தாய்மொழிப் பணிகள்
1899-ம் ஆண்டு 'தனிப்பாசுரத்தொகை' என்னும் அரிய நூல் ஒன்று வெளியாயிற்று. இலக்கியத்தில் 'புதியன புகுதல்' என்னும் முறைக்குத் தீரா விரோதங்கொண்ட பிற்போக்காளர்களுக்கு, எந்த மொழியினுடைய இலக்கியமும் பிறமொழிச் சொற்களையும் முறைகளையும் மேற்கொண்டுதான் வளர்ச்சியுற வேண்டும் என்னும் உண்மையைத் தெரிவிக்க வேண்டி, ஆசிரியர் புது முறையில் பல பாசுரங்கள் அவ்வப்போது இயற்றி வருவதுண்டு. இவையெல்லாம் ஆங்கிலத்தில் 'ஸானெட்' (Sonnet) எனப்படும் ஒருவகைப் பாவினத்தை யொட்டியும் தமிழ் மரபு தவறாமலும் எழுதப்பட்டவையாம். இவற்றிற்கு ஆசிரியர் 'தனிப்பாசுரங்கள்' எனப் பெயரிட்டனர். இப்பாசுரங்களைத் தமது இயற்பெயரால் வெளியிட விரும்பாமல் தமது பெயரின் நேர் தமிழ்மொழி பெயர்ப்பான 'பரிதிமாற் கலைஞன்-கரூர்' என்னும் புனைபெயரில் வெளியிட்டனர். இது சிறிது சிறிதாக 'ஞானபோதினி' என்னும் பத்திரிகை வாயிலாக வெளிப்போந்தது. இது 6-12-1899-ல் புத்தக ரூபமாக வெளிவந்தது. இதுவே இந்நூலின் முதற் பதிப்பாகும். இத்தனிப்பாசுரங்களில் ஒன்றிரண்டைப் பற்றிக் கிருத்துவக் கல்லூரிச் சரித்திரப் பேராசிரியரான கெல்லட் (F.W. Kellet) என்பவர் தாம் பத்திராதிபராயிருந்து நடத்தி வந்த கிருத்துவக் கல்லூரிப் பத்திரிகையில் புகழ்ந்தெழுதினர். இப்பாசுரங்களில் பெரும்பான்மை 'ஞானபோதினி' பத்திரிகை வாயிலாக வெளிவந்த காலத்திலேயே பத்திரிகையை விடாது படித்து வந்த பொதுமக்கள் பலரும் பல வகையாலும் அவற்றைப் புகழ்வாராயினர்.

இது கண்ட ஆசிரியர் தமது பாக்களை உலகு நல்ல முறையில் ஏற்றுக்கொண்டதென்று உணர்ந்தபின் தமது இயற்பெயரோடு புனைபெயரையும் சேர்த்துப் பிரசுரித்து நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டனர். முதற் பதிப்புப் பாசுரங்களைக் கண்ணுற்றுப் படித்து மகிழ்ந்தவர்களில் கோதீர்த்தபுரி சர்வகலாசாலைத் (Oxford University) தமிழ்ப் புலவர் ஜி.யூ. போப்பையர் (G.U. Pope) அவர்களும் ஒருவர். ஆசிரியர் இயற்பெயரை மறைத்துப் புனைபெயருடன் வெளியான இச்செய்யுள்கள் தமிழின் மறுமலர்ச்சிக்கு உண்மையான அறிகுறி என்பதாக அப்பேரறிஞர் கருதினார். கருதி அச்செய்யுள்களை ஆங்கிலத்தில் தனிப்பாசுரங்களாகவே மொழிபெயர்த்தனர். பரிதிமாற் கலைஞர் தம் தனிப்பாசுரங்களைப் போப்பையர் எவ்வளவு தூரம் உயர்வாகக் கருதினர் என்பது அவர் தமது திருவாசகப் பதிப்பின் முகவுரையிற் கீழ்க்கண்டவாறு வரைந்துள்ளமையால் புலனாகும். “தமிழ்த்தாயின் மறுமலர்ச்சியை அறிவிக்கும் முகத்தான் எழுந்த சமீபகால நூல்களில் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை இயற்றிய 'மனோன்மணீயம்' ஒன்று; மற்றொன்று, ஆசிரியர் பெயர் தோற்றாது வெளிவந்துள்ள 'தனிப்பாசுரத் தொகை - முதற்பகுதி'. இவ்வகைப் புதுமுயற்சி மகிழ்ச்சியோடு வரவேற்கத்தக்கது”. இரண்டாம் பதிப்போடு ஆசிரியர் பெயரும் வெளியானபோது போப்பையர் அடிக்குறிப்பாக எழுதியது: 'ஆசிரியர் பெயர் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்யுட்களை இயற்றியவர் சென்னைக் கிருத்துவக் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் பி.ஏ., என்பது.

இப்போப்பையரது ஆங்கில மொழிபெயர்ப்போடு சேர்த்தே தனிப்பாசுரத்தொகை இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. ஆயினும், ஆசிரியர் முதற்பதிப்பிலேயே தமது இயற்பெயரை வெளியிடாது புனைபெயரால் வெளியிட்டது எக்காரணம் கொண்டு என்பதுபற்றி நாம் ஆராய வேண்டிய தேவையில்லாது செய்துவிட்டிருக்கிறார் ஆசிரியர் தாமே. அவர் 'தனிப்பாசுரத்தொகை' முகவுரையில், “ஆங்கில நூற்பயிற்சியுடைய தமிழ் மக்கள் தமிழ்மொழியைப் பெரிதும் கவனித்தலின்றிக் கைசோர விடுகின்றனர் எனப் பலரும் கூறும் வசைமொழி எம்செவிப்படலும் மனம் பொறேம். புதுமை வழியால் ஏதேனும் செய்ய வேண்டுமென்று புகுந்தேம். அங்ஙனம் புக்குழியாம் அவ்வக் காலங்களில் சிற்சில விடயங்களைப்பற்றிக் கொண்ட கருத்துக்களைச் செய்யுளுருவமாய்ச் செய்து வெளியிடலாமென்று உன்னினேம். அவ்வாறே அவ்வக்காலத்துச் செய்த பாசுரங்களை 'ஞானபோதினி'யென்னுமொரு மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகையின் வாயிலாய்ச் சிறிது சிறிதாக வெளிப்படுத்தினேம். இதுகண்ட சில தமிழபிமானிகளும் எமது நண்பரும் அவையனைத்தையும் ஓராற்றாற் றொகுத்துத் தனியே ஒரு நூலாக வெளியிடவேண்டுமென்று வேண்டினர். அன்னார் வேண்டுகோட்கிணங்கி வெளியிடப் புகுந்த யாம் இப்பாசுரங்களிற் சில புதுக்கருத்துக்கள் காட்டியிருக்கின்றமை பற்றி அஞ்சுவேம்; எமது மெய்ப்பெயரின் வெளியிடாது 'பரிதிமாற் கலைஞன்' என்னும் புனைவுப் பெயரின் வெளியிடுவேமாயினேம். அன்றி நன்னூலொன்று செய்தானது புகழின்மையான் இகழப்பட்டொழிதலும் புன்னூலொன்று செய்தானது உயர்ச்சியாற் சாலவும் புகழ்பட்டிலங்கலும் நாடொறுங் காண்டலின், இந்நூலைப் பற்றிய தமிழ்மக்களின் உண்மை மதிப்பு இனைத்து என்றுணர வேண்டியும் அவ்வாறு செய்ய விரும்பினேம்” என்று கூறியுள்ளதை நோக்குமிடத்து ஆசிரியரது உண்மைக் கருத்து நன்கு வெளிப்படும். அன்றியும் இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ள சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், “பரிதிமாற் கலைஞனெனும் புனைவுப்பெயர் தானிறுவிப் பாரார் பார்த்துக் கருதுமாறுள்ளபடி யறிதரல் வேட்டிசை நலஞ்சால் கலைவ லாளன்” என்றும் கூறியுள்ளனர். வடமொழியில் அமைந்த இயற்பெயரைத் தமிழாக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் இவர்தான்.

போப்பையர் இத்தனிப் பாசுரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பாற்றியதோடு நில்லாமல் இப்பாசுரங்களின் ஆசிரியரைப்பற்றி அப்போது சென்னைக் கவர்னராக இருந்த 'லார்டு ஆம்ட்ஹில்' (Lord Ampthill) என்பார்க்கு மிகப்புகழ்ந்து ஒரு நிருபமும் எழுதி விடுத்தனர். சென்னையில் இருந்த சிறந்த அறிவாளிகளில் ஒருவர்; தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கு அடிகோலிய சிலரில் ஒருவர்; நாடகத் தமிழ் உயிர்த்தெழப் பெரும்பணி புரிபவர். தனிச் சிறப்பெய்திய தனிப்பாசுரங்களின் ஒப்பற்ற ஆசிரியர் என்றெல்லாம் அந்நிருபத்தில் புகழ்ந்திருந்தது. ஆங்கிலேயரான டாக்டர் போப்பையர் இவ்வளவு தூரம் ஒரு தமிழரைப் புகழ்ந்தெழுதியிருப்பதைக் காண கவர்னர் லார்டு ஆம்ட்ஹில்லிற்கு மிகுந்த வியப்பாயிற்று. ஆகவே, சாஸ்திரியாருக்குத் தமது மாளிகையில் பேட்டியளித்துப் பெருமைப்படுத்தத் தீர்மானித்து அவருக்குச் சொல்லியனுப்பினர். சாஸ்திரியாரும் எந்தத் தமிழாசிரியருக்கும் அதுவரை கிடைத்திராத பெரும் பேறான மாகாணத் தலைவரின் பேட்டி காணச் சென்றனர். கவர்னர் மாளிகையில் ஏறத்தாழ அரைமணி நேரம் தமிழாய்ந்த கலைஞனாரும், ஆளவந்த ஆம்ட்ஹில்லும் பல விஷயங்களைப்பற்றிப் பொதுவாகவும், இலக்கியத்தைப்பற்றிச் சிறப்பாகவும் அளவளாவிக் கொண்டிருந்தனர். அப்போது, தமக்குச் செய்யப்பட்ட பெருமையால் உளமகிழ்ச்சியடைந்த பரிதிமாற்கலைஞர், இப்பேட்டி தமக்குக் கிடைத்தது தமது தனிப் பாசுரத் தொகையினாலேதான் என்பதையுட் கொண்டு, அந்நூலை ஆம்ட்ஹில் துரைக்கே உரிமையாக்கத் தீர்மானித்துக் கொண்டனர். இவர் தமது எண்ணத்தை கவர்னரிடம் தெரிவிக்கவே, அவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு அவ்வெண்ணத்தை ஏற்றுக்கொண்டு அவ்வுரிமைக்குத் தமது இசைவு அளித்ததுமன்றி, அவ்வுரிமை தமக்கே பெருமையளிக்கும் என்றும் கூறி ஆசிரியரை மகிழ்வித்தனர். 'தனிப் பாசுரத் தொகை' இரண்டாம் பதிப்பு லார்ட் ஆம்ட்ஹில் துரைக்கு உரிமை செய்யப்பட்டு வெளியாயிற்று. இதற்குச் சிறப்புப் பாயிரம் கொடுத்தவர் ஆசிரியரது பழைய நண்பர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள்; 'இனிப்பாரில் இதுபோலப் பொருளியல் சொல் நூல் இலதென்று கற்றோர் இயம்பத் தனிப்பாசுரத் தொகைச் செந்தமிழ் நூலை இயற்றினார்' என்று சிறப்பித்துக் கூறுகின்றார்.

1902-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிருத்துவக் கல்லூரிப் பரிசிற் கொடை நாள் விழாவிற்குத் தலைமை வகித்தனர் கவர்னர் ஆம்ட்ஹில் துரையவர்கள். அப்போது அவர் அக்கல்லூரிக்குப் பெரும்புகழ் தேடிக்கொடுத்த டாக்டர் மில்லர் (தலைமையாசிரியர்), கூப்பர் (தத்துவ நூலாசிரியர்), கெல்லட் (சரித்திரப் பேராசிரியர்) முதலியோர்களைப் புகழ்ந்து கூறிவிட்டு இவர்களது பெருமையில் சிறிதும் குறைவுபடாது விளங்கித் தமது கல்லூரியின் நற்பெயரை நிலைநிறுத்தியவர் ஆசிரியர் பரிதிமாற் கலைஞனார் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

ஆசிரியரது புகழ் உச்சிநிலையை அடைந்த அமயம் அதுவே எனலாம். இறுதிவரையில் அவ்வுச்சி நிலையினின்றும் அவர் பெயரும் புகழும் இறங்கவேயில்லை. ஆசிரியர் மீது வீண் பொறாமை கொண்டிருந்த புல்லறிவாளர்களும் வாய்மதமடங்கி ஊமையாயினர்.

(*பரிதி - சூரியன்; மால் - நாராயணன்; கலைஞன் - சாஸ்திரி; கரூர் - கறுப்புப் பட்டணம் (Black Town) சென்னைக் கோட்டையைச் சுற்றியுள்ளதும் இந்தியர் வசித்த இடமும், பிற்காலத்தில் 'ஜார்ஜ் டவுன்' என்று பெயர் மாற்றப்பட்டதுமான பிரதேசம்.)

தகவல் உதவி: தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம்

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com