ஷர்மதா, சம்யுக்தா சகோதரிகளின் நடன அரங்கேற்றம்.
சனிக்கிழமை, செப்டம்பர் 28 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு லெக்ஸிங்டன் கிறிஸ்டியன் அகாடமி, 48 பார்ட்லெட் அவென்யூ, லெக்சிங்டன், மாஸசூஸெட்ஸில் ஷர்மதா ராஜாராம், சம்யுக்தா ராஜாராமின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.

தாயும் குருவுமான திருமதி சௌம்யா ராஜாராம் அவர்களிடம் கலாக்ஷேத்ரா பாணியில் இருவருமே தங்கள் ஆறாவது வயதிலிருந்து பரதநாட்டியம் பயின்று வருகின்றனர்.

குருவின் நட்டுவாங்கத்துடன் திரு. தீபு கருணாகரன் (குரலிசை), திருமதி. ஸ்ரீமதி தாரா பெங்களூர் (வயலின்), திரு அனிருத் பரத்வாஜ் (புல்லாங்குழல்), திரு. முரளி பாலசந்திரன் (மிருதங்கம்) ஆகியோரின் பங்கு மிகவும் அருமை.

இளம் பாடகி மேடா பாடிய வினாயகர் மீதான பிரார்த்தனைப் பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.

திரு. ஸ்ரீ. ஈஸ்வர் ராமகிருஷ்ணன் இசையமைப்பில் குரு தட்சிணாமூர்ர்த்தின் மீது யமுனா கல்யாணி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த பாடலுக்கு ஆடிய புஷ்பாஞ்சலியுடன் அரங்கேற்றம் களை கட்டியது.

அடுத்து, நடனக் கலைஞரின் உடலையும் மனதையும் மலரச் செய்யும் கண்ட கதியில் அமைந்த அலாரிப்பில் இரு சகோதரிகளும் இணைந்து மிக அழகாக ஆடினர்.

பின்னர் வந்தது ஜதீச்வரம். இது இசை மற்றும் தாளத்தின் சங்கமத்துக்கு எடுத்துக்காட்டு. வாசஸ்பதி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த இதற்கு நடன அமைப்பு குரு ஸ்ரீமதி. சாவித்திரி ஜகந்நாத ராவ் அவர்கள். கடினமான நிருத்தம் இருந்தும் இருவரும் வெகு லாவகமாக ஆடினர்.



சப்தம் என்பது பொதுவாக ஒரு தெய்வம் அல்லது அரச புரவலரைப் போற்றும் பாடல் வரிகள் ஆகும். அடையார் கே.லட்சுமணன் இயற்றிய இந்த சப்தம் மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த ராகமாலிகை. கடவுளான நடராஜரின் அற்புதமான பண்புகளை விவரிக்கிறது, அவரது அற்புதமான நடனத்தின் மகத்துவத்தால் முற்றிலும் ஈர்க்கப்பட்ட ஒரு இளம் பெண் தன் சகியிடம் தன் நம்பிக்கையைக் கூறி அவன் ஆறுதலைத் தேடும் இடத்தில் ஷர்மதாவும் சம்யுக்தாவும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பாவங்களை (bhavams) வெளிப்படுத்தினர்.

புனிதமான அசைவுகளையும் முக பாவங்களையும் கொண்டதும் மார்க்கத்தின் நடுநாயகமுமானது வர்ணம். ஆதி தாளத்தில் நாட்டைகுறிஞ்சி ராகத்தில் அமைந்த ஶ்ரீ ரங்கநாத சுவாமியைப் போற்றும் இந்த வர்ணம் ஶ்ரீமதி ருக்மணி தேவி அருண்டேலின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. ஶ்ரீ ரங்கநாதனின் பக்த்தை அவரிடம் தன்னைக் காப்பாற்றும்படி இறைஞ்சுவதாக அமைந்த இந்த வர்ணத்தின் அருமையான ஜதிகளில் இருவரது கால்களும் சிக்கலான லயங்களை அழகாகவும் அற்புதமாகவும் பிரதிபலித்தன.

சிற்றுண்டி இடைவேளக்குப்பின் துளசிதாஸரின் ஹம்சத்வனி ராகம் மிஸ்ரா சாபு தாளத்தில் அமைந்த "ஸ்ரீ ராமச்சந்திர கிருபாலு பஜமன"என்ற பஜனுக்கு சகோதரிகள் இருவரும் அற்புதமாக ஆடினர்.

பின்னர் வந்தது காதலை மையமாகக் கொண்டு இசையால் கவரும் ஜாவளி. இது பட்டாபிரமய்யரின் கமாஸ் ராகம், ஆதி தாளத்தில் உள்ள இதில் ஒரு இளம் பெண் தன்னை கிசுகிசுத்து கிண்டல் செய்வதால் தன் தோழிகளிடம் வருத்தம் கொள்கிறாள். இதில் ஷர்மதா தனித்து ஆடி அழகிய முக பாவங்களை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

பின்னர் தசர நாம (கும்மன கரையாதிரே) என்ற துர்கா ராக ஆதி தாள புரந்தர தாச கிருதியில், மயக்கும் குறும்புக்காரன் குட்டி கிருஷ்ணன், கோபமடைந்த தன் தாயான யசோதாவிடம், பூகியனை (boogeyman) அழைக்க வேண்டாம் என்றும் தான் இனி எவ்வித குறும்புகளும் செய்யமாட்டேன் எனவும் கெஞ்சுகிறான். குழந்தை கிருஷ்ணணாக ஆடிய சம்யுக்தாவின் கொஞ்சலும் கெஞ்சலும் மிக தத்ரூபம்.

அடுத்து குரு சுராஜானந்தாவின் கண்ட சாபு தாள பெஹாக் ராக"முருகனின் மறு பெயர் அழகு" கீர்த்தனத்திற்கு ஆடினர். பழனி முருகப் பெருமானின் அழகை போற்றும் இதில் இருவரும் மிக அழகாக இணைந்து ஆடி பரவசப்படுத்தினர்.

கடைசியில் அடையார் கே. லட்சுமணனின் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் ஆதி தாளத்தில் வந்தது உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும் கிருஷ்ணன் மீதான தில்லானா. ஷர்மதாவும் சம்யுக்தாவும் நிறைவான அபிநயமும், தாளக்கட்டும் ஒருசேர துரித கதியில் துள்ளலுடன் ஆடியது உள்ளத்தைக் கவர்ந்தது.



இறைவனுக்கும், குருவுக்கும், பக்க வாத்தியக் கலைஞர்களுக்கும் அவையினருக்கும் நன்றி கூறும் மங்களத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தபோது பார்வையாளர் எழுந்து நின்று மிகுந்த கரவொலி எழுப்பினர்.

தாயான குரு சௌம்யா ராஜாராமின் கம்பீர நட்டுவாங்கத்துடன் திரு. தீபு கருணாகரனின் குழையும் இனிய குரலிசையும் , திருமதி. ஸ்ரீமதி தாராவின் அருமையான வயலின் இசையும், திரு அனிருத் பரத்வாஜின் மனம் மயக்கும் புல்லாங்குழலும், திரு. முரளி பாலசந்திரனின் இனிய ஈர்க்கும் மிருதங்கமும் மிகவும் அருமை.

இறுதியாக ஷர்மதா, சம்யுக்தா, அவர்களின் பெற்றோர் ராஜராம், சௌம்யாவின் நன்றி நவிலல் அளித்தனர். அரங்கேற்றம் இனிதே நிறைவடைந்தது.

திருமதி ஜனனி சுவாமி நிகழ்ச்சியை மிக அழகாகத் தொகுத்து வழங்கினார்.

நடனமணிகள் திருமதி. மீனா சுப்ரமண்யமும் திருமதி சுனந்தா நாராயணனும் நிகழ்ச்சி பற்றி சிலாகித்துப் பேசினர்.

பாஸ்டன் பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட நடனக் கலைஞரும் ஆசிரியருமான சௌம்யா ராஜாராம் மாசசூசெட்ஸ் கலாச்சார கவுன்சில் பெல்லோஷிப் மானியத்திற்கான இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சம்ஸ்கிருதி என்ற நடனப்பள்ளியை நடத்தி வருகிறார்.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல இடங்களில் நடனம் ஆடி வருகிறார். சென்னை இசைவிழாவிலும் இவரது பங்களிப்பு உண்டு.

இவரது மகள்கள் ஷர்மதாவும் சம்யுக்தாவும் நடனத்தைத் தவிர, வாய்ப்பாட்டும், பியானோவும் முறையாகப் பயின்று வருகிறார்கள்.

திறமையும் உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட இந்த இருவரும் நாட்டியத் தாரகைகளாக மிளிர வாழ்த்துகள்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com