எஸ்ஸார்சி (எஸ். ராமச்சந்திரன்)
எழுத்தாளர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கிய உலகில் பல்லாண்டுகளாகச் செயல்பட்டு வருபவர் எஸ்ஸார்சி என்னும் எஸ். ராமச்சந்திரன். இவர் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் சுந்தரேசர் ஐயர் - மீனாட்சி இணையருக்கு மார்ச் 04, 1954 அன்று பிறந்தார். கம்மாபுரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். வளையமாதேவியில் உள்ள வள்ளலார் உயர்நிலைப்பள்ளியில் இடைநிலைக்கல்வி கற்றார். உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை கம்பாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளி பல வாசல்களைத் திறந்துவிட்டது. ஆசிரியர்கள் மூலம் இலக்கிய அறிமுகம் பெற்றார். பல்வேறு நூல்களை வாசித்தார். தந்தை சொன்ன கதைகள் எழுத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டின. பள்ளியில் இலக்கிய மன்றச் செயலாளராகப் பணியாற்றியது பல்வேறு அனுபவங்களைத் தந்தது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி.) மற்றும் வேதியியலில் இளம் அறிவியல் (B.Sc) படித்தார். அக்காலகட்டத்தில், 1972ல், பல்கலைக்கழக ஆண்டு மலரில் 'பாரதிதாசன் பனுவலில் சில' என்னும் கட்டுரையை எழுதினார். அதுவே எஸ்ஸார்சியின் அச்சில் வந்த முதல் படைப்பு. தொடர்ந்து பயின்று ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலையில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். எம்.பில் பட்டம் பெற்றார். இதழியல் மற்றும் தொழிலாளர் நிர்வாகவியல் ஆகியவற்றிலும் பட்டயம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.



கல்லூரிக் காலத்தில் சிதம்பரம் காந்தி அமைதி நிலையத்து அன்பர்களோடு ஏற்பட்ட தொடர்பு சமூக சேவைகளில் ஆர்வத்தைத் தந்தது. கர்நாடக மாநிலம் கடோலி கிராமத்தில் நடந்த சர்வோதய முகாமில் கலந்துகொண்டார். அது பல்வேறு அனுபவங்களின் நிலைக்களனாக விளங்கியது. ஜயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டார். பல்கலையில் படிக்கும்போது காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரருடன் சந்திப்பு ஏற்பட்டது. அவர், எஸ்ஸார்சியை இந்துசமயத் தொண்டு மன்றம் தொடங்கிப் பணி செய்ய அறிவுறுத்தினார். காந்தியச் சிந்தனையாளராக இருந்த எஸ்ஸார்சி, மதம் சார்ந்து தன்னால் செயல்பட இயலாது என்று கூறி அதனைத் தவிர்த்தார். பிற்காலத்தில் மார்க்சீயத்தில் ஈர்க்கப்பட்டார். எஸ்ஸார்சி தொழிற்சங்கப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்பட்டார். கடலூரில் சிரில் அறக்கட்டளை என்னும் தொலைபேசி ஊழியர்கள் தமிழ் அமைப்பில் பொறுப்பாளராகப் பணியாற்றினார். 1974ல் வடலூரில் உள்ள சேஷசாயி நிறுவனத்தில் கண்காளிப்பாளராகப் பணியாற்றினார். 1975 முதல் 1996 வரை தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றினார். இளநிலைக் கணக்கு அதிகாரி, முதுநிலைத் தொலைபேசி மேற்பார்வையாளராகப் பணியாற்றி 2014ல் பணி ஓய்வு பெற்றார்.

கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் பல்வேறு இலக்கியவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தின் கலை இலக்கியப் பெருமன்ற செயலாளராகப் பணிபுரிந்தார். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். அவற்றில் தி.வே. கோபாலய்யர், ஞானக்கூத்தன், ராஜம் கிருஷ்ணன், பொன்னீலன், பிரபஞ்சன், குறிஞ்சிவேலன், சபாநாயகம், பழமலய், தனுஷ்கோடி ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எஸ்ஸார்சி நூல்கள்
கவிதைத் தொகுப்பு: ரணம் சுமந்து, ஞானத்தீ, வேதவனம்
சிறுகதைத் தொகுப்புகுள்: மறுபக்கம், யாதுமாகி, உரைகல், செய்தவம், பட்டறிவு, தேசம்
நாவல்: மண்ணுக்குள் உயிர்ப்பு, கனவு மெய்ப்படும், நெருப்புக்கு ஏது உறக்கம், எதிர்வு
கட்டுரைத் தொகுப்புகள்: சில ஆய்வுகள், மதிப்புரைகள், விமர்சனங்கள், படித்தலும் படைத்தலும், சிந்தனை விழுதுகள், பாரதம் போற்றும் பைந்தமிழ்க் கவிஞர்கள்
மொழிபெயர்ப்பு: காலம் மாறும் (மூலம்: மஹேந்திர பட்னாகர்) ஆன்ம தரிசனம் (மூலம்: ராஜாஜி)
ஆங்கில நூல்கள்: Poem, Bacon and Thiruvalluvar (Comparative Study)


இலக்கிய ஆர்வத்தால் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். எஸ். ராமச்சந்திரன் என்னும் தன் பெயரைச் சுருக்கி 'எஸ்ஸார்சி' என்ற பெயரில் எழுதினார். முதல் சிறுகதை 'குட்டிச்சுவர்' கணையாழியில் பிரசுரமானது. தொடர்ந்து இவரது படைப்புகள் தாமரை, சுபமங்களா, மஞ்சரி, கவிதாசரண், பாட்டாளித் தோழன், சாரல் போன்ற இதழ்களிலும், இணையதளங்களிலும் வெளியாகின. முதல் கவிதை கோவை ஞாநி நடத்தி வந்த 'நிகழ்' இதழில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு, 'மறுபக்கம்', வே. சபாநாயகம் முன்னுரையுடன் வெளிவந்தது. 'மண்ணுக்குள் உயிர்ப்பு' என்னும் எஸ்ஸார்சியின் முதல் நாவலைக் குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகம் வெளியிட்டது. எஸ்ஸார்சி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு ஆறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

எஸ்ஸார்சி கவிதை, கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு என்று பல்வேறு படைப்புகளைத் தந்துள்ளார். அவை பல நூல்களாக வெளிவந்துள்ளன. ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு 'ரெயின் போ' என்னும் கவிதை நூலையும், 'பேகனும் திருவள்ளுவரும்' எனும் ஒப்பீட்டு நூலையும் எழுதியுள்ளார். மஹேந்திர பட்நாகரின் ஆங்கிலக் கவிதைகளை 'காலம் மாறும்' என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். ராஜாஜி எழுதிய இந்துத் தத்துவ நூல் ஒன்றை 'ஆன்ம தரிசனம்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். அந்நூலுக்குத் தமிழக அரசின் மொழிபெயர்ப்பு உதவித்தொகை கிடைத்தது. மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம், எஸ்ஸார்சி எழுதிய 'சிந்தனை விழுதுகள்' என்னும் கட்டுரை நூலைத் தேர்வு செய்து, அதனை நாடு முழுவதுமுள்ள மைய அரசின் நூலகங்களுக்கு விநியோகித்தது. இவரது 'யாதுமாகி' என்னும் சிறுகதை நூல் காஞ்சி மாமுனிவர் பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்பிற்குத் துணைப்பாடமாக வைக்கப்பட்டது. புதுவை அகில இந்திய வானொலியில் இலக்கியம் உரைகள் பலவற்றை நிகழ்த்தியுள்ளார்.



இவரது இலக்கியப் பணியை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் பல இவரைத் தேடி வந்தன. எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய 'நெருப்புக்கு ஏது உறக்கம்' என்னும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. அதே நூலுக்குச் சேலம் தாரையார் விருது கிடைத்தது. 'கனவு மெய்ப்படும்' நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, எட்டையபுரம் தமிழ்ச் சங்க விருது, பாரத ஸ்டேட் வங்கி விருது, என்.எல்.சி. நிறுவன விருது என நான்கு பரிசுகள் கிடைத்தன. கம்பம் பாரதி சங்க விருது 'பாரதம் போற்றும் பைந்தமிழ்ப் புலவர்கள்' நூலுக்குக் கிடைத்தது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இவரைச் சிறந்த எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியது. பத்து உபநிடதங்களை, நான்கு வேதங்களைப் புதுக்கவிதை நடையில் எழுதியது இவரது குறிப்பிடத்தகுந்த இலக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

குறிஞ்சிவேலன் நடத்திவரும் 'திசை எட்டும்' மொழிபெயர்ப்புக் காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் எஸ்ஸார்சியும் ஒருவர். பட்டுக்கோட்டையில் இருந்து வெளிவரும் 'இலக்கியச் சிறகு' மற்றும் SHINE இதழ்களின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

தன்னை எங்கும் முன்னிறுத்திக் கொள்ளாமல், அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இலக்கியப் பணியாற்றி வருகிறார் எஸ்ஸார்சி. மனைவி பானுமதி. மகன்கள் அஜய்சுந்தர், லட்சுமணபாரதி

அரவிந்த்

© TamilOnline.com