பின்புலம்: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அந்தத் துப்பறியும் தொழிலில் மிகுந்த ஆர்வத்துடன் அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகமானாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
முன்கதை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்ட்டம் ஒளிக் கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென பெரும் பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொண்டதாகக் கூப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். ஷாலினி கார் ஓட்ட, கிரண் குவான்ட்டம் கணினியில் வணிகரீதியாக என்ன நடக்கிறது என்று கைக்கணினி மூலம் ஆராய்கிறான். சூர்யா குவான்ட்டம் நுட்பங்களின் நுணுக்கங்களைப் பற்றிப் படித்தறிகிறார். குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை சூர்யா எப்படி நிவர்த்திக்கிறார் என்பதைப் பார்க்கலாம் வாருங்கள்.
ஒருமணி நேரக் கார் பயணத்திற்குப் பிறகு நம் துப்பறியும் மூவர் மேரியின் ஆராய்ச்சிக் கூடத்தைச் சென்றடைந்தனர். அவர்கள் வருவதைக் கண்ட மேரி பரபரப்புடன் வெளியே வந்து ஷாலினியைத் தழுவி வரவேற்றாள். உடனே தானும் வந்து கையை அகலமாகத் திறந்து கொண்டு தழுவத் தயாராக நின்றான் கிரண்!
மேரி அவனை உதாசீனமாகப் பார்த்துவிட்டு ஷாலினியைக் கேள்விக் குறியுடன் பார்த்தாள்! ஷாலினி கலகலவென்று சிரித்து விட்டு, "இவன் என் சகோதரன் கிரண். எப்பவும் இப்படித்தான்!" என்றாள்.
உடனே தானும் சிரித்த மேரி கிரணையும் லேசாகத் தழுவிவிட்டுக் கை குலுக்கினாள். கிரண் உடலைச் சிலிர்த்து சிலாகிக்கவும் மேலும் சிரித்துவிட்டு அவன் தோளைத் தட்டிக் கொடுத்தாள்.
அதற்குள் சூர்யா அவர்களைத் தாண்டிக் கூடத்தின் வரவேற்பறைக்குள் நுழைந்து வழக்கம்போல் தன் கூரிய கண்களால் உற்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்.
அவர் தாண்டிச் சென்றதைக் கவனிக்காத மேரி வரவேற்பறைக்குள் நுழைந்தவுடன் சூர்யாவைக் கண்டுத் திடுக்கிட்டாள். ஷாலினி விரைந்து அவளை சூர்யாவிடம் அழைத்துச் சென்று, "மேரி இவர்தான் நான் குறிப்பிட்ட சூர்யா. இவர் உன் பிரச்சனை போலப் பலப்பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திருக்கிறார். உனக்கும் உதவுவார். சூர்யா, இவள்தான் எனக்கு மிக நெருக்கமான தோழி மேரி கால்லியர். இந்த ஆராய்ச்சிக்கூடம் இவள் நிறுவியதுதான்" என்றாள்.
மேரி சூர்யாவின் கையைக் குலுக்கினாலும் அகலாத அவநம்பிக்கையுடன் தலையாட்டினாள். அதைக் கண்டுகொண்ட சூர்யா அதிர்வேட்டு ஒன்றை வீசினார்.
"ஹலோ மேரி! உங்களைச் சந்தித்ததில் சந்தோஷம். ஆனால் வேறு நிலையில் சந்தித்திருக்கலாம்தான். இருந்தாலும் உங்களுக்கு உதவ முற்படுகிறேன். உங்கள் ஆராய்ச்சிக்கு முதலீடு தர முன்வந்திருக்கும் மூலதனத்தார் இந்தத் திருட்டு விஷயத்தால் தயங்கக்கூடும் என்ற கவலையில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பரவாயில்லை, நிவர்த்திக்க முயல்வோம்" என்றார்.
மேரி திடுக்கிட்டுத் தடுமாறினாள். "அது... அது உங்களுக்கு எப்படித் தெரியும்? எனக்கே சில மணி நேரம் முன்னாலதான் அந்த முதலீட்டார் மின்னஞ்சல் அனுப்பினாங்க!"
சூர்யா அதற்கு பதிலளிக்காமல் மற்றொரு அதிர்வேட்டு வீசினார். "அதுவும் அந்த மின்னஞ்சல் அனுப்பின முதலீட்டு நிறுவனத்தின் மேலாண்மைப் பங்காளர் லியோ பர்ன்ஸ் உங்களுக்குச் சமீப காலப் பரிச்சயந்தான். ரொம்ப நல்லா இன்னும் பழகாததுனால இந்தத் திருட்டு அவரது அணுகுமுறையை எப்படிப் பாதிக்கும்னு சரியா தெரியாம குழப்பத்துல இருக்கீங்க இல்லையா? பாதிக்காதுன்னு நம்புவோம். இல்லன்னா அவங்க பின்வாங்கறத்துக்குள்ள நிவர்த்திச்சிடுவோம்."
மேரி கால்லியர் சூர்யாவின் அடுத்தடுத்த அதிர்வேட்டுகளால் திணறிப் போனாள். "எ... எ... எப்படி இவ்வளவு விவரம் உங்களுக்குத் தெரிஞ்சது? என்னைப் பத்தி அதுக்குள்ள அவ்வளவு குடாய்ஞ்சிட்டீங்களா? ஷாலினிக்குக்கூட இது தெரியாதே? எப்படி ... எப்படி உங்களுக்கு?" என்றவள் திடீரென கோபத்துடன் சிலிர்த்துக் கொண்டாள்!
"என்ன ஷாலினி இது? நான் உன்கிட்ட கோரிக்கை குடுத்த உடனேயே என் ஆராய்ச்சிக் கூடத்துல யாரையோ உள் ஆள வச்சு இந்த விவரத்தையெல்லாம் தோண்டி எடுத்துட்டீங்களா? யாரந்த துரோகி! எவ்வளவு பணம் குடுத்தீங்க?" என்று படபடத்தாள்.
அவள் படபடப்பைக் கண்டு ஷாலினி களுக்கென்று சிரித்தாள்.
அதைக் கண்டு மேரி கோபத்தின் எல்லைக்கே சென்று விட்டாள். "என்ன இது ஷாலினி, நானே படு கோபத்துல இருக்கேன், நீ என்னன்னா சிரிக்கிறே! இது இன்னும் இன்ஸல்ட்டிங்கா இருக்கு. நீ என் நெருக்கமான தோழின்னு விடறேன். இல்லன்னா..." என்று கொந்தளித்தவளை நெருங்கித் தழுவி ஆசுவாசப் படுத்திய ஷாலினி விளக்கினாள்.
"மேரி நீ எங்களை ரொம்பத் தப்பா எடை போட்டுட்டே. இந்த நிறுவனத்துக்கு வந்து சேரும் வரைக்கும் இங்க உன்னைத் தவிர யாரையும் எங்களுக்குத் தெரியாது. இது சூர்யாவுடைய அதிபிரமாதமான யூகத் திறமையால அறிந்து கொண்ட விவரமாத்தான் இருக்கும்!" என்றாள் ஷாலினி.
மேரி நம்பாமல் கூறினாள், "நமக்குச் சில நொடிகள் முன்னாடிதான் இவர் உள்ளே வந்தார். அதுக்குள்ள எப்படி இந்த மாதிரி விவரங்கள் எல்லாம் யூகிக்க முடியும்!"
ஷாலினி முறுவலுடன், "அதுதான் எங்க சூர்யா. எங்கே, சூர்யா தயவு செஞ்சு அந்த விவரம் எல்லாம் எப்படி யூகிச்சீங்கன்னு விளக்கிடுங்க" என்று கோரினாள்.
சூர்யாவும் முறுவலுடன் விளக்கலானார். "அது ரொம்ப சின்ன யூகந்தான். அதை நான் விளக்கினதும் நீங்க சிரிச்சுட்டு அவ்வளவுதானான்னு அலட்சியமாயிடுவீங்க. அத்தனையும் இதோ இருக்கே உங்க மடிக்கணினி, அதுலேர்ந்துதான் கண்டு பிடிச்சேன்!" என்றார்.
ஒரளவு புரிந்துகொண்ட மேரியிந் கோபம் பகலவனைக் கண்டப் பனி போல் கரைந்து தணிந்தது. "ஒ! என் மடிக்கணினிய நான் பூட்டாமலே வெளில வரவேற்க ஓடிவந்துட்டேன். அதுல என் சமீப மின்னஞ்சலைப் பாத்தீங்க போலிருக்கு. ஆனா அதுல ஓரளவுதானே விவரம் இருக்கும். லியோவுக்கும் எனக்கும் சமீப பரிச்சயம்ங்கறதெல்லாம் எப்படி?"
சூர்யா முறுவலித்தார். ஆனால் அவர் விளக்குமுன் கிரண் முந்திக் கொண்டான். "ஹை, ஹை, ஹை! அது எனக்கே தெரிஞ்சுடுச்சு. சொல்றேன்! நீங்க உங்க எல்லாக் கணினிகளையும் பூட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான். உங்க ஐபேட் கூட ஒரு தட்டு தட்டினவுடன் நீங்க லின்க்ட்-இன்லயும் இணையத் தேடலிலயும் லியோ பர்ன்ஸ் பத்தின விவரத்தை ஆராய்ஞ்சுகிட்டு இருக்கீங்கன்னு தெரியுது. அவரை நல்லாத் தெரிஞ்சுதுன்னா எதுக்கு ஆராயணும்."
சூர்யா மேலும் விளக்கினார். "மேலும், லியோ மின்னஞ்சலில சமீப சந்திப்பு ரொம்ப ஆர்வத்தைத் தூண்டினதா ஆரம்பிச்சு அப்புறந்தான் முதலீட்டைப் பத்தி மேற்கொண்டு பேசலாம்னு குறிப்பிட்டிருக்காரு. அதையும் உங்க ஆராய்ச்சியையும் சேத்துத்தான் யூகிச்சேன்!"
மேரி சிரித்து விட்டாள். "சூர்யா நீங்க சொன்னது சரிதான். நீங்க ரெண்டு பேரும் விளக்கினதும் உடனே அவ்வளவு தானான்னுதான் தோணுது. ஆனாலும் சில நொடிகளுக்குள்ள இத்தனையையும் கவனிச்சு ரெண்டும் ரெண்டும் அஞ்சுகூட இல்ல ஏழுன்னு கணிச்சிட்டீங்களே, அது பிரமாதந்தான். நான் ஒத்துக்கறேன். எனக்குச் சற்று அவநம்பிக்கையாத்தான் இருந்தது. ஆனா இதுக்கப்புறம் உங்க யூகத்திறமைல எனக்கு ஓரளவு நம்பிக்கை வந்துடுச்சு."
கிரண் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டு, "ஷாலு, பாத்தியா என் திறமையைக்கூட மேரி பாராட்டிட்டாங்க. அய்யாவை என்னன்னு நெனச்சே? இப்ப ஒத்துக்கறயா நானும் பெரிய யூக யோகின்னு?"
ஷாலினி அவன் கன்னத்தை லேசாகத் தட்டிவிட்டு, "ஏய் ரொம்பத்தான் அலட்டிக்காதே. மேரி சூர்யா மேலதான் நம்பிக்கை சொல்லியிருக்கா. தம்பட்டம் அடிச்சு உன் இமேஜைக் கெடுத்துக்காதே!"
மேரி கலகலவெனச் சிரித்தாள். "உங்க செல்லச் சண்டையால என் கவலைகூடக் கொஞ்சம் கரைஞ்சுடுச்சு, தேங்க்ஸ்" என்றாள்.
அப்போது இடைமறித்த சூர்யா மற்றும் ஓர் அதிர்வேட்டை வீசினார்.
அது என்ன என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |