ஆயுர்வேத மருத்துவர் சுனில் கிருஷ்ணன்
பாரம்பரிய மருத்துவர் குடும்பத்தில் வந்திருக்கும் ஆயுர்வேத டாக்டர் சுனில் கிருஷ்ணன், காரைக்குடியில் வசித்து வருகிறார். மனைவி மானசாவும் ஆயுர்வேத மருத்துவர். சுனில் கிருஷ்ணன் எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர் எனப் பன்முகப் படைப்பாளியாகவும் திகழ்பவர். சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். எழுத்தாளர் ஜெயமோகனின் ஊக்குவிப்பில், ஈரோடு மலை வசிப்பிடத்தில் ஆயுர்வேதம் குறித்த விரிவான தகவல்களைக் கொண்ட வகுப்புகளை எடுத்து வருகிறார். காந்தியவாதியான இவர், 'காந்தி டுடே' என்ற இணையதளத்தையும் நடத்திவருகிறார். பாரம்பரிய மருத்துவக் குடும்பமான இவர்களது 'அரிமளம் வைத்தியசாலா' செட்டிநாட்டுப் பகுதிகளில் நன்கு அறியப்பட்ட ஒன்று. இவரது குடும்பத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவச் சுவடிகள் பிரிட்டிஷ் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆயுர்வேத மருத்துவம் குறித்தும், அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் தென்றலுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து...

★★★★★


கே: 'ஆயுர்வேதம்' என்ற பெயருக்குக் காரணம் என்ன?
ப: ஆயுள் வேதம். வேதம் என்றால் அறிவு, ஞானம். ஆயுளைப் பற்றிய அறிவு என்பதே ஆயுர்வேதம். ஆயுள் என்பது உடல், மனம், புலன், ஆன்மா ஆகிய நான்கும் ஒருங்கிணைந்து செயல்படும் காலத்தைக் குறிப்பது. ஆயுளுடன் இருப்பதென்பது வெறுமே நீண்ட நாட்கள் உயிரோடு இருப்பதல்ல. தெள்ளிய போதத்தோடு இருப்பதும்கூட. சரக சம்ஹிதையின் முதல் அத்தியாயத்தின் பெயர் 'தீர்க்கம் ஜீவித்தியாம்' அதாவது நீண்ட காலம் உயிர்த்திருப்பதற்கான வழிமுறையை அது கூறுகிறது. நோயற்ற நீண்ட ஆயுளுக்கு என்னென்ன தேவையோ அவற்றைக் கூறுவதே ஆயுர்வேதமாகும்.



கே: சித்த மருத்துவம், அலோபதி, யுனானி உட்படப் பல்வேறு வகையான மருத்துவ முறைகள் இருக்கின்றன. இவற்றில் ஆயுர்வேதம் எந்த விதத்தில் தனித்துவமானது?
ப: சித்த மருத்துவம், யுனானி, ஆயுர்வேதம் ஆகிய மூன்றுமே ஏறத்தாழ ஒரே அடிப்படைகளைப் பகிர்ந்துகொள்கின்றன. சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் ஒரே மருத்துவமுறையின் இரு சரடுகள் என்றே காண்கிறேன். தோஷங்களின் சமநிலை, நலத்தை அளிப்பது; சமநிலையின்மை, நோயைத் தருவிப்பது. இவையே பெரும்பாலான பண்டைய மருத்துவ முறைகளின் அடிப்படை. இவற்றின் தனித்தன்மை என்பது அவை புழங்கும் நிலப்பரப்பு மற்றும் பண்பாட்டுச் சூழல் சார்ந்தது. இம்மூன்று மருத்துவ முறைகளுக்கு இடையேயும் நிறைய உரையாடலும் பரிமாற்றமும் நிகழ்ந்துள்ளன. அலோபதி என நாம் இன்று அடையாளப்படுத்தும் நவீன மருத்துவமுறை, சமநிலைக் கோட்பாடை ஏற்பதில்லை. எனினும் அலோபதி எனும் சொல் எதிரெதிர் இயல்புகள் வழியாகக் குணமாக்குவது என்னும் பொருளுடையது. ஹோமியோபதி என்பது ஒத்த இயல்புகள் வழியாகக் குணமாக்குவது.

கே: ஆயுர்வேதம் எந்த வகையில் ஒரு நோயாளியை அணுகுகிறது?
ப: நோயாளியையும் நோயையும் பரிசோதிக்க வழிமுறைகளை வகுத்துள்ளது ஆயுர்வேதம். உணவுமுறை, பிறப்பியல்பு, முக்குற்ற மாறுபாடு, எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், மன ஆற்றல் எத்தகையது, செரிமான ஆற்றல், வயது எனப் பலவற்றையும் கருத்தில் கொள்கிறது. நாடி நோக்குவது, மலம், சிறுநீர் போன்றவற்றைப் பரிசோதிப்பது, நாக்கைப் பரிசோதிப்பது, புலனுறுப்புகளைச் சோதிப்பது என ஓரளவு நவீன காலகட்டத்திற்குப் பொருந்தும் வரையறைகள். ஆயுர்வேதம் எல்லா நோயையும் தீர்க்க முடியும் என ஒருபோதும் கூறியதில்லை. சில நோய்களை எளிதில் தீர்க்க முடியும், சிலவற்றைக் குணப்படுத்துவது சிரமம், சிலவற்றை ஆபத்தில்லாமல் பார்த்துக்கொள்ளலாம், சிலவற்றைத் தீர்க்கவே முடியாது என வரையறை செய்கிறது. சரகர் நோயாளிகளைச் சொந்தப் பிள்ளைகள்போல் அணுக வேண்டும் என்கிறார். தீர்க்கவே முடியாத நோயாக இருந்தாலும் வாழ்வை எளிதாக்கச் சிகிச்சை செய்யவேண்டும் என்பதே ஆயுர்வேதத்தின் கருத்து.



கே: வாதம், பித்தம், கபம் இவற்றைப் பற்றியும், ஒருவருக்கு நாடி பார்த்து இவற்றை அறிவது குறித்தும் சொல்லுங்கள்…
ப: வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை தோஷங்கள் எனச் சொல்வோம். முக்குற்றங்கள் எனச் சொல்லலாம். தோஷம் என்றால் தானும் சமன்குலைந்து பிறவற்றையும் சமன்குலையச் செய்வது என்பது பொருள். சுசுருதர் கிரேக்க மருத்துவம், யுனானி மருத்துவம் போல ரத்தத்தையும் சேர்த்து நான்கு குற்றங்களைச் சொல்கிறார். அவர் அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் உதிரத்தின் மகிமையை அறிந்தவர். பறவையின் நிழலைக் கண்டே மேலே பறவை பறக்கிறது என்பதுபோல, நோய்க்குறிகளைக் கொண்டு அதை ஏற்படுத்தியது முக்குற்றங்கள் என உய்த்தறிய முடியும் என்கிறார் சரகர். நாம் பிறக்கும்போது ஒருவித முக்குற்றக் கூட்டில் பிறப்போம். உதாரணமாக வாதம் 50 % பித்தம் 25 % கபம் 25 % என்றால் அதுவே நம் பிறப்பியல்பு. நாடியைக் கொண்டு இதை அறியமுடியும். அதேபோல் இப்போது இந்த முக்குற்றங்கள் எப்படிச் சமநிலை பிறழ்ந்துள்ளன என்பதையும் நாடியினால் அறியமுடியும். ஒப்புநோக்க, சித்த மருத்துவத்தில், சீன மருத்துவத்தில், நாடியின் நுட்பங்களை ஆழமாக அறிந்துகொள்ள முடியும். வாத, பித்த, கப தோஷங்களின் உட்பிரிவுகள், எந்த தாதுக்கள், எந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன போன்றவற்றைச் சிலர் அறிந்து சொல்வதாக அறிகிறேன். எனக்கு அது கைகூடியதில்லை. எனது தாத்தா மரணக்குறிகளை நாடி நோக்கி அறிவித்ததைப் பார்த்திருக்கிறேன்.

கே: எல்லாருடைய உடல்நலனுக்கும், உடல் அமைப்பிற்கும் ஆயுர்வேத மருத்துவம் ஏற்றதாக இருக்குமா?
ப: எந்த உடல் அமைப்பாக இருந்தாலும் ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை அது முக்குற்றம் அடிப்படையிலான வரையறைக்குள் தான் வரும். ஆகவே சரியான மருந்துகள் கொடுத்தால் எந்த உடல்நிலைக்கும், உடல் அமைப்பிற்கும் ஆயுர்வேதம் ஒத்துக்கொள்ளும்.



கே: பாரம்பரிய மருத்துவம், சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம் இவற்றிற்கும் ஆயுர்வேதத்திற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் என்னென்ன?
ப: இந்திய மருத்துவத்தில் இரு முதன்மையான சரடுகள் உள்ளன. மக்கள் மருத்துவம் மற்றும் செவ்வியல் மருத்துவம் எனச் சொல்லலாம். நூல் சான்று உள்ளவற்றைச் செவ்வியல் மருத்துவமாகக் கொள்ளலாம். ஆயுர்வேத‌ நூல்கள் 2000 ஆண்டுகள் பழைமையானவை. வாய்மொழி மரபாகப் பரவுவதை மக்கள் மருத்துவம் எனச் சொல்லலாம். இவை தனித்து இயங்குபவை அல்ல. நாட்டு மருத்துவம், பாட்டி வைத்தியம் போன்றவை ஒருவகையில் மக்கள் மருத்துவத்தின் பகுதிகள். எதையெதையோ சோதித்துப் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றுள் செவ்வியல் மருத்துவச் சட்டகத்திற்குள் பொருந்துவது அவற்றால் ஏற்றுக்கொள்ளப்படும். அதேபோல் செவ்வியல் மருத்துவ நூல்களில் உள்ளவை மக்கள் மருத்துவத் தளத்தில் புழக்கத்தில் வரும். சித்த மருத்துவம் இவ்விரு சரடுகளுக்கும் இடைப்பட்டது. இரு சரடுகளின் கூறுகளையும் உள்ளடக்கியது.

என் குடும்பம்
நாங்கள் அடிப்படையில் சித்த மருத்துவக் குடும்பம். சுவடிச் சான்றுகள் வழியாகக் குறைந்தது எனது தாத்தாவின் தாத்தா தலைமுறையிலிருந்து மருத்துவர்களாக உள்ளதை அறிகிறோம். என் சொந்த ஊர் அரிமளம். அரிமளம் வைத்தியர் குடும்பம் என்றே அறியப்படுகிறோம். வாத நோய்களுக்குப் புதுக்கோட்டை, காரைக்குடி பகுதிகளில் நாங்கள் வேப்பெண்ணெயில் அளிக்கும் தைலம் புகழ்பெற்றது. என் தந்தை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் படித்தார். காரைக்குடி அருகே நாச்சியார்புரத்தில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார். எனக்கு எட்டு வயதிருக்கும்போது அவர் காலமானார். நான் என் தாத்தாவைப் பார்த்து வளர்ந்தவன். நிறைய மருந்துகளை அவரே செய்வார். என் அம்மா அவரிடமிருந்து மருந்துசெய்யப் பழகினார். எங்கள் பாரம்பரிய மருந்துகளை இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். சித்த மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால் ஆயுர்வேதம் படித்தேன். என் மனைவி டாக்டர் மானசாவும் ஆயுர்வேத மருத்துவர்தான்.
- டாக்டர் சுனில் கிருஷ்ணன்


கே: வஸ்தி சிகிச்சை முறை, பஞ்ச கர்மா சிகிச்சை முறை போன்றவை பற்றி விளக்க முடியுமா?
ப: பஞ்சகர்மா சிகிச்சை என்பது உண்மையில் இன்று நாம் புரிந்துகொள்வது போல விதவிதமான மசாஜ்கள் அல்ல. உண்மையில் எண்ணெய் தேய்ப்புச் சிகிச்சையைப் 'பூர்வகர்மா' என்று அழைப்பார்கள். அதாவது பஞ்சகர்மா செய்வதற்கு முந்தைய தயாரிப்புச் சிகிச்சைகள். உடலில் முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சைகளே பஞ்சகர்மா. வாந்தி, பேதி, நசியம், வஸ்தி, குருதி வெளியேற்றம் ஆகியவைதாம் பஞ்சகர்மா. நசியம் என்பது மூக்கில் விடும் மருந்து. வஸ்தி என்பது ஆசனவாய் வழியாகச் செலுத்தப்படுவது. வமனம் என்றழைக்கப்படும் வாந்தி சிகிச்சை கப தோஷத்தை வெளியேற்ற உகந்தது. பித்தத்திற்கு பேதி, வாதத்திற்கு வஸ்தி என்பதே முறை. குருதி வெளியேற்றம் பல்வேறு வகைகளில் செய்யப்படுகிறது. அட்டை விடுதல் மிகப் பிரபலமான முறை. பஞ்சகர்மா சிகிச்சைக்கு நிறைய விதிமுறைகள், தகுதிகள் உண்டு. அவை, மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டியவை.



கே: ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பு என்று எதைச் சொல்லலாம்?
ப: ஆயுர்வேதத்தில் மனிதனை முழுமையாக அணுகும் கோணம் வெளிப்படுகிறது. மனதிற்கும் உடலிற்குமான தொடர்பு குறித்து அக்கறை கொள்கிறது‌. தன்னளவில் வலுவான தர்க்க அமைப்பு கொண்டது. நாட்பட்ட நோய்களுக்கு மட்டுமல்ல; குறுகிய கால நோய்களுக்கும் நல்ல பலன் அளிப்பது. தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட மருத்துவமுறைகளில் ஒன்று.

கே: இன்றைக்கு இவ்வளவு நோய்கள் பெருகியிருப்பதற்கு என்ன காரணம்?
ப: எல்லாக் காலங்களிலும் நோய்கள் மனிதர்களை அச்சுறுத்தியுள்ளன. நூறாண்டுகளுக்கு முன்னர் 30 வயதைக் கடந்து வாழ்வதே பெரிய விஷயம் என்ற சூழல் இருந்ததை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. முந்தைய காலத்தில் தொற்று நோய்கள் என்றால், இன்று தொற்றா நோய்கள் அதிகம் என்பதே வித்தியாசம். தொற்றா நோய்களுக்கு உணவுமுறை, வாழ்க்கைமுறை மாற்றம் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. மாற்றம் தவிர்க்க முடியாதது. ஆரோக்கிய உணர்வுடன் இந்த மாற்றத்தை எப்படிச் சமன்படுத்துவது என்பதே நம்முன் உள்ள சவால்.

ஒருங்கிணைந்த மருத்துவம்
ஒருங்கிணைந்த மருத்துவம் என்பது காலத்தின் தேவை என்று கருதுகிறேன். எந்த மருத்துவ முறையும் முழுமையானதல்ல. ஆயுர்வேத அணுகுமுறையில் பலனளிக்கக்கூடிய நோய்கள் உண்டு. மரபான மருத்துவ முறைகளை முழுக்க எதிர்மறையாகக் காண்பது தவறு. இந்தியா போன்ற மக்கள்தொகை கொண்ட, பரந்த நிலப்பரப்பும் விதவிதமான வாழிடங்களும் ‌கொண்ட தேசத்திற்கு ஒருங்கிணைந்த மருத்துவம் நல்ல பலனளிக்கும். திறந்த மனதுடன், நோயாளிமைய நோக்குடன், பிற மருத்துவமுறைகளை அணுக வேண்டும். ஆயுர்வேத மருத்துவருக்கு எப்போது நவீன மருத்துவரின் உதவியைக் கோர வேண்டும் எனும் தெளிவு இருக்க வேண்டும். நவீன நோயறிதல் முறைகளைத் தயக்கமின்றிப் பயன்படுத்த வேண்டும். என் ஆசிரியர் டாக்டர் இல. மகாதேவனின் பார்வையும் அதுவே. அவரிடமிருந்தே நான் நோயாளிமைய நோக்கைக் கற்றுக்கொண்டேன்.
- டாக்டர் சுனில் கிருஷ்ணன்


கே: ஆயுர்வேத மருந்துகளால் சமயங்களில் பின்விளைவு ஏற்படக் கூடும் என்று சிலரால் கூறப்படுவது குறித்து...
ப: சரியான முறையில் வழங்கப்படாத மருந்துகள் நிச்சயம் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். மூலிகைதானே என இஷ்டப்படி உண்பது பிழை. பாதரசம், உலோகம், பற்ப மருந்துகள் பயன்பாட்டில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. எந்த மருந்தையுமே உணவுபோல வருடக்கணக்கில் தொடர்ந்து எடுக்கக்கூடாது. கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் அரிது. வயிற்று உபாதைகளை அடிக்கடி பார்க்கிறோம்.



கே: ஆயுர்வேதம் குறித்துத் தொடர்ந்து பல வகுப்புகளை எடுத்து வருகிறீர்கள், அது குறித்தும், அந்த அனுபவங்கள் குறித்தும் விளக்குங்களேன்!
ப: பொது மக்களுக்கு ஆயுர்வேதம் தொடர்பாக நிறைய மிகையான நம்பிக்கைகளும் பிழை புரிதல்களும் உள்ளதைக் காண்கிறேன். ஆகவே அவற்றைக் களையும் வகையில் இந்த வகுப்புகளை வடிவமைத்துள்ளேன். ஆயுர்வேதத்தின் வரலாறு, அதன் அடிப்படைத் தத்துவங்கள், அது எதிர்கொள்ளும் சவால்கள், அதன் சாத்தியங்கள், எந்தெந்த நோய்களுக்கு நல்ல பலனளிப்பது போன்றவற்றை வகுப்பில் விவாதிக்கிறோம். அடிப்படையில் நான் என்னை ஓர் ஆசிரியராக உணர்வதால் இவை எனக்கு நல்ல நிறைவை அளிக்கின்றன.

கே: மக்களிடம் ஆயுர்வேதத்திற்கான வரவேற்பு மற்றும் புரிதல் எவ்வாறு உள்ளது?
ப: இன்று ஆயுர்வேதம் நகர்ப்புறங்களில் மேல்தட்டு வர்க்கத்தினருக்கான மருத்துவமாக உள்ளது. மருந்துகளும் சிகிச்சைகளும் செலவேறியவை என்பது முக்கியக் காரணம். இந்நிலை மாறவேண்டும். ஆனால் இயற்கையான இடுபொருட்கள் சார்ந்து இயங்குவதால் விலையைக் கட்டுப்படுத்துவது பெரிய சிக்கல். சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் ஆயுர்வேதம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. கோவிட் நோய்த்தொற்றுக் காலத்தில் ஆயுர்வேதம் மிக நல்ல முறையில் நோயை எதிர்கொள்ள உதவியதால் மீண்டும் தனது செல்வாக்கை ஈட்டியுள்ளது.

கே: ஆயுர்வேத மருத்துவத்தின் இன்றைய தேவை குறித்துச் சில வார்த்தைகள்...
ப: மூலிகைகள் அருகிவருவது பெரும் சவால். அவற்றைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் முயற்சிகள் தேவைப்படுகின்றன. போலி மருத்துவம் இன்னொரு சவால். நவீன மருத்துவம் போலிகளின் மீது பாய்வது போல இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கற்ற மருத்துவர்களே மருந்துகளில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிப்பதில்லை. தன்னம்பிக்கையும் சேவை எண்ணமும் கொண்ட ஆயுர்வேத மருத்துவர்கள் உருவாகி வரவேண்டும். ஆயுர்வேதம் சார்ந்த ஆய்வுகள் சரியான திசையில் நகர வேண்டும்.



கே: மருந்துகளை தண்ணீரில், சுடு தண்ணீரில், வெந்நீரில், பாலில், தேனில், கலந்து சாப்பிடச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறது. அதற்கான முக்கிய காரணம் என்ன? ஒருவேளை மாற்றிச் சாப்பிட்டால் பலன்கள் முழுமையாகக் கிடைக்காதா அல்லது வேறு விளைவுகள் ஏற்படுமா?
அனுபானம் என்போம். மருந்தைக் குறிப்பிட்ட இலக்கு நோக்கிக் கொண்டு செல்லும் வாகனம். நாம் நன்கறிந்த திரிபலா சூர்ணம் முக்குற்றங்களைச் சமன்படுத்துவது. எனினும் தேனுடன் கொடுத்தால் கபத்தை குறைக்கும். நெய்யுடன் கொடுக்கும் போது பித்தத்தைத் தணிக்கும். கண் நோய்களுக்கு நல்லது. வெந்நீரில் கொடுக்கும்போது வாதத்தைக் கட்டுப்பபடுத்த உதவும். மருந்தின் செயல்திறனை பெருக்கவும், துல்லியப்படுத்தவும் அனுபானம் உதவும்.

ஒருவேளை சொல்லப்பட்ட முறைகளிலிருந்து மாற்றிச் சாப்பிட்டால் உத்தேசித்த பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும். மோசமான விளைவு என ஏதும் பொதுவாக நேராது. மருந்து எடுத்துக்கொள்ளும் நேரத்திலும் சில கணக்குகள் உண்டு. அபான வாதத் தொந்திரவுக்கு உணவுக்கு முன் எடுக்க வேண்டும். பிராண வாயு நோய்களுக்கு அவ்வப்போது எடுக்க வேண்டும். கோவிட் கால இளைப்புக்கு இந்த முறையைப் பயன்படுத்தினோம். குறைந்த அளவில் ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை என. இத்தகைய சில வழிமுறைகளும் பத்தியமும் கடைப்பிடித்தால் மேலான பலனை தரும்.

பத்தியம் என்பது மருந்துக்காக எனப் பலருக்கும் தவறான புரிதலுள்ளது. ரச மருந்துகள், பாஷாண மருந்துகள் போன்ற பெருமருந்துகளுக்கு மட்டுமே பத்தியம் உண்டு. பிற சமயங்களில் நோய்க்குத்தான் பத்தியம். சர்க்கரை நோயிருக்கிறதா இனிப்பைத் தவிர்க்க வேண்டும், குடல்புண் உள்ளதா காரம் தவிர்க்க வேண்டும் என்பது போல, எந்த தோஷம் முதன்மையாக உள்ளதோ அதை அதிகரிக்கும் உணவை உண்ணக்கூடாது. பத்திய முறிவு உயிருக்கு ஆபத்து என்று ஏதுமில்லை.

உரையாடல்: அரவிந்த்

ஆயுர்வேத மருத்துவர், ஆசிரியர், டாக்டர் இல. மகாதேவன்
நான் மகாதேவனின் முதன்மை மாணவர்கள் போன்று அவருடன் மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ உடனிருந்து பயின்றவனல்ல. ஆனால் எப்போதும் அவரையே எனது ஆயுர்வேத ஆசிரியராகக் கருதிவந்துள்ளேன். அவ்வளவாகப் பரிச்சயமில்லாத ஏதேனும் ஒரு புதிய நோயை எதிர்கொள்ள நேர்ந்தால் மகாதேவனின் நூல்களே முதன்மைப் புகலிடம். சமாளிக்கச் சிரமப்பட்டால் அவரிடம் அனுப்பி வைப்பேன். முடியும், முடியாது, முயன்று பார்க்கலாம் எனத் தெளிவாகச் சொல்லிவிடக்கூடிய மருத்துவர் அவர். தனது எல்லைகளை அறிந்தவரே அறிஞராக இருக்க முடியும். என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான ஆயுர்வேத மருத்துவர்கள் அவரைத் தங்களது ஆசிரியராகக் கருதுதிறார்கள்.

சர்வநிச்சயமாக மகாதேவனை ஆயுர்வேதத்தின் வீச்சை அதிகரித்து எல்லைகளை விஸ்தரித்த சீர்திருத்தவாதியாகக் காண இடமுண்டு. குருகுலக் கல்வியில் நவீன ஜனநாயகத் தன்மை இருக்காது. சாதி, மதம் பாலினம் என பல்வேறு தடைகள் உண்டு. இன்று ஆயுர்வேதக் கல்லூரிகளில் ஆண்களை விடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் பயில்கிறார்கள். குருகுலக் கல்வியில் இது சாத்தியமாகியிருக்காது. ஆனால் ஆயுர்வேதம் போன்ற மரபான அறிவுத் துறைகளை நவீனக் கல்விமுறையால் முழுமையாகக் கடத்தமுடியாது. இந்த இடைவெளியை மகாதேவன் நிரப்பினார். தெரிசனங்கோப்பு சாரதா மருத்துவமனை குருகுலத்தன்மை உடையதுதான் ஆனால் அங்கு சாதி, மத, இன, தேசிய, பாலின பாகுபாடு என எதுவும் கிடையாது. கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே ஒரே வரையறை. குருகுலங்களின் மரபு மருத்துவமுறைகளில் உள்ள இன்னொரு முக்கியமான சிக்கல் அதில் பேணப்படும் ரகசியம். ஒருவித மூடுண்ட தன்மை உண்டு. மருந்துகளுக்கு குழூஉக்குறிப் பெயர்கள், செய்முறைகளுக்கு தெளிவில்லாத விளக்கங்கள் எனப் பல தடைகள்.

மகாதேவனிடம் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. அனுபவத்தின் வழியே அவரடைந்த அத்தனை புரிதல்களையும் நேரிலும் புத்தகங்களிலும் வெளிப்படையாக முன்வைத்துள்ளார். அவரது கருத்தரங்கு உரைகளும் வகுப்புகளும் மிகுந்த தனித்தன்மையுடையன. காருக்குறிச்சி நாதஸ்வரம் வாசித்தால் எப்படி சொக்கிப் போய்விடுவார்களோ, அப்படி மதியம் 2.30 மணிக்கு வகுப்பு என்றால் கூட அப்படியே நன்கு விழித்துக்கொண்டு மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள். இது வெறும் பேச்சல்ல, அவர்களுக்குப் புரியும்போதுதான் அதனுடைய ஆழமும், நுட்பமும் தெரியும். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று திருமூலர் சொன்னதுபோல படித்ததைப் பகிரும்போது அனுபவம் மேலும் பெருகத்தானே செய்யும்” எனக் குறிப்பிடுகிறார். அவரது வகுப்புக்களில் இந்த லயிப்பை உளமார உணர்ந்திருக்கிறேன்.

வலைத்தளத்திலிருந்து: www.suneelkrishnan.in

- டாக்டர் சுனில் கிருஷ்ணன்

© TamilOnline.com