அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இத்தனை வழக்குகளுக்கு நடுவிலும் தேர்வு பெற்றுள்ளமை மட்டுமல்ல, ஒரு பதவிக்கால இடைவெளி விட்டு இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப் பட்டதும் ஆச்சரியம்தான். ஆனால் நான்காண்டுக் காலத்தில் நாடு கண்ட அதீத விலையேற்றம், உலக அளவில் நடைபெறும் போர்கள், தரக்கட்டுப்பாடு இல்லாத அகதிகள் குடிவரவு என்று சில பிரச்சனைகளை மக்கள்முன் எடுத்துரைப்பதில் அவரது அணியினர் கண்ட வெற்றியாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். வேறு கோணத்தில் பார்த்தால் அவர் இந்தியாவின் நண்பர், பிரதமர் மோடியோடு இணக்கம் கொண்டவர் என்ற கருத்தும் உள்ளது. அவர் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவாரா என்பதில் சந்தேகம் உண்டுதான். எப்படி ஆயினும், மக்களின் ஆதரவோடு வென்றுள்ள அவர், நல்லதொரு அரசாட்சியைக் கொடுத்து அவர்களின் இதயங்களையும் வெல்லட்டும், போர்களை நிறுத்தட்டும், மீண்டும் அமெரிக்காவை உலக நாடுகளிடையே இணையற்ற வல்லரசாக்கட்டும் என்றும் நாமும் வாழ்த்துவோம்.
★★★★★
ஃபெடரல் வர்த்தக ஆணையம் ஒரு புதிய சட்டத்தை வகுத்துள்ளது. இதன்படி ஒரு வாடிக்கையாளரின் சம்மதமின்றி சந்தாத் தொகையை அல்லது உறுப்பினர் கட்டணத்தைப் புதுப்பிக்கக் கூடாது என்று வணிக நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, தொடக்கத்தில் இலவசமாக அனுமதித்த பின், தாமாகவே, வாடிக்கையாளரைக் கேட்காமல், கட்டணத்தை வணிக நிறுவனங்கள் வசூலிக்க முடியாது. 'ரத்து செய்யச் சொடுக்கவும்' சட்டம் இந்த விஷயத்தில் நுகர்வோருக்குச் சாதகமாக உள்ளது. இது வரவேற்கத்தக்க சட்டம்தான்.
★★★★★
பாரதத்தின் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டிருப்பது ஒரு முக்கியமான முன்னெடுப்புத்தான். ஆனால் அடாவடித்தனமாகச் சட்டமன்றத்தை முடக்க நடக்கும் முயற்சிகளும் ஆங்காங்கே பாரதப் படைகளுக்கும் குடிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளும் தற்காலிகப் பின்னடைவுகள்தாம். காலம் மாறும், காஷ்மீரும் அமைதிப் பூங்கா ஆகும் என்பதில் நமக்கு நம்பிக்கை இருக்கிறது.
★★★★★
சிறுவர் எழுத்தாளர் எ. ஜோதி அவர்களைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரை, தனித்தமிழ் பரிதிமாற்கலைஞர் குறித்த அலமாரிக் கட்டுரை, எழுத்தாளர் படுதலம் சுகுமாரன் குறித்த சொற்சித்திரம், பன்மொழி அறிஞர் கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் அவர்களின் வியக்க வைக்கும் வாழ்க்கைக் குறிப்பு என்று யாவுமே இவ்விதழின் சிறப்புகள்தாம். அத்தோடு, 'நோவா என் மகனே!' என்ற விறுவிறுப்பான குறுநாவல் இலையுதிர்கால போனஸ். 'மேலோர் வாழ்வில்' மற்றொரு நித்திலம். வாசியுங்கள், வளம் பெறுங்கள்.
தென்றல் நவம்பர் 2024 |