கூரை வீட்டின் மர்மம்
"என்ன கோபால் ராவ்! எல்லாவற்றுக்கும் நீர்தானா? கடவுள் வாழ்த்துப் பாடுவதும் நீர், பிரமுகர்களை வரவேற்பதும் நீர், வரவேற்புப் பிரசங்கத்தைப் படிப்பதும் நீர், நாடகத்தில் முக்கிய வேஷமும் நீர், வருஷாந்தர அறிக்கையைப் படிப்பதும் நீர், தலைவருக்கு மாலை போடுவதும் நீர், வந்தனோபசாரம் கூறுவதும் நீர்! ஏன், இந்த வருஷாந்தரக் கொண்டாட்டத்தில் எனக்கு ஒரு பங்குகூடக் கிடையாதா? ஏன், வருஷாந்தர அறிக்கையைத்தான் நான் வாசிக்கிறேனே" என்று கோபால்ராவைப் பார்த்து நான் கேட்டேன்.

"என்ன, வேங்கட்ராமய்யர்! நீர் சொல்வது வேடிக்கையாயிருக்கிறதே! உமக்குத்தான் நாடகத்தில் ஒரு பார்ட்டு கொடுத்திருக்கிறேனே. இதோ பாரும்," என்று சொல்லி, கொண்டாட்டத்தின் புரோகிராம் ஒன்றைக் காண்பித்தார். நாங்கள் நடிக்கப் போகும் நாடகத்தைப் பற்றி அதில் பின்வருமாறு கண்டிருந்தது:

"கூரை வீட்டின் மர்மம்"
(கோபால் ரால் எழுதிய நாடகம்)

நாடக பாத்திரங்கள்:
போலீஸ்காரன்: கோபால் ராவ் (குமாஸ்தா, கலெக்டர் ஆபீஸ்)
திருடர் தலைவன்: கிருஷ்ணசாமி நாயுடு (குமாஸ்தா, கலெக்டர் ஆபீஸ்)
கதாநாயகன்: வேணுப் பிள்ளை (குமாஸ்தா, கலெக்டர் ஆபீஸ்)
கதாநாயகி: கரீம் ராவுத்தர் (குமாஸ்தா, கலெக்டர் ஆபீஸ்)
திருடர் கூட்டம்: சபா மெம்பர்கள்.

மூர்ச்சையடைந்த மனிதன்: வேங்கட்ராமய்யர் (குமாஸ்தா,கலெக்டர் ஆபீஸ்)

கோபால் ராவும், நானும் கலெக்டர் ஆபீசில் சேர்ந்தாற்போல் வேலை பார்க்கிறோம். கிழிந்த சட்டையை நாற்காலிக்கு அலங்காரமாக ஆபீஸிலேயே வைத்துவிட்டுப் போவதிலிருந்து, ஆபீஸுக்குத் தினம் காலை எட்டு மணிக்கே தலை உச்சிக் குடுமியை ஆற்றிக்கொண்டு, வாய் நிறைய வெற்றிலை, பாக்கு, புகையிலையை அடைத்துக்கொண்டு வருவது வரையில் எங்களுக்குள் மகா ஒற்றுமை. இதனால் நாங்களிருவரும் அந்த அமெச்சூர் நாடக சபாவில் மெம்பர்களாயிருந்ததில் ஆச்சரியமில்லை.

நாங்கள் சபா ஆரம்பித்த காரணத்தைப் பற்றி இங்கு சொல்வதாக உத்தேசமில்லை. ஆனால் ஒரு காரணத்திற்காக மட்டும் இல்லையென்று நிச்சயமாய்ச் சொல்லலாம். தமிழ்நாட்டில் நாடகம் அடைந்திருக்கும் சீர்கேட்டைக் கண்டு, கண்ணீர் உகுத்து, அதை உத்தாரணம் பண்ணி, மிக உன்னத ஸ்திதிக்குக் கொண்டு வருவதற்காக அது ஏற்பட்டதல்ல.

நாங்கள் சபா ஒன்று ஆரம்பித்ததற்குக் காரணம் கட்டாயம் தெரிந்துதான் ஆகவேண்டுமென்றால், ஒரே ஒரு காரணம் சொல்லுகிறேன். அதுவும் வெகு முக்கியமான காரணம். வீட்டுப் பிடுங்கல் இல்லாமல் எவ்வளவு நேரம் வீட்டுக்கு வெளியே காலம் கழிக்க முடியுமோ, அவ்வளவு நேரம் காலம் கழிப்பதற்குத்தான்.

சபை என்று ஒன்று இருந்தால் அதற்கு வருஷாந்தரக் கொண்டாட்டம் ஒன்று இருக்கவேண்டுமல்லவா? அதனால்தான் நாங்கள் அந்தக் கொண்டாட்டம் நடத்தத் துணிந்தோம். அதோடு நாங்கள் முக்கால்வாசிப் பேர் கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாக்களாதலால் எங்கள் கலெக்டரையே அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும்படி தீர்மானம் பண்ணினதில் ஆச்சரியமில்லை.

இது விஷயத்தில் எங்கள் சபாவில் இருந்த முனிசிபல் ஆபீஸ் குமாஸ்தாக்களுக்குக் கோபம் தான். தங்கள் முனிசிபல் சேர்மனைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கவில்லையே என்ற கோபத்தினால், அவர்களில் சிலர் தாங்கள் தனியாக, "முனிசிபல் சிப்பந்திகளின் அமெச்சூர் நாடக சபை" ஒன்று ஏற்படுத்தப் போவதாக எங்களைப் பயமுறுத்திவிட்டு எங்கள் சபையினின்றும் விலகிவிட்டார்கள்.

கலெக்டர் தலைமை வகிக்கப் போகிறார் என்று தீர்மானம் ஆனதும் கோபால்ராவ் கொண்ட உற்சாகத்திற்குக் கணக்கு வழக்கில்லை. நந்தனார் நாடகம் போடலாம் என்று நாங்கள் தீர்மானம் பண்ணியிருந்ததைக் கூட மாற்றி, தாமே சொந்தமாக ஒரு நாடகம் எழுதப் போவதாகச் சொன்னார். கடைசியில் எழுதியும் முடித்தார். அதுதான் "கூரை வீட்டின் மர்மம்" என்பது. அதில் என்ன மர்மம் இருக்கிறதென்பது இன்னும் மர்மமாகவே யிருக்கிறது, இருந்தாலும், "கோபால் ராவ் எழுதியது" என்று நோட்டீசில் போட்டுக்கொண்டு பெருமையடைவது என்றால் எல்லாருக்கும் கிட்டக்கூடியதா? அதுவும் கலெக்டர் துரையே அந்த நாடகத்திற்கு விஜயம் செய்யப் போகும் பொழுது.

புரோகிராமைப் பார்த்ததும், "மூர்ச்சையடைந்த மனிதன்! இதுதானா எனக்கு பார்ட்?" என்று உறுமினேன்.

"என்ன அப்படிச் சொல்லுகிறேள்! உமக்கு நன்றாக நடிக்கத் தெரியும் என்று தெரிந்துதான் அந்தப் பார்ட்டை உமக்குக் கொடுத்திருக்கிறேன். சாதாரண மனிதனைப்போல் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் மூர்ச்சையடைந்த மனிதனைப்போல் நடிப்பதென்றால் சுலபமான காரியமா?"

"சரி. அதுதான் போனால் போகிறது. வருஷாந்தர அறிக்கையையாவது நான் வாசிக்கிறேனே?"

"அதெல்லாம் முடியாது. அதை சபா காரியதரிசியாகிய நான்தான் வாசிக்க வேண்டும். எனக்கு எவ்வளவோ வேண்டிய ராமலிங்க அய்யரே கேட்டார். நான் கண்டிப்பாய் முடியாது என்று சொல்லிவிட்டேனே!" என்று கண்டிப்பாய்ச் சொன்னார்.

ராமலிங்க அய்யரைக் கண்டு, "என்ன ராமலிங்கய்யர்! கோபால் ராவ் சமாசாரம் பார்த்தீர்களோன்னோ!" என்றேன்.

"எல்லாம் பார்த்தேன். இந்த கோபால் ராவ் கர்வத்தை ஒழிப்பதற்கு ஏதாவது வழி பண்ணியாக வேண்டும்" என்றார்.

சரியென்று நாங்களிருவரும் ஒன்று சேர்ந்து ஒரு ‘வழி" தீர்மானம் பண்ணினோம். அது, இதுதான்; கோபால் ராவ் அறிக்கையை எங்கு வைக்கிறார் என்று கவனித்துக்கொள்ள வேண்டியது. நாடகம் முடிந்ததோ, இல்லையோ, ராமலிங்க அய்யர் சட்டென்று ஓடிப்போய் அதை எடுத்துக் கொண்டு வந்து, ‘கடகட"வென்று வாசித்துவிட வேண்டியது. வாசித்து முடிந்ததும், "இந்த சபையின் முன்னேற்றத்திற்காகத் தம்முடைய உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணம் பண்ணியிருக்கும் வேங்கட்ராமய்யர் சில வார்த்தைகள் கூறுவார்" என்று சொல்ல வேண்டியது. நான் அதுதான் சாக்கென்று ஒரு குட்டி லெக்சர் அடிக்க வேண்டியது. இந்த மாதிரியாகக் கோபால் ராவைக் கையைப் பிசைந்து கொண்டு நிற்கும்படிச் செய்ய வேண்டியது.

இந்த யோசனையைக் கோபால் ராவைப் பிடிக்காதவர்கள் என்று எங்களுக்குத் தோன்றின சிலரிடம் மாத்திரம் சொன்னோம். அவர்கள் "அதுதான் சரி. கோபால் ராவ் அப்படித்தான் எதிர்பாராதபடி அவமானப்பட வேண்டும்" என்றார்கள்.

நாடக ஒத்திகை வெகு மும்முரமாக நடந்துகொண்டு வந்தது. பத்துப் பதினோரு ஒத்திகைகள் நடந்தன. முதல் இரண்டு நாளைக்கு என்னுடைய நடிப்பெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு படுத்திருக்க வேண்டியது; ஐந்து நிமிஷங்கள் கழித்து. இரண்டு பேர் என்னைத் தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள், அவ்வளவுதான்.

ஆனால் கோபால் ராவ் சொன்னது போல் என்னுடைய பார்ட்டை நடிப்பது மிக்க சிரமமாய்த்தானிருந்தது. கண்ணை மூடிக்கொண்டு படுத்திருப்பது சிரமம்தான். ஆனால் அது போதாதென்று என்னைத் தூக்கிச் சென்ற நண்பர்கள் என்னைக் கீழே தொப்பென்று போட்டு விட்டார்கள். முதல்நாள் என்னை அவர்கள் கீழே போட்டதும், ஏதோ நாடகத்தில் அந்தமாதிரி வருகிறதாக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் இரண்டாம் நாள் அவர்கள் என்னைக் கீழே போட்ட போது என் எலும்புகள் பாதி நொறுங்கி விட்டன. ஒவ்வொரு ஒத்திகை நாளும் இவ்வாறு நடந்தால் நான் நாடகத்தன்று பிழைத்திருக்க மாட்டேன், அல்லது உண்மையாகவே மூர்ச்சையடைந்த மனிதனாக மாறிவிடுவேன் என்று பயந்து, கோபால் ராவிடம் இதைப் பிரஸ்தாபித்த பொழுதுதான், முதல் இரண்டு நாளும் அந்த "நண்பர்கள்" என்னை வேண்டுமென்றே கீழே போட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

மூன்றாம் நாளும் இம்மாதிரியே நடந்தால் என்ன பண்ணுவது என்று பயந்து கொண்டிருக்கையில் கோபால் ராவே நாடகத்தை மாற்றியமைத்து விட்டார். மூர்ச்சையடைந்த மனிதனிலிருந்து நான் மூர்ச்சை தெளிந்த மனிதன் ஆனேன். என் நண்பர்களுடைய தயவில்லாமல் நானே நடந்து உள்ளே சென்றுவிட்டேன். கடைசிநாள் நெருங்க நெருங்க, கோபால் ராவ் நாடகத்தை மாற்றிக்கொண்டே போனார். நானும் மாறிக்கொண்டே வந்தேன். திருடர் கூட்டத்தில் ஒருவன், கடைக்காரன், பிச்சைக்காரன், நொண்டி, குருடன் என்றெல்லாம் மாறி, கடைசியில் ஒரு கிழவனானேன். கோபால் ராவும், போலீஸ்காரனிலிருந்து சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரிலிருந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் என்று இதுமாதிரி மாறிக்கொண்டே வந்து கடைசியில் போலீஸ் கமிஷனரானார். நாடகத்தில் மாற்றப்படாத பாகம் அதன் தலைப்பு ஒன்றுதான்.

கடைசி நாள் ஒத்திகை வெகு வெற்றிகரமாக நடந்தது. நானும் ராமலிங்க அய்யரும் (அவருக்கும் என்னைப்போல் ஒரு கிழவன் பார்ட்டு) வெகு திறமையாக நடித்தோம். போலீஸ் கமிஷனர் உதவியில்லாமலே திருடர்களை விரட்டியடித்துக் கதாநாயகனையும் கதாநாயகியையும் தப்புவித்தோம். கோபால் ராவ், "பரவாயில்லை, ஆனால் முடிவு மாத்திரம் எல்லாரும் எதிர்பார்க்கக் கூடியதாயிருக்கிறது. எதிர்பாராத முடிவாயிருந்தால் இன்னும் எவ்வளவோ நன்றாயிருக்கும்," என்றார்.

கடைசியில் வருஷாந்தரக் கொண்டாட்ட தினம் வந்து சேர்ந்தது. நானும், ராமலிங்க அய்யரும் வெகு நன்றாக நடித்தோம். திருடர்களைத் துரத்தியடித்துவிட்டுக் கதாநாயகனையும், கதாநாயகியையும் தப்புவிப்பதற்காகத் திரும்பி வந்தோம். இது ஒன்றுதான் பாக்கி. இது முடிந்ததோ இல்லையோ, நாங்கள் முன்பே தீர்மானம் பண்ணியிருந்த ஏற்பாட்டின்படி நடக்க வேண்டியதுதான்.

திருடர்களைத் துரத்தி விட்டுத் திரும்பி வந்து கதாநாயகர்களுடைய கட்டுகளை அவிழ்த்ததும், அவர்கள் உள்ளே ஓடிப் போனதுதான் தாமதம், என்ன ஆச்சரியம்! நாங்கள் வெகு சிரமப்பட்டு நாடக மேடைக்குள் துரத்தியனுப்பின திருடர்கள் திரும்பி வந்து, எங்கள் கையையும் காலையும் கட்டி வாயிலும் துணியை அடைத்துக் கீழே உருட்டிவிட்டுப் போய்விட்டார்கள்!

நாடகத்தில் இந்த மாதிரி எதிர்பாராத கட்டம் ஒன்று வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. சரி, இனிமேல் போலீஸ் கமிஷனர் (கோபால் ராவ்) வந்து எங்கள் கட்டுகளை அவிழ்த்து, நாங்கள் கதாநாயகர்களை விடுவித்ததற்காக எங்களுக்கு ஏதாவது வெகுமதி கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், திரை விழுந்து விட்டது! திரைக்கு வெளியே போலீஸ் கமிஷனர் வருஷாந்தர அறிக்கையை வாசிக்கும் குரல் கேட்டது!

கோபால் ராவ் தம் நாடகத்தை எதிர்பாராதபடி முடித்தார் என்று அங்கு வந்திருந்தவர்களுக்குத் தோன்றிற்றோ, இல்லையோ, எங்களுக்கு அது எதிர்பாராத முடிவாய்த்தானிருந்தது. அப்பொழுதுதான், ஏன் எங்களுடைய அபூர்வ யோசனையைச் சில நண்பர்களிடம் கூறினோம் என்று வருத்தப்பட்டோம்.

நாடோடி (எம். வெங்கட்ராமன்)

© TamilOnline.com