அப்பா இல்லாத வீடு
கார் அப்பா வீடிருக்கும் தெருவை நெருங்க நெருங்க வயிற்றை என்னவோ செய்தது. வெளிர்மஞ்சள் நிறச் சுண்ணம் பூசிய வீட்டைக் கண்கள் தன்னால் தேடின. வேப்ப மரத்தடியில் இஸ்திரிப் பெட்டி போட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

70களில் அப்பாவும் தாத்தாவும் வீடு வாங்கப் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல என்று பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். பாட்டியின் அண்ணாவும் பண உதவி செய்ததால்தான் அந்த வீட்டை வாங்க முடிந்தது என்று சொல்வதில் பாட்டிக்கு ரொம்பப் பெருமை. வீடு வாங்கிய உடனே பத்து மரக்கன்றுகளை வாங்கி, தாத்தாவும் அப்பாவும் வீட்டைச் சுற்றி வைத்ததும் அதற்கு உரம் போட்டு, கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து ஊற்றி, பாட்டி கண்ணுக்குக் கண்ணாக வளர்த்ததும் வீண் போகவில்லை. ஐம்பது வருடங்களாய் சென்னையின் கடும் சூட்டிலிருந்து எங்களைக் காப்பாற்றி கான்க்ரீட் பெட்டிகளின் நடுவே சோலையாய் நின்றிருந்தன தென்னைகள். எனக்கு நினைவு தெரிந்து நாங்கள் இளநீரோ தேங்காயோ வாங்கியதே இல்லை.

வீட்டின்முன் ஒரு பெரிய வேப்ப மரம் தெருவுக்கே நிழல் தந்து கொண்டிருந்தது. இரவு நேரங்களில் அந்த வேப்பமரக் காற்றை வாங்க தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணா, தம்பி எல்லோரும் திண்ணைக்கு வருவது வழக்கம். அதற்குப் போட்டியாய்ப் பவழமல்லியும் குண்டு மல்லியும் வாசனையைச் சொறியும். அந்த நேரங்களில் நிலவின் கீற்றொளியில் பொன்னிறமான வேப்பம்பழங்களைத் தரையிலிருந்து பொறுக்கி விளையாடுவதும், மல்லியைப் பறித்து கோப்பதுமாய்ப் போன பொழுதுகள் மனதில் பசுமையாய் நின்றுவிட்டன.

தென்னையின் பாதி உயரத்திற்குக் கறிவேப்பிலை மரம், பருவ காலத்தில் இலைகளை மறைக்கும் அளவு காய்க்கும் மாமரம், கம்பளிப்பூச்சிகளை ஈர்க்கும் முருங்கை மரம், வீட்டுக்குப் பின்புறத்தில் வாழை, பப்பாளி, நார்த்தை, வில்வம் என்று எல்லா மரமும் எங்களுக்குக் கடுமையான உழைப்பின் உன்னதத்தைச் சொல்லிக்கொடுத்தன.

இந்த மரங்களுக்கு நடுவில் இருந்த வீடு அப்படியொன்றும் பெரிதில்லை. அம்மா அப்பாவின் சிறிய படுக்கை அறை. அதைவிடச் சற்றே பெரிய அறை எங்கள் படிப்பறையாகவும், பாட்டி/அம்மாவின் பூஜையறையாகவும் யாராவது வந்தால் தங்கும் விருந்தினர் அறையாகவும் பல அவதாரங்கள் எடுத்தது. சிறிய சமையல் அறையாக இருந்தாலும் அம்மா சுத்தமாக அழகாகப் பாத்திரங்களையும் சாமான்களையும் அடுக்கி வைத்திருப்பார். நீளமான ஹாலில் பாட்டியின் இடப்பக்கத்தில் நானும் வலப்பக்கம் அண்ணாவும், தம்பியும் படுத்துக் கொண்டு பாட்டியின் பஞ்சு போன்ற வயிற்றில் கால் போட்டுக்கொண்டே கதை கேட்பது இரவில் பிடித்தமான பழக்கமாய் இருந்தது.

சனிக்கிழமைகளில் வரிசையாக எங்களை உட்கார வைத்துப் பாட்டியும் அப்பாவும் நல்லெண்ணையில் ஒரு காய்ந்த மிளகாய்ப் பழத்தைப் போட்டு மிதமாகச் சூடு பண்ணித் தலைக்கு ஆயில் மசாஜ் செய்வார்கள். மாதத்தில் ஒருமுறை பாலில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு வெறும் வயிற்றில் குடித்தே ஆகவேண்டும். கையில் ஆரஞ்சு மிட்டாயை வைத்துக் கொண்டு கொஞ்சியும் கெஞ்சியும் அப்பா என்னைக் குடிக்க வைப்பார். சிறிய வீடு என்பதில் ஒரு நாளும் எங்களுக்கு குறையோ வருத்தமோ இருந்ததே இல்லை. மொட்டை மாடியில் பெரிய கொட்டகை போட்டு என் மகளுடைய புண்யாஜனத்திலிருந்து, அப்பாவின் அறுபதாம் கல்யாணம் வரை எல்லா விஷேசங்களும் சௌகரியமாகவே நடந்தன. மாங்காய் அடித்துத் தின்பது, தென்னந் தொடப்பம் சீவப் பாட்டிக்கு கீற்றுகளைப் பறித்து தருவது, மரம் செடிகொடிகளுக்கு தண்ணி ஊற்றக் கிணற்றில் நீர் இறைத்துத் தருவது என்று பொழுதுகள் ஓடின.

வீட்டின் ஒரு பக்கம் முச்சந்தி சேர்வதால் அந்தச் சுவற்றில் பிள்ளையார் வைக்கப்பட்டது. அம்மா தினமும் காலையும் மாலையும் மறக்காமல் விளக்கேற்றுவார். இப்போது அந்தப் பிள்ளையார் வளர்ந்து கோபுரத்துடன், ஐயர் வந்து இரண்டு வேளையும் அபிசேகம், பூஜை செய்யும் பிரசித்தி பெற்ற கோவிலாகிவிட்டது.

எனக்குப் பெண் பார்த்தல் படலம் நடந்ததும் அதே வீட்டில்தான். அத்தை, சித்தி, சித்தப்பா, ஒண்ணுவிட்ட மாமா என்று எங்கள் பக்கமே ஏகபட்ட கும்பல் சேர்ந்திருந்தது. என்னுடைய இன்றைய நாள் கணவர் , தன் பெற்றோர் மற்றும் தம்பியுடன் வந்திருந்தார். பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் முடிந்தபின் என் மாமனார் என்னைப் பாட சொல்லாமல் தானே பாடினார். நிச்சயம் ஆனவுடன் அப்பாவுக்கு அதீத சந்தோஷம். ஓடி ஓடி கல்யாணத்தை விமர்சையாகச் செய்தார்.

அப்பா வீட்டுக்குப் போகிறோம் என்றாலே மனம் கூட்டிற்குச் செல்லும் பறவையாய்க் குதூகலிக்கும். அப்பா படியிறங்கி வாசலில் அரை அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்பே காத்திருப்பார். என்னைப் பார்த்த உடன் ஆயிரம் வாட்ஸ் பல்புபோல முகத்தில் சிரிப்பிருக்கும். என்னமா லேட் ஆச்சு என்றபடி பெட்டி பைகளை வாங்கிக் கொள்வார். உனக்கு பிடிக்குமேன்னு இளசா பாத்து நுங்கு வாங்கி வச்சிருக்கேன் என்றபடி எடுத்துக்கொண்டு வந்து தோலை உரித்துக் கொடுப்பார்.

கடை முழுவதும் அலசி இந்தக் கலர் காம்பினேஷன் புதுசா இல்ல, வாங்கிக்கோ என்று புடவை துணிமணி வாங்கிக் கொடுப்பார். அண்ணாவின் கல்யாணமோ, புதுக் கார் வாங்குவதோ நீ என்னம்மா சொல்ற என்று கலந்தாலோசிப்பார். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத போதும் ஃபோன் செய்தால் கஷ்டத்தைப் பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்.

அம்மாவிற்குப் பின் அப்பா பாட்டியுடன் இரண்டு தெருக்கள் தள்ளியுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்துக்கு அண்ணாவுடன் வந்துவிட்டார். இரண்டே தெருக்களானாலும் அப்பாவின் மனசெல்லாம் அந்த மஞ்சள் சுண்ணம் பூசிய வீட்டையே சுற்றி வந்தது. அடிக்கடி அங்கு சென்று பார்த்து வந்து கொண்டிருந்தார். போகப்போக அவர் நடையும் குறைந்தது.

வீட்டு வாசலில் வந்து இறங்கியவுடன் ஆயிரம் ஞாபகங்கள் ஒருசேர மனதில் எழும்பி பறந்தன. வீட்டை ஒருமுறை சுற்றி வந்தேன். கூட்டப்படாத சருகுகள் நிறைந்த தென்னைகள், பராமரிக்கப்படாத கிணற்றில் பாசி. குலைவிட்ட வாழை யாருக்குப் பயன்படுவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தது. புல் பூண்டுகள் தரை முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டிருந்தன.

வாடகைக்கு இருந்தவர் "வணக்கம், வாங்கம்மா, அப்பா தவறினது ரொம்ப வருத்தமா இருக்கு. கலகலப்பா பேசுவார்" என்றார்.

"வணக்கம் சார். இவ்வளவு சீக்கிரம் எங்கள விட்டுப் போவார்னு நானும் எதிர்பார்க்கலை" என்றேன்.

"அப்பாவுடைய அஸ்திய இங்க கொஞ்சமா இந்த வீட்ல கரைக்கலாம்னு வந்தேன். அவர் 50 வருஷமா வாழ்ந்த வீடு" என்றேன் தயக்கத்துடன்.

"கண்டிப்பா செய்யுங்கமா. இங்க படிக்கிற 15 பசங்கள்ல 12 பேர் இந்த வருடம் ரேங்க்கில CA பாஸ் பண்ணிட்டாங்க. எல்லாம் கிராமத்திலேர்ந்து வந்த பசங்க" என்றார்.

மனதில் ஒரு பூ துளிர்த்தாற்போல இருந்தது. அப்பாவுடைய அஸ்தியைக் கிணற்றில் கொஞ்சம் கரைத்துவிட்டு வந்தபோது சமையலறையில் முருங்கையும் தேங்காயும் சேர்ந்து மணந்து கொண்டிருந்தது.

அபர்ணா பாஸ்கர்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com