100 ஆண்டுகளுக்கு முன் தெய்வீக வாழ்க்கைமுறை
(பூ. ஆலாலசுந்தரம் செட்டியார் வாழ்க்கை வரலாற்று நூலிலிருந்து சில பகுதிகள்)

பூ. ஆலாலசுந்தரம் செட்டியார், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர். சமயம், இலக்கியம் குறித்து ஆராய்ந்து பல கட்டுரைகள், நூல்களை எழுதியவர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்புகளைத் தந்திருக்கும் இவர், சைவ சமயம் சார்ந்து பல நற்பணிகளை மேற்கொண்டார். சிறந்த சிவபக்தர். அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து சில பகுதிகள்.

தீப கைங்கர்யம்
எனது அருமைத் தந்தையார் பூரிப்பாக்கம் வேலு செட்டியார் அவர்கள், சென்னை. சிவனடியார் திருக்கூட்டம், ஸ்ரீமல்லிகேசுவரர் திருத்தொண்டர் சபை முதலிய சபைகளில் உறுப்பினராக இருந்து, சிவத்தொண்டில் ஈடுபட்டிருந்தார். தம்மைப்போல் எங்களையும் சைவசமய நெறியில் நிற்கும்படி அவர் வழிகாட்டினார். நான் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்பொழுது ஸ்ரீ உமாமகேசுவரர் சபையில் சேர்ந்து, அச்சபையின் சார்பில் நடைபெற்ற தேவார வகுப்பில் கலந்துகொண்டு பண்முறையோடு தேவாரம் கற்றேன். எனது விடுமுறை நாட்களில் ஸ்ரீமல்லிகேசுவரர் ஆலயத்தில் உள்ள பூந்தோட்டத்திற்குச் சென்று, பூக்கள் பறித்து மாலையாகத்தொடுத்துக் கொடுப்பது வழக்கம்.

1923-ஆம் ஆண்டில் சென்னை முத்தியாலுப்பேட்டை ஸ்ரீமல்லிகேசுவரர் ஆலய தீபகைங்கர்ய சபையினைத் தொடங்கினேன். அதன் சார்பில் மாணவர்களாகிய நாங்கள் ஸ்ரீமல்லிகேசுவரர் ஆலயத்தில் நாள்தோறும் 10 பலம் கடலெண்ணெய் கொண்டு, கோவில் சுற்றிலும் தீபம் ஏற்றி வந்தோம். கோவிலில் நடைபெறும் பிரதோஷ உற்சவத்தில் நானும் சில அன்பர்களும் சுவாமிக்குப் பின்னால் பன்னிரு திருமுறையை இசையுடன் பாடி வந்தோம். அத்திருக்கோவிலில் நாங்கள் அச்சபையின் சார்பில் அமாவாசை தோறும் சுவாமி, அம்பாள், கைலாசநாதர், சூரியன் என்ற நான்கு திருவுருவங்களுக்கும் அபிஷேகம் செய்வதுண்டு.

1937-ல் தாம்பரத்திற்கு வந்த பிறகு ஒரு சாமியாரை அக்கோவிலில் தீபம் ஏற்றுவதற்காக ஏற்பாடு செய்தேன். அவருக்கு மாதந்தோறும் சம்பளமும், தீபாவளிக்குத் துணியும் கொடுக்கின்றோம். இத்தீப கைங்கர்ய சபையின் ஆண்டு விழாவானது சிவராத்திரியன்று நடைபெறும். அன்று எல்லா உறுப்பினர்களும் கோவிலுக்கு வந்து, இரவில் நடைபெறும் நான்கு கால பூசையும் தரிசித்து, இரவு முழுதும் தீபம் ஏற்றி வருவதுண்டு. இத்தீப கைங்கர்யம் கடந்த 58 ஆண்டுகளாகத் தொடர்ந்து இறைவனருளால் நடைபெற்று வருகின்றது.

இத்தீபகைங்கர்யம் தொடர்ந்து நடைபெறுவதற்காக, சென்னையில் ஒரு சிறிய வீடு பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்தேன். அதன் வாடகையைக் கொண்டும் உறுப்பினர் கொடுக்கும் மாதச் சந்தாவினைக் கொண்டும் இந்தத் தீபகைங்கர்யம் நடைபெற்று வருகின்றது. நான் கல்லூரியில் ஆசிரியனாகப் பணியாற்றிய போதெல்லாம், சபையின் உறுப்பினர் இல்லத்திற்குச் சென்று, தீபத்திற்காக மாதச் சந்தா பெற்றுவருவதுண்டு. நான் கல்லூரியினின்று ஓய்வுபெற்ற பிறகு, என் இளையமகன் நடராசன் அந்த உறுப்பினர்களைச் சந்தித்து, மாதச் சந்தா பெற்றுவந்தான். அவனுக்குத் திருமணமான பின்பு, 1981 ஜூன் மாதத்திலிருந்து உறுப்பினரைக் காண அவனால் இயலாமையினால், உறுப்பினரிடம் சந்தா வாங்குவது நிறுத்தப்பட்டது. வீட்டு வாடகையைக் கொண்டே தீபகைங்கர்யமும் அமாவாசை அபிஷேகமும் நடைபெற்று வருகின்றது. இப்போது மாதந்தோறும் 10 கிலோ கடலெண்ணெய் ஸ்ரீமல்லிகேசுவரர் கோவிலில் தீபம் ஏற்றுவதற்காக வாங்கி வருகின்றோம். நான் ஸ்ரீ உமாமகேசுவர சபையினர் நடத்திவரும் அறுபான்மூவர் நாயன்மார் திருநட்சத்திரத் திருவிழாவிலும் நால்வர் திருநட்சத்திர விழாவிலும் கலந்துகொள்வதுண்டு. ஆண்டுதோறும் நடைபெறும் நால்வர் உற்சவத்தில் நால்வருக்குப் பின்னால், நாங்கள் வீதியில் தேவார பாராயணம் செய்து வருவதுண்டு.

மடங்களோடு தொடர்பு
திருவாவடுதுறை ஆதீனமடம், தருமபுர ஆதீனமடம், திருப்பனந்தாள் காசிமடம், பேரூர் கௌமாரமடம், திருவாமாத்தூர் கௌமாரமடம் முதலிய மடங்களோடு அடியேனுக்குத் தொடர்புண்டு. திருவாவடுதுறை, தருமபுரம், காசிமடம் முதலிய மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகள் பட்டாடை வழங்கியும், பரிசளித்தும் என்னைப் பாராட்டியுள்ளனர். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் பல ஆண்டுகளுக்கு முன் தாம்பரம் வந்திருந்த போது, நான் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் முன்பு, எங்கள் வீட்டுச் சிறுவர், சிறுமியர் பன்னிரு திருமுறைகள் ஓதினார்கள். அதைக்கேட்டு சுவாமிகள் மகிழ்ந்து, எங்களுக்கெல்லாம் நல்லாசி கூறினார்கள்.

நான் ஒருமுறை குடும்பத்தோடு சென்று, சுவாமிகளைக் காஞ்சிபுரம் மடத்தில் சந்தித்து நல்லாசி பெற்றுள்ளேன். ஸ்ரீ சங்கராச்சாரிய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (புதுப் பெரியவாள்) தாம்பரத்திற்கு வந்திருந்தபொழுது, எங்கள் வீட்டுக் குழந்தைகள் அவர் முன்பு பன்னிரு திருமுறை ஓதினர். அதைக்கேட்டு சுவாமிகள், அவர்களை வாழ்த்தி எங்களுக்கு நல்லாசி கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமிகள் காஞ்சிபுரத்திலுள்ள அவரது மடத்திற்கு வரும்படி ஓர் அன்பர் மூலம் தெரிவித்தார்கள். நான் அவ்வாறே சென்று சுவாமிகளைக் கண்டேன். அப்போது தமிழ்நாடு அரசினர் தமிழ்ப்பாடத்திட்டக் குழுவின் தலைவனாகப் பணியாற்றி வந்தேன். சுவாமிகள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நீதிமத போதனைகளை எவ்வாறு வழங்கலாம் என்பதைப்பற்றி என்னுடைய கருத்தினைக் கேட்டார்கள். சுவாமிகளும் தங்கள் மடத்தின் சார்பில் ஒன்றாவது வகுப்பு முதல் பத்தாவது வகுப்புவரை நீதிமத போதனை பற்றிய புத்தங்களைப் பதிப்பித்து வருவதாகவும் கூறினார்கள்.

1965-ம் ஆண்டில் சிதம்பரத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடந்தபோது, சூரியனார் கோவில் ஆதீனத்தைச் சார்ந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தர தேசிகர் மூலம் நானும் என் மனைவியும் சமய தீட்சை பெற்றுக் கொண்டோம். அது முதற்கொண்டு நான் சைவ சமய முறையில் சந்தியாவந்தனம் செய்து வருகின்றேன். இதற்கு முன்பு எனக்குத் திருமண காலத்தில் உபநயனம் நடந்த பொழுது, புரோகிதர் ஸ்மார்த்த முறையில் வழங்கிய மந்திர முறையில் சந்தியாவந்தனம் செய்து வந்தேன். என் தந்தையார் ஒரு நாளைக்கு மூன்று முறை சந்தியாவந்தனம் செய்வதுண்டு. நான் ஒரு நாளைக்கு இருமுறைதான் சந்தியாவந்தனம் செய்கிறேன். சில நாளைக்கு ஒரு முறையும் சந்தியாவந்தனம் செய்வதுண்டு. சந்தியாவந்தனம் செய்வதாலும், அதன்பிறகு தியானம் செய்வதாலும் நமக்கு மன ஒருமைப்பாடு ஏற்படுகின்றது.

குடும்ப வழிபாடு
எங்கள் வீட்டில் குடும்ப வழிபாடு நடைபெறுவதுண்டு. நானும், என் மனைவியும், பிள்ளைகளும், மருமகளும், பேத்திமார்களும் ஒன்றாகச் சேர்ந்து, இரவு 7.30 மணிக்குப் பன்னிரு திருமுறைகளைப் பண்களோடு ஓதிக் குடும்ப வழிபாடு செய்து வருகின்றோம். காலையில் எங்கள் குழந்தைகள் பன்னிரு திருமுறையைச் சொல்லிவிட்டுத்தான், பால் குடிப்பார்கள். எங்கள் வீட்டில் காலையில் பூசை செய்யும் போது நடராசப் பெருமானுக்கு பால் நைவேத்தியம் ஆன பிறகுதான். எல்லோருக்கும் காப்பி வழங்கப்படும். நான் பெரும்பாலும் காலையில் காப்பி சாப்பிடுவதில்லை, பால்தான் சாப்பிடுவேன். பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி, திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, வருடத்தில் நடராசருக்கு நடைபெறும் ஆறு அபிஷேக நாள், நால்வர் திருநட்சத்திரங்கள் முதலிய நாட்களில் நானும், குடும்பத்தாரும் விரதமிருப்பதுண்டு.

(நன்றி: பூ. ஆலாலசுந்தரம் செட்டியார் வாழ்க்கை வரலாறு, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்)

© TamilOnline.com