள் ஓடி வந்தனர். மாரிமுத்து அவளை அப்படியே தூக்கி, தனது தோளில் வைத்துக் கொண்டு கொண்டாடினான்!
இதைக் கூடாரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஓய்வுபெற்ற தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர், தனது விசிட்டிங் கார்டை கே3யிடம் கொடுத்து, தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார்.
"வாழ்க்கை ஒரு கணத்தில் மாறலாம் - சாதாரணமாகத் தொடங்கும் ஒருநாள், அசாதாரண சாத்தியக்கூறுகளுடன் முடிவடையலாம்!" என்று எங்கோ படித்தது அவள் நினைவில் வந்தது.
மருங்கர், லேக்வில், மின்னசோட்டா |