உத்பவா: ஒரு கலைப் பயணம்.
செப்டம்பர் 14 2024 அன்று, திருமதி பிரியங்கா ரகுராமன் அவர்களது ப்ரியதா நடனப் பள்ளியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா, ஃப்ரீமான்ட்டில் உள்ள கேரி சோரன் ஸ்மித் சென்டரில் நடைபெற்றது. 'உத்பவா' என்று அழைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தேர்ந்த நடனக் கலைஞர்களையும், திறமிக்க புதியவர்களையும் இணைத்து அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அது, திருமதி பிரியங்கா, இந்தியாவைச் சேர்ந்த கலைமாமணி திருமதி அனிதா குஹாவின் முதன்மை மாணவி என்பதற்குச் சான்றாக விளங்கியது.

நிகழ்ச்சி புஷ்பாஞ்சலியில் தொடங்கி, நோட்டு ஸ்வரங்கள், அலாரிப்பு, நாம ராமாயணம் என நிகழ்ச்சி முழுவதிலும் பிரியதா பள்ளியின் இளம் நடனமணிகள் தங்கள் வசீகரத் திறமையால், சிலிர்க்கவும், ரசிக்கவும்வைத்தனர். இவர்களின் திறமை மிகுந்த பரவசத்தை அளித்தது. சுழன்று சுழன்று தாளத்திற்கு ஏற்றாற்போல் அவர்கள் ஆடிய பாங்கில் நான் கரைந்து போனதும், ரசிகர்களை அது கட்டிப்போட்டதும் நிதர்சனம்.

திறமை மிக்க பக்கவாத்தியக் கலைஞர்கள், நடன மணிகளுக்குத் தகுந்த பக்கபலமாக இருந்தனர். திருமதி வந்தனா சித்தார்த் (வாய்ப்பாட்டு), திரு சிவா ஆர். ஐயர் (மிருதங்கம்), திருமதி பிரியங்கா மற்றும் குமாரி வர்ஷா சங்கர் (நட்டுவாங்கம்), திரு சசி மதுகலா (வயலின்) என நிகழ்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தனர். ஒவ்வொரு பாடலும் தனித்துவமாகவும், சந்தத்திலும் தாளத்திலும் வேறுபட்டும் கச்சிதமாக அமைந்தன.

மூத்த மாணவர் அனுராதா, 'சரஸ்வதி நண்ணெப்புடு சல்லக சூடவம்மா' என்கிற பாடலுக்கு ஆடிய விதம் அவரது பக்தியையும் சிரத்தையையும் அழகாகக் காட்டியது. ராதிகாவின் ஜெய மாருதி கவுத்துவம் ஆஞ்சநேய மூர்த்திக்கு ஆற்றல் மிகுந்த சமர்ப்பணமாக விளங்கியது.



சிறப்பு நிகழ்ச்சியை வழங்கிய ஸ்வேதா சங்கர் சிவபெருமான் மீது 'சங்கர ஸ்ரீகிரி' என்ற நடனத்தைத் துல்லியமாகவும், பேரழகுடனும் அபிநயித்துத் தனித்துவத்தோடு மிளிர்ந்தார். அது அவரது நெடுங்கால தீவிர நடனப் பயிற்சிக்குச் சான்று பகர்ந்தது.

சிறப்பு விருந்தினர்கள் திருமதி கவிதா திருமலை மற்றும் திருமதி அகிலா ராவ் ஆகியோரது வரவு, நிகழ்ச்சியை ஓர் உன்னத நிலைக்குக் கொண்டு சேர்த்தது.

இரண்டாவது பகுதியில் திருமதி பிரியங்கா குரு என்கிற நிலையிலிருந்து நடனக் கலைஞராக உருமாறி வந்தது சிலிர்க்க வைத்தது. முதற்பகுதியில் அவரது சிறப்பான நட்டு வாங்கத்தில் நடன மணிகள் நடனம் ஆடியதை வியந்த கண்களுக்கு, அவரது நாட்டியம் வியக்க வைத்தது.

பல்லாண்டு காலப் பயிற்சியின் வெளிப்பாடாக வந்த திருமதி பிரியங்கா ரகுராமின் சண்முக கவுத்துவம் பிரமிப்பில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சியின் மையத்தில் படைக்கப்பட்ட 'சகியே இந்த வேளையில்' என்கிற வர்ணம் மனதை மயக்கியது. மன்னார்குடி ராஜகோபால சுவாமியாக அவர் தோன்றிய விதம், மன்னார்குடிக்கே பார்வையாளர்களை அழைத்துச் சென்றது.



அரங்கம் முழுவதும் மின்சாரத்தைப் பாய்ச்சியது போல முத்தாய்ப்பான தில்லானாவோடு நிகழ்ச்சி நிறைவுற்றது. ஒரே லயத்தில் நடன கலைஞர்கள் சேர்ந்து சுழன்றாடிய விதம், இசைக் கலைஞர்களின் நாதம் என அனைத்தும் அரங்கம் அதிர்ந்த கரகோஷத்தோடு ஒன்று கலந்து நிறைவு பெற்றது.

நீண்ட காலத்திற்கு நினைவோடு ஒன்றுகலக்கும் அற்புத சக்திதான் கலை என்பதை இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிறுவி, உணரச் செய்தது.

ஆங்கில விமர்சனம்: அபிஜித் வெங்கடேஷ்ராஜ்
தமிழில்: விவேக் பாரதி

© TamilOnline.com