ஸ்ரீ மீனாட்சி
அமெரிக்க அளவிலான குதிரையேற்றப் போட்டியில் முதல் தமிழ்ப் பெண்

கலிஃபோர்னியாவின் ஃப்ரீமான்ட் பகுதியில் வசிக்கும் ஸ்ரீ மீனாட்சிக்கு 6 வயது முதலே நாய், பூனைகள் வளர்ப்பதில் கொள்ளை ஆர்வம். 11ஆம் வயதில் குதிரைகள் மீதும், குதிரையேற்றம் மீதும் நாட்டம் ஏற்பட்டது. நெட்ஃப்ளிக்ஸில் (Netflix) Spirit என்ற தொடரை மிகவும் விரும்பிப் பார்ப்பார். அந்தத் தொடரில் வரும் சிறுமியைப் போல் தானும் குதிரை சவாரி செய்ய விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற, பெற்றோர் பாலா கண்ணன் மற்றும் வித்யா தங்கவேலு அவளை மில்பிடாஸில் உள்ள குழந்தைகள் குதிரை சவாரி மைதானத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் ஸ்ரீ மீனாட்சி முதன்முதலில் குதிரை சவாரி செய்தார்.

தற்போது அவர் இர்விங்டன் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் நிலை படித்து வருகிறார்.

அதற்கு முன் பெங்களூரில் ஒருமுறை ஒட்டகச் சவாரி செய்திருக்கிறார். இந்தக் குதிரை சவாரி ஆசையும் அது போலத்தான் இருக்கும் என்று எண்ணியவர்களுக்கு, சவாரியின் முடிவில் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், ஸ்ரீ மீனாட்சி பெற்றோரிடம் தானே குதிரையைச் செலுத்த வேண்டும், அதைப் போட்டிகளுக்குக் கொண்டு சென்று வெல்ல வேண்டும் என்ற பேரார்வத்தை வெளிப்படுத்தினார். அதைக் கேட்டு வியந்து போனார்கள் பெற்றோர்.

குதிரையேற்றப் பயிற்சியை ஸ்ரீ மீனாட்சி முறையாகக் கற்க சான் ரமோனில் உள்ள ஒரு குதிரையேற்றப் பயிற்சிப் பள்ளியில் அவர்கள் சேர்த்து விட்டார்கள். வாரம் 30 நிமிட வகுப்பு என்று தொடங்கிய பயிற்சி, வாரத்தில் 5 நாட்கள் 60 நிமிடப் பயிற்சி என்று ஆனது.



மூன்று மாதங்களில் குதிரையேற்றத்தின் அடிப்படைத் திறன்களை கற்றபின், அடுத்த ஆறு மாதங்களில் அவரது பெருங்கனவான உயரம் தாண்டுதல் பயிற்சியை மேற்கொண்டார். ஒரே வருடத்தில் தனது முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டார். இந்தப் போட்டி USHJA, வுட்சைட், கலிஃபோர்னியாவில் நடந்தது. அதில் 8 போட்டிகளில் பங்கேற்று, இரண்டாம் இடமான Reserve Champion பட்டம் வென்றார்.

ஸ்ரீ மீனாட்சி அடுத்தடுத்துக் குதிரையேற்றத்தில் Jumpers பிரிவில் 1 அடி 2 அடி பிரிவுகளில் மொத்தம் ஐம்பதுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு, 1 முதல் 6 இடங்களுக்குள் தொடர்ந்து வாகை சூடினார். அவரது இலக்கு 3 அடிக்கும் மேல் உயரம் தாண்ட வேண்டும் என்றானது. எனவே சொந்தமாக ஒரு குதிரை இருந்தால் இலக்கை அடைய எளிதாக இருக்கும் என்று எண்ணினார். ஒரு நல்ல குதிரையைப் பயிற்சியாளரின் துணையுடன் வாங்கினார்கள். அதன் பெயர் போர்டோஃபினோ (portofino). போர்டோஃபினோவுக்கும் ஸ்ரீ மீனாட்சிக்கும் இடையிலுள்ள புரிதலைப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும்.

இன்றுவரை போர்டோஃபினோவும் ஸ்ரீ மீனாட்சியும் சேர்ந்து 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் முதல் 5 இடங்களை வென்றிருக்கிறார்கள். சில போட்டிகளில் நுட்பமான பாடங்களைக் கற்றுமிருக்கிறார்கள். இந்த வெற்றிகளும் பாடங்களும் ஸ்ரீ மீனாட்சி மற்றும் போர்டோஃபினோவை அமெரிக்கா அளவிலான குதிரையேற்ற இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறச்செய்துள்ளது.

நவம்பர் 11 முதல் 17 வரை லாஸ் வேகஸில் நடை பெறவிருக்கும் தேசிய அளவிலான குதிரையேற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்கும் புலம்பெயர் முதல் தமிழ் மாணவி ஸ்ரீ மீனாட்சி என்பது நமக்குப் பெருமிதம் தருகிறது.

ஸ்ரீ மீனாட்சியும் போர்டோஃபினோவும் இந்தப் போட்டியிலும் இன்னும் பல போட்டிகளிலும் வெற்றி பெற உளமார வாழ்த்துவோம்.

தகவல், படங்கள்: பாலா

© TamilOnline.com