அரசின் எல்லா அவைகளிலும் ரிபப்ளிகன் கட்சிக்குப் பெருவாரி வாக்குகளை அளித்திருக்கிறார்கள் மக்கள். இவ்வாறாக, ஓர் கருப்பர்-இந்தியக் கலப்பினப் பெண்ணை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் வாய்ப்பை அமெரிக்கா கைநழுவ விட்டுள்ளது. புதிய அதிபர் எல்லா ஊடகங்களின் வழியேயும் தமது அரசை நெறிப்படுத்தப் போகும் கோட்பாடுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். வரப்போகும் அதிபரின் மற்றொரு குறிப்பிடத்தக்க செயல்பாடு என்னவென்றால், இந்திய அமெரிக்கர்களான விவேக் ராமசுவாமி, ஜே பட்டாசார்யா, காஷ் பட்டேல் போன்றவர்களை முக்கியமான அரசுப் பதவிகளுக்கு நியமனம் செய்திருப்பதுதான். தவிர, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அவர்களின் துணைவியாரும் இந்திய அமெரிக்கர்.
உலக அரங்கில் அமெரிக்காவின் மேலாண்மை கேள்விக்கு உள்ளாக்கப்படும் இந்த நிலையில் அதைத் தக்க வைப்பது பெரும் சவால். ஜனவரியில் பதவி ஏற்கப் போகும் அரசு அதில் கூர்த்த கவனம் செலுத்தியாக வேண்டும். அத்துடன், டாலரின் மதிப்பு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு என்று எத்தனையோ பிரச்சனைகள் காத்திருக்கின்றன. அதிபர் ட்ரம்ப் சூடியுள்ளது முள் கிரீடம் என்பதில் ஐயமில்லை. சிக்கலான காலம்தான் தலைமைப் பண்புக்கு உரைகல். நம்பிக்கையோடு காத்திருப்போம்.
★★★★★
சிரிய நாட்டின் அலெப்போ நகரம் உட்படப் பல பகுதிகளைப் புரட்சியாளர்கள் கைப்பற்றியுள்ளது கவலை தருகிறது. ஆங்காங்கே போர்கள் நடந்து வரும் இந்தக் காலகட்டத்தில் இன்னுமொரு போரை உலகம் தாங்காது. அமைதி, ஒத்துழைப்பு, சகோதரத்துவம் ஆகிய சொற்களை மீண்டும் நடைமுறை சாத்தியங்களாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதிலும் அமெரிக்கா தனது தலைமைத்துவத்தை அழுத்தமாகப் பதிக்க வேண்டும். உலக விவகாரங்களைக் கையாள்வதில் பாரதத்தின் பங்கும் சமீப காலங்களில் அங்கீகாரம் பெறுகிறது என்பதை நாம் பெருமிதத்தோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
★★★★★
தென்றல் இதழ் வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் தென்றல் எழுத்தாளர்கள், தொடர்ந்து ஆதரித்து வரும் விளம்பரதாரர்கள், வாசகர்கள் யாவருக்கும் எமது மனமார்ந்த நன்றி. பன்முகக் கலையுலக சாதனையாளர் எஸ்.ஜே. ஜனனி குறித்த சிறப்பான அட்டைப்படக் கட்டுரை, மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் வாழ்க்கை வரலாறு, கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை, பிற சுவையான கதைகள் யாவற்றுடனும் மீண்டும் ஓர் உயிர்ப்பான இதழ் வெளிவந்துள்ளது. தமிழை நேசித்து வாசிக்கும் யாவருக்கும் இது சமர்ப்பணம்.
வாசகர்களுக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
தென்றல் டிசம்பர் 2024 |